10

10

விடுதலைப் புலிகள் மறைத்து வைத்ததாகக் கூறப்படும் புதையலைத்தேடி களுவாஞ்சிகுடி காவல்துறையினர் அகழ்வுப்பணி !

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி தேற்றாத்தீவு பகுதியில் விடுதலைப் புலிகள் மறைத்து வைத்ததாகக் கூறப்படும் தங்கத்தினைத் தேடும் பணிகள் இன்று (10-10-2020) காலை முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம்(08.10.2020) இரவு தேற்றாத்தீவு மயான வீதியில் கடற்கரையினை அண்டியுள்ள சவுக்கு மர காட்டிற்குள் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய ஒருவரைக் கைதுசெய்து மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த பகுதியில் தங்கம் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக களுவாஞ்சிகுடி காவல்துறையினர் தெரிவித்தனர்.

யுத்தம் நடைபெற்ற காலத்தில் விடுதலைப் புலிகளினால் குறித்த பகுதியில் தங்கம் உட்பட பல பொருட்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். இதனடிப்படையில், களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்றின் அனுமதி பெறப்பட்டு மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபை, களுவாஞ்சிகுடி பிரதேச செயலகம், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் முன்னிலையில் புதையல் தேடும் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் குமாரசிறியின் மேற்பார்வையில் களுவாஞ்சிகுடி காவல் நிலைய பொறுப்பதிகாரி உப்புல் குணவர்தனவின் தலைமையில் இந்த தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த நடவடிக்கையை கண்காணிப்பதற்காக, மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபை தவிசாளர் ஞா.யோகநாதன், களுவாஞ்சிகுடி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் சத்தியகௌரி தரணிதரன் உட்பட பலர் வருகைதந்தனர். இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்ட தங்கம் தேடும் பணிகளின்போது எவையும் மீட்கப்படாத நிலையில் தோண்டும் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

பிர்த்தானியாவில் மீண்டும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் – பல்கலைக்கழக மாணவர்கள் பலர் பாதிப்பு !

வடகிழக்கு இங்கிலாந்தில் கொரோனாவைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பல்கலைக்கழக மாணவர்கள் கொரோனாவைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து இங்கிலாந்து ஊடகங்கள் தரப்பில், “பல்கலைக்கழகங்களில் கொரோனாவைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. நியூகேஸ்டல் பல்கலைக்கழகத்தில் 1,003 பேருக்குக் கொரோனாவைரஸ்  தொற்று ஏற்பட்டுள்ளது. நார்தும்பிரியா பல்கலைக்கழகத்திலும் கொரோனாவைரஸ் தொற்று பரவல் அதிகமாக உள்ளது. டர்ஹம் பல்கலைக்கழகத்திலும் கொரோனாவைரஸ் பரவல் உள்ளது.

 
இதன் காரணமாக மாணவர்களுக்கு ஒன்லைன் பாடங்கள் நடத்த பல்கலைக்கழகங்கள் திட்டமிட்டுள்ளன  என்று செய்தி வெளியாகியுள்ளது. கொரோனாவைரஸ் பரவலைத் தடுக்கும் முயற்சியில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தோல்வி அடைந்துவிட்டார் என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்து வருகிறது. இந்த நிலையில் பிரிட்டனில் செப்டம்பர் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும், பொதுவெளியில் 6 பேருக்கு மேல் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் கொரோனாவைரஸ் பரவல் அக்டோபர் மாதத்தில் தீவிரமாக இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஜோ பிடனுடனான காணொளி மூலமான விவாதத்தில் கலந்து கொள்ள ட்ரம்ப் மறுப்பு !

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும், டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பிடன் இடையே இரண்டாவது நேருக்குநேர் விவாதம் அக்டோபர் 15 ஆம் தேதி மியாமியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த விவாத நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருப்பதாக ஜனாதிபதி விவாதங்களுக்கான ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இரு கட்சிகளும், இதுதொடர்பாக மாற்றுத் தேதி தொடர்பான பரிந்துரையை தெரிவித்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.  கொரோனா பரவுவதைத் தடுப்பதற்காக நேரடி விவாதத்தை காணொளி வாயிலாக நடத்த விவாதங்களுக்கான ஆணையம் முடிவு செய்தது. காணொளி மூலம் விவாதத்தில் பங்கேற்க டிரம்ப் மறுத்துவிட்டதை அடுத்து விவாதம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு இடையிலான கடைசி நேருக்கு நேர் விவாதம் வரும் 22ம் தேதி டென்னிசி மாநிலம் நாஷ்வில்லேயில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஜனாதிபதி விவாதங்களுக்கான ஆணையம் செய்து வருகிறது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வருகின்ற நிலையில் யார் தேர்தலில் வெற்றிபெற போகின்றார்..?  என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்த வண்ணமே உள்ளது. குறிப்பாக கடந்த 1976 ஆம் ஆண்டு முதல் ஜனாதிபதி  தேர்தலுக்கு முன்பு பிரதான கட்சிகளின் ஜனாதிபதி  வேட்பாளர்கள் பங்குபெறும் விவாதம் நடைபெற்று வருகிறது. அண்மையில் இதன் ஒரு கட்டமாக டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பிடன் இடையே இடம்பெற்ற விவாதத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் காரசாரமாக சாடியதுடன் விவாதநிறைவின் போது ஜோபிடன் ஜனாதிபதி ட்ரம்பை முட்டாள்த்தனமாக நடந்துடிகொள்பவர் எனக் குறிப்பிட்டிருந்தமையும் நினைவில் கொள்ளத்தக்கது.

யாழ்ப்பாண பல்கலைகழக விரிவுரையாளர்கள் – மாணவர்களிடையேயான விரிசலின் எதிரொலி – 3ம்வருட கலைப்பீட மாணவர்கள் 21 பேருக்கு பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழையத்தடை..!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 8 ஆம் திகதி வியாழக்கிழமை ஏற்பட்ட அமைதியின்மை, மோதல் சம்பவங்களை அடுத்து, அந்தச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்று கலைப்பீடச்சபையினால் அடையாளப்படுத்தப்பட்ட மூன்றாம் வருட மாணவர்கள் 21 பேருக்கு பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் ஈடுபட்டு, பல்கலைக்கழகத்துக்கும், துணைவேந்தருக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட மாணவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், சம்பந்தப்பட்டவர்கள் பல்கலைக் கழகத்தினுள் நுழைய அனுமதிக்கப்படக் கூடாது என்றும் நேற்று நண்பகல் கலைப்பீடச்சபை ஏக மனதாகத் தீர்மானம் நிறைவேற்றியிருந்ததுடன், மாணவர்களுக்கெதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படும் வரை கலைப்பீட விரிவுரையாளர்கள் வகுப்புகளைப் புறக்கணிப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என கலைப்பீடச்சபையினால் அடையாளப்படுத்தப்பட்ட மூன்றாம் வருட மாணவர்கள் 21 பேருக்கு பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டது. மாணவர்களுக்கான தடையுத்தரவுக் கடிதம் நேற்றிரவு துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜாவினால் வழங்கப்பட்டது.

சம்பவத்துடன் தொடர்புடைய – காணொளி ஆதாரங்கள் மூலம் அடையாளப்படுத்தப்பட்ட மேலும் 12 மாணவர்களுக்கு இன்று தடையுத்தரவு பிறப்பிக்கப்படலாம் என்று பல்கலைக்கழக வட்டாரங்களில் இருந்து அறியவருகிறது.

“பண பரிவர்த்தனையின் போது கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம்“ – அவதானமாக கையாளுமாறு எச்சரிக்கின்றார் பிரதி பொலிஸ்மா

நாணயத்தாள்களை அவதானமாக பயன்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், ஏடிம்களையும் பயன்படுத்வோர் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவது மிகவும் அவசியமானது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், நாட்டிலுள்ள ஒவ்வொரு பிரஜைகளும் சுய பாதுகாப்பினை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பண பரிவர்த்தனையின் போது கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் காணப்படுவதாக முன்னர் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தான் ரோயல்ஸை பந்தாடி புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது டெல்லி கேபிடல்ஸ் !

நேற்று இரவு ஷார்ஜாவில் நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியின் 22வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும்  டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதின. நாணயச்சுழற்சியில்  வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க விரர்கள் ஷிகர் தவான் 5 ஓட்டங்களிலும், பிரித்வி ஷா 19 ஓட்டங்களிலும் ,ஆட்டமிழந்தனர். அணித்தலைவர்  ஷ்ரேயாஸ் 22 ஓட்டங்களிலும் , ரிஷப் பண்ட் 5 ஓட்டங்களிலும் ரன்அவுட் முறையில் வெளியேறினர். பொறுப்புடன் ஆடிய ஸ்டொய்னிஸ்  39 ஓட்டங்களும், ஹெட்மையர் 45 ஓட்டங்களும் எடுத்தனர். இறுதியில் டெல்லி அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 184 ஓட்டங்கள் எடுத்தது.

தொடர்ந்து 185 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 34ஓட்டங்களிலும், பட்லர் 13ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். தலைவர் ஸ்மித் 24 ஓட்டங்களிலும் ராகுல் திவாட்டியா 29 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களிலும்ஆட்டமிழந்ததால், ராஜஸ்தான் அணி 19 புள்ளி 4 ஓவரில் 138 ஓட்டங்களுக்கு தன்னுடைய முழுமையான இலக்குகளையும் இழந்தது. இந்த ஆட்டத்தில் டெல்லி அணி 46 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  .

டெல்லி அணியில் 4 ஓவர்கள் வீசி 22 ஓட்டங்கள் மட்டும் விட்டு கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்திய ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இப்போட்டியில் டெல்லிஅணி வெற்றி பெற்றதன் மூலம்  புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்தது.

பயங்கரவாதத்திற்கு துணையாக செயற்பட்ட ரிஷாட் பதியூதீனின் சகோதரரான ரியாஜ் பதியூதீனை மீண்டும் கைது செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஆளும் கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் !

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் சகோதரரான ரியாஜ் பதியூதீன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விடுதலை செய்யப்பட்டமைக்கு எதிராக ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் 100 பேரினால் கையெழுத்திடப்பட்ட கடிதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் நேற்று (09.10.2020) அலரி மாளிகையில் வைத்து கையளிக்கப்பட்டது.

2019 ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதிகளுக்கு உதவியாக செயற்பட்ட சந்தேகத்தின் பேரில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் சகோதரரான ரியாஜ் பதியூதீன் கடந்த ஏப்ரல் 14ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார்.

ரிஷாட் பதியூதீனின் சகோதரர் விடுதலை செய்யப்பட்டமை - முழுமையான விசாரணை  மேற்கொண்டு மீண்டும் கைது செய்து சட்டத்தை நடைமுறைப்படுத்த ஆளும் ...அவரது கைது தொடர்பில் வலுவான சாட்சிகள் காணப்பட்ட போதிலும் செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படாது, எவ்வித சட்ட அனுமதியுமின்றி ரியாஜ் பதியூதீன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட இந்த தன்னிச்சையான செயற்பாடு தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு பயங்கரவாதத்திற்கு துணையாக செயற்பட்ட ரியாஜ் பதியூதீனை மீண்டும் கைது செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஆளும் கட்சியின் 100இற்கும் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட குழுவினர் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

“ஐ.நா. மனித உரிமைகள் சபை உள்ளிட்ட சர்வதேச அரங்கில் இலங்கை எதிர்நோக்கக்கூடிய நெருக்கடி நிலைமைகளின்போது சீனா இலங்கைக்குத் தொடர்ந்தும் கைகொடுத்து உதவும்” – இலங்கை அரசுக்கு சீன தூதுக்குழுவினர் நம்பிக்கை !

ஐ.நா. மனித உரிமைகள் சபை உள்ளிட்ட சர்வதேச அரங்கில் இலங்கை எதிர்நோக்கக்கூடிய நெருக்கடி நிலைமைகளின்போது சீனா இலங்கைக்குத் தொடர்ந்தும் கைகொடுத்து உதவும் என்று கொழும்பு வந்துள்ள சீன தூதுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள சீன கம்யூனிசக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் யாங் ஜியேச்சி தலைமையிலான சீனத் தூதுக்குழுவினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தினர்.

இரு நாட்டு நட்புறவு, இலங்கையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தின் அடுத்தகட்ட நகர்வுகள், தேசிய அரசியல் விவகாரங்கள் மற்றும் சர்வதேச அரங்கில் இலங்கை சந்திக்கும் நெருக்கடி நிலைமைகள் குறித்து இந்தப் பேச்சுக்களின்போது முக்கிய கவனம் செலுத்தப்பட்டிருந்தது.

இலங்கை சர்வதேச மட்டத்தில் எதிர்கொண்டு வருகின்ற நெருக்கடிகள் தொடர்பில் சீனாவின் நிலைப்பாட்டை தூதுக்குழுவினர் இதன்போது முன்வைத்துள்ளனர்.

குறிப்பாக, ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை எதிர்கொள்ளக்கூடிய நெருக்கடி நிலைமையின்போது இலங்கைக்கு உறுதுணையாக சீனா இருக்கும் என்று தூதுக்குழுவினர் உறுதியளித்துள்ளனர்.

சர்வதேச அரங்கில் இலங்கையின் இறையாண்மையையும் சுயாதீனத்தையும் பாதுகாக்க சீனா எப்போதுமே முன்னிற்கும் என்றும் அவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌சவிடம் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, யாங் ஜியேச்சி தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் பிரதமர் மஹிந்த ராஜபக்சவையும் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிரான போராட்டத்திலும் பொருளாதார நடவடிக்கைகளிலும் சீனாவுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக இந்தச் சந்திப்பின்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மேலும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விரைவில் சீனாவுக்கான விஜயத்தை முன்னெடுக்க வேண்டும் என்றும் சீனத் தூதுக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

உலகளாவிய கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் சீனாவின் உயர்மட்ட இராஜதந்திரக் குழுவினர் தெற்காசிய பிராந்தியத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் முதலாவது சந்தர்ப்பம் இது என்பது குறிப்பிடத்தக்கது.