January

January

“ஜெனிவாவில் நல்லதொரு தீர்வு கிடைத்தால் தான் இறந்த எமது மக்களின் ஆத்மா சாந்தியடையும்” – பிரசன்ன இந்திரகுமார்

“ஜெனிவாவில் நல்லதொரு தீர்வு கிடைத்தால் தான் இறந்த எமது மக்களின் ஆத்மா சாந்தியடையும்” என முன்னாள் கிழக்கு மாகாணசபையின் தவிசாளரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் பிரதி தலைவருமான பிரசன்ன இந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் கொக்கட்டிச்சோலை படுகொலையின் 34வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று (28.01.2021) நடைபெற்றது. குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே பிரசன்ன இந்திரகுமார் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“ஒவ்வொரு வருடமும் நாங்கள் எங்களுடைய உறவுகளுக்காக இவ்விடத்தில் அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கின்றோம்.

எங்கள் மக்களுடைய படுகொலை என்பது சர்வதேசம் அறிந்த உண்மையாகும். ஆனால் இந்த நாட்டினுடைய இனவாத அரசியல் கட்சிகள், மாறி மாறி ஆட்சிக்கு வந்தபோதும் எங்களுடைய மக்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்கவில்லை.

மேலும் அவர்கள், எமது தலைவர்களை ஏமாற்றி மக்களின் வாக்குகளை பெற்று, ஆட்சி பீடம் ஏறியபோதும்கூட கடந்த ஆட்சியில் எங்களுடைய மக்களுக்கான நியாயம் கிடைக்கவில்லை.

தமிழர்களுக்கான அயல்நாடான இந்தியா, இவ்விடயத்தில் தீர்க்கமானதொரு தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும்.  எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவிருக்கின்ற மனித உரிமைகள் மாநாட்டின் கூட்டத் தொடரில், எமக்கு நல்லதொரு தீர்வு கிடைக்க வேண்டும்.

அப்பொழுதுதான் இறந்த எமது மக்களின் ஆத்மா சாந்தியடையும். இந்த அரசாங்கங்களை நம்பி நாம் ஏமாறுவதைவிட சர்வதேசத்தின் அழுத்தங்கள் ஊடாக எமது மக்களுக்கான நியாயம் கிடைக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்.உயர் குருதி அமுக்க சிகிச்சை நிலையம் திறப்பு !

யாழ் உயர் குருதி அமுக்க சிகிச்சை நிலையம் , யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விக்டோரியா வீதியில் உள்ள புதிய கிளினிக் கட்டடத் தொகுதியில் இந்த சிகிச்சை நிலையம் இன்று (29.01.2021) வெள்ளிக்கிழமை நண்பகல் திறந்து வைக்கபட்டது.

IMG 20210129 WA0012

இருதய சிகிச்சை வல்லுநர் பூ.லக்ஸ்மன் இந்த சிகிச்சை நிலையத்தை சம்பிரதாய பூர்வமாகத் திறந்துவைத்தார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி, சிகிச்சை நிலையத்தின் முதல் பணிப்பாளர், பொது மருத்துவ வல்லுநர், பேராசிரியர் தி.குமணன் மற்றும் துறைசார் மருத்துவ வல்லுநர்கள், மருத்துவர்கள் இந்த ஆரம்ப நிகழ்வில் பங்கேற்றனர்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட மருத்துவப் பிரிவு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இருதய சிகிச்சைப் பிரிவு, சிறுநீரக சிகிச்சைப் பிரிவு, அகஞ்சுரக்கும் தொகுதிப் பிரிவு ஆகியவை இணைந்து யாழ்ப்பாணம் உயர் குருதி அமுக்க சிகிச்சை பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த சிகிச்சை நிலையத்தின் முதல் பணிப்பாளராக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட பேராசிரியர், பொது மருத்துவ வல்லுநர் திருநாவுக்கரசு குமணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதி தீவிரமான குருதி அமுக்கம், இளவயதில் குருதி அமுக்கம் போன்ற சிறப்புக் கவனிப்பு தேவையுள்ள நோயாளிகள் இந்த சிகிச்சை பிரிவினால் சிகிச்சையளிக்கப்படுவார்கள். அத்தோடு இந்த சிகிச்சை நிலையம் ஊடாக மக்களுக்கு உயர் குருதியமுக்கம் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் ஆராய்ச்சிப் பணிகளையும் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

“18 வயதுக்கு மேற்பட்டோர் இராணுவப் பயிற்சி பெற வேண்டும் என்ற கருத்தை வரவேற்கின்றேன்” – சி. வி விக்னேஸ்வரன்

18 வயதுக்கு மேற்பட்டோர் இராணுவப் பயிற்சி பெற வேண்டும் என்ற கருத்தை வரவேற்கின்றேன் என நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சருமான சி. வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர்  அட்மிரல் சரத் வீரசேகர  இலங்கையில் கட்டாயமாக 18 வயதுக்கு மேற்பட்டோர் இராணுவப் பயிற்சி பெற வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் இது தொடர்பாக வினவப்பட்ட வாராந்த கேள்வி பதில் அறிக்கையிலே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

வைஸ் அட்மிரல் கௌரவ சரத் வீரசேகர அவர்கள் இலங்கையில் கட்டாயமாக 18 வயதுக்கு மேற்பட்டோர் இராணுவப் பயிற்சி பெற வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார்.

வட கிழக்கு தமிழர்களைப் பொறுத்த வரையில் நான் அந்தக் கருத்தை வரவேற்கின்றேன். ஆனால் 16 வயதிலிருந்து எமது சகல மாணவ மாணவியரும் இராணுவப் பயிற்சி பெற வேண்டும். அவர்களுக்கு தமிழ்ப் பேசும் அலுவலர்களே பயிற்சி கொடுக்க வேண்டும். ஆணைகள் தமிழிலேயே இருக்க வேண்டும். போதிய தமிழ்ப் பேசும் அலுவலர்கள் இராணுவத்தில் இல்லை என்றால் முன்னாள் தமிழ் போராளிகளுக்கு இந்தப் பணியை செய்யச் சொல்லி அவர்களுக்கு ஊதியமும் வழங்கலாம். எந்த விதத்திலும் சிங்களம் பேசுவோரோ? சிங்கள மொழியிலோ? எமது மாணவ மாணவியருக்குப் பயிற்சி அளிக்கப்படக் கூடாது.

பயிற்சியாளர்களுக்குத் தட்டுப்பாடு இருந்தால் தென்னிந்தியாவில் இருந்து தமிழ்ப் பயிற்சியாளர்களை வரவழைக்கலாம். எங்களுக்கு சிரேஷ்ட பள்ளி மாணவ இராணுவப் பயிற்சி 1950களில் றோயல் கல்லூரியில் வழங்கும் போது பயிற்சிகளும் ஆணைகளும் ஆங்கிலத்தில் இருந்தன. பல் இன மாணவர்களை ஆங்கில மொழி ஒன்று சேர்த்தது. எம்முள் சிங்களவர், தமிழர், பறங்கியர், முஸ்லீம்கள், மலாயர், என பலதரப்பட்ட மாணவர்கள் இருந்தார்கள். ஆனால் எப்பொழுது சிங்களத்தை நாடு முழுவதும் திணிக்க அரசியல்வாதிகள் முடிவெடுத்தார்களோ அப்பொழுதே எமது ஒற்றுமை, ஒன்றிணைந்த செயற்பாடு, நாட்டின் பற்றுதல் ஆகியன ஆட்டம் கண்டன.

காலாதி காலமாகத் தமிழ் மொழியைப் பேசி வந்த வடக்குக் கிழக்கும் தமது தனித்துவத்தை இழந்தன. 1958ம் ஆண்டில் றோயல் கல்லூரியின் இராணுவப் பயிற்சி பெற்ற மாணவப் படையின் அங்கத்தவராக காலி மைதானத்தில் சுதந்திர தின அணி வகுப்பில் பங்குபற்றியதன் பின்னர் சுதந்திர தின வைபவங்களைப் புறக்கணித்தே வருகின்றேன். காரணம் 1956ம் ஆண்டின் சிங்களம் மட்டும் சட்டம் தமிழ்ப் பேசும் மக்களின் சுதந்திரத்தைப் பறித்து விட்டது.

எமக்கு சிங்கள அரசியல்வாதிகளிடம் இருந்து விடுதலை கிடைத்து நாட்டு மக்கள் சம உரிமையுடன் ஒன்று சேர்ந்து வாழ வாய்ப்பளித்தால்த்தான் தமிழர்கள் சுதந்திர தினத்தைக் கொண்டாடலாம். கௌரவ சரத் வீரசேகர அவர்கள் தமிழ் மாணவ மாணவியர் தமிழர்கள் மூலமாகத் தமிழ் இராணுவப் பயிற்சி பெற இணங்குவாரானால் நான் அவரின் கருத்தை வரவேற்பேன். சிங்கள மொழி பேசும் அலுவலர்களை அனுப்ப நினைத்தால் எமது மாணவ மாணவியர் அல்லது 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் பயிற்சிகளைப் புறக்கணிப்பார்கள் .

இராணுவப் பயிற்சி சுய கட்டுப்பாட்டையும் ஒழுக்கத்தையும் மேம்படுத்தும் என்பது உண்மைதான். ஆனால் இவ்வாறு பயிற்சி பெற்ற இலங்கையின் போர்ப் படையினரே கட்டுப்பாட்டை இழந்து ஒழுக்கத்தை மீறி மனித உரிமை மீறல்களிலும் இனப்படுகொலைகளிலும் ஈடுபட்டனர் என்பது உலகம் அறிந்த விடயம். கௌரவ சரத் வீரசேகர அவர்கள் எமது இளைஞர்கள் யுவதிகளைத் தமது இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவே இவ்வாறான ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார் என்பதை நான் அறிவேன்.

சிங்கள அரசியல்வாதிகளும் படையினரும் இணைந்து எவ்வாறு வடகிழக்கைத் தம்முடைய முற்றும் முழுதுமான கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டு வரவேண்டும், இங்குள்ள குடிப்பரம்பலை எப்படி மாற்ற வேண்டும். பிரச்சினைகளை ஏற்படுத்தி எமது இளைஞர் யுவதிகளை நாட்டிலிருந்து எவ்வாறு வெளியேற்ற வேண்டும் என்பது சம்பந்தமாக ஆழ ஆராய்ந்து, முடிவுக்கு வந்து தமது முடிவுகளை நடைமுறைப்படுத்தி வருகின்றார்கள். அதன் ஒரு அம்சமே குறித்த நாடாளுமன்ற உறுப்பினரின் கருத்துரை.

சிங்கள புத்திஜீவிகள் மற்றும் படையினரின் ஆழ்ந்த இன ரீதியான முடிவுகளை முறியடிக்க எமது புத்திஜீவிகள் இதுவரை என்ன செய்துள்ளார்கள்? குறித்த நாடாளுமன்ற உறுப்பினரின் கருத்தாவது எமது மக்கட் தலைவர்களை வரப்போகும் ஆபத்து பற்றி சிந்திக்கத் தூண்டுவதாக அமையும் என தெரிவித்துள்ளார்.

“பாகிஸ்தான் வான்வெளியில் சூரிய ஒளிக்கு மத்தியிலும் மிகவும் பிரகாசமாக தென்பட்ட பறக்கும் மர்மப்பொருள் ” – வேற்றுக்கிரகத்து பறக்கும் தட்டா ? என அச்சம் !

பாகிஸ்தானில் கடந்த 23-ந் தேதி முல்தானுக்கும், சாஹிவாலுக்கும் இடையேயான வான்வெளியில் அசாதாரணமான ஒரு பொருள் வானத்தில் சுற்றிக்கொண்டிருந்ததை தனது விமானி ஒருவர் கண்டதாக பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனம் உறுதிபடுத்தி உள்ளது. அது பிற கிரகத்தில் இருந்து வந்த பறக்கும் தட்டு என வதந்தி பரவியது.

இதுபற்றி பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், “விமானி தனது விமானத்தில் இருந்து 1000 அடி உயரத்திலும், தரையில் இருந்து சுமார் 35 ஆயிரம் அடி உயரத்திலும், அசாதாரணமான ஒரு பொருள் சுற்றிக்கொண்டிருப்பதை கண்டு அதை படம் பிடித்துள்ளார். அவர் உண்மையில் கண்டது என்ன என்பதை உடனடியாக சொல்லி விட முடியாது. இதுகுறித்து அந்த விமானி அறிக்கை அளித்துள்ளார். அதே நேரத்தில் அது பறக்கும் தட்டாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று கூறினார். இது பற்றி நிலையான செயல்பாட்டு நடைமுறைகளின்படி ஆராயப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதுபற்றி ஜியோநியூஸ் கூறுகையில், “மாலை 4.30 மணியளவில் விமானியால் கண்டுபிடிக்கப்பட்ட அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் சூரிய ஒளிக்கு மத்தியிலும் மிகவும் பிரகாசமான தெரிந்தது” என தெரிவித்துள்ளது.

இது பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

10.19 கோடியை கடந்தது கொரோனா தொற்றாளர்கள் தொகை – கொரோனா அப்டேற் !

சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019 ஆண்டு இறுதியில் பரவ ஆரம்பித்தாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 10.19 கோடியைக் கடந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 7.38 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 21.98 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் பரவியவர்களில் 2.59 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1.10 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரிட்டன் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

“கடந்த கால ஆயுத மோதல்களை தூண்டிய அதேவகையான மீறல்கள் மற்றும் துஸ்பிரயோகங்கள் மீண்டும் இடம்பெறக்கூடும்” – ஐக்கிய நாடுகள் மனித உரிமை அதிகாரிகள் எச்சரிக்கை !

இலங்கையில் கடந்த காலகுற்றங்களிற்கு பொறுப்புக்கூறல் காணப்படாதது குறித்து அச்சமடைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை அதிகாரிகள் கடந்த கால ஆயுத மோதல்களை தூண்டிய அதேவகையான மீறல்கள் மற்றும் துஸ்பிரயோகங்கள் மீண்டும் இடம்பெறக்கூடும் என எச்சரித்துள்ளனர்.

சுமார் 12 வருடங்களிற்கு முன்னர் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புடனான இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவிற்கு வந்தது.

அன்று முதல் இலங்கையின் ஆட்சியாளர்கள் பொதுமக்களின் துயரங்களுக்கு தீர்வை காண்பதற்கோ அல்லது குற்றங்களை செய்தவர்களை பொறுப்புக்கூறச்செய்வதற்கே யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி நஸ்டஈடு வழங்குவதற்கோ எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என ஐ.நா அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் மிகவும் கடுமையான அறிக்கையொன்று பாரிய மனித உரிமை மீறல்களில ஈடுபட்டவர்கள் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளமை,மற்றும் அனைத்து தரப்பினரினதும் மனித உரிமை மீறல்களும் முன்னரை விட என தெரிவிக்கின்றனர்.

சட்டவிரோத படுகொலைகள் பலவந்தமாக காணாமல் போகச் செய்தல் கண்மூடித்தனமாக தடுத்துவைத்தல் சர்வதேச மனித உரிமை சட்டமீறல்கள் ஏனைய வன்முறைகளை தனது அமைப்பு ஆவணப்படுத்தியுள்ளதாக  ஐக்கியநாடுகள் மனித உரிமை அலுவலக பேச்சாளர் ருவீனா சாம்டசானி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இழைக்கப்பட்ட பாரிய மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய்வதற்காக அரசாங்கங்கள் பல விசாரணை ஆணைக்குழுக்களை நியமித்தன என தெரிவித்துள்ள அவர் ஆனால் இவை எவற்றின் மூலமும் உறுதியான பலாபலன்கள் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கம் பொறுப்புக்கூறல் குறித்த மிகவும் மந்தகதியிலான செயற்பாடுகளிற்கு அப்பால் சென்று பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளிற்கு அரசியல் ரீதியில தடைகளை விதிக்கும் விதத்திற்கு சென்றுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ள கண்காணிப்புகள் துன்புறுத்தல்கள் சிவில்சமூக அமைப்புகள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் சடடத்தரணிகள் பத்திரிகையாளர்கள் அச்சுறுத்தப்படுதல் போன்றவற்றையும் பதிவு செய்துள்ளது.

தமிழ் முஸ்லீம் சிறுபான்மை சமூகத்தினர் ஓரங்கப்படுவது அதிகரிப்பது குறிப்பிடத்தக்க கரிசனைக்குரிய விடயமாக காணப்படுகின்றது என அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் மிக உயர் பதவிகளில் உள்ள அதிகாரிகளிடமிருந்து வெளியாகும் பாரபட்சம் மற்றும் பிளவுபடுத்தும் தன்மை மிகுந்த கருத்துக்கள் மக்கள் மேலும் துருவமயப்படுத்தப்படும் வன்முறை ஆபத்தை உருவாக்குகின்றன என அறிக்கையை தயாரித்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

யுத்தம் முடிவடைந்தபோது- பல அநீதிகள் இழைக்கப்பட்ட போது அதிகாரத்திலிருந்த பலர் தற்போது அரசாங்கத்தின் ஒரு பகுதியாக காணப்படுவது கவலையளிக்கின்றது என சாம்டசானி தெரிவிக்கின்றார்.

கடந்த வருடம் முதல் 28 முன்னாள் – பணியிலுள்ள இராணுவ புலனாய்வு அதிகாரிகளை ஜனாதிபதி முக்கிய பதவிகளிற்கு நியமித்துள்ளார் என குறிப்பிடும் அவர் ஆகவே இவர்களே அதிகாரத்தில் தொடர்ந்தும் காணப்படுகின்றனர்.

இவர்களில் சிலர் யுத்தத்தின் இறுதிவருடங்களில் யுத்த குற்றங்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என குற்றம்சாட்டப்பட்டவர்கள் என்பதே மிகவும் கவலையளிக்கின்றது என குறிப்பிடுகின்றார்.

“தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும் ஒற்றுமையாக செயற்படுகின்றனர். முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் தனித்து செயற்படுகின்றனர்” – ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா

“தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும் ஒற்றுமையாக செயற்படுகின்றனர். முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் தனித்து செயற்படுகின்றனர்” என முன்னாள் அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

ஜனாஸா தகனம் செய்வது குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு ராஜகிரியவிலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் கூறியதாவது,

“முஸ்லிம்களின் ஜனாஸா அம்மக்களின் எதிர்ப்புக்களின் மத்தியில் தகனம் செய்யப்பட்டு வருகின்றது. இது விடயத்தில் உயர்நீதிமன்றம் ஊடாக உரிமைகளை பெற்றுக்கொள்ளும் விடயத்தில் ஓர் அங்கமாகவே 20 நாட்களேயான சிசுவின் ஜனாஸா பலவந்தமாக தகனம் செய்யப்பட்ட விடயத்தை நீதிமன்றம் கொண்டு சென்றுள்ளேன்.

முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் பல்வேறு கட்சிகளாக பிரிந்து நின்று தங்களது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்காகவே செயல்பட்டு வருகின்றனர்.

தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகள் தங்களது சமூகத்தின் பிரச்சினைகளை பேசுகின்றனர். அவர்கள் எதிர்க்கட்சியில் இருந்தாலும் அவர்களது பிரதேசங்களது அபிவிருத்திகளும் இடம்பெற்று வருகின்றன. எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும் சமூகம் சார்ந்த விடயங்களில் அரசியல் வித்தியாசம் இன்றி கலந்தாலோசித்து ஒற்றுமையாக செயற்பட்டு வருகின்றனர்.

அண்மையில் அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட 20ஆவது அரசியல் அமைப்பு வாக்கெடுப்பின்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் இரண்டு பிரதான முஸ்லிம் அரசியல் கட்சி தலைவர்களின் உறுப்பினர்கள் தன்னிச்சையாக செயற்பட்டு அரசாங்கத்திற்கு வாக்களித்துள்ளனர்.

இந்நிலையில் முஸ்லிம் அரசியல் தலைமைகளும் அவர்களது உறுப்பினர்களும் ஒன்றிணைந்து ஒரணியாக ஜனாஸா விடயத்தை முன்வைத்தாவது அரசாங்கத்திற்கு வாக்களித்திருக்க முடியும்.

எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் தன்னிச்சையாகச் சென்று அவர்களது தனிப்பட்ட பிரச்சினைகளை பேசிவிட்டு 20 ஆவது அரசியல் திருத்தத்திற்கு வாக்களித்ததுள்ளனா்.

முஸ்லிம் அரசியல்வாதிகள் அரசாங்கத் தரப்பில் இருந்தாலோ அல்லது எதிர்த்தரப்பில் இருந்தாலோ முஸ்லிம்களின் உரிமைகள் என்று வரும்போது ஒன்றிணைந்து குரல் கொடுக்க முன்வரவேண்டும் என்றார்.

“ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியால்,  ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு அநீதி இழைக்கப்படுகின்றது” – ஏற்றுக்கொண்டார் மைத்திரிபால சிறிசேன

ஆளுங்கூட்டணியிலுள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு உரிய கவனிப்பு இல்லை. ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையில் பிரகாரம் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி செயற்படவில்லை.என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியால்,  தமது கட்சிக்கு அநீதி இழைக்கப்படுகின்றது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகரவால் முன்வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டு தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

ஆம். அப்படியான பிரச்சினை இருக்கின்றது. அவர் கூறிய கருத்தில் பிழை இல்லை. எமக்கான கவனிப்பில் குறை உள்ளது.  ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையில் பிரகாரம் எதுவும் நடைபெறுவதில்லை.  உரிய வகையில் செயற்பட்டிருந்தால் இப்படியான குற்றச்சாட்டுகளை முன்வைக்கவேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது.

எது எப்படி இருந்தாலும் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுப்பது பற்றியே அதிகம் கவனம் செலுத்த வேண்டும். ஜனாதிபதி மற்றும் பிரதமர் தரப்புகளில் இருந்து எமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. மற்றுமொரு தரப்பாலேயே பிரச்சினைகள் எழுந்துள்ளன – என்றார்.

“தொழிலாளர் சம்பளமாக 1,000 ரூபா கொடுப்பனவு கிடைக்காது விடின் போராட்டம் வெடிக்கும்” – வடிவேல் சுரேஷ்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி சம்பளம் வழங்கும்போது 1,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டிருக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று முன்தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஜனவரி மாதத்திற்கான சம்பளத்தில், நாளாந்த சம்பளமாக 1,000 ரூபா கணக்கிடப்படாவிடின் பாரிய தொழிற்சங்க போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் கூறியுள்ளார்.

உலக அளவில் கொரோனா கட்டுப்படுத்திய நூறு நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 10ஆவது இடம் !

கொரோனா வைரஸ் தொற்று நோயை கட்டுப்படுத்திவரும் சிறந்த நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு 10ஆவது இடம் கிடைத்துள்ளது.

ஒவ்வொரு நாட்டிலும் கொவிட-19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கை மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட இறப்புகள், பரிசோதனை சதவிகிதங்களை அடிப்படையாக கொண்டு அவுஸ்ரேலியாவின்  Australian think tank the Lowy Institute நிறுவனம் நடத்திய ஆராய்வுகளின் பிரகாரமே இலங்கைக்கு 10ஆவது இடம் வழங்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 வைரஸ் தொற்றை சிறந்த முறையில் கட்டுப்படுத்திவரும் நாடுகளில் நியூசிலாந்துக்கு முதலிடம் கிடைத்துள்ளது.

100 நாடுகளை அடிப்படையாக கொண்டு நடத்தப்பட்டுள்ள இந்த பகுப்பாய்வில் வியட்நாம், தைவான் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் முறையே இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களைப் பிடித்துள்ளன.

இந்த விடயத்தில் ஆஸ்திரேலியா 08ஆவது இடத்திலும் இலங்கை 10ஆவது இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளது. அதிகமான தொற்றாளர்கள் கண்டறிப்படும் அமெரிக்கா 94ஆவது இடத்தில் உள்ளது. இந்தோனேசியாவும் இந்தியாவும் முறையே 85 மற்றும் 86ஆவது இடங்களில் உள்ளன.

இந்தப் பட்டியலில் Australian think tank the Lowy Institute நிறுவனம் சீனாவை தரப்படுத்தவில்லை. சீனாவின் உண்மையான தரவுகளை பெற்றுக்கொள்வதிலுள்ள சிக்கல் நிலைமையால் இவ்வாறு தரப்படுத்தப்படவில்லை.

பெரிய நாடுகளை விட சிறிய நாடுகள் கொவிட்-19 வைரஸை மிகவும் திறம்பட கையாண்டுள்ளதாக Australian think tank the Lowy Institute நிறுவனம் கூறியுள்ளது.