2021

2021

ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிச்சென்ற ஜனாதிபதி அஷ்ரப் எங்கே ..? – உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு !

ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிச்சென்ற ஜனாதிபதி அஷ்ரப் கனி தமது நாட்டில் உள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிச்சென்ற அஷ்ரப் கனி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஐக்கிய அரபு அமீரகம் அடைக்கலம் கொடுத்துள்ளது.

மனிதாபிமான அடிப்படையில் அஷ்ரப் கனி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு அடைக்கலம் கொடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தலிபான் பயங்கரவாதிகள் நுழைந்ததும் அந்த நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி தனது பதவியை இராஜினாமா செய்து விட்டு தனது குடும்பத்துடன் நாட்டை விட்டு தப்பி ஓடினார்.

அவர் மூட்டை மூட்டையாக பணத்தை எடுத்துக்கொண்டு ஹெலிகொப்டரில் தஜிகிஸ்தானுக்கு தப்பிச் சென்றதாக தகவல்கள் வெளியாகின. அதே சமயம் அவர் கஜகஸ்தான் நாட்டுக்கு சென்றதாக மற்றொரு தரப்பு தகவல்கள் தெரிவித்தன.‌

மேலும், அவர் உஸ்பெகிஸ்தான் நாட்டிற்கு தப்பிச்சென்றுவிட்டதாக சில தகவல்கள் வெளியாகின. ஆனால் தஜிகிஸ்தான் மற்றும் கஜகஸ்தான் ஆகிய இரு நாடுகளுமே அஷ்ரப் கனி தங்கள் நாட்டுக்கு வரவில்லை என அதிகாரபூர்வமாக அறிவித்தன.

இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகம் அடைக்கலம் கொடுத்துள்ளதாக அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

“ஒரே ஒரு கொரோனா நோயாளி – ஒட்டுமொத்த நாடும் முடக்கம்.” – ஜெசிந்தா ஆர்டெர்ன் உத்தரவு !

ஒரே ஒரு கொரோனா நோயாளி கண்டறியப்பட்டதால் ஒட்டுமொத்த தேசத்துக்கு 3 நாள் முழுஊரடங்கினை நியூசிலாந்து வித்திதுள்ளது.

கடந்த ஆறு மாதங்களுக்கு முன் நியூசிலாந்து நாட்டின் கடைசி கொரோனா நோயாளி குணமடைந்தார். நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்னுக்கு வாழ்த்துகள் குவிந்தது.

நியூஸிலாந்து ஒரு தீவு நாடு. அந்நாட்டின் மொத்த மக்கள் தொகை 50 லட்சம். பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் மேற்கொண்ட நடவடிக்கைகளால் அங்கு கடந்த ஆறு மாதங்களாக யாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் அந்நாட்டின் ஆக்லாந்து நகரில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், பிரதமர் ஆர்டெர்ன் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது இன்று தொடங்கி மூன்று தினங்களுக்கு நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என அறிவித்துள்ளார். அதேபோல், பாதிக்கப்பட்ட நபர் கோரமண்டல் எனும் பகுதிக்குச் சென்றுவந்ததால் அந்தப் பகுதியிலும் அவர் வசிக்கும் ஆக்லாந்திலும் 7 நாட்கள் முழு ஊரடங்கில் இருக்கும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதத்தில் கொரோனா வைரஸ் கடைசி பாதிப்பு நியூஸிலாந்தில் அறியப்பட்டது. ஆனால், இப்போது டெல்டா வைரஸால் பாதிப்பு ஏற்படலாம் என்று அந்நாட்டு சுகாதார நிபுணர்கள் அச்சத்தில் உள்ளனர். இருப்பினும் ஜீனோம் பரிசோதனை முடிவுகள் வெளிவந்தால் தான் பாதிக்கப்பட்டுள்ள ஒரே ஒரு நோயாளியும் டெல்டா வேரியன்ட்டால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பது உறுதியாகும் என்றும் சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

நியூஸிலாந்து கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தில் வேகம் காட்டாத நிலையில் அந்நாட்டு அரசு டெல்டா வைரஸால் அச்சமடைந்துள்ளது.

நியூஸிலாந்தில் இதுவரை 32 சதவீத மக்கள் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். 18 சதவீத மக்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

இந்நிலையில் அண்டை நாடான அதுவும் குறிப்பாக நியூஸியை எல்லையை ஒட்டிய சிட்னியில் டெல்டா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருப்பதால் நியூசிலாந்து மீண்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.

தடுப்பூசித் திட்டத்தையும் துரிதப்படுத்தியிருக்கிறது. ஊரடங்கு அமலுக்கு வருவதால் அந்த நாட்களில் மட்டும் தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்படாது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

“கடந்த கால அனுபவங்கள் எங்களை மாற்றிவிட்டன. இஸ்லாமிய சட்டங்களின் படி பெண்கள் நடத்தப்படுவர்.” – தலிபான்கள் முதல் ஊடகப்பேட்டி !

இஸ்லாமிய சட்டங்களுக்கு உட்பட்டு பெண்களுக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்படும், கல்வி கற்கலாம், வேலைக்குச் செல்லலாம். அமெரிக்க,மேற்கத்தியப் படைகளுடன் இணைந்து எங்களை எதிர்த்த மக்களுக்கு  பொதுமன்னிப்பு வழங்குகிறோம் என தலிபான் தீவிரவாத அமைப்பின் சார்பில் உறுதியளிக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறிபின், அங்கிருக்கும் பெரும்பாலான மாகாணங்களை தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். தலைநகர் காபூலில் தலிபான்கள் நுழைந்ததை அறிந்த அதிபர் அஷ்ரப் கனி தஜிகிஸ்தானுக்கு தப்பி ஓடிவிட்டார்.

காபூலில் அதிபர் மாளிகையைக் கைப்பற்றிய தலிபான்கள் ஆட்சி அமைக்கப்போவதாக அறிவித்துள்ளனர். கடந்த காலத்தில் தலிபான்கள் ஆட்சியில் பெண்களுக்கான உரிமைகள்மறுக்கப்பட்டன, கல்வி கற்கவும், வேலைக்குச் செல்லவும் அனுமதிக்கப்படவில்லை.

அதுபோன்று இந்தமுறையும் பெண்கள், சிறுமிகள் நிலை பரிதாபத்துக்குரியதாக மாறிவிடும் என உலகச் சமுதாயம் அஞ்சி வருகிறது. இதன் காரணமாகவே கொடூரமான தலிபான்கள் ஆட்சியில் வாழ்வதைவிட வேறு எங்காவது செல்லலாம் என அஞ்சி மக்கள்கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகிறார்கள்.

ஆனால், ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள் இந்தமுறை உலகிற்குத் தங்களை நவீன சிந்தனையுள்ளவர்களாகக் காட்டிக்கொள்ள விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.

தலிபான் தீவிரவாத அமைப்பின் நீண்டகால செய்தித்தொடர்பாளர் ஜபிபுல்லாஹ் முஜாஹித் நேற்று முதல்முறையாக தனியார் ஒன்றுக்குப் பேட்டி அளித்தார்.அப்போது அவர் பேசியதாவது:

தலிபான்கள் ஆட்சியில் சித்தாந்தங்கள்,நம்பிக்கைகள் ஒரேமாதிரியாகத்தான் இருக்கும் ஏனென்றால் தலிபான்கள் முஸ்லி்ம்கள். ஆனால், கடந்த முறையைவிட இந்த முறையில் தலிபான்களுக்கு ஏாளமான அனுபவங்கள் கிடைத்துள்ளன.அந்த அனுபவத்தால் அவர்கள் கண்ணோட்டம் மாறும்

பெண்களுக்கான உரிமைகளை இஸ்லாமிய சட்டப்படி வழங்க தலிபான்கள் கடமைப்பட்டுள்ளார்கள். பெண்கள் சுகாதாரத்துறையில் பணியாற்றலாம், கல்வி கற்கலாம், வெளியேசெல்லும்போது ஹிஜாப் அணிந்து செல்ல வேண்டும். பெண்களுக்கு எதிராக எந்த பாகுபாடும் காட்டப்படாது.

உலக நாடுகளில் முஸ்லிம் பெண்கள் பலவாறு நடத்தப்படுகிறார்கள். இந்த தேசத்திலேயே கிராமப்புறங்களில் கட்டுக்கோப்பான முஸ்லிம்களாகவும் பெண்கள் இருக்கிறார்கள். பாகிஸ்தானில் பெண் ஒருவர் பிரதமராகவே வந்துவிட்டார், சவுதி அ ரேபியாவில் பெண்கள் கார் ஓட்டுவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானை மற்றநாடுகளை தாக்குவதற்கு பயன்படும் தளமாக இனிமேல் யாரும் பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம். ஆப்கானிஸ்தான் அமெரிக்கப் படைகளும், மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த படைகளும் வந்தபோது, அவர்களுக்கு உதவிய ஆப்கன் மக்களுக்கு முழுமையான பொதுமன்னிப்பு வழங்குகிறோம்.

அமெரிக்கப் படைகளுக்கு உதவிய ஆப்கன் மக்களைத் தேடிச் சென்று ஏன் உதவினீர்கள் என்று கேட்கவும்மாட்டோம். ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் செயல்படத் தடையில்லை. ஆனால், ஊடகங்கள் சுதந்திரமாக இருக்க வேண்டு்ம், பத்திரிகையாளர்கள் தேசத்தின் மதிப்புகளுக்குவிரோதமாகச் செயல்படக்கூடாது.

கடந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது, பாதுகாப்பும் இல்லை. ஆனால், தலிபான்கள் வந்தபின், மீண்டும் சட்டம் ஒழுங்கு பராமரிக்கப்படும். ஆப்கானிஸ்தானில் இருக்கும் வெளிநாட்டுத் தூதரகங்கள் , சர்வதேச அமைப்புகள், உதவும் அமைப்புகள் முக்கியமானவை, அவற்றின் பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்படும்.

தலிபான்களின் துணைத் தலைவரும், நிறுவனர்களில் ஒருவரான அப்துல் கானி பராதர் ஆப்கானிஸ்தானுக்கு வந்துவிட்டார்.” இவ்வாறு ஜபிபுல்லாஹ் முஜாஹித் தெரிவித்தார்

“அமெரிக்காவின் செயலே தலிபான்கள் எழுச்சிக்கு காரணம்.” – ஜேர்மனி குற்றச்சாட்டு !

ஆப்கானிஸ்தால் படைகளை முன்னரே திரும்பப் பெற்றது அமெரிக்க அரசின் தவறான கணக்கீடு என்று ஐரோப்பிய நாடுகள் விமர்சித்துள்ளன.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு இராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றினர்.

தற்போது தலிபான்கள் ஆப்கானைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். இதன் காரணமாக ஆப்கான் மக்களிடத்தில் பதற்றம் நிலவுகிறது. மேலும், ஆயிரக்கணக்கான மக்கள் ஆப்கானிலிருந்து வெளியேறி வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்காவின் முடிவை, ஜெர்மனி, பிரித்தானியா  ஆகிய நாடுகள் விமர்சித்துள்ளன.

இதுகுறித்து ஜெர்மன் நாடாளுமன்றத்தின் வெளிநாட்டு உறவுக் குழுவின் தலைவர் நோர்பர்ட் ரோட்ஜென் கூறும்போது, “நான் இதை கனத்த இதயத்துடனும், என்ன நடக்கிறது என்ற திகிலுடனும் சொல்கிறேன். முன்கூட்டியே படைகளைத் திரும்பப் பெறுவது என்பது அமெரிக்க அரசின் தவறான கணக்கீடு. இது மேற்கத்திய நாடுகளின் அரசியல் மற்றும் நம்பகத்தன்மையில் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இது அவநம்பிக்கையின்மை மற்றும் துரோகத்தை உணரச் செய்யும்” என்றார்.

ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் கூறும்போது, “ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு இவை கசப்பான நிகழ்வுகள்” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானை தலிபான்கள்  மீண்டும் கைப்பற்றுவதற்கு அந்நாட்டு அரசும், அந்நாட்டுப் படைகளுமே காரணம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குற்றம் சாட்டியுள்ளார்.

“ஆப்கான் இராணுவமே நாட்டை பாதுகாக்காத போது அமெரிக்கா ஏன் ஆப்கானை காக்க வேண்டும்.” – ஜோபைடன் காட்டம் !

ஆப்கானிஸ்தானைத் தலிபான்கள் மீண்டும் கைப்பற்றுவதற்கு அந்நாட்டு அரசும், அந்நாட்டுப் படைகளுமே காரணம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள்  கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஆப்கனில் நடந்த ஆயுதப் போரில் தலிபான்கள்  வென்றுள்ளதாக ஆப்கன் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,  ஆப்கன் ஜனாதிபதி  அஷ்ரப் கானி ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார். ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்காவுக்கான தூதரக அதிகாரிகளும் வெளியேறியுள்ளனர்.

இந்தநிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் கூறியதாவது:

”ஆப்கனில் நாட்டைக் கட்டமைக்கும் பணிக்காக அமெரிக்கப் படைகள் அங்கு செல்லவில்லை. அது எங்கள் வேலையும் இல்லை. அல்கொய்தா அமைப்பை அழிக்கவும், ஒசாமா பின்லேடனைப் பிடிக்கவும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் இறங்கின. படைகளை எப்போது வாபஸ் வாங்கினாலும் இதுதான் நடந்திருக்கும்.

ஆப்கன் அரசும், படைகளும் தலிபான்களை முழு மூச்சுடன் எதிர்க்கவில்லை. அவர்களே எதிர்க்காதபோது அமெரிக்கா ஏன் அவர்களை எதிர்த்துப் போராட வேண்டும்? ஆப்கன் படைகளே தங்கள் நாட்டைக் காக்காதபோது, அப்படி ஒரு போரை நடத்த வேண்டிய அவசியம் அமெரிக்கப் படைகளுக்குக் கிடையாது.

ஆப்கனில் நடக்கும் விஷயங்களைப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் இணைந்து தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம்” இவ்வாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன்  தெரிவித்தார்.

“பொது மன்னிப்பு வழங்குகிறோம்; அனைத்து அரசு ஊழியர்களும் பணிக்குத் திரும்புங்கள்.” – தலிபான்கள் அறிக்கை !

பொது மன்னிப்பு வழங்குகிறோம்; அனைத்து அரசு ஊழியர்களும் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று தலிபான்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான்களுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள்  கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றினர்.

தற்போது தலிபான்கள் ஆப்கனைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதன்காரணமாக ஆப்கன் மக்களிடத்தில் பதற்றம் நிலவுகிறது. இந்த நிலையில் தலிபான்கள் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

தலிபான்கள் வெளியிட்ட அறிக்கையில், “அனைத்து அரசு ஊழியர்களுக்கு பொதுமன்னிப்புவழங்கப்படுகிறது. உங்களது வழக்கமான வாழ்வை நம்பிக்கையுடன் தொடங்குங்கள்.அனைவரும் பணிக்கு திரும்ப வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலிபான்கள் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷாகின், ”மக்களின் உயிரும், சொத்துகளும் பாதுகாப்பாக இருக்கும். ஆப்கானிஸ்தான் மக்களைப் பழிவாங்க மாட்டோம். நாங்கள் மக்களின் சேவகர்கள். எங்களது தலைமை காபூலில் தொந்தரவுகள் ஏற்படுத்தாது” என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிவிட்ட நிலையில் தாலிபான்கள் தங்களது ஆட்சியில் பழைய இஸ்லாமிய சட்டங்களை மீண்டும் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதாக அறிய முடிகின்றது. தலிபான்கள் 90-களில் அமுல்படுத்திய கடுமையான சட்டங்களை மீண்டும் கடைப்பிடிப்பார்களா என மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.

10 வயதுக்குமேல் பெண் குழந்தைகள் பள்ளி சென்று படிக்கக் கூடாது, அவர்கள் தங்கள் முகம் மற்றும் உடலை முழுவதுமாக மூடும் ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும், திருடக் கூடாது, குற்றவாளிகளுக்கு பொதுமக்கள் முன்னிலையில் தூக்கு தண்டனை நிறைவேற்றுதல், பிரம்படி கொடுத்தால் உள்ளிட்ட பல இஸ்லாமிய சட்டங்களை தாலிபான்கள் அமுல்படுத்தலாம் என்ற அச்சத்தில் மக்கள்  உள்ளனர்.

நான்கு கார்களில் பணத்தை கட்டுக்காட்டாக திணித்துக்கொண்டு தப்பியோடிய ஆப்கானிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி !

ஆப்கானிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி அஷ்ரஃப் கனி கட்டுக்கட்டாக பணம், நான்கு கார்கள், ஒரு ஹெலிகாப்டர் உடன் ஓமனுக்கு சென்று தஞ்சம் அடைந்து விட்டார் என காபுலில் உள்ள ரஷ்ய தூதரக அதிகாரிகள்  தகவல் அளித்துள்ளனர்.

முன்னதாக தலைநகர் காபூலின் அனைத்து பகுதிகளையும் தாலிபான்கள் கட்டுப்படுத்த துவங்கியபோது வன்முறையையும் போராட்டத்தையும் தவிர்க்கத் தான் பதவி விலகுவதாக அறிவித்த அஷ்ரப் கனி அண்டை நாடான தஜிகிஸ்தானில் குடி ஏற முயன்றார். ஆனால் அவரை நாட்டுக்குள் அனுமதிக்க அந்நாட்டு அரசு மறுப்பு தெரிவித்தது.

இதனை அடுத்து அவர் நான்கு கார்களில் கட்டுக்கட்டாக பணத்தை அடைத்து திணித்து அதுபோதாமல் ஹெலிகாப்டர் ஒன்று பணக்கட்டுகளை வைத்து ஓமனுக்கு சென்று குடியேறி விட்டார் என்று ரஷ்ய அதிகாரிகள் கூறினர். கனியின் அலுவலகத்தில் மேலும் கட்டுக்கட்டாக பணம் இருந்தாலும் அதனை எடுத்துச் செல்ல முடியாததால் பணக்கட்டுகள் ஆங்காங்கே சிதறிக்கிடந்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.

உயிரைக்காப்பாற்ற தப்பிச்சென்ற ஆப்கான் இராணுவ வீரர்களின் விமானத்தை சுட்டு வீழ்த்திய உஸ்பெகிஸ்தான் !

ஆப்கானிஸ்தானின் முக்கிய பகுதிகளை கைப்பற்றி முன்னேறிய தலிபான்கள், கடைசியாக தலைநகரை நேற்று கைப்பற்றினர். இதன்மூலம் ஆப்கானிஸ்தான் முழுவதும் தலிபான்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டது. தலிபான்கள் காபூல் நகருக்குள் நுழையத் தொடங்கியதும் ஆப்கானிஸ்தான் படைகள் பின்வாங்கத் தொடங்கின. ராணுவ வீரர்கள் பலர் தலைமறைவாகினர்.
இந்நிலையில், உஸ்பெகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஆப்கானிஸ்தான் ராணுவ விமானத்தை, உஸ்பெகிஸ்தான் வான் பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தியது. சர்க்சான்டார்யோ மாகாணத்தில் அந்த விமானம் விழுந்து நொறுங்கியது. இத்தகவலை உஸ்பெகிஸ்தான் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமாக எல்லையை கடந்து நுழைந்ததால் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டதாக உஸ்பெகிஸ்தான் பாதுகாப்புத்துறை செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். ஆனால் விமானத்தில் எத்தனை பேர் இருந்தனர்? யாராவது உயிர்பிழைத்தார்களா? என்ற தகவலை அவர் தெரிவிக்கவில்லை.
இதேபோல் எல்லை தாண்டி வந்து மருத்துவ உதவி கேட்ட ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்கள் 84 பேர் சிறைபிடிக்கப்பட்டதாக உஸ்பெகிஸ்தான் நேற்று கூறியது குறிப்பிடத்தக்கது.

“ஆப்கானிஸ்தானில் அடிமைத்தனத்தின் சங்கிலி உடைக்கப்பட்டுள்ளது.” – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளனர். நேற்று தலைநகரம் காபூலை  கைப்பற்றிய அவர்கள், அதிபர் மாளிகையையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அதிபர் அஷ்ரப் கனி மாளிகையில் இல்லை. அவர் தஜிகிஸ்தான் நாட்டுக்கு தப்பி சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாட்டின் முழு கட்டுப்பாடும் தலிபான்கள் கையில் வந்ததையடுத்து, வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் வெளியேறி வருகின்றனர். தலிபான்கள் ஆட்சியில் என்ன நடக்குமோ? என்ற பீதியில் ஏராளமான மக்களும் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக காபூல் விமான நிலையத்துக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் விமான நிலையத்தில் கூட்டம் அலைமோதுகிறது.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியது பற்றி கருத்து தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அடிமைச் சங்கிலிகள் உடைக்கப்படுகின்றன, என்றார்.
ஆங்கில வழிக்கல்வி மற்றும் அதைத் தொடர்ந்து கலாச்சாரத்தை உள்வாங்கிக் கொள்வதைப் பற்றி பேசிய இம்ரான் கான்,
“நீங்கள் மற்ற கலாச்சாரத்தை எடுத்துக்கொண்டு உளவியல் ரீதியாக அடிபணிந்தீர்கள். அவ்வாறு நடக்கும் போது, உண்மையான அடிமைத்தனத்தை விட மோசமானது என்பதை நினைவில் கொள்ளுங்கள். கலாச்சார அடிமைத்தனத்தின் சங்கிலிகளை தூக்கி எறிவது கடினம். ஆப்கானிஸ்தானில் இப்போது என்ன நடக்கிறது என்று பாருங்கள். அவர்கள் அடிமைத்தனத்தின் சங்கிலியை உடைத்துள்ளனர்” என்றார்.

தலிபான்களிடம் இருந்து உயிரை காப்பாற்ற ஆகாயவிமானத்தில் தொங்கிக்கொண்டு சென்ற மூவர் பலி !

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளனர். நேற்று தலைநகரம் காபூலை  கைப்பற்றிய அவர்கள், அதிபர் மாளிகையையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
நாட்டின் முழு கட்டுப்பாடும் தலிபான்கள் கையில் வந்ததையடுத்து, வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் வெளியேறி வருகின்றனர். தலிபான்கள் ஆட்சியில் என்ன நடக்குமோ? என்ற பீதியில் ஏராளமான ஆப்கான் மக்களும் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக காபூல் விமான நிலையத்துக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் விமான நிலையத்தில் கூட்டம் அலைமோதுகிறது. ஆனால் காபூல் விமான நிலையத்தை தலிபான் அமைப்பு மூடியுள்ளதுடன் விமான சேவைகளையும் நிறுத்தி வைத்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்... விமானத்தில் தொங்கிக்கொண்டு சென்ற 3  பேர் கீழே விழுந்து பலி || 3 Fall Off Plane, Some Huddled On Aircraft Wing  In Kabul
இந்நிலையில் அங்கிருந்து குறைந்த அளவிலான விமானங்களே இயக்கப்படுகின்றன. அந்த விமானங்களில் ஏறி எப்படியாவது தப்பி செல்ல வேண்டும் என பலர் முண்டியடிக்கின்றனர். இதற்காக உயிரைப் பயணம் வைக்கின்றனர். காபூலில் இருந்து புறப்பட்ட அமெரிக்க விமானப்படை விமானம் ஒன்றை சுற்றி பலர் ஓடி வருவதும், அதன் மீது ஏறுவதுமான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
இதேபோல் அமெரிக்க விமானப்படை விமானத்தில் ஏற இடம் கிடைக்காததால் சிலர் தொங்கிக்கொண்டு பயணம் செய்துள்ளனர். இவ்வாறு பயணித்தவர்களில் 3 பேர் விமானத்தில் கீழே விழுந்து உயிரிழந்தனர். இது தொடர்பான வீடியோவும் வெளியாகி உள்ளது. நெஞ்சை பதற வைக்கும் இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றன.
https://youtu.be/ss3HhiynoqI