06
06
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய புதல்வர் பாலச்சந்திரன், புலிகள் அமைப்பு சிறுவர் படைப் பிரிவின் கட்டளை அதிகாரி என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பிரபாகரனின் இளைய புதல்வர் பாலச்சந்திரன் இராணுவத்தினரால் கொலை செய்யப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தமைக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது உரையாற்றிய சரத் பொன்சேகா,
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் முழு குடும்பமும் பயங்கரவாதிகள். பிரபாகரனின் இளைய புதல்வர் பாலச்சந்திரன், புலிகள் அமைப்பு சிறுவர் படைப் பிரிவின்கட்டளை அதிகாரி எனவும் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். பாலச்சந்திரன் இராணுவத்திடம் கிடைத்திருந்தால், காற்சட்டை மற்றும் சட்டையை அணிவித்து ஒழுங்கப்படுத்தப்பட்டிருப்பார் எனவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பின்தங்கிய கிராம அபிவிருத்தி மற்றும் தேசிய கால்நடை பராமரிப்பு மற்றும் சிறு வர்த்தக பயிர்செய்கை அவிருத்தி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சராக சதாசிவம் வியாழேந்திரன் ஜனாதிபதி முன்னிலையில் பதிவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
இன்று (06.10.2020) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள தபால் மற்றும் ஊடக இராஜாங்க அமைச்சர் பதவிக்கு மேலதிகமாக குறித்த பதவியும் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
திவுலபிட்டிய பகுதியில் உள்ள மினுவங்கொட ஆடை தொழிற்சாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் தொடர்புபட்ட மேலும் 139 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை தற்போது வரை கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் சேர்த்து அவருடன் சம்மந்தப்பட்ட 707 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .
மேலும், கம்பஹா பொலிஸ் எல்லை பகுதிக்குள் மீள் அறிவிக்கும் வரையில் இன்று மாலை 6.00 மணி தொடக்கம் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டு பொலிஸ் தலைமையகம் இதனை தெரிவித்துள்ளது. குறித்த அறிக்கையில், திவுலப்பிட்டிய, மினுவாங்கொட , வேயாங்கொட ஆகிய பொலிஸ் அதிகாரத்திற்குட்பட்ட பிரிவுகளில் தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த தொழிற்சாலைகளின் நிர்வாகத்திடம் தமது ஊழியர்களை அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பும் செயற்பாட்டை தவிர்க்குமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
அதேபோல், மினுவங்கொடை ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இலங்கையின் எந்த பிரதேசத்தில் வசித்தாலும் வீடுகளை விட்டு வெளியேறாமல் அவர்களது வீடுகளில் சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறு இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தற்போது கொரோனா தொற்றுக்குள்ளான நபர்களின் குடும்ப உறுப்பினர்களை இராணுவத்தினரால் தனிமைப்படுத்தும் மத்திய நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, குறித்த நபர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் முகாமுக்கு செல்ல தயாராக வேண்டும் என தொற்றுக்குள்ளான நபர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .
‘ஆஸி ஆர்க்’ அமைப்பின் கடின முயற்சியால் மீண்டும் உயிர்பெற்ற 3000 ஆண்டு பழமையான ‘டாஸ்மேனியன் டெவில்’ !
அவுஸ்திரேலியாவில் அழிவின் விளிம்பில் இருந்த என்ற ‘டாஸ்மேனியன் டெவில்’ விலங்கு, இனப்பெருக்கம் செய்யப்பட்டு மீண்டும் தேசிய பூங்காவுக்குள் அவிழ்த்து விடப்பட்டுள்ளது. இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு என்று பலரும் பாராட்டி உள்ளனர்.
அவுஸ்திரேலியாவின் தேசிய விலங்கு கங்காரு. பாலூட்டி இனங்களில் வயிற்றில் பை உள்ள இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு இது. அதேபோன்ற ஒரு விலங்குதான் ‘டாஸ்மேனியன் டெவில்’. அவுஸ்திரேலியாவின் டாஸ்மேனியா பகுதியில் மட்டும் காணப்பட்டதால், இதற்கு டாஸ்மேனியன் டெவில் என்று பெயரிட்டுள்ளனர்.
கரியநிறமும், கூரிய பற்களும், இறந்த உடல்களை தின்னும் வழக்கமும் உள்ளது. பயம் ஏற்படும் அளவுக்கு டாஸ்மேனியன் டெவில் அலறும். அதனால் இதற்கு ‘டெவில்’ என்று பெயர் வைத்துள்ளனர். ஆனால், வளைகளில் வாழும் இந்த விலங்கு, இறந்த உடல்களை திண்பதன் மூலம், சுற்றுச்சூழலை மிகவும் பாதுகாத்து வந்தது.
இந்த விலங்கு அவுஸ்திரேலியாவில் 3,000 ஆண்டுகளுக்கு முன்பு அதிக எண்ணிக்கயைில் இருந்துள்ளது. ஆனால், படிப்படியாக இதன் எண்ணிக்கை குறைந்து, ஒன்றரை லட்சம் அளவுக்கு வந்துவிட்டது. மேலும், 1990-ம் ஆண்டுகளில் அரிய வகை முகப் புற்றுநோய் இந்த விலங்குகளை தாக்கியதில், அழிவின் விளிம்பு நிலைக்கு சென்றன. இந்த விலங்கின் முகத்தில் பெரிய கட்டிகள் வந்து இறந்துள்ளன.
இந்நிலையில், டாஸ்மேனியன் டெவில் விலங்கை பாதுகாக்கவும், அதிகரிக்கவும், ‘ஆஸி ஆர்க்’ என்ற அமைப்பு திட்டத்தை கையில் எடுத்தது. அதன்படி, இந்த அமைப்பு மற்ற வனவிலங்கு பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைந்து டாஸ்மேனியன் டெவில் விலங்குகளை இனப்பெருக்கம் செய்து வந்தது. அதன் ஒரு கட்டமாக 26 டாஸ்மேனியன் டெவில் விலங்குகள் ஆஸ்திரேலிய தேசிய பூங்காவில் அவிழ்த்துவிடப்பட்டன. ஆஸ்திரேலியாவின் பேரிங்டன் டாப் பகுதியில் 400 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட சரணாலயத்தில் இந்த விலங்குகள் விடப்பட்டுள்ளன.
இதுகுறித்து ஆஸி ஆர்க் அமைப்பின் தலைவர் டிம் பால்க்னர் கூறும்போது, ‘‘இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு’’ என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.
அரசு சுற்றுச்சூழல் அதிகாரிகள் கூறும்போது, ‘‘டாஸ்மேனியன் டெவில் விலங்கின் எடை 8 கிலோ வரை இருக்கும். இது மனிதர்களுக்கு ஆபத்தானது அல்ல. தற்போது 25 ஆயிரம் டெவில் விலங்குகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
உலக சனத்தொகையில் பத்து பேரில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
அவசர நிலை சேவை திட்டத்தின் நிர்வாக பணிப்பாளர் விசேட மருத்துவ நிபுணர் மைக் ரயன் இதனைத் தெரிவித்தார்.
மேலும், உலகளவில் தற்போது வரையில் ஏராளமான மக்கள் குறித்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 கோடியே 56 இலட்சத்து 95 ஆயிரமாக பதிவாகியுள்ளது. மேலும் 10 இலட்சத்து 45 ஆயிரம் பேர் குறித்த வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும், உலகளவில் தற்போது 8 மில்லியன் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக விசேட மருத்துவ நிபுணர் மைக் ரயன் குறிப்பிட்டுள்ளார்.
இது உலக சனத்தொகையில் 10 இல் 1 என்ற அளவிற்கு அண்மித்த தொகையென்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் மேலும் 220 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த 220 பேரும் கம்பஹா – மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றியவர்கள் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி, மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 321ஆக அதிகரித்துள்ளது.
இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 733 ஆக அதிகரித்துள்ளது.
யாழ்.குடாநாட்டில் நேற்று மாலையிலிருந்து சுகாதார நடைமுறைகள் பொலிஸார் மற்றும் பாதுகாப்பு பிரிவின் உதவியுடன் மிக இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்படும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் அநாவசியமாக வீதிகளில் நடமாடாது பாதுகாப்பாக தங்கள் வீடுகளில் இருக்குமாறும் ஆ.கேதீஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் நேற்று (05) வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஆ.கேதீஸ்வரன் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்புகளை பேணியவர்களை அடையாளம் கண்டு, நோய்ப் பரவுவதை தடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரிய தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும் கொரோனா தொற்று நோயாளர்களை அடையாளம் காணும் பி.சி.ஆர். பரிசோதனையின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் ஜனாதிபதி செயலணியுடன் இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் வைத்தே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். அத்தோடு தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றுக்கு உறுதியானோருடன் பழகியவர்களை அவர்களுக்கு அண்மையில் உள்ள ஹோட்டல்களில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணித்துள்ளார்.
மேலும் கொரோனா தொற்று தொடர்பாக ஊடகங்களினால் மக்களை தெளிவூட்டுவதற்காக முன்னெடுக்கப்பட்டு வந்த பரப்புரை நடவடிக்கைகள் குறைவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி இதனாலேயே தொற்று உள்ளதை பொதுமக்கள் மறந்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். ஆகவே மக்களை தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளை ஊடகங்கள் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டுமென ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.