இன்றையதினம் முல்லைத்தீவில் நடைபெறும் மரக்கடத்தல்இ மண்கடத்தல் தொடர்பில் செய்திகளை வெளிக் கொண்டுவரும் முல்லைத்தீவு ஊடகவியலாளர்களான குமணன் மற்றும் தவசீலன் ஆகியோர் மீது மரக்கடத்தல்காரர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்களை தாக்கிய கடத்தல்காரர்கள் அவர்களை மிரட்டி “தாங்கள் திருடுவதற்கு தான் இங்கு வந்தோம்” என்று ஊடகவியலாளர்களை பேசவைத்து அதனை தமது கைத்தொலைபேசியில் காணொளியாக்கி இருக்கிறார்கள்.
ஊடகவியலாளர்கள் எடுத்த புகைப்படங்களையும் மரகடத்தல்காரர்கள் ஊடகவியலாளர்களிடமிருந்து அழித்துள்ளார்கள். ஏற்கனவே பல தடவை இவ்வாறான அச்சுறுத்தல்களை குறித்த இரு ஊடகவியலாளர்களுக்கும் மரகடத்தல்காரர்களால் விடுக்கப்பட்ட நிலையில் பொலிசாரும்இ அங்குள்ள அரசியல்வாதிகளும் இது தொடர்பாக விரைந்து கவனம் செலுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் காடழிப்பு, மண்கடத்தல் போன்ற செயற்பாடுகள் அதிகரித்து வருகின்ற நிலையில் அதுதொடர்பாக கவனமெடுக்க வேண்டிய உரிய தரப்பினர் பெரிய அளவிற்கு அக்கறை காட்டாத சூழலே நீடிக்கின்றது.
இது சமூகத்தை சீரழிப்பதன் மிக மோசமான செயற்பாடாகக் கருதப்பட வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என லண்டனைத் தளமாகக் கொண்டு இயங்கம் தேசம்நெற் தெரிவித்துள்ளது. இதுவரை அரச இயந்திரத்தின் செயற்பாடுகளே ஊடகங்களின் சுயாதீனமான செயற்பாடுகளுக்கு தடையாக இருந்துவந்தது. ஆனால் இன்று சமூகவிரோத சக்திகளே ஊடகவியலாளர்களைத் தாக்கி அவர்களை குற்றவாளிகளாகக் காட்சிப்படுத்தும் மோசமான நிலையேற்பட்டு உள்ளது.
இவ்வாறான சமூகவிரோத சக்திகளின் செயற்பாடுகளை மௌனமாகக் கடந்து செல்வது மிக மோசமான விளைவுகளை பின்நாட்களில் ஏற்படுத்தும். ஆகவே பாதிக்கப்பட்ட இந்த ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் சம்பந்தப்பட்ட சமூகவிரோத சக்திகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதும் ஊடகங்களின் சுயாதீனமான செயற்பாட்டுக்கு மிகவும் அடிப்படையானது.