“சர்வதேச உறவுகளை நிர்வகிக்கும் அடிப்படை விதிமுறைகள், ஐ.நா. சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கோட்பாடுகள் ஏனைய நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடாததாக அமைய வேண்டும்” என சீனா தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் அமர்வுகளில் இலங்கையை வலுவாக ஆதரிப்பதாக சீனா அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது அமர்வில் உரையாற்றுகையிலேயே ஜெனிவாவிற்கான சீனாவின் நிரந்தர வதிவிடப் பிரிதிநி ஷெங் ஹு இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் உரையாற்றுகையில், “இலங்கை அரசியல் ஸ்தீரத்தன்மை, இன ஒற்றுமை மற்றும் தேசிய நல்லிணக்கம் போன்றவற்றை இலங்கை வலுவாகப் பேணுவதாகவே நட்பு நாடென்ற வகையில் சீனா நம்புகின்றது.
மேலும், இலங்கையானது, தேசிய அபிவிருத்தி மற்றும் வளர்ச்சிக்கான சாதனைகளை விரும்புகிறது. இதனை வாழ்த்துகின்றோம்.
அத்துடன், மனித உரிமைகளைத் தீவிரமாக ஊக்குவிப்பதற்கும் பாதுகாப்பதற்கும், நிலையான பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியை முன்னேற்றவும், மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி பாதிக்கப்பட்ட குழுக்களின் உரிமைகளை பாதுகாத்தல், தேசிய நல்லிணக்கத்தை முன்னெடுத்தல் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் போன்ற விடயங்களில் இலங்கையின் முயற்சிகளையும் சாதனைகளையும் பாராட்டுகின்றோம்.
மனித உரிமைகள் மீதான அரசிய ல்மயமாக்கல் மற்றும் இரட்டை நிலைப்பாடு போன்றவற்றை சீனா எதிர்ப்பதோடு, ஏனைய நாடுகளின் உள்ளக விவகாரங்களில் தலையீடு செய்வதை தவிர்க்க வேண்டும்.
இலங்கை குறித்த அமர்வில் சமர்பிக்கப்பட்டுள்ள ஐ.நா. ஆணையாளரின் அறிக்கை குறித்து கவலையடைகின்றோம். அத்துடன், இலங்கை வழங்கிய அதிகாரப்பூர்வமான தகவல்கள் உள்வாங்கப்படாமையிட்டு வருந்துகின்றோம்.
தலையீடு தடுப்பு மற்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள உத்தேச இலக்கிற்கான தடைகள் என்பவை இலங்கையின் உள்ளக விவகாரங்கள் மீதான தலையீட்டைத் தெளிவாகக் குறிப்பிடுவதுடன் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையை மீறுவதுமாகவே உள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் என்பன இலங்கை விடயத்தில் பக்கச்சார்பற்ற தன்மையையும் அரசியல் மயமாக்கப்படாத நிலைமையையும் உறுதியாகப் பின்பற்றும் என்று நம்புகின்றோம்.
அனைத்து நாடுகளினதும் இறையாண்மை, அரசியல் சுதந்திரத்தை மதித்தல், ஆக்கப்பூர்வமான உரையாடல்கள் மற்றும் ஒத்துழைப்புகளை ஆதரித்தல், பிற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவது அழுத்தங்களை பிரயோகிப்பதை தவிர்க்க வேண்டும்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமர்வுகள் ஆரம்பிப்பதற்கு முன்னர் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சீன ஜனாதிபதி ஷி ஜின்-பிங்கிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தார். இலங்கை தொடர்பான தீர்மானம் மற்றும் அறிக்கையின் தன்மை குறித்து சீனா நன்கு அறியும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
அதேபோன்று, இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவும் சீன வெளிவிவகார அமைச்சர் வோங் ஹீக்கு ஆதரவைத் தொடருமாறு கேட்டுக்கொண்டார்.
அந்த வகையில் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் நியாயமான உரிமைகள் மற்றும் நலன்களைக் கூட்டாகப் பாதுகாக்க இலங்கையுடன் சீனா ஆதரவாக செயற்படும் என்பதைத் தெரிவிக்கின்றோம்.
மேலும், சர்வதேச உறவுகளை நிர்வகிக்கும் அடிப்படை விதிமுறைகள், ஐ.நா. சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கோட்பாடுகள் ஏனைய நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடாததாக அமைய வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.