21
21
பிராந்தியத்தில் மிக பாராட்டத்தக்க கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுப்பதால் இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று உறவுகளை பலப்படுத்தும் வகையில் 9.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க போவதாக ஜப்பான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அக்கிரா சுகியாமா அமைச்சர் டளஸ் அழகப்பெருமவை சந்தித்த போது இதனை தெரிவித்துள்ளார். மின் சக்தி அமைச்சில் இச்சந்திப்பு இடம்பெற்றது. இலங்கையின் மின்சார துறையின் முன்னேற்றத்துக்காக ஜப்பான் தொழில்நுட்ப மற்றும் நிதியுதவிகளை வழங்க போவதாக தூதுவர் அங்கு மேலும் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வழங்கப்படும் ஆதரவு தொடர்பாக அமைச்சர் ஜப்பான் அரசாங்கத்துக்கு நன்றி தெரிவித்தார்.
முன்னதாக சீனா கொரோனாவால் வீழ்ச்சியடைந்திருந்த இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப பெருமளவான நிதியினை கடனாக வழங்கியிருந்தது. அது போல போல கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு தேவையான மருத்துவஉபகரணங்களை ஐக்கியஅமெரிக்கா வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
“ஜனாதிபதிக்கு அதிகாரங்கள் இல்லாமல் இருப்பது, நாட்டுக்கு நல்லது அல்ல, அந்த நிறைவேற்று அதிகாரம் இருந்தமையால் தான் யுத்தத்தை நாம் வெற்றி கொண்டோம்”- என நிறைவேற்று தெிகார ஜனாதிபதிமுறைமையின் தேவை பற்றி பிரதமர் மகிந்தராஜபக்ஸ பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) ஆரம்பமான 20ஆவது திருத்தத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்,
“இன்று எமக்கு மிகவும் முக்கியமான ஒரு தினமாகவே நாம் கருதுகிறோம். 20ஆவது திருத்தச் சட்டமூலம் என்பது மக்களின் ஆணைக்கு இணங்கவே கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும், அது நீண்ட காலத் தீர்வாக என்றும் அமையாது. அதற்கிணங்க நாம் விரைவில் புதிய அரசியலமைப்பொன்றை ஸ்தாபிப்பதே எமது எதிர்ப்பார்ப்பாகும். நாம் 20ஐ, ஜனநாயக ரீதியாகத்தான் கொண்டுவந்துள்ளோம். எனினும், 19 ஆவது திருத்தச்சட்டமூலம் அவ்வாறு கொண்டுவரப்படவில்லை.
இதற்கு எதிராக கருத்துக்களை வெளியிட வாய்ப்பளிக்கவில்லை. இதனால் நாடு பலவீனமடைந்தது. 19 இன் ஊடாக ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டன. இதனால் ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்றது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈஸ்டர் தாக்குதலை முன்கூட்டியே தெரிந்துவைத்திருந்தார்கள் என ஆணைக்குழுவில் சாட்சி வழங்கப்பட்டுள்ளது.
அப்படியிருந்தும், இதனை தடுத்துக்கொள்ள முடியாதமைக்கு 19 தான் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இதனையிட்டு நாம் வெட்கமடையவேண்டும். நாட்டின் பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதிக்கு அதிகாரங்கள் இல்லாமல் இருப்பது, நாட்டுக்கு நல்லது அல்ல. மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதிக்கு பொலிஸ் மா அதிபரை மாற்றக்கூட அதிகாரம் இல்லை.
இவ்வாறான ஜனாதிபதி முறைமைதான் இன்றும் நாட்டில் இருக்கிறது. நான் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக இருந்திருந்தேன். அந்த அதிகாரம் இருந்த காரணத்தினால் தான் யுத்தத்தை எம்மால் நிறைவுக்குக் கொண்டுவர முடியுமாக இருந்தது.
புலனாய்வுப்பிரிவு உள்ளிட்ட அனைத்து பாதுகாப்புப் பிரிவும் அந்தக் காலத்தில் சக்திமிக்கதாக இருந்தது. ஆனால், இந்த நிலைமைகள் எல்லாம் இன்று மாற்றமடைந்து விட்டது. 19 ஐ கொண்டுவந்தவர்களே இது நாட்டுக்கு சரியில்லை என்பதை ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.
பொதுத் தேர்தலின்போது, 20 தொடர்பாக நாம் மக்களிடம் ஆணைக் கோரியிருந்தோம். அதற்கிணங்கவே நாம் தற்போது அதனைக் கொண்டுவந்துள்ளோம். எனவே, இதனைப் புரிந்துக் கொண்டு எதிரணியினரும் இதற்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என நாம் கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பான நாடாளுமன்ற விவாதம் ஆரம்பமாகியுள்ளது. இன்று(புதன்கிழமை) காலை 10 மணிக்கு சபாநாயகர் தலைமையில் சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகியிருந்தன.
இதன்போது 20வது திருத்த சட்டமூலம் குறித்த விவாதத்தினை ஆரம்பித்து வைத்து, உரையாற்றிய போதே நீதியமைச்சர் அலி சப்ரி குறித்த திருத்தங்களை முன்வைத்துள்ளார்.
உயர்நீதிமன்றத்தினால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளுக்கு அமைவாக மாற்றங்கள் செய்யப்பட்டு 20ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கபட்டுள்ளது.
இதற்கமைய, 20 ஆவது திருத்தத்தின் 5ஆவது சரத்தின்படி ஜனாதிபதியினால் கொண்டுவரப்படும் தீர்மானங்கள் தொடர்பில் உயர் நீதிமன்றத்துக்கு செல்ல முடியும் என திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. முன்னதாக ஜனாதிபதியினால் கொண்டுவரப்படும் தீர்மானங்கள் தொடர்பில் உயர் நீதிமன்றத்துக்கு செல்ல முடியாது என குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், திருத்தங்கள் ஊடாக மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அடுத்து ஒருவருட காலப்பகுதியில் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்குவதாக 20 ஆவது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், நாடாளுமன்றத்தை இரண்டரை வருடத்தில் கலைப்பதற்கும், அது சார்ந்த தீர்மானங்களை ஜனாதிபதியினால் முன்னெடுக்க முடியுமெனவும் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும், உயர்நீதிமன்றத்தின் ஆலோசனைக்கு அமைவாக 22 ஆவது சரத்தினை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆலோசனைக்கு அமைவாகவும், தேர்தல் சட்டத்திற்கு அமைவாகவும் ஜனாதிபதியினால் தீர்மானங்கள் மேற்கொள்ள முடியுமென மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
கணக்காய்வு நடவடிக்கை 19ஆவது திருத்தத்தில் உள்ளதை போன்றே மாற்றங்கள் இன்றி 20 ஆவது திருத்தத்திலும் கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை அமைச்சுக்கள் 30 ஆகவும், அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சுகள் 40 ஆகவும் கொண்டுநடத்த புதிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
“புதிய அரசியலமைப்பிற்கு தமிழ் மக்கள் உட்பட அனைத்து மக்களின் ஒருமித்த கருத்தும் இருக்க வேண்டும் இல்லையென்றால் கூட்டமைப்பு அதை நிராகரிக்கும்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 20 வது திருத்தம் குறித்த இரண்டு நாள் விவாதம் பாராளுமன்றில் இன்று (21.10.2020) ஆரம்பமாகியுள்ள நிலையில் , 20ஆவது திருத்தம் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இது குறித்து மேலும் உரையாற்றிய இரா.சம்பந்தன் பேசும் போது ,
ஆணைக்குழுக்களின் உறுப்பினர்கள், நீதிபதிகள் போன்றோரை நியமித்தல் மற்றும் நீக்குதல் ஆகியவற்றின் அதிகாரம் ஒருவருக்கு வழங்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. நீதித்துறை சுதந்திரமாக செயற்பட வேண்டியது அவசியமானது.
அத்தோடு ஒரு ஜனநாயகத்தை சர்வாதிகாரமாக மாற்றுவதற்கான எந்தவொரு ஆணையும் மக்களிடமிருந்து பெறப்படவில்லை. இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 20 ஆவது திருத்தத்தினை எதிர்ப்பதற்கான காரணமாகவுள்ளது. இந்த நாட்டில் மக்கள் ஏற்றுக்கொள்ளும் அரசியலமைப்பு இல்லை.
தற்போதைய அரசியலமைப்பு 1994 முதல் ஒவ்வொரு தேர்தலிலும் மக்களால் நிராகரிக்கப்பட்டது குறிப்பாக தமிழ் மக்கள் ஒரு புதிய அரசியலமைப்பிற்கான ஆணையை தொடர்ந்து வழங்கியுள்ளனர்.புதிய அரசியலமைப்பிற்கு தமிழ் மக்கள் உட்பட அனைத்து மக்களின் ஒருமித்த கருத்தும் இருக்க வேண்டும் .இல்லையென்றால் அதை தாங்கள் நிராகரிப்போம் எனவும் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தல்களுடன் தொடர்புபட்ட அரசியல்வாதிகளின் பெயர்கள் அம்பலமாகாமல் இருக்கவே பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னனும், பாதாள உலகத் தலைவருமான மாகந்துரே மதுஷ் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று ஜே.வி.பியின் பொதுச் செயலாளரும், கம்பஹா மாவட்ட பாரளுமன்ற உறுப்பினரான விஜித ஹேரத் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் விஜித ஹேரத் உரையாற்றுகையில்:-
“மாகந்துரே மதுஷ் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் இன்று மிகப்பெரிய விடயமல்ல. அதுபோன்ற கொலைகள் இந்த நாட்டில் இதற்கு முன்னரும் அரங்கேறியிருக்கின்றன. ஆனால், இந்தக் கொலை மூலம் போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்ட மற்றும் அதனுடன் தொடர்பிலிருந்த அரசியல்வாதிகளின் பெயர்கள் அம்பலமாவது தடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக டுபாயிலிருந்து தனியார் ஊடகமொன்றுக்குக் கடந்த ஜனவரி மாதத்தில் மதுஷ் பேட்டியொன்றை வழங்கியிருந்தார். அதில், 80க்கும் அதிகமான அரசியல்வாதிகள் தன்னுடன் கடத்தல் விவகாரத்தில் தொடர்பில் இருப்பதைக் கூறியிருந்தார். அவர் கைது செய்யப்பட்டு தடுப்பிலிருந்த நிலையில் இன்று சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
ஒருவேளை அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வழக்கும் விசாரணைக்கு எடுக்கப்பட்டிருந்தால் அவருடன் போதைப்பொருள் வர்த்தகம் செய்த அரசியல்வாதிகளின் பட்டியலும் அம்பலமாகியிருக்கும். ஆகவேதான் அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்கின்ற சந்தேகம் உருவாகியுள்ளது என்றார்
பிரதமர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் நேற்று (20.10.2020) இடம்பெற்ற நவராத்திரி விழா நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில் பிரதமரின் குடும்பத்தார் உட்பட அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
வழிபாட்டு நடவடிக்கைகளுடன் இலங்கை இந்திய சமுதாய பேரவையினால் வழங்கப்படும் பாடசாலை மாணவர்கள் ஆறு பேருக்கான புலமைப்பரிசில்களும் பிரதமரினால் நேற்றையதினம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மத அனுட்டானங்கள் முடிவடைந்ததை தொடர்ந்து நிகழ்வில் உரையாற்றிய பிரதமர்,
‘நாட்டைக் கட்டியெழுப்பும் ‘சுபீட்சத்தின் நோக்கு’ என்ற பயணத்தை நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஆரம்பித்திருக்கின்றோம். சட்டத்தை மதிக்கும் குணநலம் கொண்ட ஒழுக்கநெறியான சமூகம் ஒன்றினை நாம் அனைவரும் ஒன்றிணைந்து உருவாக்கவேண்டும்.
இந்தச் சமூகத்தில் வாழ்கின்ற ஒவ்வொருவரும் ஆன்மீகத் துறையிலும் நற்பண்பிலும் மேம்பட வேண்டுமாயின், அவர்களுக்கான மத அனுட்டானங்களைச் சரிவரப் பின்பற்றுபவர்களாக இருக்க வேண்டும். இந்நாட்டில் இப்பொழுது, மக்களுக்குத் தமது மத அனுட்டானங்களைப் பின்பற்றுவதற்கான உரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எமது தாய் நாடான இலங்கை உட்பட, உலகில் எங்கெங்கெல்லாம் இந்துக்கள் வாழ்கின்றார்களோ அங்கெல்லாம் நவராத்திரி விரதம் மற்றும் பூஜை வழிபாடுகள் ஆரம்பமாகியுள்ளன. இந்துக்கள் அனைவரும் தாயாக போற்றுகின்ற சக்தியைப் போற்றி வழிபடும் நிகழ்வு ஒன்பது நாட்களுக்கு இடம்பெறவுள்ளது.
நவராத்திரி விரதம் பார்ப்பதற்கு ஒரு கொண்டாட்டம் போல இருந்தாலும் ஒரு விரதமாகவே அனுட்டிக்கப்படுகிறது. அழிவு இல்லாத சிறந்த கல்விச் செல்வத்தை வழங்குகின்ற கலைமகளையும் மனத்திடத்தோடு துணிவைத்தரும் மலைமகளையும் செல்வங்களை அள்ளித்தரும் திருமகளையும் போற்றி வழிபடுவது நவராத்திரி பூஜையின் சிறப்பு.
ஒன்பது தினங்களின் பின்னர் பத்தாவது நாள் மிகவும் விசேடமான தினமாகும். அயராத உழைப்பினால் கிட்டும் வெற்றியினை பூஜிக்கும் திருநாளாகவும் ஆரம்பிக்கும் அத்தனை காரியங்களும் வெற்றியில் முடியும் என்ற நம்பிக்கையில் அன்னை மகாசக்தியை வழிபட்டு நற்காரியங்களைத் தொடங்கும் திருநாளாகவும் பத்தாவது நாள் ‘விஜயதசமி’ திருநாள் அமைகின்றது.
இது அர்த்தமுள்ள நல்லதொரு பூஜை வழிபாடு, ‘கொலு’ வைப்பது இந்த வழிபாட்டில் சிறப்பான ஒரு விடயம். இந்த உலக உயிர்கள் எல்லாமே எல்லோர்க்கும் மேலான சக்தியாலேதான் இயங்குகின்றன என்ற உண்மையை எங்களுக்குக்குச் சொல்லுகிறது.
ஆலயங்கள், பாடசாலைகள், நிறுவனங்கள், வீடுகள் என எல்லாத் துறைகளிலும் ‘கொலு’ வைத்து வழிபடும் இந்த நிகழ்வால் நாட்டில் சுபீட்சமும் சகவாழ்வும் இனிதே மலரட்டும் என பிரார்த்திப்போம். இன்று நம் தேசத்தில் மூன்றாவது அலையாக எழுவதற்கு எத்தணித்துக் கொண்டிருக்கும் ஒரு பிரச்சினை கொரோனா. இது மக்களிடையே ஒரு பய உணர்வை ஏற்படுத்தி இருக்கிறது. இத்தகைய பயங்கள் ஆன்மீக பலத்தினாலேதான் வெல்லப்பட வேண்டும். இந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் என்ற ரீதியில் முடிந்தளவு முயற்சித்து வருகின்றோம்.
இவ்வாறான இக்கட்டான சந்தர்ப்பத்திலும் இந்து ஆலயங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கி சமய விழுமியங்களை பாதுகாப்பதற்கு முன்வந்துள்ளோம். இதுவரை இருந்த இந்து அமைச்சர்கள் நவராத்திரி விழாவை தங்களது வீடுகளிலிருந்து கொண்டாடினர். அந்த இந்து அமைச்சர்கள் போன்று நானும் நவராத்திரியை இந்து மத சம்பிரதாயங்களுக்கு ஏற்ப அனுஷ்டிக்கவுள்ளேன்.
இந்த நவராத்திரி தினத்தில் கொரோனா தொற்று இல்லாதொழிக்கப்பட்டு, அனைவரும் அனைத்து நலன்களையும் வளங்களையும் பெற்று சீரோடும் சிறப்போடும் வாழ்ந்திட பிரார்த்திக்கிறேன்’ எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து ‘உங்கள் எல்லோருக்கும் நவராத்திரி தின வாழ்த்துக்கள்’ என தமிழ் மொழியில் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்.
பொதுச் சுகாதார அவசர சட்டம் இயற்ற தனிநபர் சட்ட வரைவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்று (20.10.2020) பாராளுமன்றில் சமர்ப்பித்துள்ளார்.
இந்த சட்ட வரைவில் பொதுச் சுகாதார அவசரநிலை அறிவிக்கப்படுவதற்கும் பொதுச் சுகாதார அவசர சபை அமைப்பதற்குமான ஏற்பாடுகள் காணப்படுகின்றன.
பொதுச் சுகாதார அவசரகால நிலையின் இருப்பு அல்லது உடனடித் தன்மையைக் கருத்தில் கொண்டு, பொதுச் சுகாதார நலன்களுக்காக அதைச் செய்வது மிகவும் பயனுள்ளது. கொரோனா தொற்றுநோய் உலகம் முழுவதும் தொடர்ந்து பரவி வரும் நிலையில் நாட்டில் எதிர்காலத்தில் அதை எதிர்த்துப் போராடுவதற்கான நடவடிக்கைகளை சட்டபூர்வமாக வழங்குவது பயனுள்ளது என்று அதில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.
இந்தச் சட்டத்தின் பிரிவு 2 இன் கீழ் ஒரு பொதுச் சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டால், பொதுச் சுகாதார அவசர நிலைப் பேரவை என்று அழைக்கப்படும் ஓர் அமைப்பை உருவாக்க முன்மொழிவும் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பில் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், சுகாதார, சமூக நலன் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல அமைச்சுக்களைப் பொறுப்பானதாகக் கொண்டிருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பொதுச் சுகாதார அவசரகால சட்டத்தில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் எழுத்துபூர்வ ஆலோசனையின் பேரில் அமைச்சரால் அடிப்படை உரிமைகளை தற்காலிகமாக நிறுத்திவைப்பதற்கான ஏற்பாடுகளும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொர்பான பாராளுமன்ற விவாதம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று மற்றும் நாளை காலை 10 மணி முதல் இரவு 7.30 மணி வரையில் விவதாம் நடைபெறவுள்ளதுடன் நாளை இரவு வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.
சமகால அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட அரசியல் அமைப்பின் 20 ஆவது திருத்தத்தை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பிலான உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை, சபாநாயகரினால் நேற்று (20.10.2020) பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த விவாதம் இன்று தொடர்ந்து இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.
இதன்போது 20வது திருத்த சட்டமூலம் குறித்த விவாதத்தினை ஆரம்பித்து வைத்து, நீதியமைச்சர் அலி சப்ரி உரையாற்றினார்.
இந்தநிலையில், பிரதமருக்கான அதிகாரம் குறைக்கப்பட்டுள்ளமை குறித்து தெளிவுபடுத்த முடியுமா?என சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்த நீதியமைச்சர் அலி சப்ரி, “அதனை நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம். இதுகுறித்து நீங்கள் முதலைக்கண்ணீர் வடிக்க வேண்டாம். பிரதமர் மக்களினால் தெரிவு செய்யப்படுகின்றார். அவர் மக்களுக்கான சேவையினை தொடர்ந்தும் செய்வார்“ எனக் குறிப்பிட்டார்.
இதன்போது குறுக்கிட்ட எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, “பிரதமரை நீங்கள் அலுவலக உதவியாளராக மாற்றுவதற்கு முயற்சிக்கின்றீர்கள். நீங்கள் உங்கள் பிரதமரை நினைவில் கொண்டு அப்படி செய்ய முயற்சிக்க வேண்டாம்“ எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து தொடர்ந்தும், நீதியமைச்சர் உரையாற்றுவதற்கு இடமளிக்காமல் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, குழப்பத்தினை ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டிருந்தார்.
இதற்கு எதிர்ப்பினை வெளியிட்ட ஆளும் கட்சியின் உறுப்பினர்கள், “இந்த பைத்தியக்காரனை அமரச்சொல்லுங்கள். நீதியமைச்சர் உரையாற்றுவதற்கு இடமளிக்கச் சொல்லுங்கள்“ என சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.