”ஐக்கியதேசியக்கட்சி அரசுக்கு ஆதரவு வழங்கிய கூட்டமைப்பு கடந்த காலகட்டங்களில் பல அபிவிருத்திகளை கிழக்கில் மேற்கொண்டுள்ளது” – சீ.யோகேஸ்வரன்

”ஐக்கியதேசியக்கட்சி அரசுக்கு ஆதரவு வழங்கிய கூட்டமைப்பு கடந்த காலகட்டங்களில் பல அபிவிருத்திகளை கிழக்கில் மேற்கொண்டுள்ளது” என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நேற்று (11.10.2020) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

கடந்த காலத்தில் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியில் இருந்த போது அக்கட்சிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு சில ஆதரவுகளை வழங்கியிருந்தது. அந்தவகையில் அதன் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தோம். கிட்டத்தட்ட 8000க்கும் அதிகமான வீடுகள் கட்டி வழங்கப்பட்டுள்ளது. பல வீடுகள் கட்டப்பட்ட நிலையில் உள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பினால் முன்மொழியப்பட்டு கொண்டுவரப்பட்ட திட்டத்தின் கீழ் இன்று பல வீதிகள் புனரமைக்கப்பட்டு வருகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் 123 வீதிகள் புனரமைக்கப்படுகின்றன.

அதேபோன்று, பாடசாலை கட்டடங்கள், கிணறுகள், பொதுக்கட்டடங்கள் என பல அபிவிருத்திகளையும் இந்த மக்களுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. கம்பரலிய திட்டத்தின் ஊடாகவும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் ஊடாகவும் இதர அமைச்சுகள் ஊடாகவும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

ஆனால், ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் முட்டுக்கொடுத்தவர்கள் எதுவும் செய்யவில்லையென்று இன்று சிலர் கூறுகின்றார்கள். பல கோடிக்கணக்கில் நாங்கள் மக்களுக்கான திட்டங்களை முன்னெடுத்திருக்கின்றோம். பல வேலைத்திட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. ஐக்கிய தேசிய கட்சி எங்களை ஏமாற்றியதும் உண்டு. அதனை நாங்கள் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். வாழைச்சேனை காகிதசாலை நாங்கள் எடுத்த முயற்சியின் காரணமாகவே இன்று இயங்குகின்றது. கடந்த காலத்தில் நாங்கள் பல நடவடிக்கைகளை எடுத்திருந்தோம். ஆட்சிமாற்றம் காரணமாக அவற்றினை எங்களால் தொடர முடியாமல்போனது.

கடந்த காலத்தில் மேய்ச்சல் தரை தொடர்பில் பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்தோம். அன்றைய ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன மற்றும் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை ஆகியவற்றுடன் பேசி அத்துமீறி குடியேறிய அனைத்து சிங்கள மக்களையும் அங்கிருந்து வெளியேற்றினோம். அண்மையில் குடியேற்றங்களை பார்வையிட சென்ற மகாவலி அதிகாரசபையின் அதிகாரிகள், கிராம சேவையாளர்கள் சென்றபோது பிள்ளையான் என்னும் சந்திரகாந்தன் அவர்களை குடியேறுவதற்கு அனுமதித்ததாக கூறினார்கள். சந்திரகாந்தன் அன்று சிங்கள மக்கள் குடியேறுவதற்கு அனுமதித்திருக்கின்றார்.

இவர்கள் இங்கு தமிழ் மக்கள் மத்தியில் ஒரு முகத்தை காட்டுவதுடன் இரகசியமான வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றார்கள். இதேபோன்றுதான் ஹிஸ்புல்லாவின் புனானை பல்கலைக்கழகமும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முழுமையான ஆதரவுடன்தான் நிர்மாணிக்கப்பட்டது. இவ்வாறு முஸ்லிம் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் மறைமுக ஆதரவினை வழங்கிவிட்டு, எவ்வாறு கிழக்கின் தனித்துவம் பாதுகாக்க முடியும் என அவர் கேள்வி எழுப்பினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *