படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் சாட்சியமளிக்க யாழ். அரசஅதிபர் திருமதி. இமெல்டா சுகுமார் ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டுள்ளார். இதன்படி நாளை மறுதினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் நல்லிணக்க ஆணைக்குவின் முன் யாழ். அரசாங்க அதிபர் சாட்சியமளிப்பார் என தெரிவிக்கப்படுகிறது.
தற்போது யாழ்.மாவட்ட அரசாங்க அதிபராக பணியாற்றும் திருமதி. இமெல்டா சுகுமார் இறுதிக்கட்டப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் அரசாங்க அதிபராக பணியாற்றவர் என்பதால் இறுதிக்கட்ட யுத்தத்தில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக அவரது சாட்சியங்களைப் பெற்றுக்கொள்ளும் முகமாகவே அவர் நல்லிணக்க ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டுள்ளார்.
இறுதிக்கட்ட யுத்தத்தில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்பு பலர் சாட்சியங்களை அளித்துள்ள நிலையில் சில சந்தேகங்களைத் தெளிவு படுத்துமாறு நல்லிணக்க ஆணைக்குழு அவரிடம் கேட்டுள்ளதாகவும், இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்களுக்கு உணவு. மருந்து வகைகள் எவ்வாறான ஒழுங்கில் விநியோகிகப்பட்டன என்பது தொடர்பாகவும் திருமதி இமெல்டா சுகுமார் சாட்சியத்தில் விளக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.