October

October

பாராளுமன்றத்தில் சரஸ்வதி பூஜை

sri-lankan-parliament.jpgபாராளு மன்றத்தில் சரஸ்வதி பூஜை நேற்று வெள்ளிக்கிழமை சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பாராளுமன்ற முன்வாயில் மண்டபத்தில் காலை 10 மணிக்கு ஆரம்பமான சரஸ்வதி பூஜையில் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார், பிரதி சபாநாயகர் பிரியங்க ஜயரட்ண மற்றும் ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் கலந்து கொண்டனர்.

சரஸ்வதி பூஜையைத் தொடர்ந்து கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. சரஸ்வதி பூஜைக்காகப் பாராளுமன்ற முன்வாயில் மண்டபம் வாழை,மாவிலை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் பாராளுமன்ற ஊழியர்கள் பலரும் கலந்துகொண்ட அதேவேளை, வெளியிலிருந்தும் பலர் வந்திருந்தனர்

எழுதுமட்டுவாழ் பகுதிகளில் பொதுமக்களின் பல வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன.

தென்மராட்சி எழுதுமட்டுவாழ் பகுதியில் 15 நாட்களுக்கு முன்னர் காணப்பட்ட வீடுகள் தற்போது அழிக்கப்பட்டுள்ளதாக எழுதுமட்டுவாழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.

எழுதுமட்டுவாழ் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து வாழும் மக்கள் தங்களது வீடுகளை பார்வையிடுவதற்காக சென்ற போது நாகர்கோவில் வீதியிலிருந்த 267 வீடுகளில் இரு வீடுகள் தவிர்ந்த ஏனைய வீடுகள் முற்றாக அழிவடைந்துள்ளதாக தெரிவித்தனர். தங்கள் காணிகளிலிருந்த பயன்தரு மரங்களும் தறிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். தங்கள் குடியிருப்புக்கள் மழைய நிலைக்குத் திரும்ப நீண்டகாலம் எடுக்கும் எனவும் இம்மக்கள் கவலையுடன் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் மாற்று வலுவுள்ளோர் சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கு விண்ணப்பம்.

Jaipur_Artificial_Limbயாழ்ப்பாணத்தில் மாற்று வலுவுள்ளோர் (ஊனமுற்றோர்) சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ள விண்ணப்பித்துள்ளதாக யாழ்ப்பாணத்தில் செயற்கை உறுப்புக்களை வழங்கும் ஜெய்ப்பூர் நிறுவன அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

250 மாற்று வலுவுள்ளோர்  சாரதி அனுமதிப் பத்திரத்திற்கு விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விசேட பொறிமுறையின் கீழ் மாற்று வலுவுள்ளோருக்கு சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்கும் அதிகாரி, இவ்வாறானோருக்கு  மருத்துவ சான்றிதழ்களை வழங்கும் மருத்துவ அதிகாரி ஆகியோர் கொழும்பிலேயே இருப்பதால் யாழ்ப்பாணத்தில் பரீட்சைகளை நடத்துவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இவ்வதிகாரிகள் யாழப்பாணத்திற்கு வருகை தந்து மாற்று வலுவுள்ளோருக்கான சாரதி பரீட்சைகளை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உடும்பு கொண்டு சென்றவருக்கு 10 ஆயிரம் ரூபா அபராதம்.

உடும்பு கொண்டு சென்ற நபர் ஒருவருக்கு சாவகச்சேரி நீதிமன்றம் 10 ஆயிரம் ரூபா அபராதம் விதித்துள்ளது. தமது காணியைத் துப்புரவாக்கிய போது அங்கு காணப்பட்ட உடும்பு ஒன்றைப் பிடித்து வீட்டிற்கு கொண்டு செல்லும் வழியில் பொலிஸாரிடம் அவர் சிக்கிக்கொண்டார். கொடிகாமம் பொலிசார் மிருகவதைச் சட்டத்தின் கீழ் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தனர்.

இவ்வழக்கை விசாரித்த நீதவான் எம்.எம். அப்துல்லா குறித்த நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதன் பின்பு 10 ஆயிரம் ரூபா அபராதம் விதித்ததோடு உடும்பை விடுவிக்குமாறும் உத்தரவிட்டார்.
வடக்கின் கிராமங்களில் காணப்படும் உடும்புகளைப் பிடித்து இறைச்சியாக்கி உண்பது கிராம மக்களின் சாதாரண பழக்க வழக்கமாகவுள்ள நிலையில்,  உடும்பைப் பிடித்தால் மிருகவதைச் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதோடு அபராதமும் விதிக்கப்படும் என்பது சாதாரண கிராம மக்களுக்கு தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் குழுவினர் வடமராட்சிப் பகுதிக்கு வரவுள்ளனர்.

ICRC_Logoசர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதிகள் குழுவினர் எதிர்வரும் 18ஆம் திகதி யாழப்பாணத்திற்கு வந்து வடமராட்சிப் பகுதியில் மக்கள் மீள்குடியேற்றப்பட்ட பகுதிகளை பார்வையிடவுள்ளனர். 21ஆம் திகதி வரை இப்பகுதிகளைப் பார்வையிடும் செஞ்சிலுவைச் சங்கத்தின் சர்வதேசக்குழுவினர் வடமராட்சியில் 1.6 மில்லியன் நிதிச்செலவில் குடிநீர்விநியோகத்திட்டம் ஒன்றை தேசிய வடிகாலமைப்புச்சபையுடன் இணைந்து செயற்படுத்தவுள்ளமை குறித்தும்  ஆராயவுள்ளனர்.

அவுஸ்திரேலிய செஞ்சிலுவைச்சங்கம் வடமராட்சிக்கிழக்கில் மீள்குடியமர்ந்தவர்களுக்கு வழங்குவதற்கென கட்டப்பட்டு பின் இடைநிறுத்தப்பட்ட வீடைப்புத் திட்டத்தை மீளவும் தொடர்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் யாழ்.பிரிவின் செயலாளர் எஸ்.பாலகிருஸ்ணன் இத்தகவல்களை தெரிவித்துள்ளார்.

நாட்டில் 28,720 வேலையற்ற பட்டதாரிகள் இருப்பதாக கணிப்பீடு

dinesh.jpgதொழில் அமைச்சு மேற்கொண்ட ஆய்வின் படி 2010 ஆம் ஆண்டாகும் போது 28,720 வேலையற்ற பட்டதாரிகள் இருப்பதாக கணிப்பிடப்பட்டுள்ளது. இவர்களுக்கு தொழில் வழங்குவதற்கு தனியார்துறையுடன் இணைந்து வேலைத் திட்டமொன்றை ஆரம்பித்துள்ளதாக ஆளும் கட்சி பிரதம கொரடா அமைச்சர் தினேஷ் குணவர்தன கூறினார்.

வாய் மூல விடைக்காக தொழில் அமைச்சரிடம் வினவப்பட்டிருந்த கேள்விக்கான பதிலை அமைச்சர் சபையில் சமர்ப்பித்தார். 2010 ஆம் ஆண்டாகும் போது இலங்கையில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் குறித்தும் அவர்களுக்கு தொழில் வழங்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஐ. தே. க. எம். பி. தயாசிரி ஜயசேகர கேள்வி எழுப்பியிருந்தார்.

பொன்சேகா விவகாரம்; ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோரினால் தீர்ந்துவிடும் – பிரதமர்

dm.jpgசரத் பொன்சேகாவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் சட்டபூர்வமானதாகும். சிவில் சட்டத்தை மீறியது தொடர்பில் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தண்டனையை மாற்ற சபாநாயகருக்கு அதிகாரம் கிடையாதென பிரதமர் டி.எம். ஜயரட்ன நேற்று (8) சபையில் தெரிவித்தார். சரத் பொன்சேகா விடயத்தில் தவறான வழிகளைப் பின்பற்றாது ஜனாதிபதியிடம் மன்னிப்புக் கோரினால் இந்தப் பிரச்சினை இலகுவாக தீர்ந்துவிடும் எனவும் அவர் கூறினார்.

ரவி கருணாநாயக்க எம்.பி முன்வைத்த தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை முன் வைத்தார். இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த பிரதமர் மேலும் கூறியதாவது; இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டபூர்வமானதாகும். பாராளுமன்றத்தினுள் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பிலே சபாநாயகருக்கு அதிகாரம் உள்ளது. சாதாரண குடிமகனுக்குள்ள சட்டமே எம்.பி. தொடர்பில் உள்ளது. குற்றவியல் சட்டத்தை மீறும் எம்.பி ஒருவரை பாராளுமன்றத்தைத் தவிர வேறு எங்கு வைத்தும் கைது செய்ய முடியும். அவரை பாராளுமன்றத்திற்கு அனுப்பாதிருக்கவும் சட்டத்தில் இடமுண்டு. அந்த எம்.பி.யை பாராளுமன்றத்திற்கு அழைக்க சபாநாயகருக்கு அதிகாரம் கிடையாது.

மக்களின் கவனத்தை திருப்பவே ஐ.தே.க.வும் ஜே.வி.பியும் இந்த விடயத்தை முன்னெடுப்பதாக தெரிகிறது. ஜனாதிபதியிடம் மன்னிப்புக் கோருவதை விடுத்து தேங்காய் உடைப்பதால் எதுவித பயனும் ஏற்படாது.பாராளுமன்றத்தில் ஒரு நிமிடம் உரையாற்றுவதற்கு பொதுமக்களின் பெருமளவு பணம் செலவாகிறது. ஒரு வசனத்தில் சாதிக்கக் கூடிய விடயத்தை ஏன் பெரிது படுத்துகிaர்கள். மன்னிப்புக்கோரும்படி எதிர்க்கட்சித் தலைவருக்கு பொன்சேகாவின் மனைவியை கேட்க முடியும்.

கோரமின்மையால் சபை அமர்வு 19 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

sri-lankan-parliament.jpgஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட எம்.பி. ரவி கருணாநாயக்கவின் தனிநபர் பிரேரணை நேற்று சபையில் விவாதத்திற்கு எடுக்கப்பட்ட போதிலும் கோரமில்லாததால் பாராளுமன்றம் எதிர்வரும் 19 ஆம் திகதி வரையும் ஒத்திவைக்கப்பட்டது. பாராளுமன்றம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று பிற்பகல் கூடியது.

ஐ.ம.சு.மு.யின் காலி மாவட்ட எம்.பி. சந்திம வீரக்கொடி உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது பிற்பகல் நேரம் 2.40 மணியாகும். சாபாநாயகரின் பணிப்பின் பேரில் கோரம் மணி ஒலிக்கப்பட்டது.

சரியாக பிற்பகல் 2.45 மணியளவில் சபாநாயகர் சபையில் 18 உறுப்பினர்களே அமர்ந்திருப்பதால் சபை நடவடிக்கையைக் கொண்டு செல்லுவதற்கு போதிய கோரமில்லை எனக்குறிப்பிட்டு சபையை எதிர்வரும் 19 ஆம் திகதி வரையும் ஒத்திவைத்தார்.ரவி கருணாநாயக்க எம்.பியின் ஜனாதிபதி, பிரதமர் பதவி வகிப்போர் அமைச்சரவைப் பதவிகளை வகிப்பது தொடர்பான தனிநபர் பிரேரணையே நேற்று சபையில் விவாதத்திற்கு எடுக்கப்பட்டிருந்தது.

மீட்கப்பட்ட நகைகள் மீள்குடியேற்றத்தின் பின் உரியவரிடம் ஒப்படைப்பு – முரளிதரன்

murali.jpgயுத்தம் காரணமாக உள்ளக இடம்பெயர்வுக்கு உள்ளானவர்களில் 5,44,494 பேர் இதுவரை மீள்குடி யேற்றப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுயதொழில், மீன்பிடி, விவசாயம் மற்றும் அன்றாட கூலி வேலை செய்வதினூடாக தமது ஜீவனோபாயத்தை மேற்கொள்வதாக பிரதி மீள்குடியேற்ற அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ரவி கருணாநாயக்க எம்.பி வாய்மூல விடைக்கான கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், தற்பொழுது 1,65,755 பேர் முகாம்களில் உள்ளனர். மீள்குடியேற்றப்படும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 25 ஆயிரம் ரூபா உதவி வழங்கப்படுகிறது.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது கண்டெடுக்கப்பட்ட தங்க ஆபரணங்கள் மக்கள் மீள்குடியேற்றப்பட்ட பின் அப்பிரதேசங்களில் ஆரம்பிக்கப்படும் மக்கள் வங்கிக்கிளைகள் ஊடாக மீள வழங்கப்படும்.

வவுனியா மெனிக்பாம் முகாமில் மீள்குடியேற்றுவதற்காக 8228 குடும்பங் களைச் சேர்ந்த 24,280 பேர் எஞ்சியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் 22,264 குடும்பங்களைச் சேர்ந்த 64,924 பேரும், அநுராதபுரத்தில் 4273 பேரும், குருநாகலில் 730 பேரும், பாணந்துறையில் 1405 பேரும், புத்தளத்தில் 67,428 பேரும் மீள்குடியேற்றப்பட வேண்டியுள்ளனர்.

சீரற்ற காலநிலை நீடிக்கும்

bad-weather-in-sri-lanka.jpgநாட்டில் தற்போது நிலவும் கடுங்காற்றுடன் கூடிய சீரற்ற காலநிலை மேலும் சில தினங்களுக்கு நீடிக்கு மென்று வானிலை அவதான நிலையம் தெரிவித்தது. மத்திய மலைப் பகுதியின் மேற்குப் பிரதேசத்தில் கடுங்காற்று நீடிக்குமென்று வானிலை அவதானிப்பாளர் பிரீதிகா ஜயகொடி தெரிவித்தார்.

மேல் மாகாணம், சப்ரகமுவ, மத் திய மாகாணங்களிலும் தென் மாகா ணத்தின் காலி, மாத்தறை மாவட்ட ங்களில் இடைக்கிடை மழை பெய்வதுடன், கடுங்காற்றும் வீசுமென்று வானிலை அவதான நிலையம் தெரிவித்தது. இதேவேளை, மலையகத்தின் நீரேந்தும் பகுதிகளில் கடுங்காற்றுடன் கூடிய மழை தொடர்ந்து வருவதாகத் தகவல்கள் தெரிவித்தன.