October

October

யாழ்ப்பாணத்தில் மாணவர்களின் நடத்தைகள் சீரழிந்து செல்வதாக அதிர்ச்சித் தகவல்!

யாழ்ப்பாணத்தில் மாணவர்களின் நடத்தைகள் சீரழிந்து வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் இணையம் எனபனவற்றினால் யாழ். பாடசாலை மாணவர்கள் தவறான நடத்தைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். அரசஅதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தலைமையில் மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டபோது இத்தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீருடையுடன் பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள் மாற்றுடைகளையும் அவர்களின் பைகளில் எடுத்துச் செல்வதாகவும், பாடசாலை விட்டதன் பின்னர் மாற்றுடையுடன் தவறான நடத்தைகளில் ஈடுபடுவதாகவும், இணைய வசதிகள் வழங்கும் (நெற்கபே) நிலையங்களுக்குச் சென்று ஆபாச இணையத்தளங்களைப் பார்வையிடுவதாகவும், கையடக்கத் தொலைபேசி மூலம் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாகவும், ஆள்நடமாட்டமற்ற பகுதிகளில் – கட்டடங்களில் துஸ்பிரயோக நடவடிக்கைகளில் மாணவர்கள் ஈடுபடுவதாகவும் குறித்த கூட்டத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

நடைபெற்ற இக்கூட்டம் தொடர்பாக அரசாங்க அதிபர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். மாணவர்களின் செயற்பாடுகள் தொடர்பாக அதிபர்களும் ஆசிரியர்களும் விழிப்பாக இருக்க வேண்டும். அவர்களின் புத்தகப் பொதிகளை தேவைப்பட்டால் சோதனையிட வேண்டும். பெற்றோர் தங்களின் பிள்ளைகளின் செயற்பாடுகள் குறித்து கவனமாகவும் அக்கறையாகவும் இருக்க வேண்டும். இணைய நிலையங்களின் உரிமையாளர்கள் 18 வயதிற்கு குறைந்த மாணவர்களை இணையத் தளங்கள் பார்வையிட அனுமதிக்கின்ற போது தடுப்புகளற்ற திறந்த வெளியமைப்பில் அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்றும், சிறுவர்களை வேலைக்கமர்த்துதல் உள்ளிட்ட சிறுவர் துஸ்பிரயோக நடவடிக்கைகளை பொலிஸாரின் உதவியுடன் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் டெங்குநுளம்பை ஒழிக்க ‘பக்றீரியா’

யாழ். குடாநாட்டில் டெங்கு நுளம்பை இல்லாமல் செய்யும் நடவடிக்கைகளில் ஒரு கட்டமாக கழிவு நீர் அகற்ற முடியாத இடங்களில் டெங்கு நுளம்புகளுக்கெதிரான ‘பக்றீரியா’ பயன்படுத்தப்படவுள்ளது. கழிவு நீர் வாய்க்கால்களுக்கு தெளிப்பதற்கான இந்த ‘பக்றீரியா’ கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்ட தொற்றுநோய்த் தடுப்புப்பிரிவின் பொறுப்பதிகாரி திருமதி. திருமகள் சிவசங்கர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குடாநாட்டில் டெங்கு நோயை ஓரளவிற்கு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ள போதும், அதனை முற்றாகத் தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டியுள்ளதெனவும், அடுத்து வரப்போகும் மழைக்காலத்தில் டெங்கு நோய் பரவுவதற்கான ஆபத்துகளைத் தவிர்க்க பொதுமக்கள் மத்தியில் டெங்கு நொய் தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய வீட்டுத்திட்டத்திற்கு பொதுமக்களிடம் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

இந்திய அரசினால் யாழ். குடாநாட்டில் அமைக்கப்படவுள்ள வீட்டுத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளன. பயனாளிகள் பிரதேசச் செயலங்களில் விண்ணப்பப் படிவங்களைப் பெற்று எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்பாக கையளிக்க வேண்டும் என யாழ். அரச அதிபர் திருமதி. இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தை சொந்த இடமாகக்கொண்டு 18-05-2009 இற்குப்பின் யாழ்ப்பாணத்தில் மீள்குடியமர்ந்தவர்கள், சொந்தக் காணிகளையுடையவர்கள் மட்டும் இவ்வீட்டுத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடு பகுதியளவில் சேதமடைந்தவர்களும் விண்ணப்பிக்க முடியும் எனவும அவர்கள் அதனைப் புனரமைப்பதற்கு இரண்டு லட்சரூபா வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே வேளை, போரினால் பாதிக்கப்பட்ட விதவைகளின் குடும்பங்கள், போரில் உயிரிழந்தவர்கள், காணாமல்போனவர்கள், காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வீடமைப்பிற்கான நிதி கட்டம் கட்டமாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டனில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பணமோசடி செய்தவர் பிணையில் விடுதலை.

வெளிநாட்டில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாக மாணவர்களிடம் பணம் பெற்று மோசடி செய்ததாகக் கூறப்படும் கணனி நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

லண்டனுக்க அனுப்பி தொழில் வாய்ப்பினைப் பெற்றுத்தருவதாகக் கூறி குறித்த நபர் மூன்று மாணவர்களிடம் ஐந்து இலட்ச ரூபா வீதம் பெற்றுள்ளார். அம்மாணவர்களிடம் போலிச் சான்றிதழ்களையும் அவர் வழங்கியுள்ளார். இந்த ஏமாற்று நடவடிக்கை தொடர்பாக இம்மூன்று மாணவர்களும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இம்முறைப்பாட்டையடுத்தே இவர் கைது செய்யப்பட்டார்.

இம்மோசடி குறித்த வழக்கினை விசாரணை செய்த யாழ். நீதவான் ஏ. ஏ. ஆனந்தராஜா  இது குறித்து விசாரணை செய்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டதுடன் குறித்த நபரை 75 ரூபா பெறுமதிக்கு மூன்று பேரின் சரீரப் பிணையில் செல்ல அனுமதித்து வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

கிளி – முல்லை இல் பணியாற்ற அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் அரச சார்பற்ற நிறுவனங்கள் சென்று பணிபுரிவதற்கு பாதுகாப்பு அமைச்சினால் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முற்றாக இல்லாவிடினும் ஓரளவிற்கு இக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்னியில் ஏ-9 பாதையூடாக பயணம் செய்வதற்கு அரசசார்பற்ற நிறுவனங்கள் ஒவ்வொரு தடவையும் பாதுகாப்பு அமைச்சிடம் அனுமதி பெறவேண்டியிருந்தது. தற்போது அம்முறை தளர்த்தப்பட்டு அனுமதி மூன்று மாதங்களுக்கு வழங்கப்படுகின்றது என யாழ.மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையத் தலைவர் வி. கேசவன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், வன்னியில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் பல தேவைகள் இன்னமும் நிறைவேற்றப்படாமலுள்ளது எனவும், கிளிநொச்சி முலலைத்தீவு மாவட்டங்களில் பணியாற்ற அரசசார்பற்ற நிறுவனங்கள் முன்வரவேண்டும் எனவும், அங்கு பணியாற்றும் நிறுவனங்கள் அரசாங்கத்தின் எண்ணங்களுக்கும் திட்டங்களுக்கும் அமைய செயற்படவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

உருத்திரகுமாரன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது பிரதம மந்திரி

tgte.jpgநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு பிரதமமந்திரி தெரிவுசெய்யப்பட்டதுடன் அமைச்சரவையினை உருவாக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன என இணையத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான பிரதிநிதிகள் 2010 செப்ரம்பர் 29ம் நாள் தொடக்கம் ஒக்ரோபர் 1ம் நாள்வரையான மூன்றுதினங்கள் கூடி அவ்அரசுக்கான அரசியலமைப்பினை அங்கீகரித்ததுடன் தமக்கான பிரதம மந்திரியினையும் தெரிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து அமைச்சரவையினை உருவாக்கும் செயற்பாடுகள் தொடர்ந்தன.

நாடுகடந்த தமிழீழ அரசின் பாராளுமன்றம் இரண்டு அவைகளினைக் கொண்டதாக இருக்கும். இது தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளினைக் கொண்ட பாராளுமன்றத்தினையும், செனற் எனப்படும் நியமன அங்கத்தவர்களினைக் கொண்ட ஆலோசனைச் சபையினையும் கொண்டிருக்கும். நாடுகடந்த தமிழீழ அரசுக்கான அரசியலமைப்பினை அங்கீகரித்து ஏற்றுக்கொண்டதனைத் தொடர்ந்து பாராளுமன்றம் கனடாவினைச் சேர்ந்த திரு.பொன் பால்ராஜன் அவர்களினை பாராளுமன்ற சபாநாயகராகவும் சுவிற்சலாந்து நாட்டினைச் சேர்ந்த செல்வி. சுகன்யா புத்திரசிகாமணி அவர்களை பிரதி சபாநாயகராகவும் ஏகமனதாக தெரிவு செய்தது.

 திரு.விஸ்வநாதன் உருத்திரகுமாரன் அவர்கள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது பிரதம மந்திரியாக பாராளுமன்றத்தினால் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.

tgte.jpg

உரிய நபர்கள் மீது சட்ட நடவடிக்கை

computer.jpgதடை செய்யப்பட்ட 170 பாலியல் இணையத்தளங்களினை வடிவமைத்தவர்கள் தொடர்பிலும், இணையத்தளங்களில் பிரசுரிக்கப்பட்ட புகைப்படங்களில் உள்ள இளைஞர்கள் தொடர்பிலும் தீவிர விசாரணைகள் ஆரம்பித்துள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசாரணைகளை தொடர்ந்து அது சம்பந்தமான அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நீதி மன்ற உத்தரவின் பிரகாரம் உரிய நபர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

நல்லிணக்கக் குழு பயங்கரவாத தடுப்பு பிரிவுடன் பேச்சு

கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக் குழுவின் தலைவர் சீ. ஆர். டி. சில்வா, முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் காணாமற்போனவர்கள் தொடர்பாக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். வன்னியில் பொது மக்களிடம் சாட்சியங்களைப் பெற்றுக் கொண்டு கொழும்பு திரும்பியதும் ஆணைக்குழுவின் தலைவர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரை அழைத்துப் பேசியுள்ளார்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் நடைபெற்ற பகிரங்க அமர்வுகளில் சாட்சியமளித்த பொது மக்கள், காணாமற் போன தமது உறவுகளைத் தேடித் தருமாறும் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவித்துத் தருமாறும் ஆணைக் குழுவின் தலைவரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனையடுத்து, அவர்களின் கோரிக் கைகளை விபரங்களுடன் எழுத்து மூலம் பெற்றுக் கொண்ட அவர், பயங்கரவாத தடுப்புப் பிரிவினரை அழைத்துப் பேச்சு வார்த்தை நடத்தி அறிவிப்பதாக உறுதி அளித்திருந்தார்.

இதற்கமைய பயங்கரவாத தடுப்புப் பிரிவினரை அழைத்து ஆணைக் குழுவின் தலைவர் பேச்சு நடத்தியதாகவும் இந்தப் பேச்சுவார்த்தையில் குழுவின் உறுப்பினர்கள் கலந்து கொண்டதாகவும் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும், பேசப்பட்ட விடயங்கள், ஆணைக்குழுத் தலைவரின் பரிந்துரைகள் என்னவென்பது பற்றிய விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விடுதலை தொடர்பில், ரி.ஐ.டி. யினருடன் கலந்துரையாடியதன் பின்னர் பரிந்துரைகளை முன்வைப்பதாக ஆணைக்குழுவின் தலைவர் சீ. ஆர். டி. சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் இம்மாத முற்பகுதியில் நடைபெறவிருந்த நல்லிணக்க ஆணைக் குழுவின் பகிரங்க அமர்வு நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட் டுள்ளதாக ஆணைக் குழுவின் இணைப்புச் செயலாளர் ஜீ. ஏ. குணவர்தன தெரிவித்தார். ஆணைக் குழுவின் விசாரணை யாழ்ப்பாணத்தில் நடைபெறுமென ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த ஒக்டோபர் ஒன்பதாந் திகதி முதல் பதினோராந் திகதி வரை மட்டக்களப்பில் விசாரணை நடைபெறும் என ஆணைக் குழு அறிவித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதேச செயலகங்களில் பொதுமக்களின் சாட்சியங்களைப் பெற்றுக்கொள்வதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆணைக் குழுவின் இணைப்புச் செயலாளர் குறிப்பிட்டார். கொழும்பு 7 ஹோட்டன் பிளேசிலுள்ள ஆணைக் குழுவின் அலுவலகத்தில் நேற்றைய தினம் யூ. பி. விஜேகோன், பேராசிரியர் ரொகான் குணரட்ன, ஃபிறைடே போரத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் சாட்சியமளித்தனர். கென் பாலேந்திரா நேற்றைய தினம் சாட்சியமளிக்க வருகை தரவில்லை.

லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் எதிர்வரும் ஐந்தாம் மற்றும் ஏழாம் திகதிகளிலும் விசாரணைகள் நடைபெறும்.

மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுக்கும் திட்டம் இல்லை – அனோமா பொன்சேகா

anoma-fonseka.jpgமன்னிப் புக்கோரி ஜனாதிபதியிடம் மேன்முறையீடு செய்யும் திட்டங்கள் எம்மிடம் இல்லை. அவர் (பொன்சேகா) எந்தவொரு குற்றத்தையும் இழைத்திருக்கவில்லை என்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா தெரிவித்திருக்கிறார்.

கேள்வி மனு நடைமுறைகளை மீறிய குற்றத்திற்காக 30 மாதங்கள் கடூழியச் சிறைத்தண்டனையைப் பெற்றிருக்கும் சரத் பொன்சேகா வியாழன் மாலை கொழும்பிலுள்ள வெலிக்கடைச் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளார். பொன்சேகா மன்னிப்புக்கோரி வேண்டுகோள் விடுத்தால் தீர்ப்பை மீளாய்வு செய்வதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தயாராக இருப்பதாக பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தெரிவித்ததாக ஐலன்ட் பத்திரிகை மேற்கோள்காட்டியிருந்தது. இந்நிலையிலேயே திருமதி பொன்சேகாவிடமிருந்து இக்கருத்து வெளிப்பட்டிருக்கிறது.

இதேவேளை, பொன்சேகாவின்விவகாரம் அரசியல் விவகாரம் அல்ல. ஆர்ப்பாட்டங்கள் மற்றும் மூன்றாம் தரப்பின் தலையீடுகளால் இதற்கு தீர்வுகாண முடியாது என்று கோதாபய ராஜபக்ஷ கூறியதாக ஐலன்ட் பத்திரிகை குறிப்பிட்டிருந்தது. ஆனால், தனது கணவருக்குத் தண்டனை வழங்கும் தீர்மானம் அரசியல் ரீதியானது என்றும் ஜனாதிபதியின் விருப்பங்களுக்கு இணங்க மேற்கொள்ளப்பட்டதென்றும் அனோமா கூறியிருக்கிறார்.

பொன்சேகா வேண்டுகோள் விடுத்தால் மீள்பரிசீலனை

பொன்சேகா வேண்டுகோள் விடுத்தால் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்டிருக்கும் சிறைத்தண்டனைக் காலம் குறித்து மீள்பரிசீலனை செய்வதற்கு ஜனாதிபதி விரும்புவதாக பத்திரிகையொன்றில் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவை மேற்கோள்காட்டி ஐலன்ட் பத்திரிகை இச்செய்தியை வெளியிட்டிருக்கிறது. பொன்சேகா, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் நேரடியாக வேண்டுகோள் விடுக்க வேண்டுமென கோதாபய ராஜபக்ஷ கூறியதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நேற்று முன்தினம் வியாழக்கிழமை பொன்சேகாவின் 30 மாத சிறைத்தண்டனைக் காலம் ஆரம்பமாகியுள்ளது. இராணுவ நீதிமன்றத்தின் பரிந்துரையை மீள்மதிப்பீடு செய்ய ஜனாதிபதி தயாராகவுள்ளார். பொன்சேகாவின் கோரிக்கையின் அடிப்படையில் அதனை மீள்பரிசீலனை செய்ய அவர் தயாராகவிருந்தார் என்று பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும் இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்புக்கெதிராக சிவில் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்போவதாக பொன்சேகாவின் கட்சியான ஜனநாயகத் தேசியக் கூட்டணி நேற்று முன்தினம் தெரிவித்தது.