அரசியல் தஞ்சம் கோரிய தமிழர்களுக்கு தன்னலமற்ற சேவையை வழங்கிய சட்டத்தரணி டேவிட் பேர்ஜஸ் யை கிங்குரொஸ் ரெயில் நிலையத்தில் தள்ளிவிட்டு மரணத்தை ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டவர் நவம்பர் 1ல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டார். நீனா கனகசிங்கம் (34) என அறியப்பட்ட இப்பெண் உண்மையிலேயே ஒரு ஆண் என அறிய வந்துள்ளது. பெண்ணாக மாற்றுப் பால் சிகிச்சை செய்து கொண்ட இவருடைய சிகிச்சை இன்னமும் முற்றுப்பெறவில்லை என்பதும் நீதிமன்றத்தில் தெரியவந்தள்ளது.
நீதிமன்றத்திற்கு மீசை மற்றும் தாடி மயிர் முளைத்த முகத்துடன் கொண்டுவரப்பட்ட கனகசிங்கம் தன்னைப் பெண்ணாகவே அடையாளப்படுத்தும்படி நீதிமன்றைக் கேட்டுள்ளார்.
கிறிக்கல்வூட்டைச் சேர்ந்த கனகசிங்கம் வொன்ஸ்வேர்த் சிறைச்சாலையில் ஆண்கள் பகுதியில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளார். இவர் பெப்ரவரி 3 வரை வழக்கு விசாரணைகளுக்கு தடுத்து வைக்கப்பட்டு உள்ளார். இவரைப் பிணை எடுப்பதற்கான விண்ணப்பம் எதுவும் மேற்கொள்ளவில்லை.
ரெயிலில் தள்ளிவிடப்பட்டதால் மரணத்தை தழுவிய டேவிட் பேர்ஜஸ் ஆணாக இருந்த போதும் பெண்களின் உடைகளை அணிவதில் நாட்டம் கொண்டிருந்தவர். மாற்றுப்பால் இயல்புடைய டேவிட் பேர்ஜஸ் தன்னை இணையத்தில் பாலியல் உறவுக்கு விளம்பரப்படுத்தி இருந்தமை அவரது மரணத்தைத் தொடர்ந்து வெளிவந்தள்ளது.
டேவிட் பேர்ஜஸ் இன் தனிப்பட்ட பாலியல் இயல்புகளுக்கு அப்பால் அவர் தனது தொழிலில் நேர்மையாகவும் திறமையாகவும் இருந்ததை அவரது வேலை நண்பர்கள் மதிப்புடன் தெரிவித்துள்ளனர். அவருடைய பாலியல் நடத்தைகளையும் இரட்டை அடையாளத்தையும் அவரது குடும்பமும் வேலை நண்பர்களும் அறிந்தும் இருந்தனர்.
”தமிழ் மக்களுக்கு தன்னலமற்ற சேவைகளை வழங்கிய போதும் டேவிட் பேர்ஜஸ் இன் மரணம் தொடர்பாக தமிழ் மக்கள் தரப்பில் இருந்து எவ்வித இரங்கலும் தெரிவிக்கப்படவில்லை. ஒருவருடைய பாலியல் இயல்பு என்பது அவருடைய தனிப்பட்ட உணர்வு சம்பந்தப்பட்ட விடயம். ஒரு சமூகத்திற்கு வழங்கிய தன்னலமற்ற சேவையை அவருடைய பாலியல் இயல்புகளுக்காக மறப்பது அழகல்ல” என்பதே எனது (த ஜெயபாலன்) நிலைப்பாடு.
._._._._._.
Oct 29 2010
தஞ்சம் கோரிய பல நூற்றுக்கணக்கான தமிழர்களின் வாழ்வுக்கு வழிகாட்டிய சட்டத்தரணி டேவிட் பேர்ஜஸ் மரணத்தைத் தழுவினார்! அவருடைய மரணம் தொடர்பாக தமிழ்ப் பெண் கைது!
அரசியல் தஞ்ச வழக்குகளில் தனக்கென முத்திரை பதித்த சட்டத்தரணி டேவிட் பேர்ஜஸ் ஒக்ரோபர் 25ல் கிங்குறொஸ் நிலக்கீழ் ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தில் வீழ்ந்து உயிரிழந்தார். டேவிட் பேர்ஜஸ் இன் மரணம் தொடர்பாக தமிழ்ப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். கிங்குரொஸ் நிலக்கீழ் ரெயில் நிலையத்தில் நின்ற டேவிட் பேர்ஜஸ்யை குறிப்பிட்ட தமிழ் பெண் புகையிரதத்தின் முன் தள்ளிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சந்தேக நபர் 34 வயதான நீனா கனகசிங்கம் எனப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
63 வயதான டேவிட் பேர்ஜஸ் 3 பிள்ளைகளின் தந்தை. மத்திய லண்டனில் வாழ்பவர். இவர் மாற்றுடையணியும் பழக்கம் கொண்டவர் என்றும் தெரியவருகிறது. சம்பவத்தின் போது பெண்ணுடை அணிந்து நின்ற டேவிட் பேர்ஜஸ் புகையிரத்தின் முன் வீழ்ந்ததால் புகையிரதத்தில் அடிபட்டு மரணமாகி உள்ளார். இவருடைய மரணம் தொடர்பாக நீனா கனகசிங்கம் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு உள்ளது.
டேவிட் பேஸ்ஜசின் மரணச் செய்தி பிரித்தானிய சட்டத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக பிரித்தானிய தமிழ் சமூகத்திற்கு டேவிட் பேர்ஜஸ் வழங்கிய சட்ட சேவை அளவுக்கு எவருமே தன்னலமற்று பணியாற்றி இருக்கவில்லை. பலநூற்றுக்கணக்கான தமிழர்களுக்கு பிரித்தானிய மண்ணில் வாழும் உரிமையைப் பெற்றுக்கொடுத்த டேவிட் பேர்ஜஸ் தனது சட்ட நிபுணத்துவத்தால் எதிர்காலத்திலும் தஞ்சம் கோரும் பலருக்கு வாழும் உரிமையைப் பெற்றுக் கொடுக்க காரணமாய் இருந்தவர்.
1970க்களில் சட்டத்துறைக்குள் நுழைந்த இவர். ஏனையவர்களுடனும் இணைந்து வின்ஸ்ரான்லி பேர்ஜஸ் என்ற பிரித்தானியாவின் பெயர்பெற்ற குடிவரவுச் சட்ட நிறுவனத்தை நிறுவினார். அரசு சட்ட உதவிகளை இறுக்கமாக்கியதை அடுத்து தராதரமான சேவையை தங்களால் தொடர்ந்தும் வழங்க முடியாது என்ற நிலையில் வின்ஸ்ரான்லி பேர்ஜஸ் நிறுவனம் 2003 ஓகஸ்டில் மூடப்பட்டது.
அதன் மரணமாகும் வரை டேவிட் பேர்ஜஸ் லுக்மானி தொம்சன் அன் பார்ட்னர்ஸ் என்ற வூட் கிரீனில் உள்ள சட்ட நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
தமிழர்கள் பிரித்தானியாவுக்கு அரசியல் தஞ்சம் கோரிப் புறப்பட்ட எண்பதுக்களின் நடுப்பகுதி முதல் டேவிட் பேர்ஜர்ஸ் தமிழ் சமூகத்துடன் மிக நெருக்கமாகப் பணியாற்றியவர். தமிழர் தகவல் நடுவம் அரசியல் தஞ்சம் தொடர்பாக எடுத்துக் கொண்ட வழக்குகளை டேவிட் பேர்ஜஸ் பிரதிநிதித்துவப்படுத்தி வெற்றியும் கண்டார். உள்துறை அமைச்சின் பல்வேறு முடிவுகளையும் எதிர்த்து அவற்றை மாற்றி அமைக்கவும் காரணமாக இருந்தவர்.
எப்பொதுமே சவாலான விடயங்களையே தெரிவு செய்து வாதிடும் டேவிட் பேர்ஜஸ் அண்மைக்காலத்தில் கூட வெளிநாடுகளில் பாரபட்சமற்ற வழக்குகளுக்காகவும் அகதிச் சட்ட வரையறைக்குள் வராத வழக்குகளையும் பாதுகாப்பு அமைச்சின் சட்டவிரோதமான தடுத்துவைப்புகளுக்கு எதிரான சிவில் சட்ட வழக்குகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி வந்திருந்தார்.
மாற்றுடைப் பழக்கமுடைய டேவிட் பேர்ஜஸ் சோனியா எனவும் அழைக்கப்படுபவர். இவருடைய மறைவு மிக ஆழமான வேதனையை ஏற்படுத்தி உள்ளதாக அவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
டேவிட் பேர்ஜஸ் தீபெத்திய பெண்ணை மணந்தவர். அவருடைய மகள் (குசாங் நைமா) தனது தந்தையின் பெயரைப் பயன்படுத்தாமல் சட்டத்துறையில் சாதிக்க வேண்டும் என்று கடினமாக உழைப்பவர். அவர் தனது தந்தையின் பெயரைப் பயன்படுத்தி அதில் செல்வாக்குப் பெறாமலேயே அவரது கடின உழைப்பால் தான் டேவிட் பேர்ஜஸ் இன் மகள் என அறியப்படுபவர்.
சட்டத்துறையில் உள்ள அகதிகள் அமைப்புகளில் உள்ள தமிழ் சமூக அமைப்புகளில் உள்ள தமிழர்களுக்கு டேவிட் பேர்ஜஸ் மிக அறிமுகமானவர். அவருடைய இழப்பு தமிழ் சமூகத்திற்கு ஆழ்ந்த சோகமே.
சந்தேக நபரான நீனா கனகசிங்கம் கிரிக்கல்வூட் பகுதியில் உள்ள சிசிலி வீதியில் வாழ்பவர் எனத் தெரியவருகின்றது. நவம்பர் 1ம் திகதி இவர் ஓல்ட் பெய்லியில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.