“ஜெனிவாவில் நல்லதொரு தீர்வு கிடைத்தால் தான் இறந்த எமது மக்களின் ஆத்மா சாந்தியடையும்” என முன்னாள் கிழக்கு மாகாணசபையின் தவிசாளரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் பிரதி தலைவருமான பிரசன்ன இந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் கொக்கட்டிச்சோலை படுகொலையின் 34வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று (28.01.2021) நடைபெற்றது. குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே பிரசன்ன இந்திரகுமார் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“ஒவ்வொரு வருடமும் நாங்கள் எங்களுடைய உறவுகளுக்காக இவ்விடத்தில் அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கின்றோம்.
எங்கள் மக்களுடைய படுகொலை என்பது சர்வதேசம் அறிந்த உண்மையாகும். ஆனால் இந்த நாட்டினுடைய இனவாத அரசியல் கட்சிகள், மாறி மாறி ஆட்சிக்கு வந்தபோதும் எங்களுடைய மக்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்கவில்லை.
மேலும் அவர்கள், எமது தலைவர்களை ஏமாற்றி மக்களின் வாக்குகளை பெற்று, ஆட்சி பீடம் ஏறியபோதும்கூட கடந்த ஆட்சியில் எங்களுடைய மக்களுக்கான நியாயம் கிடைக்கவில்லை.
தமிழர்களுக்கான அயல்நாடான இந்தியா, இவ்விடயத்தில் தீர்க்கமானதொரு தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும். எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவிருக்கின்ற மனித உரிமைகள் மாநாட்டின் கூட்டத் தொடரில், எமக்கு நல்லதொரு தீர்வு கிடைக்க வேண்டும்.
அப்பொழுதுதான் இறந்த எமது மக்களின் ஆத்மா சாந்தியடையும். இந்த அரசாங்கங்களை நம்பி நாம் ஏமாறுவதைவிட சர்வதேசத்தின் அழுத்தங்கள் ஊடாக எமது மக்களுக்கான நியாயம் கிடைக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.