“இல்லாத விடுதலைப்புலிகளிற்கு எவ்வாறு ஆதரவு வழங்க முடியும்” என சந்தேகத்தின் பேரில் கைதானவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கேள்வி எழுப்புகின்றனர். கிளிநொச்சியில் இன்று(05.02.2021) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
அவர்கள் தெரிவித்த கருத்தின் முழு வடிவம் வருமாறு.
ஆட்சிமாற்றத்தின் பின்பு கைது செய்யப்பட்ட எங்கள் உறவுகள் எங்கே?
இலங்கை ஜனாதிபதியாக அதிமேதகு கோட்டாபய ராஜபக்ச அவர்கள், ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின்னர் எமது உறவுகள் 14பேர் கைது செய்யப்பட்டு விசாரணை இன்றிய நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் சார்ந்த குடும்பத்தினராகிய நாம் பெரும் நெருக்கடிக்கும் துன்பத்திற்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளோம்.
எமது பிள்ளைகள் எமது உறவுகள் தாம் உண்டு தமது தனிப்பட்ட வாழ்வும் தொழிலும் உண்டு என்ற நிலையில் இருந்து வந்தார்கள். அவர்களை சிறிய விசாரணைக்காக அழைத்துச் செல்வதாகவும் உடனே விடுவிப்பதாகவும் கூறி, அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் ஒன்றரை வருடங்கள் கடக்கும் நிலையில் அவர்கள் பற்றி எந்தவொரு தகவலும் தெரிவிக்கப்படாத நிலையே நீடிக்கின்றது.
விடுதலைப் புலிகளுக்கு உதவ முற்பட்டதாக காரணம் கூறப்பட்ட போதும் அதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை. ஆதாரமற்ற காரணங்களை சொல்லி எமது உறவுகளை கண்ணில் காட்டாது இந்த அரசாங்கம் அவர்களை எங்கு சிறை வைத்திருக்கின்றது? அவர்கள் குற்றவாளிகள் என்றால் அதனை சட்ட ரீதியாக நிரூபிக்க வேண்டும். ஏன் நீதிமன்றங்களில் அவர்களை முற்படுத்தாமல் தடுத்து வைத்துள்ளனர்?
இந்த நாட்டில் நீதி இல்லையா? நீதிமன்றங்களுக்கு எந்த அவசியமும் இல்லையா? நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தாமல், எமது பிள்ளைகளை இரகசியமாக சிறை வைத்திருப்பது, நீதிக்குப் புறம்பானது என்பதுடன் சர்வதேச சட்ட திட்டங்களுக்கும் மனித உரிமை சட்டங்களுக்கும் எதிரானது ஆகும். இது மிகப் பெரும் மனித உரிமை மீறலாகவும் குற்றமாகவும் கொள்ளப்பட வேண்டியது.
எமது உறவுகள் எங்கே என்று தெரியாத நிலையில், இப்போது நாம், வீதியில் வந்து அடையாளமாக ஒரு தொடர் போராட்டத்தை நடாத்துகின்றோம். எமது உறவுகளுக்காக, தந்தைக்காக ஆறு மாத பச்சிளம் குழந்தை முதல் பிள்ளைக்காக தாய் தந்தையர், மனைவியர் எனப் பலரும் மழையிலும் வெயிலிலும் இருந்து போராடுகின்றோம்.
நாம் எங்கள் வாழ்க்கையை வாழ, நாம் நிம்மதியாக இருக்க, எமது உறவுகளுடன் நாம் ஒன்றாக இருக்க, உடனடியாக காரணமின்றி கைது செய்யப்பட்டு சட்ட விரோதமாக சிறை வைக்கப்பட்ட எமது உறவுகளை காண்பித்து, அவர்களை விடுதலை செய்ய வேண்டும்.
ஏற்கனவே எமது மண்ணில் பலரை காணாமல் ஆக்கி, காரணங்களின்றி சிறையில் இளைஞர்களை அடைத்து வைத்துள்ள அரசாங்கம், இப்போது எமது பிள்ளைகளையும் கொண்டு சென்று அடைத்து வைத்திருப்பது எந்த அடிப்படையில் நியாயமானது?
காணாமல் ஆக்கப்பட்டவர்கள், மற்றும் சரணடைந்த நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள், தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் சர்வதேசத்தின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய இலங்கையின் இன்றைய ஜனாதிபதி ,எமது உறவுகளையும் இப்படி கொண்டு சென்று காரணமின்றி சிறையில் அடைப்பது எந்த விதத்திலும் ஏற்க முடியாதது.
எமது உறவுகளை காரணம் இல்லாமல் சிறையில் வைத்துவிட்டு, எங்களை கண்ணீருடன் அலையச் செய்துவிட்டு யாருக்கு சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது? இதுதான் எங்களுக்கான சுதந்திரமா? இதுதான் புதிய ஜனாதிபதி எங்களுக்கு அளித்துள்ள ஆட்சி மாற்றத்தின் பரிசா?
மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்களே, எமது கண்ணீரையும் நாம் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக அனுபவிக்கும் துன்ப வாழ்க்கையையும் கருத்தில் கொண்டு எமது உறவுகளை விடுவியுங்கள். அதே போல எமது உறவுகளின் விடுதலைக்காக சகல அரசியல் தலைவர்களும் கட்சி மற்றும் இன பேதமின்றி குரல் கொடுக்க வேண்டும் என்றும் மன்றாட்டமாக உங்களை கேட்டுக் கொள்கிறோம்.அத்துடன் ஆட்சி மாற்றத்தின் பின்னர், ஏனைய மாவட்டங்களிலும் இவ்வாறு கைது செய்யப்பட்ட விசாரணை இன்றி தடுத்து வைக்கப்பட்டவர்களின் உறவுகளையும் எம்முடன் இணைந்து கொள்ளுமாறு வலியுறுத்துகிறோம். நாம் வேறுபாடுகள் கடந்து ஓரணியில் திரண்டு எமது பிள்ளைகளின் விடுதலைக்காக குரல் கொடுத்து போராட்டத்தில் இணைவதே இன்று எம் முன்னால் உள்ள ஒரே வழியாகும்.
அத்துடன் எமது போராட்டத்தை கிண்டல் கேலி செய்யாமல், அனைத்து தமிழ் உறவுகளும் இணைந்து கொள்ள வேண்டும் என்றும் பகிரங்கமாக அழைத்து நிற்கின்றோம். காரணம் ஏதுமின்றி எமது உறவுகள் கைதாகி விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்ட நிலமை நாளை யாருக்கும் ஏற்படலாம் என்பதை புரிந்து கொண்டு, எமது அகிம்சைப் போராட்டத்திற்கு தார்மீக ரீதியான ஒத்துழைப்பை அனைத்து தமிழ் மக்களும் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.
நியாயமான காரணத்திற்காக சாத்வீக வழியில் போராடும் எம்மை இராணுவ புலனாய்வாளர்கள் எச்சரித்து வருகின்றனர். இங்கே நாம் அமர்ந்து போராடினால் அங்கே எமது உறவுகளை துன்புறுத்துவோம் என்று மிரட்டுகின்றனர். இத்தகைய மனித உரிமை மீறல்களையும் மனிதாபிமானத்திற்கு மாறான செயல்களையும் அரசும் இராணுவத் தரப்பும் நிறுத்த வேண்டும். எத்தகைய அச்சுறுத்தல்கள், நெருக்கடிகள் கடந்தும் எமது போராட்டம் நீதிக்காக தொடரும்.
(கைதான எமது உறவுகளின் பெயர் விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளது)
ஆட்சிமாற்றத்தின் பின் கைதாகி தடுத்து வைக்கப்பட்டவர்களின் உறவுகள்
கைதானவர்களின் பெயர் கைது செய்யப்பட்ட திகதி கைதுக்காக குறிப்பிடப்பட்ட காரணம்
ரமேஸ் சுயந்தன் 2020.03.02 எல்.டி.டி.ஈ க்கு உதவி செய்ய முற்பட்டமை.
அன்ரன் சார்லஸ் 2020.03.02 எல்.டி.டி.ஈ க்கு உதவி செய்ய முற்பட்டமை.
சபாரட்ணம் தூயவன் 2020.03.02 எல்.டி.டி.ஈ க்கு உதவி செய்தமை.
குணலிங்கம் வசந்தன் 2020.03.04 எல்.டி.டி.ஈ க்கு உதவி செய்தமை.
உதயசொருபன் உமாசுதன் 2020.03.07 எல்.டி.டி.ஈ க்கு உதவி செய்தமை.
தேவரஞ்சன் மதிவதனன் 2020.03.08 எல்.டி.டி.ஈ க்கு உதவி செய்தமை.
லிங்கேஸ்வரன் இன்பராஜ் 2020.03.17 எல்.டி.டி.ஈ க்கு உதவி செய்தமை.
செல்வநாயகம் சுசிகரன் 2020.06.17 எல்.டி.டி.ஈ க்கு உதவி செய்ய முற்பட்டமை.
கந்தசாமி யுவன் 2000.07.11 எல்.டி.டி.ஈ க்கு உதவி செய்தமை.
பாலசுப்பிரமணியம் கஜி தருபன் 2020.06.22 எல்.டி.டி.ஈ க்கு உதவி செய்தமை.
ரட்ணசிங்கம் கமலகரன் 2020.07.11 எல்.டி.டி.ஈ க்கு உதவி செய்தமை.
தனபாலசிங்கம் ஈழவேந்தன் 2020.07.06 எல்.டி.டி.ஈ க்கு உதவி செய்தமை.
சிறினிவசகசரம் ஜெயராஜ்சர்மா 2020.07.12 எல்.டி.டி.ஈ க்கு உதவி செய்தமை.
கஜேந்திரராசா இன்பராசா 2020.07.14 எல்.டி.டி.ஈ க்கு உதவி செய்தமை.