26

26

உலகிலேயே அதிக மக்கள்தொகையை கொண்ட நாடாக சீனா விளங்குகிறது.  அந்த நாட்டில் சுமார் 140 கோடிப்பேர் வாழ்கின்றனர்.

அங்கு வறுமை ஒழிப்பில் நாட்டின் சாதனைகளை குறிக்கும் வகையிலும், வறுமை ஒழிப்பில் போராடியவர்களை கவுரவிக்கும் வகையிலும் பீஜிங்கில் ஒரு விழா நடத்தப்பட்டது.

இந்த விழாவில் ஜனாதிபதி ஜின்பிங் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

சீனாவில் கிராமப்புறங்களில் வாழ்ந்து வந்த அனைத்து ஏழை மக்களும் வறுமையில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டனர். இதன்மூலம் 2030-ம் ஆண்டுக்குள் சீனா வறுமையை ஒழிக்க வேண்டும் என்று ஐ.நா. சபை நிர்ணயித்திருந்த காலக்கெடுவை விட 10 ஆண்டுகளுக்கு முன்னதாகவே வறுமை ஒழிக்கப்பட்டு விட்டது.

832 வறிய மாவட்டங்களும், 1 லட்சத்து 28 ஆயிரம் வறிய கிராமங்களும் வறுமை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு விட்டன.

1970-களின் பிற்பகுதியில் சீர்திருத்தம் தொடங்கப்பட்டு, திறக்கப்பட்டதில் இருந்து 77 கோடி வறிய கிராமப்புற மக்கள் சீனாவின் தற்போதைய வறுமைக்கோட்டின் கணக்கெடுப்பில், வறுமையில் இருந்து மீண்டுள்ளனர் என பதிவாகி இருக்கிறது.

இந்த கால கட்டத்தில் உலகளாவிய வறுமை ஒழிப்பில் சீனா 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட பங்களிப்பை செய்துள்ளது.  இந்த சாதனைகள் மூலம் சீனா மற்றொரு அதிசயத்தை உருவாக்கி இருக்கிறது. அது வரலாற்றில் எழுதப்படும்.

நான் சீன ஜனாதிபதி பதவிக்கு வந்த பின்னர் கடந்த 8 ஆண்டுகளில் சீனா வறுமை ஒழிப்புக்காக கிட்டத்தட்ட 246 பில்லியன் டாலர் நிதியை முதலீடு செய்துள்ளது.

உலக வங்கியின் சர்வதேச வறுமைக்கோட்டின்படி, கடந்த 40 ஆண்டுகளில் வறுமையில் இருந்து வெளியேற்றப்பட்ட சீன மக்களின் எண்ணிக்கை, உலகளாவிய மொத்தத்தில் 70 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது.

வறுமையை ஒழிப்பது கடைசிப்புள்ளி அல்ல. புதிய வாழ்க்கை மற்றும் புதிய முயற்சிதான் தொடக்கப்புள்ளி.

சீன கம்யூனிஸ்டு கட்சி உருவாக்கப்பட்ட காலம் தொட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு பாடுபட்டு வந்துள்ளது. 2012-ம் ஆண்டு நான் அதிகாரத்துக்கு வந்தது முதல் ஒவ்வொரு ஆண்டும் 1 கோடிக்கு மேற்பட்டோர் வறுமையில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள்.

2012-ம் ஆண்டில் இருந்து இதுவரை 79 லட்சம் வீடுகளில் வாழ்ந்து வந்த 2 கோடியே 56 லட்சத்து 80 ஆயிரம் பேர் பாழடைந்துபோன தங்கள் வீடுகளை புதுப்பித்துள்ளனர்.

இதே காலகட்டத்தில் வறிய பகுதிகளில் இருந்து 96 லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.

28 இன சிறுபான்மை குழுக்கள் 2012-ம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து மொத்தமாக வறுமையில் இருந்து வெளியேறி இருக்கிறார்கள்.

இந்த ஆண்டுக்குள், கிராமப்புறங்களில் வாழ்க்கையை மேம்படுத்துவது, மிதமான வளமான சமுதாயத்தை கட்டியெழுப்ப வெற்றியை பெறுவதற்கு முக்கியம் ஆகும்.” இவ்வாறு அவர் கூறினார்.

“கொரொனா தடுப்பூசியால் எனக்கு சிறிய பிரச்சினை கூட ஏற்படவில்லை. தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் பாதுகாப்பு பெறுவர்” – அரசி இரண்டாம் எலிசபெத்

இங்கிலாந்து நாட்டின் அரசி இரண்டாம் எலிசபெத் தனது கணவர் 94 வயதான இளவரசர் பிலிப்புடன் சென்று கடந்த ஜனவரி மாதம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

இவரது மூத்த மகனும் வாரிசுமான இளவரசர் சார்லஸ், அவரது மனைவி கமிலா ஆகியோரும் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். தற்போது இங்கிலாந்தில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

தடுப்பூசி போட்டுக் கொண்டது குறித்து இங்கிலாந்து அரசி இரண்டாம் எலிசபெத் கூறியதாவது:-

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டேன். அதனால் எனக்கு சிறிய பிரச்சினை கூட ஏற்படவில்லை. தடுப்பூசி போடுவது குறித்து தயக்கம் கொள்பவர்கள் இதுபற்றி சிந்திக்க வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொள்வது மிகவும் எளிது என்று அதைப் போட்டுக் கொண்டவர்களிடம் இருந்து ஏராளமான கடிதங்கள் வந்துள்ளன.

தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் நிச்சயம் பாதுகாப்பு பெறுவார்கள். தடுப்பூசி போடவில்லை என்றால் அந்த பாதுகாப்பை பெற முடியாது.

எனவே மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டியது அவசியம். தடுப்பூசி போட்டுக் கொண்டால் பாதுகாக்கப்பட்ட உணர்வு ஏற்படும். தடுப்பூசி போடும் திட்டத்தை நான் முழுமையாக வரவேற்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இங்கிலாந்து மன்னர் பிலிப்பும் தடுப்பூசி போடுவதன் அவசியத்தை தெரிவித்துள்ளார். “இது ஒரு சிறப்பான பணி” என்று சுகாதாரத்துறை தலைவரிடம் கூறினார். “இது ஒரு ஊக்கமளிக்கும் செயல். இரண்டாம் உலகப்போரின் போது ஏராளமானோர் உயிரிழந்தார்கள். அதுபோல் கொரோனா தாக்குதல் நடந்துள்ளது.

அதை வெல்ல தடுப்பூசி அவசியம். இதற்கு அனைவரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும்“ என்று கூறியுள்ளார். தற்போது 94 வயதான இங்கிலாந்து அரசர் பிலிப் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். என்றாலும் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இலங்கை எதிர்த்தாலும் மிச்செல் பச்லெட் அவர்களின் பரிந்துரைகளை அமுலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்” – மனித உரிமைகள் பிரதி ஆணையாளர் நடா அல் நசிஃப்

மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு இலங்கை எதிர்ப்புத் தெரிவித்தாலும், அதனை அமுலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பிரதி ஆணையாளர் நடா அல் நசிஃப் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் குறிப்பிடுகையில், “மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்செல் பச்லெட் ஏற்கனவே வெளியிட்டிருந்த அறிக்கை, இலங்கை அரசாங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் பின்னர் சீராக்கப்பட்டு நேற்று முன்வைக்கப்பட்டது.

இலங்கை அரசாங்கம் சில விடயங்களுக்கு எதிர்ப்பைத் தெரிவித்திருந்தமையால், இந்த அறிக்கையை இறுதிப்படுத்த மூன்று வாரங்கள் காலதாமதம் ஏற்பட்டது.

இந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள சில பொறிமுறைகளின் பல விடயங்களை அமுலாக்குவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே, சிரியா, மியான்மார் மற்றும் வடகொரியா போன்ற நாடுகளில் அமுலாக்கப்பட்டுள்ளதைப் போன்றோ அல்லது இலங்கை விடயத்தை பிரத்தியேகமான முறையிலோ கையாள்வது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த விடயத்துக்கான பொருத்தமான நடைமுறை எதுவென்பதை மனித உரிமைகள் பேரவையே தீர்மானிக்கும்.

அத்துடன், இலங்கை விடயத்தில் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தால் பல ஆண்டுகளாகச் சேகரிக்கப்பட்ட சான்றுகள் உள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார்.

“சட்டத்துறை மாணவனை தாக்கிய பொலிஸ் அதிகாரிகள்” – உடனடியாக பதவி நீக்குமாறு அமைச்சர் வீரசேகர உத்தரவு! 

பேலியகொடை பொலிஸ் நிலையத்தில் வைத்து சட்ட துறை மாணவன் ஒருவன் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளை பணியில் இருந்து இடைநிறுத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு அமைச்சர் சரத் வீரசேகர உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதன்படி பொலிஸ் பரிசோதகர் ஒருவர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மூவர் பணிநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

மிகார குணரத்ன என்ற சட்ட துறை மாணவனை நேற்று பேலியகொட பொலிஸ் அதிகாரிகள் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸிற்கு அழைத்து வந்த சந்தேக நபரை சந்திப்பதற்காக அவர் பேலியகொட பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளதுடன் இதன்போது சுமார் 10 பொலிஸ் அதிகாரிகள் தன் மீது தாக்குதல் நடத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளானவர் சட்டத்தரணி மைத்திரி குணரத்னவின் மகன் என தெரிவிக்கப்படுகின்றது

“அரசின் அறிவிப்பு வெற்றியுமல்ல, பரிசுமல்ல. அது எமது உரிமை” – இரா.சாணக்கியன்

கொரோனா இறப்பின் பின்னரான சடல அடக்கம் என்ற இந்த அறிவிப்பானது எமக்குக் கிடைத்த வெற்றியுமல்ல, பரிசுமல்ல எனத் தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், இது எமது உரிமை என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டு அரசாங்கத்தால் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இது பற்றி குறிப்பிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் குறிப்பிடுகையில்,

“கொரோனா தொற்றினால் மரணமடைந்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. எனினும், இதனை நாங்கள் வெற்றியாகவோ அல்லது கிடைத்த பரிசாகவோ கருதவில்லை.

இது எங்களுடைய உரிமையாகும். அவர்கள் இந்த உரிமையை எப்போதோ கொடுத்திருக்க வேண்டும். இந்நிலையில், அனைத்து இலங்கையர்களுக்கும் சமத்தும் கிடைக்கவும் உரிமையை அடைவதற்காகவும் எங்கள் போராட்டத்தை நாம் தொடர்வோம்.

நாடாளுமன்றத்திற்குள்ளும், நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் இதற்கு எதிராக நான் தொடர்ந்தும் குரல் கொடுத்து வந்தேன். 20இற்கு ஆதவளித்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைதி காத்தனர். எனினும், நானும் இதுகுறித்து தொடர்ந்தும் குரல் எழுப்பியிருந்தேன்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்கள் எழுச்சிப் போராட்டத்தின் போதும்கூட நாம் இதுகுறித்து பலமானதொரு செய்தியினை சர்வதேசத்திற்கு வழங்கியிருந்தோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“இலங்கை இன ஒற்றுமை மற்றும் தேசிய நல்லிணக்கம் போன்றவற்றை இலங்கை வலுவாகப் பேணுகின்றது” – ஜெனீவா அமர்வில் சீனா !

“சர்வதேச உறவுகளை நிர்வகிக்கும் அடிப்படை விதிமுறைகள், ஐ.நா. சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கோட்பாடுகள் ஏனைய நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடாததாக அமைய வேண்டும்” என சீனா தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் அமர்வுகளில் இலங்கையை வலுவாக ஆதரிப்பதாக சீனா அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது அமர்வில் உரையாற்றுகையிலேயே ஜெனிவாவிற்கான சீனாவின் நிரந்தர வதிவிடப் பிரிதிநி ஷெங் ஹு இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் உரையாற்றுகையில், “இலங்கை அரசியல் ஸ்தீரத்தன்மை, இன ஒற்றுமை மற்றும் தேசிய நல்லிணக்கம் போன்றவற்றை இலங்கை வலுவாகப் பேணுவதாகவே நட்பு நாடென்ற வகையில் சீனா நம்புகின்றது.

மேலும், இலங்கையானது, தேசிய அபிவிருத்தி மற்றும் வளர்ச்சிக்கான சாதனைகளை விரும்புகிறது. இதனை வாழ்த்துகின்றோம்.

அத்துடன், மனித உரிமைகளைத் தீவிரமாக ஊக்குவிப்பதற்கும் பாதுகாப்பதற்கும், நிலையான பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியை முன்னேற்றவும், மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி பாதிக்கப்பட்ட குழுக்களின் உரிமைகளை பாதுகாத்தல், தேசிய நல்லிணக்கத்தை முன்னெடுத்தல் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் போன்ற விடயங்களில் இலங்கையின் முயற்சிகளையும் சாதனைகளையும் பாராட்டுகின்றோம்.

மனித உரிமைகள் மீதான அரசிய ல்மயமாக்கல் மற்றும் இரட்டை நிலைப்பாடு போன்றவற்றை சீனா எதிர்ப்பதோடு, ஏனைய நாடுகளின் உள்ளக விவகாரங்களில் தலையீடு செய்வதை தவிர்க்க வேண்டும்.

இலங்கை குறித்த அமர்வில் சமர்பிக்கப்பட்டுள்ள ஐ.நா. ஆணையாளரின் அறிக்கை குறித்து கவலையடைகின்றோம். அத்துடன், இலங்கை வழங்கிய அதிகாரப்பூர்வமான தகவல்கள் உள்வாங்கப்படாமையிட்டு வருந்துகின்றோம்.

தலையீடு தடுப்பு மற்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள உத்தேச இலக்கிற்கான தடைகள் என்பவை இலங்கையின் உள்ளக விவகாரங்கள் மீதான தலையீட்டைத் தெளிவாகக் குறிப்பிடுவதுடன் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையை மீறுவதுமாகவே உள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் என்பன இலங்கை விடயத்தில் பக்கச்சார்பற்ற தன்மையையும் அரசியல் மயமாக்கப்படாத நிலைமையையும் உறுதியாகப் பின்பற்றும் என்று நம்புகின்றோம்.

அனைத்து நாடுகளினதும் இறையாண்மை, அரசியல் சுதந்திரத்தை மதித்தல், ஆக்கப்பூர்வமான உரையாடல்கள் மற்றும் ஒத்துழைப்புகளை ஆதரித்தல், பிற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவது அழுத்தங்களை பிரயோகிப்பதை தவிர்க்க வேண்டும்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமர்வுகள் ஆரம்பிப்பதற்கு முன்னர் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சீன ஜனாதிபதி ஷி ஜின்-பிங்கிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தார். இலங்கை தொடர்பான தீர்மானம் மற்றும் அறிக்கையின் தன்மை குறித்து சீனா நன்கு அறியும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

அதேபோன்று, இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவும் சீன வெளிவிவகார அமைச்சர் வோங் ஹீக்கு ஆதரவைத் தொடருமாறு கேட்டுக்கொண்டார்.

அந்த வகையில் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் நியாயமான உரிமைகள் மற்றும் நலன்களைக் கூட்டாகப் பாதுகாக்க இலங்கையுடன் சீனா ஆதரவாக செயற்படும் என்பதைத் தெரிவிக்கின்றோம்.

மேலும், சர்வதேச உறவுகளை நிர்வகிக்கும் அடிப்படை விதிமுறைகள், ஐ.நா. சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கோட்பாடுகள் ஏனைய நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடாததாக அமைய வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இலங்கையில் தேர்தல்களில் வாக்களிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும்” – ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு

“இலங்கையில் தேர்தல்களில் வாக்களிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும்” என ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

அனைத்து வாக்காளர்களும் சகல தேர்தல்களிலும் வாக்களிப்பது கட்டாயமென்றும், இதற்கான சட்டக் கொள்கைகள் உருவாக்கப்பட்ட வேண்டுமெனவும் ஆணைக்குழுவின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதலை நடத்திய சஹ்ரான் உள்ளிட்ட குழுவினர், வாக்களிப்புகளில் ஈடுபடவில்லையென சாட்சியங்கள் கிடைத்துள்ளன. அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களும் உறவினர்களும் வாக்களிக்கவிடாமல் தடுக்கப்பட்டுள்ளனர் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோன்று, இலங்கையின் தேர்தல் முறைமை குறித்துப் பரிந்துரைகளை முன்வைத்துள்ள ஆணைக்குழு, தீவிரவாதிகளுக்கு எதிராகப் போராடுவதற்காக நிலையான அரசாங்கம் ஒன்று அவசியம் எனவும் பரிந்துரைத்துள்ளது.

பலவீனமான அரசாங்கம் ஒன்று காணப்பட்டதன் காரணமாக, இலங்கையில் தாக்குதல்களை நடத்தலாம் என, சஹ்ரானின் குழு எண்ணியதாக சாட்சியங்கள் கிடைத்துள்ளதெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், வேறொரு கட்சியுடன் இணைவதைத் தடுப்பது தொடர்பான ஏற்பாடுகளை, ஒன்றிணைக்கும் பரிந்துரையும் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

“இலங்கைக்கு வெளிவிகார உறவை பொருத்த வரை இது முக்கியமான வாரம்” – முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய

வெளிவிவகார உறவுகளைப் பொறுத்தவரையில், இலங்கைக்கு இது மிகமுக்கியமான வாரமாகும் என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ருவிற்றர் பதிவிலேயே கருஜெய சூரிய மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், ஒரு நாடு என்ற வகையில் முன்நோக்கிச் செல்வது குறித்த பேச்சுவார்த்தைகளின் போது நாட்டின் இறையாண்மையை சமரசத்திற்கு உட்படுத்த முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“இலங்கையின் வெளிவிவகார உறவுகளைப் பொறுத்தவரை, இது மிகவும் முக்கியமான வாரமாகும். ஒரு நாடு என்ற வகையில் முன்நோக்கிச் செல்வது குறித்த பேச்சுவார்த்தைகளின் போது நாட்டின் இறையாண்மையை சமரசத்திற்கு உட்படுத்த முடியாது.

எனினும், கௌரவமான நாடொன்றின் பொறுப்புவாய்ந்த பிரஜைகள் என்ற அடிப்படையில் ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட கடப்பாடுகளை நிறைவேற்றுவதிலும் தண்டனைகளிலிருந்து விலகுவதை முடிவிற்குக் கொண்டுவருவதிலும் முனைப்புடன் செயற்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மிக வேகமான 400 விக்கெட்டுக்கள் – இந்திய பந்துவீச்சாளர் அஸ்வின் சாதனை! 

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனை படைத்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் ஜோஃப்ரா ஆர்ச்சர் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் 400வது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

400 விக்கெட்டுகள் வீழ்த்திய நான்காவது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றார் அஸ்வின் உலகளவில் 16ஆவது பந்துவீச்சாளர் என் பெருமையையும் பெற்றார்.

அத்துடன் 400 டெஸ்ட் விக்கெட்டுகளை மிக வேகமாக வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

இந்தியக் கிரிக்கெட்டில் முன்னதாக கபில்தேவ், கும்ப்ளே, ஹர்பஜன் ஆகியோர் 400 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

அஹமதாபாத்- நரேந்திர மோடி விளையாட்டரங்கில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்டில் இந்தியக் கிரிக்கெட் அணி 10 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.

“இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துவதற் உதவவேண்டும்” –  அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்டனுக்கு வட – கிழக்கு சிவில் அமைப்புக்கள் கடிதம்! 

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துவதற்கு அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்டன் உதவவேண்டும் என வடக்குகிழக்கு சிவில் அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
அமெரிக்க இராஜாங்க செயலாளருக்கான கடிதத்தில் சிவில் அமைப்புகள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளன.
இலங்கையில் கடந்தகாலங்களில் இடம்பெற்ற குற்றங்களிற்கு பொறுப்புக்கூறும் செயற்பாடுகளிற்கு ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை ஆதரவு அளிக்கவேண்டும் என நீங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளமைக்கு நன்றி தெரிவிப்பதற்காக நாங்கள் இந்தகடிதத்தை எழுதுகின்றோம்.
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள நகல்வடிவம் இலங்கையை சர்வதேச குற்றவியல்நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தவேண்டும் என்ற விடயத்தை உள்ளடக்கியிருக்காததை நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள்.
இந்த நகல்வடிவில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துவற்கான விடயத்தை உள்ளடக்குமாறு முகன்மை நாடுகளிற்கு வேண்டுகோள் விடுக்கவேண்டும் என நாங்கள் உங்களை வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றோம்.
நிலைமையின் பாரதூரதன்மை காரணமாக இலங்கையை சர்வதேச சமூகத்திடம் பாரப்படுத்துமாறு கோரும் கடிதத்தை தமிழர்கள் ஐக்கியப்பட்டு முகன்மை குழுவிற்கு அனுப்பிவைத்தனர்.
வடக்குகிழக்கு சிவில் சமூகத்தினர் இணைந்துமுன்னெடுத்த பொலிகண்டி முதல் பொத்துவில் முதல் பேரணியில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கானவர்கள் இந்த கோரிக்கையை உறுதி செய்துள்ளனர்.
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த தவறினால் அது குற்றங்களில் ஈடுபட்டவர்கள் நீதியின் பிடியிலிருந்து தப்புவதற்கு வழிவகுக்கும்.
தாங்கள் நீதியை எதிர்கொள்ளவேண்டிய நிலையேற்படாது என்ற எண்ணத்தில் பாதுகாப்பு படை தலைவர்கள் மற்றும் இலங்கை அரசியல் தலைவர்கள் தயக்கமின்றி தமிழ் மக்களிற்கு எதிரான அநீதிகளில் ஈடுபடும் நிலை உருவாகும்.