யாழ். மாதகல் கடல் பகுதியில் மர்மமான முறையில் மிதந்து வந்த 116 கிலோ கேரள கஞ்சா கடற்படையினரால் இன்று (12.10.2020) அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம், காங்கேசன்துறை கடற்படையினர் இன்று அதிகாலை கடலில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது மாதகல் கடல் பகுதியில் மர்ம பொதிகள் மிதந்து வருவதை அவதானித்துள்ளனர்.
அவ்வாறு மிதந்து வந்த மர்ம பொருட்களை கடற்படையினர் சோதனையிட்ட போது அதில் இருந்து கேரளா கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கேரள கஞ்சாவினை கடற் படையினர் மீட்டு காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்ட பொதிகள் 116 கிலோ எடையுடைய கேரள கஞ்சா என்று காங்கேசன் துறை பொலிஸார் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அண்மைக்காலங்களாக கேரளாவில் இருந்து கடத்தப்படுகின்ற கஞ்சாவினுடைய அளவு அதிகரித்துள்ள நிலை ஒருபுறமாக இருக்க இவை எங்களுடைய சமூகத்தை எந்தளவு தூரம் படுகுழியில் தள்ளிவிடப்போகின்றன என்பது தொடர்பிலும் நாம் சிந்திக்கவேண்டியவர்களாகவுள்ளோம்.