09

09

“பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரணியில் கலந்துகொண்டவர்களை கைது செய்து சிறையிலடைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம் ” – அமைச்சர் சரத்வீரசேகர

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரணியில் கலந்துகொண்டவர்களுக்கு எதிராக வழக்குகளை தாக்கல் செய்ய முடியும்,அவர்களுடைய வாகனங்களை பறிமுதல் செய்து அவர்களை சிறையில் அடைக்க முடியும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர

தொலைக்காட்சி பேட்டியொன்றின் போதே அவர் இதனை  தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ,

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரணியில் கலந்துகொண்டவர்களுக்கு எதிராக வழக்குகளை தாக்கல் செய்ய முடியும்,அவர்களுடைய வாகனங்களை பறிமுதல் செய்து அவர்களை சிறையில் அடைக்க முடியும் . அதற்கான நடவடிக்கைகள் ஆரம்பமாகிவிட்டன என அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான ஒன்று இடம்பெறும்போது எங்களிற்கு இது குறித்த புலனாய்வு தகவல்கள் கிடைத்துவிடுகின்றன நாங்கள் நீதிமன்ற உத்தரவை பெற்றோம்.

நாங்கள் அவர்களை கைதுசெய்வதை அவர்கள் மீது கண்ணீர்புகை பிரயோகத்தை மேற்கொள்வதை சுமந்திரன்,கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்கள் விரும்புகின்றார்கள்.

இதன் காரணமாக நாங்கள் சகிப்புதன்மையுடன் நடந்துகொண்டோம்,ஆனால் தற்போது நீதிமன்ற உத்தரவு உள்ளதால் எங்களிடம் அவர்களின் படங்கள் உள்ளதால் அவர்களின் வாகனங்களின் படங்கள் உள்ளதால் இந்த தனிநபர்கள் யார் என்பது எங்களுக்கு தெரியும் . எங்களால் அவர்களிற்கு எதிராக வழக்குகளை தாக்கல் செய்ய முடியும்,அவர்களுடைய வாகனங்களை பறிமுதல் செய்து அவர்களை சிறையில் அடைக்க முடியும்.

நாங்கள் சட்டத்தின் அடிப்படையில் செயற்படுவோம்,இதன் காரணமாக நீங்கள் அச்சப்படதேவையில்லை. நாங்கள் இந்த நடவடிக்கைகளை ஆரம்பித்துவிட்டோம்,அடுத்த சில நாட்களில் நாங்கள் வழக்குகளை தாக்கல் செய்வோம், சுமந்திரனிற்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்,நான் நேற்று அவருக்கு வழங்கப்பட்ட விசேட அதிரடிப்படை பாதுகாப்பை விலக்கிக்கொண்டேன்.” எனவும் கூறியுள்ளார்.

 

இந்தியா அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டி – வெற்றியுடன் தொடரை ஆரம்பித்தது இங்கிலாந்து !

இந்தியா அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து கிரிக்கெட் அணி 227 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலைப் பெற்றுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை சென்னை- சேப்பாக்கம் மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து கிரிக்கெட் அணி, முதல் இன்னிங்ஸிற்காக 578 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஜோ ரூட் 218 ஓட்டங்களையும் சிப்ளி 87 ஓட்டங்களையும் ஸ்டோக்ஸ் 82 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்திய அணியின் பந்துவீச்சில், பும்ரா மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா 3 இலக்குகளையும் இசாந் சர்மா மற்றும் நதீம் ஆகியோர் தலா 2 இலக்குகளையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா அணி, 337 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரிஷப் பந்த் 91 ஓட்டங்களையும் வொஷிங்டன் சுந்தர் ஆட்டமிழக்காது 85 ஓட்டங்களையும் புஜாரா 73 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில், டொம் பெஸ் 4 இலக்குகளையும் ஜேம்ஸ் எண்டர்சன், ஜொப்ரா ஆர்செர மற்றும் ஜெக் லீச் ஆகியோர் தலா 2 இலக்குகளையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 241 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, 178 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் இந்தியா அணிக்கு 420 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதன்போது இங்கிலாந்து அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரூட் 40 ஓட்டங்களையும் ஒலீ போப் 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இந்திய அணியின் பந்துவீச்சில், அஸ்வின் 6 இலக்குகளையும் நதீம் 2 இலக்குகளையும் இசாந் சர்மா மற்றும் பும்ரா ஆகியோர் தலா 1 இலக்கினையும் வீழ்த்தினர்.

75 டெஸ்டில் 386 விக்கெட்- அஸ்வின் புதிய சாதனை

இதனைத்தொடர்ந்து 420 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்தியா அணி, 187 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் இங்கிலாந்து அணி 227 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, விராட் கோஹ்லி 72 ஓட்டங்களையும் சுப்மான் கில் 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில், ஜெக் லீச் 4 இலக்குகளையும் ஜேம்ஸ் எண்டர்சன் 3 இலக்குகளையும் டோமினிக் பெஸ் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா 1 இலக்கினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, முதல் இன்னிங்ஸில் 40 ஓட்டங்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் 218 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்ட ஜோ ரூட் தெரிவுசெய்யப்பட்டார்.

இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, எதிர்வரும் 13ஆம் திகதி சென்னையில் ஆரம்பமாகவுள்ளது.

வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமியின் சடலம் மீட்பு !

வவுனியா கற்குழி பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் 16 வயது மாணவியின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இன்றையதினம் வீட்டில் யாருமற்ற நிலையில் அவரது தங்கையுடன் குறித்த சிறுமி இருந்துள்ளார். இந்நிலையில் அவர் தூக்கில் தொங்கியிருப்பதை அவதானித்த அவரது தங்கை அயலவர்களிற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினருக்கு தெரியப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சடலத்தினை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கற்குழி பகுதியை சேர்ந்த சதுசியா வயது 16 என்ற சிறுமியே இவ்வாறு மரணமடைந்துள்ளார். அவர் எழுதியதாக தெரிவிக்கப்படும் கடிதம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

“பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரெழுச்சியின் வெற்றி, தனிப்பட்டவர்களின் வெற்றியல்ல . எல்லோரும் இணைந்த இனத்தின் வெற்றி” – சிவாஜிலிங்கம்

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரெழுச்சியின் வெற்றி, தனிப்பட்டவர்களின் வெற்றியல்ல எனவும், எல்லோரும் இணைந்த இனத்தின் வெற்றி என்றும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள தனது அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் ,

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு மத்தியில் பல்லாயிரக்கணக்கில் திரண்ட மக்களுக்கு எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்தப் பேரணியில் முக்கியமான விடயம் வெளியிலிருந்து உத்தரவுகள் வழங்கப்பட்டன. சாமியாரை முன்னால் நிறுத்திவிட்டு பின்னாலிருந்து உத்தரவுகள் வழங்கப்பட்டன. சாமியாரில் பிழை இல்லை.

இதில், அரசியல்வாதிகள் வேண்டாம் என்பது போன்ற நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. மூன்றாம் திகதி பொத்துவிலில் பேரணி ஆரம்பமானபோது நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கு செல்லாமல் விட்டிருந்தால் அந்தப் பேரணி பொத்துவிலோடு முடிந்திருக்கும்.

அங்கு போன நாடாளுமன்ற உறுப்பினர்களைக் குறை சொல்வது சரியல்ல. அதிலே, மிக முக்கியமாக முன்னணியில் சுமந்திரனும் சாணக்கியனும் இருந்திருக்கிறார்கள். அவர்களின் பங்களிப்பைப் புறக்கணிக்க முடியாது. அவர்களுக்குடன் ஆயிரம் கருத்து வேறுபாடு இருக்கலாம். விமர்சனங்கள் இருக்கலாம். எல்லோரும் சேர்ந்து இதைச் சாதித்தோம் என்பதைப் புரிந்துகொள்ளாமல் கருத்துத் தெரிவிப்பது சரியல்ல.

சில கருத்து வேறுபாடுகள் இருந்தால் அதைப் பேசலாம். தீர்த்துக் கொள்ளலாம். அதை விடுத்து திருகோணமலை சிவன் கோயிலுக்கு முன்னால் வைத்து கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர், இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தன்னிச்சையாக நடந்து கொண்டார்கள் என அறிவிக்கின்றார்.

எங்கள் வீட்டுப் பிரச்சினையைக்கூட பொதுவெளியில் பேசவேண்டிய அவசியமில்லை. அதன் எதிரொலியாக திருகோணமலையிலிருந்து பேரணியில் சுமந்திரன் கலந்து கொள்ளவில்லை. அவருக்கு வேறு தனிப்பட்ட காரணங்களும் இருந்திருக்கலாம்.

முன்னுக்கு நாங்கள் தான் வர வேண்டும் என சாமியாரை வேள்விக்குக் கொண்டு செல்வதைப் போல வளையம் பிடித்துக்கொண்டு சென்றார்கள். இதெல்லாம் தேவையில்லை. அவர்கள் தலைமை தாங்கி முன் செல்லலாம் என்று எங்களுக்கும் உடன்பாடு இருந்தது. முதலில் மதத்தலைவர்கள், பின்னால் பல்கலைக்கழக மாணவர்கள், அதன்பின்னால் சிவில் சமூகத்தினர், அதையடுத்து அரசியல்வாதிகள் எனக் கூறினார்கள்.

நான் ஒன்றைத் தெளிவாகக் கூறுகிறேன். அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லாமலிருந்தால் இந்த வெற்றியை அடைந்திருக்க முடியாது. இது தனிப்பட்டவர்களின் வெற்றியல்ல. எல்லோரும் இணைந்த இனத்தின் வெற்றி. இதைப் புரிந்து கொள்ளாமல் அவர் வேண்டாம், இவர் வேண்டாம் எனச் சொல்ல முடியாது. தனிப்பட்ட கட்சிப் பிரச்சினைகளை வேறு இடங்களில் வைத்துக் கொள்ளுங்கள்.

இதேவேளை, சிலர் நினைக்கிறார்கள் கல் வைத்த இடம் ஊறணியென, வல்வெட்டித்துறையென. அது தவறானது. அதுவும் பொலிகண்டிதான். பொலிகண்டி செம்மீன் படிப்பகத்தில்தான் கல் நாட்டப்பட்டது. அடிக்கல் நாட்டுவதெல்லாம் திட்டத்தில் இருக்கவில்லை. திடீரென செய்யப்பட்ட ஏற்பாடு.

ஆனால், சுமந்திரனும், சாணக்கியனும் அதில் போராட்டத்தை முடித்து வைப்பதை போல நடந்து கொண்ட விதம் பிழையானது. பொலிகண்டி ஆலடியில் மக்கள் வற்புறுத்தியிருக்கலாம். ஆனால், தலைவர்கள் தலைமை தாங்கிச் சரியான வழிகாட்ட வேண்டும். ஆனால், அப்பொழுது தலைமைத்துவம் இல்லாமல் போய்விட்டது.

நான் திக்கம் சந்திக்குப் போய்க்கொண்டிருந்த போது, சுமந்திரனும் சாணக்கியனும் நிகழ்ச்சியை முடித்துவிட்டனர் எனச் செய்தி வந்தது. பின்னர் சாமியார் அங்கு வந்து பிரகடனம் வாசித்து முடித்து வைக்கப்பட்டது. என்று குறிப்பிட்டுள்ளார்.

“ஜனாதிபதிக்கு தலைமைத்துவம் வழங்க வேண்டும் என கூறிய கருத்தில் உண்மையில்லை ” – விமல் வீரவங்ச

பொதுஜனபெரமுனவின் தலைமைப் பதவியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு வழங்க வேண்டுமென அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தாக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன குறித்து தெரிவித்த கருத்தினை அமைச்சர் விமல்வீரவன் மறுத்துள்ளார்.

செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை நிராகரித்துள்ளார்.
கோத்தபாய ராஜபக்ச மகிந்த ராஜபக்சவின் தேர்தல் வெற்றிகளில் தான் எடுத்த இறுக்கமான நிலைப்பாட்டிற்காக மன்னிப்பு கேட்க தயார் என விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார்.

பிரதமரை ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் தலைவர் பதவியிலிருந்து நீக்கவேண்டும் என நான் தெரிவிக்கவில்லை என குறிப்பிட்டுள்ள விமல்வீரவன்ச கோத்தபாய ராஜபக்சவிற்கு கட்சியில் உயர் பதவியொன்றை வழங்கவேண்டும் எனவே தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

கட்சிக்குள் ஜனாதிபதி பொருத்தமான உயர்பதவியை வழங்கவே இந்த வேண்டுகோளை விடுத்ததாக விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை கட்சிக்கு மாத்திரமல்ல நாட்டிற்கும் பலனளிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

கருணாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி !

விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு (கருணா) எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து அந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தல் பிரசார கூட்டமொன்றில் பேசிய கருணா, யுத்தத்தில் ஒரே இரவில் பெருமளவு இராணுவத்தை கொன்றதாக தெரிவித்திருந்தார்.

அவரின் இந்த பேச்சுக்கு எதிராக அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் அவரின் பேச்சு தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

எனினும் குறித்த அடிப்படை உரிமை மனு இன்றையதினம் வாபஸ் பெறப்பட்டதை அடுத்து அந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளதாக சிங்கள இணையம் ஒன்று தெரிவித்துள்ளது.

ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து வவுனியாவில் சத்தியாக்கிரக போராட்டம் !

வவுனியா பூந்தோட்டம் சிறிநகர் கிராம மக்கள் ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து சத்தியாக்கிரக போராட்டத்தில் இன்று (09.02.2021) ஈடுபட்டுள்ளனர்.

20 வருடங்களாகியும் தமது கிராமத்திற்கு காணி, உரிமைப்பத்திரங்கள் வழங்கப்படவில்லை, உட்கட்டுமான வசதிகள் செய்துதரப்படவில்லை, மைதானம் இன்மை,வீட்டுத்திட்டம் வழங்காமை போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே குறித்த சத்தியாக்கிரக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள்,

பலவருடங்கள் ஆகியும் எமது கோரிக்கைகளிற்கு தீர்வு கிடைக்கவில்லை. இது தொடர்பாக ஜனாதிபதி நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆளுனர், அரச அதிகாரிகளிற்கு தெரியப்படுத்தியும் எமது விடயத்தில் எவரும் கரிசனை கொள்ளவில்லை.உட்கட்டுமானம் சீரின்மையால் மழைக்காலங்களில் வீடுகளில் நீர்தேங்கி நிற்கிறது. காணி உரிமைப்பத்திரம் வழங்கினால் அதனை வங்கிகளில் வைத்து கடன்பெற்றாவது வீடுகளை கட்டிக்கொள்ளமுடியும். அதுவும் வழங்கப்படவில்லை. அத்துடன் கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ள புனர்வாழ்வு இணைப்புகாரியாலயம் மற்றும் தேசிய கல்வியியற்கல்லூரிகளில் இருந்து வெளிவரும் கழிவுநீர் எமது கிராமத்திற்குள்ளேயே வருகிறது.

எமது அடிப்படை கோரிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளால் பலமுறை வாக்குறுதிகள் வழங்கியும் எவரும் அதனை தீர்த்துவைக்கவில்லை. எமாற்றமே மிஞ்சியது. எனவே எமது கோரிக்கைகளிற்கு தீர்வு கிடைக்கும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு பிரதேச செயலாளர் ந.கமலதாசன், பிரதேச சபை தவிசாளர் து.நடராஜசிங்கம் ஆகியோர் சென்றிருந்ததுடன் மக்களுடன் கலந்துரையாடியிருந்தனர். முதற்கட்டமாக கிராமத்தில் உள்ள 95 பேருக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், ஏனைய காணிகள் குளத்தின் ஒதுக்கத்திற்குள் வருகிறது.

அதனை உரிய திணைக்களம் விடுவித்து தந்தால் அதற்கான உறுதிகளையும் வழங்கமுடியும்.என்று பிரதேச செயலாளர் தெரிவித்ததுடன் ஏனைய பிரச்சனைகள் தொடர்பாக சாதகமாக ஆராய்வதாக தெரிவித்திருந்தார். கிராமத்தினையும் பார்வையிட்டிருந்தார்.

இதேவேளை கிராமத்தின் பின்பகுதியில் குளத்தின் நீரேந்து பகுதியில் 55 பேரது காணிகள் அமைந்துள்ளது. அதனை விடுவிப்பது தொடர்பாக எமது தலைமை அலுவலகமே தீர்மானிக்கமுடியும். எனவே நீங்கள் கோரிக்கைகளை வழங்கினால் மேலதிக நடவடிக்கைகளிற்காக அதனை எமது தலைமை அலுவலகத்திற்கு அனுப்பிவைப்பதாக போராட்டகாரர்களை சந்தித்த நீர்பாசன திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எனினும் குறித்த மக்களின் போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

“60வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு கொரோனா வைரஸ் தடுப்பூசியை வழங்கும் போதே ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் தடுப்பூசி வழங்குவோம்” – சுகாதார அதிகாரிகள்

ஜனாதிபதியும் பிரதமரும் தங்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை வழங்குமாறு வேண்டுகோள் விடுக்கவில்லை என சுகாதார அதிகாரிகளை மேற்கோள்காட்டி தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்தமாதம் 60வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு கொரோனா வைரஸ் தடுப்பூசியை வழங்கும் போதே அவர்களிற்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதியையும் பிரதமரையும் பாதுகாக்கவேண்டியதன் அவசியத்தை நாங்கள் உணர்ந்துள்ளோம் நேரம் வந்ததும் அவர்களுக்கு தடுப்பூசியை வழங்குவோம் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவர்களை 60வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான பிரிவில் சேர்த்துள்ளோம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது சுகாதார பணியாளர்களிற்கு மருந்துகளை வழங்கும் பணிகள் முடிவடைந்துவிட்டதால் ஜனாதிபதி பிரதமர் குறித்து நாங்கள் சிந்திக்கவேண்டும் ஆனால் அவர்களுக்கு மருந்துகளை வழங்குமாறு வேண்டுகோள்கள் எவையும் வெளியாகவில்லை என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் முன்னுரிமை வழங்கினால் நாடாளுமன்றத்திற்கு முன்னுரிமை வழங்கினால் பின்னர் விவாதங்கள் வெடிக்கும் எனவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“இலங்கையில் தமிழ் சிங்கள மக்கள் அமைதியாக வாழ்வதை விரும்பாதவர்கள் தற்போது ஜெனீவாவில் கோஷம் எழுப்பி இலங்கையை தண்டிக்க முயற்சித்துக்கொண்டுள்ளனர்” – அமைச்சர் விமல் வீரவன்ச

“இலங்கையில் தமிழ் சிங்கள மக்கள் அமைதியாக வாழ்வதை விரும்பாதவர்கள் தற்போது ஜெனீவாவில் கோஷம் எழுப்பி இலங்கையை தண்டிக்க முயற்சித்துக்கொண்டுள்ளனர்” என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

முன்னைய ஆட்சியில் அப்போதைய வெளிவிவகாரத்துறை அமைச்சர் மங்கள சமரவீர இலங்கையை காட்டிக்கொடுத்து, அமெரிக்கா கொண்டு வந்த பிரேரணையை ஆதரித்ததன் விளைவாகவே தம்மால் எந்தவொரு சுயாதீன தீர்மானமும் எடுக்க முடியாது போனது.

எனினும் நாம் இன்று அனைத்தையும் நிராகரிப்பதாக வெளிப்படையாக தெரிவித்துள்ளோம். அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணையில் இருந்து நாம் வெளியேறிவிட்டோம்.

எனினும் நமது இராணுவம் மீதும் தமது ஆட்சி மீதும் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வேறு வழியில் நமது இராச்சியத்தை பலவீனப்படுத்த முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எனினும் நம்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ள சகல குற்றச்சாட்டுகளுக்கும் அரசாங்கம் பதில் தெரிவிக்கும். அதேபோல் நமது இராணுவத்தை காப்பாற்றும் சகல நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுப்போம்.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்திக்கொடுத்த பின்னர் விடுதலைப் புலிகளை அழித்ததை விரும்பாதவர்களும் இந்நாட்டில் தமிழ் சிங்கள மக்கள் அமைதியாக வாழ்வதை விரும்பாதவர்களுமே தற்போது ஜெனீவாவில் கோஷம் எழுப்பி இலங்கையை தண்டிக்க முயற்சித்துக்கொண்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

46 வது மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கை தொடர்பில் புதிய தீர்மானம் – உறுதி செய்தது பிரித்தானியா !

ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ள 46 வது மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கை தொடர்பில் புதிய தீர்மானமொன்றை சமர்ப்பிக்கப்படுமென்பதை பிரித்தானியா உறுதி செய்துள்ளது.

ஜெனிவாவிற்கான பிரித்தானியா தூதுவரும் நிரந்தர வதிவிடப்பிரதிநிதியுமாகிய ஜூலியன் பிரத்வைட் மனித உரிமை பேரவைக்கு நேற்று திங்கட்கிழமை இதனை அறிவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

22ம் திகதி முதல் இடம்பெறவுள்ள மனித உரிமை பேரவையின் அமர்வு குறித்த திட்டங்களை உறுதிசெய்வதற்காக மனித உரிமை பேரவையின் கூட்டம் நேற்று இடம்பெற்றவேளை பிரிட்டன் தனது தீர்மானத்தை சமர்ப்பிக்கவுள்ளமை உறுதியாகியுள்ளது.

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மனித உரிமைகளை ஊக்குவிக்கும் தீர்மானம் சமர்ப்பிக்கப்படும் என பிரத்வைட் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் ஏற்கனவே இணை அனுசரணை வழங்கிய தீர்மானத்தின் தொடர்ச்சியான தீர்மானமாக இது காணப்படும்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் கடுமையான அறிக்கையை அடிப்படையாக கொண்டதாக புதிய தீர்மானம் காணப்படும் என அவர் தெரிவித்துள்ளார்