02

02

யாழ். அரசாங்க அதிபர் நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளார்.

Imelda_Sugumar_GA_Jaffnaபடிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் சாட்சியமளிக்க யாழ். அரசஅதிபர் திருமதி. இமெல்டா சுகுமார் ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டுள்ளார். இதன்படி நாளை மறுதினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் நல்லிணக்க ஆணைக்குவின் முன் யாழ். அரசாங்க அதிபர் சாட்சியமளிப்பார் என தெரிவிக்கப்படுகிறது.

தற்போது யாழ்.மாவட்ட அரசாங்க அதிபராக பணியாற்றும் திருமதி. இமெல்டா சுகுமார் இறுதிக்கட்டப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் அரசாங்க அதிபராக பணியாற்றவர் என்பதால் இறுதிக்கட்ட யுத்தத்தில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக அவரது சாட்சியங்களைப் பெற்றுக்கொள்ளும் முகமாகவே அவர் நல்லிணக்க ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டுள்ளார்.

இறுதிக்கட்ட யுத்தத்தில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்பு பலர் சாட்சியங்களை அளித்துள்ள நிலையில் சில சந்தேகங்களைத் தெளிவு படுத்துமாறு நல்லிணக்க ஆணைக்குழு அவரிடம் கேட்டுள்ளதாகவும், இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்களுக்கு உணவு. மருந்து வகைகள் எவ்வாறான ஒழுங்கில் விநியோகிகப்பட்டன என்பது தொடர்பாகவும் திருமதி இமெல்டா சுகுமார் சாட்சியத்தில் விளக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் தொழிற்சந்தை நடத்துவதற்கு ஏற்பாடு.

Waiting_for_Employmentயாழ்ப் பாணத்தில் எதிர்வரும் 13ஆம் திகதி தொழிற்சந்தை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்டச்செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தால் இது நடத்தப்படவுள்ளது.

இத்தொழிற்சந்தையில் கொழும்பிலிருந்து வந்து கலந்து கொள்ளும் தனியார் தொழில் நிறுவனங்களும், உள்ளுர் தொழில் நிறுவனங்களும் கலந்து கொள்ளும் எனவும், இவை தங்கள் நிறுவனங்களிலும் உள்ள பணியாளர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக யாழ்.மாவட்டத்திலுள்ள இளைஞர், யுவதிகள் மத்தியில் நேர்முகப் பரீட்சைகளை நடத்தி தொழில் வாய்ப்புகளை நடத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தொழிற்சந்தையில் கலந்து கொண்டு பணியாளர் வெற்றிடங்களை நிரப்ப விரும்பும் நிறுவனங்கள் எதிர்வரும் 4ஆம் திகதிக்கு முன்பதாக யாழ்.மாவட்ட திட்டமிடல் செயலகத்துடன் தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்ளுமாறு யாழ்.அரச அதிபர் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் மீள்குடியேற்றம் தாமதமாவதற்கு மிதிவெடி அபாயமே காரணம்- அரச அதிபர்.

landmines.jpgமிதிவெடி அபாயம் காரணமாகவே யாழ்ப்பாண மாவட்டத்தின் சில பகுதிகளில் மக்களின் மீள்குடியமர்வு தாமதமாகின்றதே தவிர உயர்பாதுகாப்பு வலயம் பிரச்சினையல்ல எனவும், யுத்தம் நடைபெற்ற காலத்தில் மட்டுமே இருந்தது எனவும் யாழ். அரசாங்க அதிபர் திருமதி. இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

இப்போது யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில், இராணுவத்தினர் இராணுவ முகாம்களில் மட்டுமே இருப்பர் எனவும், ஏனைய பிரதேசங்கள் விடுவிக்கப்படும் எனவும் இராணுவ இணைப்பதிகாரி தெரிவித்திருந்தார். அதனடிப்படையிலேயே வடமராட்சிக் கிழக்குப் பகுதிகளில் மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். வலி.வடக்குப் பிரதேசத்தில் வெடிபொருட்கள் அகற்றப்பட்ட பின் மக்களின் மீள்குடியமர்வை மேற்கொள்ள முடியும். அதற்காக இராணுவத்தின் மிதிவெடியகற்றும் பிரிவு துரிதமாக செயற்பட்டு வருகின்றது. தற்போது வலி.வடக்கில் மூன்று கிராம சேவகர் பிரிவுகளில் வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளதாக சான்றிதழ் கிடைத்துள்ளது. இப்பிரதேசங்களில் மக்கள் விரைவில் மீள்குடியமர்த்தப்படவுள்ளனர். யாழ்.மாவட்டக் கட்டளைத்தளபதி இந்நிகழ்வை அமைச்சர் பசில் ராஜபக்சவை கொண்டு ஆரம்பித்து வைக்க விரும்புவதால் விரைவில் அவர் கலந்து கொண்டு இப்பகுதி மீள்குடியேற்றத்தை மேற்கொள்வார். -இவ்வாறு அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலை வெளி நோயாளர் பிரிவு சிகிச்சை நேரம் நீடிக்கப்படவுள்ளது.

Jaffna_Hospitalநாட்டிலுள்ள அனைத்து போதனா வைத்தியசாலைகளும் அதன் வெளிநோயாளர் பிரிவுகளை காலை 7 மணி முதல் இரவு 8 மணிவரை திறந்து வைத்து சிகிச்சைகளை வழங்க வேண்டும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பணித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலை எதிர்வரும் 15ஆம் திகதியிலிருந்து இவ்வாறு சிகிச்சையை வழங்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி. ப. பவானி தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் இரு கிராமங்களில் நேற்று மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று உதவி அரசாங்க அதிபர் பிரிவிலுள்ள இரண்டு கிராமங்களில் நேற்று திங்கள் கிழமை மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ந.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

நீராவிப்பிட்டி மேற்கு கிராமசேவகர் பிரிவிலும், மடவாழ்சிங்கக்குளம் பகுதியிலும் மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 160 குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாகவும், மீள்குடியமர்த்தப்பட்ட இம்மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பல்வேறு உதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டத்தரணி டேவிட் பேர்ஜஸ் கொலைச் சந்தேக நபர் பெண்ணாக மாறிய ஆண்!

David_Burgessஅரசியல் தஞ்சம் கோரிய தமிழர்களுக்கு தன்னலமற்ற சேவையை வழங்கிய சட்டத்தரணி டேவிட் பேர்ஜஸ் யை கிங்குரொஸ் ரெயில் நிலையத்தில் தள்ளிவிட்டு மரணத்தை ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டவர் நவம்பர் 1ல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டார். நீனா கனகசிங்கம் (34) என அறியப்பட்ட இப்பெண் உண்மையிலேயே ஒரு ஆண் என அறிய வந்துள்ளது. பெண்ணாக மாற்றுப் பால் சிகிச்சை செய்து கொண்ட இவருடைய சிகிச்சை இன்னமும் முற்றுப்பெறவில்லை என்பதும் நீதிமன்றத்தில் தெரியவந்தள்ளது.

நீதிமன்றத்திற்கு மீசை மற்றும் தாடி மயிர் முளைத்த முகத்துடன் கொண்டுவரப்பட்ட கனகசிங்கம் தன்னைப் பெண்ணாகவே அடையாளப்படுத்தும்படி நீதிமன்றைக் கேட்டுள்ளார்.

கிறிக்கல்வூட்டைச் சேர்ந்த கனகசிங்கம் வொன்ஸ்வேர்த் சிறைச்சாலையில் ஆண்கள் பகுதியில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளார். இவர் பெப்ரவரி 3 வரை வழக்கு விசாரணைகளுக்கு தடுத்து வைக்கப்பட்டு உள்ளார். இவரைப் பிணை எடுப்பதற்கான விண்ணப்பம் எதுவும் மேற்கொள்ளவில்லை.

ரெயிலில் தள்ளிவிடப்பட்டதால் மரணத்தை தழுவிய டேவிட் பேர்ஜஸ் ஆணாக இருந்த போதும் பெண்களின் உடைகளை அணிவதில் நாட்டம் கொண்டிருந்தவர். மாற்றுப்பால் இயல்புடைய டேவிட் பேர்ஜஸ் தன்னை இணையத்தில் பாலியல் உறவுக்கு விளம்பரப்படுத்தி இருந்தமை அவரது மரணத்தைத் தொடர்ந்து வெளிவந்தள்ளது.

டேவிட் பேர்ஜஸ் இன் தனிப்பட்ட பாலியல் இயல்புகளுக்கு அப்பால் அவர் தனது தொழிலில் நேர்மையாகவும் திறமையாகவும் இருந்ததை அவரது வேலை நண்பர்கள் மதிப்புடன் தெரிவித்துள்ளனர். அவருடைய பாலியல் நடத்தைகளையும் இரட்டை அடையாளத்தையும் அவரது குடும்பமும் வேலை நண்பர்களும் அறிந்தும் இருந்தனர்.

”தமிழ் மக்களுக்கு தன்னலமற்ற சேவைகளை வழங்கிய போதும் டேவிட் பேர்ஜஸ் இன் மரணம் தொடர்பாக தமிழ் மக்கள் தரப்பில் இருந்து எவ்வித இரங்கலும் தெரிவிக்கப்படவில்லை. ஒருவருடைய பாலியல் இயல்பு என்பது அவருடைய தனிப்பட்ட உணர்வு சம்பந்தப்பட்ட விடயம். ஒரு சமூகத்திற்கு வழங்கிய தன்னலமற்ற சேவையை அவருடைய பாலியல் இயல்புகளுக்காக மறப்பது அழகல்ல” என்பதே எனது (த ஜெயபாலன்) நிலைப்பாடு.

._._._._._.

Oct 29 2010

தஞ்சம் கோரிய பல நூற்றுக்கணக்கான தமிழர்களின் வாழ்வுக்கு வழிகாட்டிய சட்டத்தரணி டேவிட் பேர்ஜஸ் மரணத்தைத் தழுவினார்! அவருடைய மரணம் தொடர்பாக தமிழ்ப் பெண் கைது!

அரசியல் தஞ்ச வழக்குகளில் தனக்கென முத்திரை பதித்த சட்டத்தரணி டேவிட் பேர்ஜஸ் ஒக்ரோபர் 25ல் கிங்குறொஸ் நிலக்கீழ் ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தில் வீழ்ந்து உயிரிழந்தார். டேவிட் பேர்ஜஸ் இன் மரணம் தொடர்பாக தமிழ்ப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். கிங்குரொஸ் நிலக்கீழ் ரெயில் நிலையத்தில் நின்ற டேவிட் பேர்ஜஸ்யை குறிப்பிட்ட தமிழ் பெண் புகையிரதத்தின் முன் தள்ளிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சந்தேக நபர் 34 வயதான நீனா கனகசிங்கம் எனப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

63 வயதான டேவிட் பேர்ஜஸ் 3 பிள்ளைகளின் தந்தை. மத்திய லண்டனில் வாழ்பவர். இவர் மாற்றுடையணியும் பழக்கம் கொண்டவர் என்றும் தெரியவருகிறது. சம்பவத்தின் போது பெண்ணுடை அணிந்து நின்ற டேவிட் பேர்ஜஸ் புகையிரத்தின் முன் வீழ்ந்ததால் புகையிரதத்தில் அடிபட்டு மரணமாகி உள்ளார். இவருடைய மரணம் தொடர்பாக நீனா கனகசிங்கம் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு உள்ளது.

David_Burgessடேவிட் பேஸ்ஜசின் மரணச் செய்தி பிரித்தானிய சட்டத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக பிரித்தானிய தமிழ் சமூகத்திற்கு டேவிட் பேர்ஜஸ் வழங்கிய சட்ட சேவை அளவுக்கு எவருமே தன்னலமற்று பணியாற்றி இருக்கவில்லை. பலநூற்றுக்கணக்கான தமிழர்களுக்கு பிரித்தானிய மண்ணில் வாழும் உரிமையைப் பெற்றுக்கொடுத்த டேவிட் பேர்ஜஸ் தனது சட்ட நிபுணத்துவத்தால் எதிர்காலத்திலும் தஞ்சம் கோரும் பலருக்கு வாழும் உரிமையைப் பெற்றுக் கொடுக்க காரணமாய் இருந்தவர்.

1970க்களில் சட்டத்துறைக்குள் நுழைந்த இவர். ஏனையவர்களுடனும் இணைந்து வின்ஸ்ரான்லி பேர்ஜஸ் என்ற பிரித்தானியாவின் பெயர்பெற்ற குடிவரவுச் சட்ட நிறுவனத்தை நிறுவினார். அரசு சட்ட உதவிகளை இறுக்கமாக்கியதை அடுத்து தராதரமான சேவையை தங்களால் தொடர்ந்தும் வழங்க முடியாது என்ற நிலையில் வின்ஸ்ரான்லி பேர்ஜஸ் நிறுவனம் 2003 ஓகஸ்டில் மூடப்பட்டது.

அதன் மரணமாகும் வரை டேவிட் பேர்ஜஸ் லுக்மானி தொம்சன் அன் பார்ட்னர்ஸ் என்ற வூட் கிரீனில் உள்ள சட்ட நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

தமிழர்கள் பிரித்தானியாவுக்கு அரசியல் தஞ்சம் கோரிப் புறப்பட்ட எண்பதுக்களின் நடுப்பகுதி முதல் டேவிட் பேர்ஜர்ஸ் தமிழ் சமூகத்துடன் மிக நெருக்கமாகப் பணியாற்றியவர். தமிழர் தகவல் நடுவம் அரசியல் தஞ்சம் தொடர்பாக எடுத்துக் கொண்ட வழக்குகளை டேவிட் பேர்ஜஸ் பிரதிநிதித்துவப்படுத்தி வெற்றியும் கண்டார். உள்துறை அமைச்சின் பல்வேறு முடிவுகளையும் எதிர்த்து அவற்றை மாற்றி அமைக்கவும் காரணமாக இருந்தவர்.

எப்பொதுமே சவாலான விடயங்களையே தெரிவு செய்து வாதிடும் டேவிட் பேர்ஜஸ் அண்மைக்காலத்தில் கூட வெளிநாடுகளில் பாரபட்சமற்ற வழக்குகளுக்காகவும் அகதிச் சட்ட வரையறைக்குள் வராத வழக்குகளையும் பாதுகாப்பு அமைச்சின் சட்டவிரோதமான தடுத்துவைப்புகளுக்கு எதிரான சிவில் சட்ட வழக்குகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி வந்திருந்தார்.

David_Burgess_Soniaமாற்றுடைப் பழக்கமுடைய டேவிட் பேர்ஜஸ் சோனியா எனவும் அழைக்கப்படுபவர். இவருடைய மறைவு மிக ஆழமான வேதனையை ஏற்படுத்தி உள்ளதாக அவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

டேவிட் பேர்ஜஸ் தீபெத்திய பெண்ணை மணந்தவர். அவருடைய மகள் (குசாங் நைமா) தனது தந்தையின் பெயரைப் பயன்படுத்தாமல் சட்டத்துறையில் சாதிக்க வேண்டும் என்று கடினமாக உழைப்பவர். அவர் தனது தந்தையின் பெயரைப் பயன்படுத்தி அதில் செல்வாக்குப் பெறாமலேயே அவரது கடின உழைப்பால் தான் டேவிட் பேர்ஜஸ் இன் மகள் என அறியப்படுபவர்.

சட்டத்துறையில் உள்ள அகதிகள் அமைப்புகளில் உள்ள தமிழ் சமூக அமைப்புகளில் உள்ள தமிழர்களுக்கு டேவிட் பேர்ஜஸ் மிக அறிமுகமானவர். அவருடைய இழப்பு தமிழ் சமூகத்திற்கு ஆழ்ந்த சோகமே.

சந்தேக நபரான நீனா கனகசிங்கம் கிரிக்கல்வூட் பகுதியில் உள்ள சிசிலி வீதியில் வாழ்பவர் எனத் தெரியவருகின்றது. நவம்பர் 1ம் திகதி இவர் ஓல்ட் பெய்லியில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.