27

27

“மிகவும் குறுகிய காலத்தில் மக்களின் வெறுப்புக்கு உள்ளான ஒரே ஒரு அரசாங்கமாக தற்போதைய அரசாங்கம் மாறியுள்ளது” – பிரதமர் முன்னிலையில்  முருந்தெட்டுவே ஆனந்த தேரர் !

“மிகவும் குறுகிய காலத்தில் மக்களின் வெறுப்புக்கு உள்ளான ஒரே ஒரு அரசாங்கமாக தற்போதைய அரசாங்கம் மாறியுள்ளது” என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு ஆதரவான பிரபல பிக்கு முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“பிரதமர் அவர்களே இந்த நாட்டை இவ்வாறு செல்ல அனுமதிக்க முடியாது. நீங்கள் கொஞ்சம் தலையீடு செய்யுங்கள். இன்று நாட்டு மக்கள் உங்களுடன் தான் இருக்கிறார். வேறு யாருடனும் இல்லை. யார் என்ன சொன்னாலும் மக்கள் உங்களுடனே இருக்கிறார்கள். மஹிந்த இல்லா நாடு எமக்கு வேண்டாம் என மக்கள் கூறுகின்றனர்.

பிரதமர் பஸ்ஸில் இருந்து இறங்கியுள்ளதாக சிலர் கூறுகின்றனர். மீண்டும் உங்களை பஸ்ஸில் ஏற்றிச் செல்வோம். ஜனாதிபதி கோட்டாபய அதற்கு ஒருபோதும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார். எமக்கு தேவை உள்ளது.

குறுகிய காலத்தில் நாட்டு மக்கள் வெறுத்த அரசாங்கம் இது என்றால் யாரும் கோவப்படுவதற்கு இல்லை. அரசாங்கத்தை உருவாக்க கஸ்டப்பட்ட எங்களுக்கு அப்படியான வார்த்தைகளை கேட்க விருப்பமில்லை. நாட்டில் உருவான சிறந்த அரசாங்கம் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் என்று சொல்வதை கேட்கவே எமக்கு விருப்பம்” என்று முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.

நேற்று இடம்பெற்ற புத்தக வௌியீட்டில் மஹிந்த ராஜபக்ஷவை அருகில் வைத்துக் கொண்டே முருந்தெட்டுவே ஆனந்த தேரர் இவ்வாறு கூறினார்.

“தமிழர்களுடைய பிரச்சினைகளை பிரதமர் மூலமாக தீர்க்கலாம்” – கருணா அம்மான்

“பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான பேரணி தேவைக்கில்லாத ஒன்று. வீண்வேலை. அரசாங்கம் தமிழ்மக்களுக்கு உதவ இருக்கின்றகாலகட்டத்தில் இவையெல்லாம் தேவையா? இதனை விட கதிர்காம பாதயாத்திரையில் செல்லலாம்” என கருணாஅம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் காரைதீவில் தெரிவித்தார்.

மேலும் தமிழர்களுடைய பிரச்சினைகளை பிரதமர் மூலமாக தீர்க்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தேர்தல் முடிந்த கையோடு அம்மானைக்காணவில்லை என பலர் விரக்தியிலிருந்ததுண்டு ஒன்றுமே செய்யவில்லை என்றும் கூறினார்கள்.

உண்மை அரசாங்கம் இப்போதுதான் நிலையான கட்டத்திற்கு வந்துள்ளது. இனி நாம் நிறைய வேலைளை முடிக்கலாம். கொழும்பிற்குச்சென்று பல அமைச்சர்களையும் சந்தித்துவருகிறேன். விரைவில் நல்லவை நடக்கும்.

கல்முனை வடக்கு பிரதேசசெயலகம் தரமுயர்த்தல் தொடர்பாக அமைச்சர் சமல்ராஜபக்சவிடம் பேசியுள்ளேன். விரைவில் நல்ல பதிலைஎதிர்பார்க்கலாம்.

“காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களை சந்திக்க ஜனாதிபதி முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது” – ரவூப் ஹக்கீம்

“காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களை சந்திக்க ஜனாதிபதி முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது” என முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசினால் இறந்த முஸ்லீம்களின் உடல்கள் எரிக்கப்பட்டு வந்த நிலையில் அண்மையில் அரசு வர்த்தமானி அறிவிப்பின் மூலம் அதனை நீக்கியிருந்தது.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

இந்த விடயம் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் உள்வாங்கப்பட்டிராது விட்டிருந்தால், அவ்வாறே உறுப்பு நாடுகள் சிலவற்றால் இலங்கை மீது கொண்டுவரப்பட்ட பிரேரணையில் சேர்க்கப்படாது விட்டிருந்தால் வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட , மக்களின் ஒரு ஒரு சாராரை மனவேதனைக்குள்ளாக்கிய இத்தகைய எரியூட்டும் அவலத்திற்கு தீர்வு கிட்டியிருக்க மாட்டாது.

அமர்வின் ஆரம்பத்திலேயே இஸ்லாமிய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் குரல் எழுப்பியதன் பயனாகவும், அநேகமான மேற்குலக நாடுகள் கருத்துப் பறிமாற்றங்கள் நடத்தி கண்டன எதிர்ப்பலைகளை தோற்றுவித்ததன் விளைவாகவும் பெப்ரவரி 25 ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவை அதன் செயல்பாட்டை தீவிரப்படுத்தியது.

தனிப்பட்ட நாடுகள் ஒவ்வொன்றினதும் மனித உரிமை மீறல்களை கண்காணிக்கின்ற விடயத்தில் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பங்களிப்பை யாரும் குறைத்து மதிப்பிடமுடியாது.

மனித உரிமைகள் நிகழ்ச்சி நிரலில் எங்கள் நாடும் ஓர் அங்கம் என்ற வகையில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் செயற்பாடுகளைப் பொறுத்தவரை முன்வைக்கப்படும் அறிக்கைகள் மீது கரிசனை செலுத்தி அவற்றை அணுக வேண்டும்.

நாங்கள் சந்தித்த எமது தலைநகரிலிருந்து இராஜதந்திர முன்னெடுப்புகளை மேற்கொண்டுவரும் வெளிநாட்டு முக்கியஸ்தர்களும் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கலந்துகொள்ளும் சர்வதேசப் பிரமுகர்கள் பலரும் எங்களது கோரிக்கையின் நியாயத்தைப் புரிந்துகொண்டதோடு, ஒத்துழைப்பு நல்குவதாக உறுதிமொழியும் அளித்திருந்ததற்கு நாங்கள் நன்றி தெரிவிக்கின்றோம்.

அத்துடன் இந்த விடயத்தில் எங்களது இழந்த உரிமையை மீளப் பெறுவதற்கு உதவிய பல்வேறு அரசியல் கட்சிகள் குறிப்பாக, ஐக்கிய மக்கள் சக்தி,தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் முற்போக்குக் கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் ஏராளமான சிவில் சமூக அமைப்புக்கள், உள்நாட்டு வெளிநாட்டு நிறுவனங்கள் என்பன தனியாகவும் கூட்டாகவும் இதற்காகக் குரல் கொடுத்ததை நன்றியறிதலோடு நினைவு கூர்கின்றோம்.

இந்த விவகாரத்தில் வெளிநாட்டு அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு நாடுகளை ஒன்றிணைத்துச் செயல்படும் இஸ்லாமிய நாடுகளின் ஒன்றியம் போன்றவற்றின் அழுத்தம் கடந்த சில மாதங்களாக சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டு வந்தது.

காணாமல் போனோரின் குடும்பத்தினர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் பல்லாண்டு காலமாக ஈடுபட்டுவருகின்றமையால், ஜனாதிபதி அவர்களின் குடும்பத்தினரைக் கண்டு கதைப்பதற்கு முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், அது அவர்களின் துன்பியல் வாழ்வில் அது ஒரு சிறிய முன்னெடுப்பு மட்டுமே.

ஐ.நா. மனித உரிமை பேரவையின் அறிக்கையில் குறிப்பிடப்படும் ஏனைய விடயங்கள் அனைத்தின் மீதும் அரசாங்கம் உரிய கவனஞ் செலுத்தி, ஆக்கபூர்வமான பங்களிப்புக்களைச் செய்து அதனது நிலைப்பாட்டை மீளாய்வுக்குட்படுத்தி, உள்ளக விவகாரங்களில் மறுப்புக் கூறுவதிலேயே காலத்தைக் கடத்தாது – பொறுப்புக்கூறல், நீதி மற்றும் நல்லிணக்கச் செயற்பாடுகளில் நாட்டம் செலுத்த வேண்டும் என்றுள்ளது.

“எமது தாய் நிலத்தில் நீதிக்காக ஏங்கித் தவிக்கும் எமது மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற மனிதநேயத்தோடு நான் சாகும் வரையிலான இந்த உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பிக்கின்றேன்” – ஆரம்பமானது உண்ணாவிரத போராட்டம்!

பிரித்தானிய அரசிற்கும் ஐ.நா சபைக்கும் கோரிக்கைகளை முன்வைத்து சாகும்வரை உண்ணாவிரதத்தை பிரித்தானியாவின் இலண்டனில் ஆரம்பித்துள்ளார் அம்பிகை செல்வகுமார் எனும் பெண்.

தான் சாகும்வரையில் அந்த உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்த அம்பிகை செல்வக்குமார், தனது உண்ணாவிரதத்திற்கான காரணத்தை தமிழ் மக்களிடம் அறிவித்திருந்தார்.

உலகத் தமிழர்கள் அனைவருக்கும் வணக்கம்

நான் திருமதி அம்பிகை செல்வகுமார் தற்போது பிரித்தானியாவில் லண்டனில் வசித்து வருகின்றேன். ஈழத்தமிழர்களுக்கு விடுதலை , நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக எமது குடும்பம் நீண்டகாலமாகவே சனநாயக களத்திலே எம்மால் முடிந்த பணிகளை நெஞ்சுக்கு நீதியாக குரல் கொடுத்து வந்திருக்கிறது.

அந்தவகையில் தற்போது ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைப் பேரவையில் மீண்டும் சிறிலங்காவுக்கு கால அவகாசத்தை வழங்கி சிறீலங்காவின் நீதியற்ற உள்ளூர் பொறிமுறைக்குள் தமிழ் மக்களின் நீதியை முழுமையாக நீர்த்து போகச் செய்யும் அதேவேளை தற்போது தாயகத்தில் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பை சிறீலங்கா பேரினவாத அரசு தொடர்வதற்கும் அங்கீகாரம் வழங்கும் வகையில் மனித உரிமைகள் பேரவையில் நான் வாழும் பிரித்தானியா நாட்டின் தலைமையில் சிறீலங்கா குறித்து இணைத்தலைமை நாடுகள் இணைந்து தீர்மானத்தை முன்வைக்கவுள்ள செய்தி உலகம் எங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கும், மனித நேயத்தை நேசிக்கும் அனைவருக்கும்,  எல்லாவற்றிற்கும் மேலாக தாயகத்தில் வீதிகளில் இறங்கி நீதிக்காக போராடிவரும் எமது தாய்மார்கள், குழந்தைகள்இ மற்றும் குடிசார் அமைப்புகள், தமிழ் அரசியல் கட்சிகள் உள்ளிட்ட எமது உறவுகள் அனைவருக்கும் மிகுந்த மனவேதனையும் ஏமாற்றத்தையும் தந்துள்ளது.

எனவே எமது தாய் நிலத்தில் நீதிக்காக ஏங்கித் தவிக்கும் எமது மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற மனிதநேயத்தோடு நான் சாகும் வரையிலான இந்த உணவு தவிர்ப்பு போராட்டத்தை நாளை 27 மாசி மாதம் 2021 ஆண்டு மதியம் 12 மணிக்கு தொடங்கவுள்ளேன்.

எனது இந்த சாகும் வரையிலான உண்ணாவிரதப் பயணத்திற்கு தாயகத்திலும்இ தமிழகத்திலும்இ புலம் பெயர்ந்த தேசங்களிலும் வாழும் நான் உயிருக்கு நிகராக நேசிக்கும் தமிழ் சொந்தங்கள் அனைவரும் உங்கள் குடும்பத்தில் ஒருத்தியாக என்னை ஏற்று நீங்கள் அனைவரும் அனைத்துலக சமுகத்தை நோக்கி தீவிரமாக குரல் கொடுத்து இந்தப் போராட்டத்திற்கு முழுமையாக வலுச்சேர்ப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. நிச்சயம் எமது மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை நாம் அனைவரும் ஒன்று பட்டு குரல் கொடுப்போம் என்ற வேண்டுகையை உரிமையோடு உங்கள் குடும்பத்தில் ஒரு மகளாகஇ சகோதரியாக அனைவரிடத்திலும் சிரம் தாழ்த்தி வேண்டிக்கொண்டு எனது பயணத்தை தொடங்குகின்றேன். நான் பெரிது நீ பெரிது என்றில்லாது நாடு பெரிது எம் இனவிடுதலை பெரிது என்பதை மனதில் நிறுத்தி நம் நாட்டிற்கானஇ மக்களுக்கான விடுதலை நோக்கி எம் மனச்சாட்சிக்கும் பொதுநீதிக்கும் கட்டுப்பட்டு சனநாயக வழியில் தொடர்ந்து பயணிப்போம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

“இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்த வேண்டும் என்பதில் நாம் தெளிவாக இருக்கின்றோம்” – எம்.ஏ.சுமந்திரன்

“இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்த வேண்டும் என்பதில் நாம் தெளிவாக இருக்கின்றோம்” என  தமிழரசுகட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழரசுகட்சியின் மத்தியசெயற்குழு கூட்டம் வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (27.02.2021) இடம்பெற்றது.

இதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

ஒற்றுமையான முன்னெடுப்பு என்பது அரசியல் கூட்டோ தேர்தல் கூட்டோஅல்ல. தமிழர்களிற்கு எதிரான விடயங்களில் அனைத்து தரப்புகளும் ஒன்று சேர வேண்டிய தேவை இருக்கிறது. தமிழ்மக்கள் மத்தியிலே இது தொடர்பான எதிர்பார்ப்புகளும் இருக்கிறது. எனவே அரசியல் தலைமைத்துவம் கொடுக்க வேண்டியது எங்களது பொறுப்பு. அந்த பொறுப்பை நிறைவேற்றுவதை அரசியலுக்காக செய்கிறோம் என்று சொன்னால் அதனை ஏற்கமுடியாது.

அத்துடன் இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்படுவது குறித்து இன்று பேசினோம். மனித உரிமை பேரவை தனக்கு உரிய அதிகார வரம்புகளை பயன்படுத்தி தமது வார்த்தை பிரயோகங்களிற்கு ஊடாக சில முக்கியமான விடயங்களை இந்த வரைபிற்குள்ளே உள்டக்கியிருக்கிறார்கள்.

இலங்கை தொடர்பான விடயம் சர்வதேச மேற்பார்வையின் கீழே தொடர்ச்சியாக இருக்கவேண்டும். அந்ததீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கான செயற்பாடுகளை இணை அனுசரணை நாடுகளுடன் சேர்ந்து எடுத்திருக்கிறோம்.

இந்த அரசாங்கத்தின் போக்கு தமிழர்களிற்கு எதிராக இருக்கிறது என்பது தெரிந்த விடயம். தற்போது அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் எமது மக்களின் வாழ்க்கையை பாதிக்கின்றது. இருப்பை பாதிக்கின்றது. தொல்லியல் திணைக்களம் வனவளத்திணைக்களம் ஆகியன முன்னெடுக்கப்படும் கஸ்ரங்களை என்ன விதத்தில் எதிர்கொள்ளலாம் என்ற விடயம் தொடர்பாகவும் நாம் கலந்துரையாடியிருந்தோம்.

அத்துடன் உள்ளூராட்சி மன்றங்களில் ஏற்பட்ட பிணக்குகள் தொடர்பாகவும் வரவுசெலவுத்திட்டங்களிற்கு எதிராக வாக்களித்த கட்சி உறுப்பினர்களிற்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது சம்மந்தமாக நாங்கள் பேசியிருக்கிறோம். கட்சி பலப்படுத்தப்படவேண்டிய தேவை இருக்கிறது அதனை ஆராய்ந்து நடவடிக்கைகளை எடுப்போம்.
புதிய அரசியல் அமைப்பு தொடர்பாக ஜனாதிபதியால் உருவாக்கப்பட்ட குழுவிற்கு எமது பிரேரணைகளை முன்வைத்திருந்தோம்.

அதனடிப்படையில் அவர்களுடன் ஒரு சந்திப்பு இடம்பெற்றிருந்தது. மூன்றாவது குடியரசு அரசியலைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டுமாக இருந்தால் அது தமிழ்தேசிய பிரச்சினைக்கு முழுமையான தீர்வை உள்ளடக்கியதானவகையில் இருக்கவேண்டியதன் அவசியத்தை சம்பந்தன் ஐயா அவர்கள் வலியுறுத்தி பேசியிருந்தார். இதனால் நன்மை வருமா இல்லையா என்பது எங்களுக்கு தெரியாது.

பொலிகண்டி பேரணியை ஏற்படுத்திய சிவில் அமைப்புகள் அது எதற்காக நடாத்தப்படுவதாக தெரிவித்து 10 காரணிகளை பலதரப்பிற்கும் அனுப்பியிருந்தது. அந்த கோரிக்கைகளை முன்வைத்தே அது ஆரம்பிக்கப்பட்டது. அதிலே சர்வதேச நீதிமன்ற பொறிமுறை பற்றி எதுவுமே சொல்லப்பட்டிருக்கவில்லை. அதனால் நாங்கள் அதற்கு எதிர்ப்பு என்று அர்த்தம் இல்லை. எனவே குறித்த சில காரணங்களை வைத்து ஆதரவை திரட்டிவிட்டு வேறுகாரணங்களை சொல்வது நியாயமற்றவிடயம் அதையே நாங்கள் சொல்லியிருந்தோம். உறுப்பு நாடுகளிற்கு நாம் அனுப்பிய கடிதத்திலே இந்தவிடயம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு பாரப்படுத்த வேண்டும் என்று தெளிவாக சொல்லியிருக்கிறோம். அதற்கு மாறானவர்கள் அல்ல நாங்கள்.

தமிழ் மக்கள் பேரவை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு…  தமிழ் மக்கள் பேரவை என்ற ஒன்று இப்போது இருப்பதாக எனக்கு தெரியாது என்று பதிலளித்தார்.