2021
2021


இந்தியாவின் கேரளாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சமீபத்தில் அதிகரித்து வருகின்றன.
வரதட்சணை கொடுமை, பெண்களிடம் அத்துமீறல், சிறுமிகளிடம் தகாத முறையில் நடத்தல் போன்ற குற்றங்கள் அதிக அளவு நடந்தது. கேரள காவல்துறையினருக்கு இது தொடர்பான புகார்கள் அதிக அளவில் வரத்தொடங்கியதை அடுத்து இதுபோன்ற குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய சிறப்பு மையம் ஒன்றை கேரள அரசு தொடங்கியுள்ளது.
மேலும் இந்த மையத்தில் வாட்ஸ்-அப் மூலமும், தொலைபேசி மூலமும் புகார் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த மையம் தொடங்கிய ஒரு சில நாட்களிலேயே கேரளா முழுவதிலும் இருந்து 100-க்கும் மேற்பட்ட புகார்கள் குவிந்தது.
இதையடுத்து பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்தார்.
மேலும் இது தொடர்பாக அவர் நேற்று திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
பெண்களுக்கு எதிரான குற்றங்களை யார் செய்தாலும் அவர்கள் மீது அரசு பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கும். பெண்கள் அளிக்கும் புகார்கள் மீது விரைந்து விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
மேலும் இக்குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரித்து குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்க சிறப்பு கோர்ட்டுகள் அமைக்கப்பட உள்ளது.
இதன்மூலம் குடும்ப வன்முறை மற்றும் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு விரைவில் நீதி கிடைக்கும். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க மாநிலம் முழுவதும் பஞ்சாயத்து அளவில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இதில் உள்ளாட்சி அமைப்புகள் முக்கிய பங்கு வகிக்கும்.
விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டுடெர்டே, கொவிட் தடுப்பூசி போட மறுப்பவர்களை கைது செய்யப்போவதாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் அந்நாட்டு ‘தடுப்பூசி வேண்டாம் என்பவர்கள், இந்தியாவுக்கோ அல்லது வேறு நாட்டுக்கோ செல்லுங்கள்’ எனக் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
இது தொடர்பில் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டுடெர்டே தெரிவித்துள்ளதாவது:
நாடு முழுவதும் கொவிட் தொற்று மோசமாகப் பரவி வருகிறது. கொவிட் பரவலைத் தடுக்க தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம். ஆனால் பலரும் தடுப்பூசி போட மறுக்கின்றனர். தடுப்பூசி போடாதவர்களைக் கைது செய்ய நேரிடும். கைது செய்து, தடுப்பூசி போடுவோம். ஏற்கெனவே பெருந்தொற்று பேரிடரால் அவதியுற்றிருக்கும் எங்களுக்கு, தடுப்பூசி போட மாட்டேன் எனக் கூறுபவர்கள் மேலும் மேலும் சுமை கொடுக்கின்றீர்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
நான் இவ்வளவு எடுத்துரைத்த பிறகும், உங்களுக்கு தடுப்பூசி வேண்டாமென்றால், இந்த நாட்டை விட்டு வெளியேறிவிடுங்கள். இந்தியாவுக்குச் செல்லுங்கள், அல்லது உங்களுக்கு வேறு ஏதேனும் நாட்டுக்குச் செல்ல வேண்டுமென்றாலும் செல்லுங்கள், அமெரிக்காவுக்குக் கூட செல்லுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தனது சக ஊழியரை முத்தமிட்டதன் ஊடாக சமூக இடைவெளியை மீறிய காரணத்தால் பிரித்தானிய சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் தான் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

கொவிட் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த பிரித்தானியாவில் கடுமையான சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ள நேரத்தில், அந்நாட்டு சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் தனது சக ஊழியர்களில் ஒருவருடன் மிக நெருக்கமாக இருக்கும் காணொளி வெளியாகி இருந்தது.
இந்த காணொளி வெளியானதன் பின்னர் சுகாதார செயலாளருக்கு எதிராக மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து அவர் இவ்வாறு பதவி விலகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்தின் மூலம் நாட்டின் உயர்மட்ட சுகாதார அதிகாரி பொதுமக்களுக்கு தவறான முன்னுதாரணத்தை காட்டிநிற்பதாக பலர் குற்றம் சாட்டி இருந்தனர்.
சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் தனது முக்கிய சகாக்களில் ஒருவரான ஜினா கோலாடங்கேலோ(Gina Coladangelo )உடன் நெருக்கமாக இருக்கும் காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவத்திற்கு பிரித்தானிய எதிர்க்கட்சியான தொழிற்கட்சியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது, உடனடியாக சுகாதார செயலாளரை பதவி நீக்குமாறு பிரதமருக்கு கோரிக்கை விடுத்திருந்தது.
பிரித்தானியா மக்கள் சமூக ரீதியாக இடைவெளியை பேணி, முககவசம் அணிந்து, கடுமையான சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றும் நேரத்தில் சுகாதார செயலாளரின் செயலுக்கு பலரும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பாக சுகாதார செயலாளர் பகிரங்கமாக மன்னிப்பு கோரியதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவத்தின் மூலம் தான் பிரித்தானிய மக்களை அவமானப்படுத்தியதாகவும், அந்த சம்பவத்தின் மூலம் சமூக இடைவெளியை மீறியதாகவும் சுகாதார செயலாளர் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது
ஆப்கானிஸ்தானில் இருந்து செப்டம்பர் மாதம் துருப்புக்கள் திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் அமெரிக்க இராணுவத்துக்கு உதவிய ஆயிரக்கணக்கான ஆப்கானியர்களை வெளியேற்ற அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் 50,000 பேரை அவர்களது குடும்பங்களுடன் மற்ற நாடுகளுக்கு நகர்த்துவது அடங்கும் என மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பல ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவ படைகளுக்கு மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பணிகளில் உதவிய ஆப்கானியர்களே இவ்வாறு வெளியேற்றப்படவுள்ளனர்.
துருப்புக்கள் திரும்பப் பெற்றப் பின்னர், அமெரிக்க படைகளுக்கு உதவிபுரிந்த ஆப்கானியர்களுக்கு தலிபான்களால் ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
18,000 ஆப்கானியர்கள் அமெரிக்க விசாக்களுக்கு விண்ணப்பித்துள்ளனர். ஆனால் அது நீண்ட கால செயல்முறை என்பதால் தாமதமாகியுள்ளது.
வெள்ளை மாளிகையில் நேற்று (வியாழக்கிழமை) பேசிய ஜனாதிபதி ஜோ பைடன், ‘எங்களுக்கு உதவியவர்களுக்கு உதவ நாங்கள் பின்வாங்கப் போவதில்லை. எங்களுக்கு உதவ தங்கள் உயிரைப் பணயம் வைத்த வேறு எவரையும் போலவே அவர்கள் இங்கு வரவேற்கப்படுகிறார்கள்’ என கூறினார்.
இதேபோல முன்னதாக ஆப்கானிஸ்தானில் பிரித்தானிய படைகளுக்கு மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பணிகளில் உதவிய ஆப்கானியர்களுக்கு குடியுரிமை வழங்கவுள்ளதாக பிரித்தானியா அறிவித்திருந்தது.
மீள் குடியேற்றத் திட்டத்தின் கீழ் ஏற்கெனவே 1,400 மொழிபெயர்ப்பாளர்களும் அவர்களது உறவினர்களும் பிரித்தானியாவில் குடியமர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் குற்ற வழக்குகளில் தொடர்புடையதாக தமிழ்நாடு காவல் துறையால் கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழர்கள் 78 பேர் உள்ளனர். தங்களை பொய் வழக்கில் கைது செய்தும் அந்த வழக்கிலும் தண்டனைக் காலத்திற்கே மேல் சிறப்பு முகாம் எனும் சிறையில் அடைத்து வைத்துள்ளனர். எனவே சட்டப்படி தங்களை விடுதலை செய்ய வேண்டும் கோரி பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
சிறையிலிருந்து விடுதலை செய்ய வேண்டும். இல்லையென்றால் கருணை கொலை செய்து விடக்கோரி தொடர்ச்சியாக 16 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் விடுதலை செய்யுமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இலங்கை தமிழர் ஒருவர் நேற்று (வியாழக்கிழமை) உயிரிழந்துள்ளார்.
சிறப்பு முகாமில் 78 இலங்கைத் தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் மட்டக்களப்பை சேர்ந்த 52 வயதான ஒருவரும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், திடீர் சுகயீனம் காரணமாக திருச்சி அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து, உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சரி விடயத்திற்கு வருவோம்..,
அண்மையில் இது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் தொடர்பினை ஏற்படுத்தயிருந்த தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான செ.அடைக்கலநாதன் விடுதலை தொடர்பில் தமிழக முதல்வருடன் பேசி விரைவில் தீர்வு பெற்று தருவதாக கூறியிருந்தார். பின்புஇதுகுறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, அவசர கடிதம் அனுப்பி வைத்திருந்தார். மக்கள் ஓட்டுக்களில் தெரிவானாலும் அவரும் – கட்சிக்காரர்களும் ரொம்ப பிஸி. சிறிய பேரணியை நடாத்தி எதிர்ப்பை கூட அவராலோ அல்லது அவருடைய கட்சியினராலோ மேற்கொள்ள முடியவில்லை – மேற்கொள்ளவும் அவர்கள் முன்வரவில்லை என்பதே உண்மை.
கூட்டமைப்பினரையோ – ஏனைய தமிழ்தேசிய கட்சிகளையோ பொருத்தவரை எந்த வேலையும் செய்யாமல் தேர்தல் காலங்களில் பிரச்சார பீரங்கி போல முழங்கித்தள்ள ஏதாவது கிடைத்தால் போதுமானது. வேறு ஒருசெயலும் இவர்களிடம் இல்லை. கூட்டாக இணைந்து விடுதலை தொர்பாக ஒரு அறிக்கை கூட வெளியிட முடியாதோர் தான் இவர்கள்.
இவர்கள் மக்களிடம் ஒரு விதமான மாய விம்பத்தை உருவாக்கி வைத்துள்ளனர். அதாவது அரசாங்கத்திலுள்ளோர் எல்லோரும் துரோகிகள். தாம் மட்டுமே உத்தமர்கள் என்ற ஒரு மாயத்தோற்றமே அது. தமிழ்தேசியம் பேசுகின்ற எல்லா கட்சிகளும் இதனை தவறாது செய்கின்றன – தொடர்ச்சியாக. இவர்களுடைய கருத்துக்களுக்கு இன்று வரை தமிழ் மக்கள் என்ன நம்பிக்கையில் கட்டுண்டு கிடக்கிறார்கள் என்பது தான் தெரியவில்லை.
தமிழ்தேசியம் பேசும் அரசியல்வாதிகள் எல்லா தரப்பினருடனும் கட்டித்தழுவி கூடிக்குழாவுவர். இதற்கு ஆகச்சிறப்பான எடுத்துக்காட்டு 2010 ஜனாதிபதி தேர்தல் . “ பொன்சேகா – மகிந்த கூட்டணி இணைந்தே 2009 போரை முடித்து வைத்தனர். ஆனால் 2010 தேர்தல் களத்தில் மகிந்த மட்டுமே குற்றவாளி. பொன்சேகா உத்தமர் என பிரச்சாரம் செய்து அவரை வட – கிழக்கில் மகிந்த நெருங்க முடியாத வாக்குகளை பெற வைத்தனர். இதே பொன்சேகா தான் பாராளுமன்ற அமர்வு ஒன்றின் போது புரவி புயல் வடக்குக்கு வீசியிருக்க வேண்டும் என்று கூறிய நல்லுள்ளம் கொண்டவர் .” இவ்வளவு தான் இவர்களுடைய அரசியல். யாரையாவது எதிர்த்து ஏதாவது பேசிக்கொண்டிருந்தால் போதுமே தவிர வேறு ஒரு செயலும் இவர்களிடமும் இல்லை.
அரசியல் கைதிகளுடைய விடுதலை தொடர்பில் கூட இவர்கள் ஒன்றுமே செய்திருக்கவில்லை. பாவம் இவர்களை நம்பி முடியாது போய் ஒரு கட்டத்துடன் மக்களே போராட்டத்தில் இறங்கி தமக்கான தீர்வை தேட ஆரமபித்தனர். வெட்கமேயில்லாது அதிலும் கலந்து கொண்டு அரசியல் லாபம் ஈட்ட இவர்கள் தயாரே தவிர ஆக்கபூர்வமான ஒரு செயலும் இல்லை. இவர்களிடம் இதில் எதையுமே எதிர்பார்க்கவும் முடியாது.
பாவம் மக்கள் தான் இவர்களுடைய தேர்தல் அரசியலை புரிந்து கொள்ளாது இவர்கள் கூறும் போலி வார்த்தைகளை நம்பி ஏதோ ராஜபக்ஷக்களும் – வியாழேந்திரர்களும் – டக்ளஸ்களும் தங்களுடைய எதிரிகள் என்ற பிரம்மையிலேயே வாழ்ந்து அவர்களிடம் உதவி எதையும் எதிர்பார்க்காது இறந்தும் விடுகின்றனர். இதற்கும் ஒரு சிறப்பான எடுத்துக்காட்டு உள்ளது. யாழ்.மாநகர முதல்வராக பணியாற்றிக்கொண்டிருக்கும் வி.மணிவண்ணன் இறுதியாக நடந்த பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரங்களின் போது அமைச்சர் டக்ளஸ் கட்சி மீது சேறு பசிக்கொண்டேயிருந்தார். அது போல அவருடைய துரோகிகள் கட்சியுடனும் தொடர்புகளோ – கூட்டோ ஏதுமில்லை எனவும் கூறியிருந்தார். அவர் மட்டுமல்ல. அவருடைய கட்சிக்காரரும் தான். வழமையான அதே துரோகி கான்செப்ட் தான். ஆனால் அவர் யாழ்.மாநகர முதல்வராவதற்கு வாக்குகளை பெறும் போது மட்டும் டக்ளஸ் தரப்பினர் நல்லவர்களாகி அவர்கள் ஆதரவுடன் தான் அவர் பதவியேற்றுக்கொண்டார். முன்னைநாள் துரோகிகள் அவருக்கு தேவை என்றவுடன் நல்லவர்களாகி விட்டனர். இது போலத்தான் மக்களை மூளைச்சலவை செய்து வைத்துள்ளனர்.
இதே விடயம் தான் திருச்சி முகாமிலும் நடந்துள்ளது. பாவம் தமிழ்தேசிய கட்சிகள் தங்களை மீட்கும் என்ற நம்பிக்கையுடன் போராட்டத்தை மேற்கொண்டனர். அடக்கலநாதன் தொடர்பு கொண்ட போது கூட போராட்டக்காரர்கள் அதை தான் நம்பியிருப்பர். அவர் எழுதிய கடிதத்தை தாண்டி வேறு எந்த நகர்வும் அவர்கள் மேற்கொள்ளவில்லை. இதே சமயத்தில் அண்மையில் இலங்கைக்கான இந்தியத்தூதுவருடன் சந்திப்பு இடம்பெற்ற போது கூட கூட்டமைப்பினர் இதனை வலியுறுத்தவில்லை. தேவையில்லாத பழைய பல்லவிகளை பாடிவிட்டு ஒரு அறிக்கையை வெளியிட்டனரே தவிர வழமை போல இந்த சந்திப்பிலும் கடுகளவு கூட பயன்இல்லை. இவர்களுக்கும் ஓட்டு போட்டு தெரிவு செய்த மக்கள் பாவம்.
முடிந்திருக்குமாயின் அமைச்சராக உள்ள டக்ளஸ்தேவானந்தாவிடமோ – இராஜாங்க அமைச்சராகவோ உள்ள வியாழேந்திரனிடமோ அல்லது அங்கஜன் இராமநாதனிடமோ இவர்கள் பேசியிருந்தாலோ அல்லது தொடர்பு கொண்டிருந்தாலோ அரச ம்டத்தில் சரி பிரச்சினையை தீர்க்க ஏதாவது செய்திருப்பார்கள் போலத்தோன்றுகிறது. சரி அவர்களால் முடியாது இங்கே இருந்து ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்த அடைக்கலநாதனும் அவருடைய கட்சிக்காரரும் கூட மக்களுடைய பிரச்சினையை தீர்க்க மனதுள்ளோராக இருந்திருப்பின் தங்களுடைய கருத்துநிலைகளை கைவிட்டு அரச தரப்பிடம் அவர்கள் விடுதலைக்காக ஏதாவது முயற்சி எடுத்திருக்கலாம். அப்படி ஒரு முடிவுக்கான நகர்வை மேற்கொண்டிருந்தால் கூட போராட்டத்தை தற்காலிகமாக கைவிடச்செய்து அந்த ஒரு உயிரை காப்பாற்றியிருக்கலாம். அவையொன்றுமே செய்யமாட்டார்கள். ஆனால் பூகோள அரசியல்வியாக்கியானங்கள் எல்லாம் மணியாக பேசுவார்கள் . பயனற்ற தலைவர்களையே நாம் பாராளுமன்றம் அனுப்பிக்கொண்டிருக்கின்றோம்.
முன்னைய நிலையோடு ஒப்பிடும் போது மக்கள் ஓரளவுக்கு தங்களை சுதாகரித்து போலித்தேசியவாதிகளை தோலுரிக்க ஆரம்பித்து விட்டனர் என்பதை அண்மைய பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டியுள்ளன. தமிழ்தேசிய கட்சிகளை விட அதிக வாக்குகளில் அரசு சார்பான வேட்பாளர்கள் பாராளுமன்றம் நுழைந்துள்ள தன்மையானது மக்கள் ஓரளவு மாயவிம்பத்தில் இருந்து வெளிவர ஆரம்பித்துள்ளதையும் போலி அரசியலில் இருந்து மக்கள் வெளிவர துடிப்பதையும் காட்டுகின்றது.
மக்கள் தெளிவாக சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள். அரசு சார்பானவர்கள் என்ன செய்கிறார்கள் என தமிழ்தேசிய கட்சியினர் குற்றஞ்சாட்ட தகுதியுள்ளவர்களாக இருக்க வேண்டுமாயின் கொஞ்சமாவது தமிழ்மக்கள் போட்ட ஓட்டுக்களுக்காக அவர்களுக்காக இயங்க ஆரம்பியுங்கள். இல்லையேல் இம்முறை தேர்தலில் மாவை தூக்கியெறியப்பட்டது போல நீங்கள் ஒவ்வொருவராக தூக்கியெறியப்பட்டு நீங்கள் துரோகிகள் எனக்கூறியோர் முழுமையாக உங்கள் வட்டாரங்களை ஆக்கிரமிக்கலாம்.
பழைய கதைகளை பேசிக்கொண்டு சர்வதேசம் – இந்தியா போன்ற பழைய சரக்குகளை இனியும் விற்க முயற்சிக்காது மக்களை போராட தூண்டாது உங்களுக்கு பின்னால் மக்களை திரட்டுங்கள். மக்களுடைய பிரச்சினைகளுக்காக இதய சுத்தியுடன் செயலாற்ற முன்வாருங்கள் . மக்கள் தாங்கிப்பிடிப்பார்கள் உங்களை..!









