12

12

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி யார்..? வெளியானது ஊடகங்களின் கருத்துக்கணிப்பு !

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில், முக்கிய ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் வெளியிடும் மக்கள் மன நிலை மற்றும் கருத்துக்கணிப்புகளில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் முன்னிலை பெற்று வருகிறார் என அங்கிருந்து கிடைக்கக்கூடிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னணி கருத்துக்கணிப்புகளில் அனைத்திலும் ஜனாதிபதி டிரம்பை விடவும் சுமார் 9.8 சதவீத முன்னிலையில் ஜோ பிடன் உள்ளார். மேலும், ஜனாதிபதி டிரம்புடன் நேரிடையாக ஜோ பிடன் முன்னெடுத்த முதல் விவாதமானது ஜனநாயக கட்சிக்கே சாதகமான சூழலை ஏற்படுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், ஜனாதிபதி டிரம்ப் கொரோனா பாதிப்புக்கு இலக்காகி மூன்று நாட்கள் சிகிச்சைக்கு பின்னர், தாம் முற்றாக குணமடைந்துவிட்டதாக டிரம்ப் அறிவித்திருந்தாலும், ஜோ பிடனுடனான இரண்டாவது நேரடி விவாதத்தை டிரம்ப் தரப்பு ரத்து செய்தது.
மட்டுமின்றி, கொரோனாவில் இருந்து தாம் முற்றாக குணமடைந்துவிட்டதாக டிரம்ப் கூறிவருகிறார். அவரது  மருத்துவர்கள் அவரிடம் இருந்து நோய் பரவாது என தெரிவித்து உள்ளனர். கடந்த வாரம் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை தொடர்பு கொண்டு நலம் விசாரித்திருந்தாலும் கூட பிரித்தானிய அரசினுடைய ஆதரவு  ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் சார்ந்து இருப்பதாக தகவல் பரவலாக வெளியாகி வருகின்றமையும் இங்கு நினைவில் கொள்ளத்தக்கது.

பாலியல் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை – பங்களாதேஷ் அரசு அதிரடி அறிவிப்பு !

பங்களாதேஷில் கற்பழிப்பு குற்றம் புரிந்தவர்களுக்கு மரண தண்டனை வழங்குவது என்ற முடிவை பங்களாதேஷ் அமைச்சரவை இன்று(12.10.2020)  ஆமோதித்ததுள்ளது.

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய சட்ட அமைச்சர் அனிசுல் ஹக் செய்தியாளர்களிடம் கூறினார்.

கற்பழிப்பு தொடர்பான குற்றச்செயல்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு என தனி சட்டம் இயற்றப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். கற்பழிப்புக்கு மரண தண்டனை வழங்கவும் விசாரணை தொடர்பான நடவடிக்கைகளை விளக்கவும் பங்களாதேஷ் அதிபர் அப்துல் ஹமீத் பங்களாதேச அமைச்சரவை கோரிக்கையின் பேரில் அவசர சட்டம் ஒன்றை வெளியிடுவார் என்று அனிசுல் ஹக் கூறினார்.

கற்பழிப்பு தொடர்பான புகார்கள் குறித்து விசாரணை நடத்தி விரைவில் மரண தண்டனை வழங்குவதற்கு என்னென்ன சட்டங்களை திருத்த வேண்டும் என்பது குறித்த வரைவு மசோதா ஒன்றும் அமைச்சரவையின் பரிசீலனைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றும் ஹக் கூறினார்.

பங்களாதேஷில் அடுத்தடுத்து நடந்த கற்பழிப்பு குற்றங்கள் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளன அதனால் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க முடிவு செய்யப்பட்டது என ஹக் கூறினார்.

”ஐக்கியதேசியக்கட்சி அரசுக்கு ஆதரவு வழங்கிய கூட்டமைப்பு கடந்த காலகட்டங்களில் பல அபிவிருத்திகளை கிழக்கில் மேற்கொண்டுள்ளது” – சீ.யோகேஸ்வரன்

”ஐக்கியதேசியக்கட்சி அரசுக்கு ஆதரவு வழங்கிய கூட்டமைப்பு கடந்த காலகட்டங்களில் பல அபிவிருத்திகளை கிழக்கில் மேற்கொண்டுள்ளது” என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நேற்று (11.10.2020) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

கடந்த காலத்தில் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியில் இருந்த போது அக்கட்சிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு சில ஆதரவுகளை வழங்கியிருந்தது. அந்தவகையில் அதன் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தோம். கிட்டத்தட்ட 8000க்கும் அதிகமான வீடுகள் கட்டி வழங்கப்பட்டுள்ளது. பல வீடுகள் கட்டப்பட்ட நிலையில் உள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பினால் முன்மொழியப்பட்டு கொண்டுவரப்பட்ட திட்டத்தின் கீழ் இன்று பல வீதிகள் புனரமைக்கப்பட்டு வருகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் 123 வீதிகள் புனரமைக்கப்படுகின்றன.

அதேபோன்று, பாடசாலை கட்டடங்கள், கிணறுகள், பொதுக்கட்டடங்கள் என பல அபிவிருத்திகளையும் இந்த மக்களுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. கம்பரலிய திட்டத்தின் ஊடாகவும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் ஊடாகவும் இதர அமைச்சுகள் ஊடாகவும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

ஆனால், ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் முட்டுக்கொடுத்தவர்கள் எதுவும் செய்யவில்லையென்று இன்று சிலர் கூறுகின்றார்கள். பல கோடிக்கணக்கில் நாங்கள் மக்களுக்கான திட்டங்களை முன்னெடுத்திருக்கின்றோம். பல வேலைத்திட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. ஐக்கிய தேசிய கட்சி எங்களை ஏமாற்றியதும் உண்டு. அதனை நாங்கள் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். வாழைச்சேனை காகிதசாலை நாங்கள் எடுத்த முயற்சியின் காரணமாகவே இன்று இயங்குகின்றது. கடந்த காலத்தில் நாங்கள் பல நடவடிக்கைகளை எடுத்திருந்தோம். ஆட்சிமாற்றம் காரணமாக அவற்றினை எங்களால் தொடர முடியாமல்போனது.

கடந்த காலத்தில் மேய்ச்சல் தரை தொடர்பில் பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்தோம். அன்றைய ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன மற்றும் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை ஆகியவற்றுடன் பேசி அத்துமீறி குடியேறிய அனைத்து சிங்கள மக்களையும் அங்கிருந்து வெளியேற்றினோம். அண்மையில் குடியேற்றங்களை பார்வையிட சென்ற மகாவலி அதிகாரசபையின் அதிகாரிகள், கிராம சேவையாளர்கள் சென்றபோது பிள்ளையான் என்னும் சந்திரகாந்தன் அவர்களை குடியேறுவதற்கு அனுமதித்ததாக கூறினார்கள். சந்திரகாந்தன் அன்று சிங்கள மக்கள் குடியேறுவதற்கு அனுமதித்திருக்கின்றார்.

இவர்கள் இங்கு தமிழ் மக்கள் மத்தியில் ஒரு முகத்தை காட்டுவதுடன் இரகசியமான வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றார்கள். இதேபோன்றுதான் ஹிஸ்புல்லாவின் புனானை பல்கலைக்கழகமும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முழுமையான ஆதரவுடன்தான் நிர்மாணிக்கப்பட்டது. இவ்வாறு முஸ்லிம் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் மறைமுக ஆதரவினை வழங்கிவிட்டு, எவ்வாறு கிழக்கின் தனித்துவம் பாதுகாக்க முடியும் என அவர் கேள்வி எழுப்பினார்.

சமூகவிரோத சக்திகள் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்!! இதுவொரு மிக மோசமான சமூகசூழலை வெளிப்படுத்துகின்றது!!!

இன்றையதினம் முல்லைத்தீவில் நடைபெறும் மரக்கடத்தல்இ மண்கடத்தல் தொடர்பில் செய்திகளை வெளிக் கொண்டுவரும் முல்லைத்தீவு ஊடகவியலாளர்களான குமணன் மற்றும் தவசீலன் ஆகியோர் மீது மரக்கடத்தல்காரர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்களை தாக்கிய கடத்தல்காரர்கள் அவர்களை மிரட்டி “தாங்கள் திருடுவதற்கு தான் இங்கு வந்தோம்” என்று ஊடகவியலாளர்களை பேசவைத்து அதனை தமது கைத்தொலைபேசியில் காணொளியாக்கி இருக்கிறார்கள்.

ஊடகவியலாளர்கள் எடுத்த புகைப்படங்களையும் மரகடத்தல்காரர்கள் ஊடகவியலாளர்களிடமிருந்து அழித்துள்ளார்கள். ஏற்கனவே பல தடவை இவ்வாறான அச்சுறுத்தல்களை குறித்த இரு ஊடகவியலாளர்களுக்கும் மரகடத்தல்காரர்களால் விடுக்கப்பட்ட நிலையில் பொலிசாரும்இ அங்குள்ள அரசியல்வாதிகளும் இது தொடர்பாக விரைந்து கவனம் செலுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் காடழிப்பு, மண்கடத்தல் போன்ற செயற்பாடுகள் அதிகரித்து வருகின்ற நிலையில் அதுதொடர்பாக கவனமெடுக்க வேண்டிய உரிய தரப்பினர் பெரிய அளவிற்கு அக்கறை காட்டாத சூழலே நீடிக்கின்றது.

இது சமூகத்தை சீரழிப்பதன் மிக மோசமான செயற்பாடாகக் கருதப்பட வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என லண்டனைத் தளமாகக் கொண்டு இயங்கம் தேசம்நெற் தெரிவித்துள்ளது. இதுவரை அரச இயந்திரத்தின் செயற்பாடுகளே ஊடகங்களின் சுயாதீனமான செயற்பாடுகளுக்கு தடையாக இருந்துவந்தது. ஆனால் இன்று சமூகவிரோத சக்திகளே ஊடகவியலாளர்களைத் தாக்கி அவர்களை குற்றவாளிகளாகக் காட்சிப்படுத்தும் மோசமான நிலையேற்பட்டு உள்ளது.

இவ்வாறான சமூகவிரோத சக்திகளின் செயற்பாடுகளை மௌனமாகக் கடந்து செல்வது மிக மோசமான விளைவுகளை பின்நாட்களில் ஏற்படுத்தும். ஆகவே பாதிக்கப்பட்ட இந்த ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் சம்பந்தப்பட்ட சமூகவிரோத சக்திகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதும் ஊடகங்களின் சுயாதீனமான செயற்பாட்டுக்கு மிகவும் அடிப்படையானது.

“விரைவில் நயவஞ்சக வலை விலக்கப்பட்டு, எம் மக்களுக்கு பணி செய்யக் கூடிய சூழ்நிலை உருவாகும்’ – பிள்ளையான் நம்பிக்கை !

முன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் யோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் கிழக்கு மாகாண சபை முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) கைது செய்யப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு தனது முகநூல் கணக்கில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.

அதில்  குறிப்பிட்டுள்ளதாவது,

“11.10.2020 ஆம் திகதி என்னுடைய சிறை வாசத்திற்கு 5 வயது. நல்லாட்சி தந்த பரிசு. நாங்கள் தான் தமிழ் மக்களது ஏக பிரதிநிதிகள் என்று கூறுபவர்களின் தூண்டுதலுக்கு கிடைத்த வெற்றிக்கேடயம். அத்தோடு எல்லாவற்றையும் தலைமையேற்று நடாத்தி விட்டு ´எடுப்பார் கைப்பிள்ளையாக´ ஆட்சி செய்து என்னுடைய அம்மாவின் கோரிக்கை கடிதத்தை உதாசீனம் செய்தார் முன்னாள் ஜனாதிபதி, தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருக்கு கிடைத்த நற்சான்றிதழ்.

நான் மாகாண சபை உறுப்பினராக இருந்த வேளையில், சிறைக்கு நயவஞ்சகமாக அனுப்பப்பட்டேன். இருந்தாலும், என் மேல் நம்பிக்கை வைத்து, அனைத்து போலிப் பிரசாரங்களையும் முறியடித்து, வட கிழக்கில் போட்டியிட்டு வெற்றியீட்டிய தமிழ்ப் பிரதிநிதிகளில் அதிகூடிய 54,198 விருப்பு வாக்குகளை அளித்து பாராளுமன்ற உறுப்பினர் என்ற கௌரவத்தை வழங்கினர்.

அன்பான மட்டக்களப்பு மாவட்ட மக்கள் அனைவரும் எதிர்பார்த்த கனவுகளை நனவாக்க வேண்டிய பொறுப்பைச் சுமந்தவனாக, விரைவில் நயவஞ்சக வலை விலக்கப்பட்டு, எம் மக்களுக்கு பணி செய்யக் கூடிய சூழ்நிலை உருவாகும் என்ற நம்பிக்கையுடன் எனது அரசியல் பயணம் தொடர்கிறது என அதில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். மாதகல் கடல் பகுதியில் 116 கிலோ கேரள கஞ்சா கடற்படையினரால் மீட்பு !

யாழ். மாதகல் கடல் பகுதியில் மர்மமான முறையில் மிதந்து வந்த 116 கிலோ கேரள கஞ்சா கடற்படையினரால் இன்று (12.10.2020) அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம், காங்கேசன்துறை கடற்படையினர் இன்று அதிகாலை கடலில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது மாதகல் கடல் பகுதியில் மர்ம பொதிகள் மிதந்து வருவதை அவதானித்துள்ளனர்.

அவ்வாறு மிதந்து வந்த மர்ம பொருட்களை கடற்படையினர் சோதனையிட்ட போது அதில் இருந்து கேரளா கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கேரள கஞ்சாவினை கடற் படையினர் மீட்டு காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்ட பொதிகள் 116 கிலோ எடையுடைய கேரள கஞ்சா என்று காங்கேசன் துறை பொலிஸார் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அண்மைக்காலங்களாக கேரளாவில் இருந்து கடத்தப்படுகின்ற கஞ்சாவினுடைய அளவு அதிகரித்துள்ள நிலை ஒருபுறமாக இருக்க இவை எங்களுடைய சமூகத்தை எந்தளவு தூரம் படுகுழியில் தள்ளிவிடப்போகின்றன என்பது தொடர்பிலும் நாம் சிந்திக்கவேண்டியவர்களாகவுள்ளோம்.

சீனத்தூதுக்குழுவை அடுத்து அமெரிக்க இராஜாங்க செயலாளர் தலைமையிலான குழு இலங்கை வருகின்றது !

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இலங்கைக்கு  எதிர்வரும் 28ஆம் திகதி  இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்போது அவர், ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து பேசவுள்ளதாக கூறப்படுகின்றது.

சீனாவின் உயர்மட்ட குழுவினர் அண்மையில் இலங்கை வருகை தந்திருந்ததுடன் இலங்கையினுடைய பொருளாதார மேம்பாட்டுக்காக கணிசமான தொகையினை வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்  , அமெரிக்காவும் பலம்பொருந்திய பிரதிநிதியொருவரை இலங்கைக்கு அனுப்புகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

உலக அரசியல் அரங்கினை பொறுத்தவரையில் அமெரிக்கா – சீனா இடையேயான பகை பெரிய பேசுபொருளாக மாறிவருகின்ற நிலையில் இலங்கை மீதமான இந்த இரு நாடுகளின் கவனமும் அரசியல் அவதானிகளால் மிக கூர்ந்து கவனிக்கப்படுகின்றது.

சட்டவிரோத  துப்பாக்கி தயாரிப்பில் ஈடுபட்ட முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் உட்பட மூவர் கைது !

திருக்கோவில் பிரதேசத்தில் சட்டவிரோத  துப்பாக்கி தயாரிப்பில் ஈடுபட்ட முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் உட்பட மூவரை கைது செய்த தேசிய புலனாய்வு பிரிவினர், 10 துப்பாக்கிகளை அவர்களிடம் இருந்து மீட்டு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

தேசிய புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, நேற்று  திருக்கோவில் பிதான வீதியிலுள்ள அம்மன்கோயிலுக்கு முன்னால் இயங்கிவரும், லேத் மெசின் கடையினை முற்றுகையிட்டனர். அங்கு திரட் வகை உள்ளூர் துப்பாக்கி தயாரிப்பில் ஈடுபட்டு வந்த 60 வயதுடைய தம்பிலுவிலைச் சேர்ந்த ஒருவரை கைது செய்தனர்

இதனையடுத்து குறித்த துப்பாக்கி தயாரிப்பான பட் எனப்படும் பாகமான துப்பாக்கியின் மரத்திலான பிடியை தயாரித்து வந்த, தச்சு தொழிலாழியான தம்பிலுவிலைச் சேர்ந்த 40 வயதுடைய முன்னாள் போராளியான ஒருவரையும், தயாரிக்கப்படும் துப்பாக்கிகளை விற்பனை செய்து வந்த காஞ்சிரங்குடாவைச் சேர்ந்த ஒருவர் உட்பட 3பேரை கைது செய்ததுடன் அங்கிருந்து தயாரிக்கப்பட்ட 10 துப்பாக்கிகளையும் மீட்டனர்

இதில் கைது செய்யப்பட்டவர்களை திருக்கோவில் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். அவர்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொலைபேசி ஸ்கிறீன்களிலும், நாணயத்தாள்களிலும் கொரோனா வைரஸ் எத்தனை நாட்கள் உயிருடன் வாழும்..? – அவுஸ்திரேலியா ஆராய்ச்சி நிறுவனம் அதிர்ச்சித்தகவல்..!

உலகை அச்சுறுத்தி வரும் கொடிய வைரசான கொரோனா வைரஸ் குறித்த ஆய்வுகளில் தொடர்ந்து பல்வேறு புதிய தகவல்கள் நாளுக்குநாள் வெளியான வண்ணம் உள்ளன. கொரோனா வைரஸ் எந்தெந்த பரப்புகளில் எத்தனை நாட்கள் வரை உயிர்வாழும் என்பது தொடர்பாக பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி அவ்வப்போது முடிவுகளையும் ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர்.
அவ்வகையில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த சி.எஸ்.ஐ.ஆர்.ஓ என்ற அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஆய்வில், கொரோனா வைரஸ், ரூபாய் தாள்களில் 28 நாட்கள் வரை உயிர் வாழும் என தெரியவந்துள்ளது. தொலைபேசி ஸ்கிரீன்கள், எவர்சில்வர் பொருட்களிலும் 28 நாட்கள் வரை உயிர்ப்புடன் இருக்கும் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் மிக குறைந்த வெப்பநிலையில் இந்த வைரஸ் அதிக நாட்கள் உயிர் வாழ்வதாகவும் ஆய்வாளர்கள் கூறி உள்ளனர்.
காட்டன் போன்ற துணிகளில் உயிர்வாழும் காலத்தைவிட, கண்ணாடி, எவர்சில்வர் உள்ளிட்ட பளபளப்பான பரப்புகளில் அதிக காலம் உயிர்வாழ்கிறது.  வெப்பநிலையை 20 டிகிரி, 30 டிகிரி, 40 டிகிரி என வெவ்வேறு அளவுகளில் வைத்து வைரஸ் படிந்த பொருட்களை ஆய்வு செய்துள்ளனர். நேரடி சூரிய ஒளி வைரஸை விரைவாக செயலிழக்கச் செய்யும் என்று ஏற்கனவே ஆராய்ச்சி நிரூபித்துள்ளதால், புற ஊதா ஒளியின் விளைவை அகற்றும் வகையில், இருட்டில் இந்த புதிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வைரஸ் 28 நாட்கள் வரை கொரோனா வைரஸ் உயிர்வாழ்ந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.