மிதிவெடி அபாயம் காரணமாகவே யாழ்ப்பாண மாவட்டத்தின் சில பகுதிகளில் மக்களின் மீள்குடியமர்வு தாமதமாகின்றதே தவிர உயர்பாதுகாப்பு வலயம் பிரச்சினையல்ல எனவும், யுத்தம் நடைபெற்ற காலத்தில் மட்டுமே இருந்தது எனவும் யாழ். அரசாங்க அதிபர் திருமதி. இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.
இப்போது யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில், இராணுவத்தினர் இராணுவ முகாம்களில் மட்டுமே இருப்பர் எனவும், ஏனைய பிரதேசங்கள் விடுவிக்கப்படும் எனவும் இராணுவ இணைப்பதிகாரி தெரிவித்திருந்தார். அதனடிப்படையிலேயே வடமராட்சிக் கிழக்குப் பகுதிகளில் மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். வலி.வடக்குப் பிரதேசத்தில் வெடிபொருட்கள் அகற்றப்பட்ட பின் மக்களின் மீள்குடியமர்வை மேற்கொள்ள முடியும். அதற்காக இராணுவத்தின் மிதிவெடியகற்றும் பிரிவு துரிதமாக செயற்பட்டு வருகின்றது. தற்போது வலி.வடக்கில் மூன்று கிராம சேவகர் பிரிவுகளில் வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளதாக சான்றிதழ் கிடைத்துள்ளது. இப்பிரதேசங்களில் மக்கள் விரைவில் மீள்குடியமர்த்தப்படவுள்ளனர். யாழ்.மாவட்டக் கட்டளைத்தளபதி இந்நிகழ்வை அமைச்சர் பசில் ராஜபக்சவை கொண்டு ஆரம்பித்து வைக்க விரும்புவதால் விரைவில் அவர் கலந்து கொண்டு இப்பகுதி மீள்குடியேற்றத்தை மேற்கொள்வார். -இவ்வாறு அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.