11

11

டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியல் – கோலியை பின்னுக்கு தள்ளி முன்னேறினார் ஜோ ரூட் !

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில் டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் துடுப்பாட்டவீரர்களின் தரவரிசையில், சென்னையில் நடந்த இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இரட்டை சதம் விளாசி வெற்றிக்கு வித்திட்ட இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 5-ல் இருந்து 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். அபார துடுப்பாட்டத்தால் 60 புள்ளிகளை கூடுதலாக சேகரித்த அவர் மொத்தம் 883 புள்ளிகளுடன் 3-வது இடம் வகிக்கிறார். இதனால் 4-வது இடத்தில் இருந்த இந்திய வீரர் விராட் கோலி மேலும் ஒரு இடம் இறங்கி 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். ஜோ ரூட் 2017-ம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு பிறகு முதல் முறையாக கோலியை முந்தியிருக்கிறார்.

வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்டில் அறிமுக வீரராக இறங்கி இரட்டை சதம் (210 ரன்) அடித்ததோடு 395 ஓட்டங்கள் இலக்கை விரட்டிப்பிடித்து வரலாறு படைக்க உதவிய வெஸ்ட் இண்டீஸ் புதுமுக வீரர் கைல் மேயர்ஸ் 448 புள்ளிகளுடன் தரவரிசையில் 70-வது இடத்துக்கு நுழைந்திருக்கிறார். தரவரிசையின் அறிமுகத்திலேயே வெஸ்ட் இண்டீஸ் வீரர் பெற்ற அதிகபட்ச புள்ளி எண்ணிக்கை இதுவாகும்.

இதே போல் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் சதம் அடித்த பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் 19 இடங்கள் உயர்ந்து தனது சிறந்த நிலையாக 16-வது இடத்தை பிடித்துள்ளார். இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் டாம் சிப்லி 46-ல் இருந்து 35-வது இடத்துக்கு வந்துள்ளார்.

டெஸ்ட் பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் நம்பர் ஒன் இடத்தில் தொடருகிறார். சென்னை டெஸ்டில் 2-வது இன்னிங்சில் ‘ரிவர்ஸ் ஸ்விங்’ ஜாலத்தில் இந்தியாவின் 3 முக்கிய விக்கெட்டுகளை சாய்த்து மிரள வைத்த இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 6-ல் இருந்து 3-வது இடத்தை எட்டியுள்ளார். இந்த டெஸ்டில் மொத்தம் 9 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய சுழற்பந்து வீச்சாளர் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் ஒரு இடம் உயர்ந்து 7-வது இடத்தை பெற்றுள்ளார். பும்ரா ஒரு இடம் முன்னேறி 8-வது இடத்தில் இருக்கிறார்.

டெஸ்ட் ஆல்-ரவுண்டர்களின் தரவரிசையில் முதல் 3 இடங்களில் முறையே பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து), ஜாசன் ஹோல்டர் (வெஸ்ட் இண்டீஸ்), ரவீந்திர ஜடேஜா (இந்தியா) ஆகியோர் உள்ளனர்

வவுனியாவில் 07 வயது சிறுவன் மரணத்தில் சந்தேகம் – நீதி வேண்டி மக்கள் போராட்டம் !

வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவ்வி பகுதியில் ஏழு வயது பாடசாலை மாணவன் நேற்றுமுன்தினம் கிணற்றிலிருந்து சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், சிறுவனின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில், அவரின் மரணத்திற்கு நீதி வேண்டும் எனத் தெரிவித்து கிராம மக்கள் இன்று (11.02.2021) ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்ததனர்.

இது தொடர்பாகத் தெரியவருவதாவது,

குறித்த சிறுவன் கடந்த ஒன்பதாம் திகதி மதியம் இரண்டு மணியளவில் வீட்டிலிருந்து தனியார் வகுப்புக்குச் செல்வதாகத் தெரிவித்துவிட்டு அயல்வீடொன்றிக்கு விளையாடச் சென்றுள்ளார்.

இந்நிலையில், நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுது அவரைக் காணவில்லை என ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மறுநாள் காலை அயல்வீட்டுக் கிணற்றில் இருந்து குறித்த சிறுவன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதுடன் சிறுவனின் புத்தகப்பை கிணற்றிற்கு அண்மையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, உயிரிழந்த சிறுவனுடன் விளையாடிய அயல்வீட்டுச் சிறுவனிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் முரணான தகவல்களை அவர் தெரிவித்திருந்தார்.

முகமூடி அணிந்த ஒருவர் மோட்டார் சைக்களில் வந்து சிறுவனை தூக்கிச் சென்றதாக முதலில் தெரிவித்ததுடன், விளையாடிக் கொண்டிருந்தபோது தவறுதலாக கிணற்றில் விழுந்ததாக பின்னர் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த சிறுவன் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், ஓமந்தை பொலிஸாரால் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, உயிரிழந்த சிறுவனின் இறுதிகிரியைகள் நவ்வி பகுதியில் அமைந்துள்ள வீட்டில், இன்று காலை இடம்பெற்று சடலம் சமளங்குளம் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதன்போது, கிராமத்தில் ஒன்றுகூடிய பொதுமக்கள் வீதியில் சடலத்தினையும் பதாதைகளையும் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறுவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்த அவர்கள், உண்மைதன்மையும் நீதியும் நிலைநாட்டப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

மியன்மார் இராணுவத்தைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் மீது பொருளாதாரத் தடை விதித்தது அமெரிக்கா !

மியன்மாரில் கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி, புதிய அரசை ஏற்க இராணுவம் மறுத்தது.

இது தொடர்பாக மியன்மார் அரசுக்கும் இராணுவத்துக்கும் இடையே மோதல் நீடித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ஆங் சான் சூகி தலைமையிலான கட்சியின் ஆட்சியைக் கவிழ்த்து, இராணுவம் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியது.

மேலும் ஆங் சான் சூகி, மியன்மாரின் அதிபர் யு வின் மியிண்ட் மற்றும் முக்கியத் தலைவர்களையும் வீட்டுக் காவலில் இராணுவம் வைத்தது. ஆங் சான் சூகி, முறைகேடாக வாக்கி டாக்கிகளை இறக்குமதி செய்ததாக இராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், அவரை பிப்ரவரி 15 வரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் உலகின் பல நாடுகளும் இது தொடர்பாக தங்களுடைய கண்டனத்தை வெளியிட்டு வந்தன.

இந்நிலையில் மியன்மார் இராணுவத்தைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் மீது பொருளாதாரத் தடை விதித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் கூறும்போது,

“மியன்மார் இராணுவத்தின் முக்கியத் தலைவர்கள் மீதான நடவடிக்கைகளை இன்று அறிவிக்கிறேன். மியன்மார் அரசுக்கு அமெரிக்கா அளித்த நிதியை ராணுவம் தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இராணுவத்தின் முக்கியத் தலைவர்கள் மீது பொருளாதாரத் தடை விதிக்கிறேன். இது அவர்களது குடும்பத்தினர் மீதும் அடங்கும்” என்று தெரிவித்தார்.

இதற்கான உத்தரவில் ஜனாதிபதி ஜோபைடன் கையெழுத்திட்டுள்ளார்.

மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராகப் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன. செவ்வாய்க்கிழமை நைப்பியாவில் இராணுவத்திற்கு எதிராகப் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். போலீஸார் ரப்பர் குண்டுகளைப் பயன்படுத்திக் கூட்டத்தைக் கலைத்தனர். இந்தத் தாக்குதலில் இருவர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மியான்மர் மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

“சிங்கள பாதுகாப்பு அதிகாரிகளை பாதுகாப்புக்கு வைத்துக்கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயற்படுகின்றனர்” – சாமர சம்பத்

“சிங்கள பாதுகாப்பு அதிகாரிகளை பாதுகாப்புக்கு வைத்துக்கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயற்படுகின்றனர்”  என ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(11.02.2021) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு அதிகாரிகளாகவும், பொலிஸ் அதிகாரிகளாகவும் தமிழர்கள் இலங்கையில் கடமையாற்றி வருகின்றனர்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழர்களை பாதுகாப்புக்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொள்வதில்லை. சிங்கள பாதுகாப்பு உத்தியோகத்தர்களை தமது பாதுகாப்புக்காக வைத்துக்கொண்டு, தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயற்பட்டு வருகின்றனர்.

அத்துடன், சிங்கள பாதுகாப்பு உத்தியோகத்தர்களை அருகில் வைத்துக் கொண்டு, தமிழீழ விடுதலைப் புலிகளுக்காகவும், புலம்பெயர் தமிழர்களுக்காகவும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேலை செய்து வருகின்றனர்.

“மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நோக்கம் நாட்டை பிரிப்பதேயாகும்” – பிரதமருடனான சந்திப்பில் மஹாசங்கத்தினர் !

ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக எதிர்வரும் மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள தீர்மானங்கள் குறித்து கலந்துரையாடும் வகையிலான சந்திப்பொன்று மஹாசங்கத்தினருக்கும்,  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையே நேற்று (2021.01.10 ) பிற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்றது.
இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படும் தீர்மானங்கள் அடங்கிய அறிக்கை மற்றும் அது தொடர்பாக எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மதிப்புமிக்க மஹாசங்கத்தினரின் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் பெற்றுக் கொள்ளும் நோக்கில் இச்சந்திப்பு நடைபெற்றது.

கொவிட்-19 தொற்று நிலைமையை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய உலக நாடுகளுக்கிடையே இலங்கை முன்னணியில் காணப்படுகின்ற நிலையில், எமது நாட்டை இழிவுபடுத்தும் நோக்கில் மிகவும் தவறான கருத்துக்களை உள்ளடக்கி மிக மோசடியான முறையில் இந்த மனித உரிமைகள் திணைக்கள அறிக்கை வடிவமைக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

நாட்டின் வெற்றிக்கும், இறையாண்மைக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலான 16 விடயங்களை உள்ளடக்கி ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் இந்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த வணக்கத்திற்குரிய பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர், இதுபோன்ற தீர்மானமிக்கதொரு தருணத்தில் மரியாதைக்குரிய மஹாசங்கத்தினரின் ஆலோசனை மற்றும் அனுசாசனத்தை பெறுவதற்கு தீர்மானித்தமை குறித்து நான் முதலில் கௌரவ பிரதமர் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இதுபோன்ற சூழ்நிலையில் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு எதிரான தீர்மானமொன்றை சமர்ப்பிப்பது பொருத்தமற்றது என்றும், அதற்கு பதிலாக எமது தரப்பு நீதியை எடுத்துரைக்கும் பிரதிவாத அறிக்கையொன்றை மாத்திரம் முன்வைக்க வேண்டும் என வணக்கத்திற்குரிய தேரர் குறிப்பிட்டார்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நோக்கம் நாட்டை பிரிப்பதே என சுட்டிக்காட்டிய பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர், மனிதாபிமான முறையின் கீழ் பயங்கரவாதத்தை ஒரு முடிவுக்குக் கொண்டுவருவது போர்க்குற்றம் என்று கூறுவது பாரிய குற்றமாகும் எனத் தெரிவித்தார்.

இத்தீர்மானத்திற்கு  அமைவான நல்லிணக்கம் மிகவும் ஆபத்தானது என்றும், அத்தகைய உடன்பாடு இல்லாமல் பாராளுமன்றத்தில் தேசபற்று சட்டத்தை நிறைவேற்றுவதற்கு நேரம் ஒதுக்குவது பொருத்தமானது என்றும் அவர்கள் கூறினர்.

இந்த சூழ்நிலையை எதிர்கொள்ள பௌத்த நாடுகளுக்கு நமது தேரர்களின் ஊடாக சில தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றும், அதனூடாக நேர்மறையான பதிலை நாட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த வணக்கத்திற்குரிய பெங்கமுவே நாலக தேரர், மனிதாபிமான செயற்பாட்டின் மூலம் பெற்ற சுதந்திரத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும், சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்கள் மற்றும் லக்ஷ்மன் கதிர்காமர் அவர்கள் பின்பற்றிய வெளியுறவுக் கொள்கைகளை கவனத்தில் கொண்டு நாம் செயற்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

மங்கள சமரவீர அவர்கள் ஒப்புக் கொண்ட 30 (1) தீர்மானம் நாட்டில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தத் தீர்மானத்தின் விளைவாக பொருளாதாரத் தடைகள், பயணத் தடை மற்றும் சர்வதேச நாடுகளின் ஆதரவு கிடைக்காமை போன்ற பல விடயங்கள் தொடர்பில் சிக்கல் நிலை உருவாக்கக்கூடும் என்று தெரிவித்த அமைச்சர் விமல் வீரவன்ச அவர்கள், அத்தீர்மானத்திற்கு எதிராக எமக்கு சார்பாக விளங்கும் நாடுகளின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்வது மிகவும் முக்கியமானதாகும் எனவும் தெரிவித்தார்.

வழக்கு விசாரணை செய்து தீர்ப்பு வழங்குவது சாதாரண நடைமுறை என்ற போதிலும் இத்தீர்மானத்திற்கமைய ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் ஒரு தீர்மானங்களை மேற்கொள்வது நியாயமில்லை எனவும், ஆனால் இந்த தீர்மானத்துடன் நீதி, சட்டம் மற்றும் நேர்மை ஆகின நெருங்கக்கூடவில்லை என்றும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

இதன்போது வணக்கத்திற்குரிய கிரிந்தே அஸ்ஸஜி தேரர் கருத்து தெரிவிக்கையில், இந்த ஆபத்துக்கு குறிப்பிடத்தக்க அரு காரணிகள் பங்களிப்பு செலுத்துகின்றன. இஸ்லாமிய தீவிரவாதம் மற்றும் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்கல், இறுதியில் அமெரிக்காவின் தேவைகள் நிறைவேற்றப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், இவ்விடயம் தொடர்பாக நமது நாடு சார்பாக கால அவகாசத்தை கோர வேண்டும் என அவர் தெரிவித்தார். கால அவகாசத்திற்கு உடன்படுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவாகவே காணப்படுவதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் விமல் வீரவன்ச அவர்கள், எவ்வளவு விளக்கமளித்தாலும் மாறாத நிலைப்பாட்டிலுள்ள நாடுகளினாலேயே இலங்கைக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாக தெரிவித்தார்.

சில நாடுகளின் கொள்கைகள் மாறாது என்றும், எங்களுக்கு ஆதரவாக இருக்கும் நாடுகளை நாம் வெற்றி கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

இது குறித்து கருத்து தெரிவித்த வணக்கத்திற்குரிய நெதகமுவே விஜய மைத்திரி தேரர் கூறுகையில், இலங்கைக்கு வெளிநாடுகளின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதுடன், தமிழ் புலம்பெயர்ந்தோரின் கருத்திற்கு செயல்படாத தூதரக சேவையை பலப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் இந்த சூழ்நிலையை எதிர்கொள்ள முடியும் என்றார்.மதிப்பிற்குரிய மஹாசங்கத்தினரின் ஆலோசனை மற்றும் அனுசாசனத்திற்கு நன்றி தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், எவ்வாறான சவால்களுக்கு நாடு முகங்கொடுத்தாலும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் மஹாசங்கத்தினரின் ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அதற்கேற்பவே நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

பயங்கரவாத தடை சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு சட்ட உதவி குழு அமைக்க சி.வி.விக்கினேஸ்வரன் நடவடிக்கை !

பயங்கரவாத தடை சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு சட்ட உதவி குழு அமைப்பதாக நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடை சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் விக்கினேஸ்வரனுக்கும் இடையில் யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் அமைந்துள்ள தமிழ் மக்கள் கூட்டணி அலுவலகத்தில் சந்திப்பொன்று இன்று இடம்பெற்றது.

20210211 115702

குறித்த சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்..

இன்று கிளிநொச்சியில் இருந்து பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 6,7 மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டவர்கள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை என்றும், அவர்கள் எந்த குற்றங்களையும் செய்யவில்லை என்றும், முக்கியமாக தங்களுடன் வீட்டிலேயே இருந்தவர்களைத்தான் ஏதோ குற்றம்சாட்டி கைது செய்து கொண்டுபோனதாக கூறியிருந்தார்கள்.

இது சம்பந்தமாக சி.ஐ.டி யினரிடம் நான் பேசியிருந்தேன் அவர்கள் கூறும் விடையங்கள் வித்தியாசமாக இருக்கின்றது இவர்கள் புலிகளோடு சம்பந்தப்பட்டவர்கள் என்றும், புலி இயக்கத்தை மீண்டும் தொடங்குவதற்காக அவர்கள் நடவடிக்கையில் இறங்கியதாகவும் பல குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார்கள். அவர்களில் சிலர் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், சிலருக்கு கொரோனா பீடித்ததால் தங்காலைக்கு அனுப்பியுள்ளதாக அவர்கள் கூறியுள்ளார்கள்.

ஆனால் இவற்றை பார்க்கும் போது பயங்கரவாத தடைச் சட்டத்தின் கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. எங்களுடைய மக்களுக்கு பிரச்சினைகளை, தொந்தரவுகளை கொடுக்கின்றார்கள் அதற்கு காரணம் என்னவென்றால் எங்களுடைய மக்களை பயமடைய செய்யவேண்டும் என்பதற்காக இவ்வாறான செயற்பாடுகளை அரசாங்கம் தங்களுடைய படைகளையும், காவல்துறையினரையும் ஏவி இவ்வாறு செய்கின்றார்கள் என்பது என்னுடைய கருத்து.

எனவே இது சம்பந்தமாக நாங்கள் வழக்குகள் தாக்கல் பண்ண வேண்டிய அவசியம் இருக்கின்றது. எங்களுடைய கட்சிக்கென தமிழ் மக்கள் சார்பிலே நீதிமன்றங்களில் நடவடிக்கை எடுப்பதற்காக சில சட்டத்தரணிகளை ஒன்றுசேர்த்து இருக்கின்றோம். அந்த அடிப்படையில் இவர்களை அவர்களிடம் பாரப்படுத்தி சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு நாங்கள் இப்போது நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளோம்.

இவ்வாறான பல பிரச்சினைகள் இருக்கின்றன இவற்றையெல்லாம் நாங்கள் சட்ட ரீதியாக எவ்வாறு அனுகுவது என ஆராய்ந்து வருகின்றோம். வெகு விரைவில் ஏதாவது ஒரு முடிவுக்கு வரக்கூடிய சூழ்நிலை ஏற்படும் என எதிர்பார்க்கின்றேன் என தெரிவித்தார்.

“தமிழ் மக்களின் உரிமைகள் குறித்து நாம் நாடாளுமன்றத்தில் பேசும் போது, அதற்கு எதிராக குரைப்பதை சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிறுத்த வேண்டும்” – நாடாளுமன்றில் இரா.சாணக்கியன் !

“தமிழ் மக்களின் உரிமைகள் குறித்து நாம் நாடாளுமன்றத்தில் பேசும் போது, அதற்கு எதிராக குரைப்பதை சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிறுத்த வேண்டும்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (10.02.2021)  இடம்பெற்ற கேள்வி நேரத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர்,

அரசியல் கைதிகளில் பலர் நான் பிறப்பதற்கு முதல் இருந்தே சிறைச்சாலைகளில் இருக்கின்றார்கள். அதிலும் தற்போது ஒரு சில வருடங்களாக அவர்கள் இறந்து கொண்டு வருகிறார்கள்.

உங்களது தேர்தல் விஞ்ஞாபனங்களில் ஒன்று அரசியல் கைதிகளை விடுவிப்பது ஆகும். வட கிழக்கு முழுவதிலும் இதனை சொல்லி இருந்தீர்கள். நாமல் ராஜபக்க்ஷ அவர்களும் சிறைச்சாலையில் இருந்து வெளிவரும்போது இதனை வலியுறுத்தி இருந்தார். அதிலும் ஜே.வி.பி காலத்தில் நடந்த விடயங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட்டிருந்தார்கள்.

அதாவது கடந்த மூன்றாம் திகதி முதல் ஏழாம் திகதி வரை நடந்த பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டத்தில் மிக முக்கியமாக உரைக்கப்பட்ட விடயம் அரசியல் கைதிகளின் விடுதலை ஆகும்.ஆனால் கொடுத்த வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றவில்லை. இதனைக் கொண்டு நீங்கள் எவற்றை சாதிக்கப்போகின்றீர்கள்? மற்றும்  முன் நிறுத்தப் போகின்றீர்கள்? அவர்களை உள்ளே வைத்திருப்பது உங்கள் அரசியல் இலாபத்துக்கான  திட்டமா?. அல்லது  நீண்ட கால உங்கள்  திட்டத்துக்காக வைத்திருக்கிறீர்களா?

இது என்னுடைய தனிப்பட்ட கருத்து இல்லை. இது பொதுவாக மக்களால் முன்வைக்கப்படும் பொதுவான கருத்துக்கள் ஆகும்.  எனது குடும்பத்தார் அல்லது நண்பர்களோ உறவினர்களோ அரசியல் கைதிகளாக இல்லை. இவற்றை நான் கேட்பது பாதிக்கப்பட்ட எனது மக்களுக்காக மாத்திரமே.

இவற்றை நாம் கூறிக் கொண்டு இருக்கும்போது என்னை பல உறுப்பினர்கள் இடைமறித்து என்னை கதைக்க விடாமல் செய்து கொண்டிருக்கின்றனர். இங்கே நான் கேட்கும் கேள்விகள் மக்களால் எனக்கு வழங்கப்பட்டு கேட்க வைக்கப்படும் கேள்விகள். இவற்றை நான் இங்கு கேட்பதற்கான முழு உரிமையும் உண்டு. என்னை குழப்பாதீர்கள்.

உங்களுடைய வேலை எதுவோ?  அதனை சரியாக செய்யுங்கள். நீங்கள் எனக்கு எதிராக கதைக்க விடாமல் செய்வதற்கு இவற்றுக்கான மறுப்பு கூறுவதற்கு நீங்கள் பிரதமர் அல்ல, நான் அவரிடமே இக்கேள்விகளை தொடுகின்றேன்.

உங்களிடம் அல்ல அவர் அதற்கு பதில் சொல்லட்டும் நீங்கள் சும்மா இங்கு கூச்சலிட்டு நான் கேட்க வந்த விடயத்தை கேட்க முடியாதபடி செய்யாதீர்கள்.

இங்கு நான் பிரதமருடன், கதைப்பது சில நேரங்களில் ஒரு வருடங்களுக்கு ஒரு முறையாவது கிடைக்கும் சந்தர்ப்பமாக இருக்கும். அப்படி இருக்கையில் இவர்கள் வேண்டும் என்றே குழப்பினால் என்னால் எனது மக்களின் உரிமைகள் சம்மந்தமான பிரச்சினைகளை எவ்வாறு இங்கு எடுத்துரைக்க முடியும்? என தெரிவித்தார்.

“சுமந்திரன் எப்போதும் பயங்கரவாதிகளுக்கு எதிராக குரல் கொடுத்து வந்தவர். அவருக்கான பாதுகாப்பு மீள வழங்கப்பட வேண்டும்” – நாடாளுமன்றில் சரத்பொன்சேகா !

பேரணியில் கலந்துகொண்ட காரணத்தால் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. இதனை தானே நிறுத்தியதாக அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தன்னுடைய உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் அதற்கு அரசே பொறுப்பு கூற வேண்டும் என எம்.ஏ.சுமந்திரன் நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் “அவரின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு மீண்டும் உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும்” என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உட்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டனர்.

நாடாளுமன்றத்தில் நேற்று(10.02.2021) எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச விசேட கூற்றொன்றை முன்வைத்து தெரிவிக்கையில்,

தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் எம். ஏ.சுமந்திரனுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. அவரது உயிர்பாதுகாப்பை கருத்திற்கொண்டே விசேட பாதுகாப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அவர் பாதயாத்திரை சென்றதை அடிப்படையாகக் கொண்டு அவரது பாதுகாப்பை நீக்குவது ஒழுக்கமான செயலல்ல. அதனால் அவருக்கு இருந்த பாதுகாப்பை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஆவேசமாக கூறினார்.

அதனைத் தொடந்து எழுந்த சரத்பொன்சேகா தெரிவிக்கையில்,

நீதிமன்ற உத்தரவை மீறி பேரணி நடத்தியதாக தெரிவித்தும் பயங்கரவாதிகளுக்காக முன்னின்று செயற்பட்டாரென்ற காரணத்தையும் அடிப்படையாகக் கொண்டு சுமந்திரனின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது.

பேரணியை தடைசெய்யக்கோரி பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவு பெற்றிருக்கவில்லையென்றே நினைக்கிறேன்.

மாறாக தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுவதாக தெரிவித்தே நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டிருக்கின்றது.

அத்துடன் பயங்கரவாதிகளுடன் சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக தெரிவித்து அவரது பாதுகாப்பை நீக்குவதாக இருந்தால், எமது பொலிஸ், இராணுவத்தினரை கொலை செய்த கருணா, பிள்ளையானுக்கு எவ்வாறு இராணுவ பாதுகாப்பு வழங்க முடியும்? பிள்ளையானை சுற்றி இராணுவத்தினர் இருப்பதை காணும்போது எமக்கு வெட்கமாக உள்ளது.

சுமந்திரன் எப்போதும் பயங்கரவாதிகளுக்கு எதிராக குரல் கொடுத்து வந்தவர்.

அதனால் ஒரு சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு சுமந்திரனின் பாதுகாப்பை நீக்குவதை நாங்கள் ஏற்றுக் கொள்ளமாட்டோம் என்றார்.

மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் – போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு !

மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராகவும், கைது செய்யப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை உடனடியாக விடுவிக்ககோரியும் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டம் நடந்து வருகிறது. தலைநகர் நேபிடாவ் மற்றும் நாட்டின் 2 மிகப் பெரிய நகரங்களான யாங்கூன், மாண்டலே நகரங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், பொதுமக்கள் ஆா்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்குத் தடை விதிக்கும் அரசாணை திங்கள்கிழமை பிறப்பிக்கப்பட்டது. அந்த உத்தரவையும் மீறி, நேற்று முன்தினமும் ராணுவ ஆட்சிக்கு எதிராக பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தலைநகர் நேபிடாவில் போராட்டக்காரர்களை விரட்டியடிக்க போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். அதனைத் தொடர்ந்து ரப்பர் குண்டுகளால் சுட்டனர். அதன் பின்னரும் போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாததால் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.

இதில் ஒரு பெண் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர். அந்தப் பெண்ணின் தலையில் துப்பாக்கிக் குண்டு துளைத்ததால் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Image result for மியன்மார் மக்கள் போராட்டம்ஆனால் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை எனவும், போராட்டக்காரர்களை எச்சரிக்க வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதற்கிடையில் போலீசாரின் இந்த அடக்குமுறைக்கு மத்தியிலும் நேற்றும் மியான்மர் முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்தன.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் இளவரசர் சார்ள்ஸ் !

உலகிலேயே கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. அங்கு தற்போது முன்பைவிட அதிக வீரியமிக்க புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவியது.

வைரஸ் பரவி வரும் அதே வேகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது. உலகிலேயே கொரோனா தடுப்பூசியை மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்த முதல் நாடு இங்கிலாந்துதான். அந்த வகையில் இங்கிலாந்தில் இதுவரை 1 கோடியே 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக புள்ளி விவர தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கும், 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் 94 வயதான இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்துக்கும், 99 வயதான அவரது கணவர் பிலிப்புக்கும் கடந்த மாதம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இந்த நிலையில் ராணி 2-ம் எலிசபெத்தின் மூத்த மகனும் இளவரசருமான சார்லசுக்கு (வயது 72) நேற்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. 73 வயதான அவரது மனைவி கமிலாவும் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

இங்கிலாந்தில் பைசர் மற்றும் பயோன்டெக் நிறுவனத்தின் தடுப்பூசியும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்தின் தடுப்பூசியும் பயன்பாட்டில் உள்ள நிலையில் இளவரச தம்பதிக்கு எந்த தடுப்பூசி போடப்பட்டது என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

இளவரசர் சார்லஸ் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதும் ஒரு வாரத்திற்கு பின்னர் அவர் அதிலிருந்து மீண்டு வந்ததும் நினைவுகூறத்தக்கது.