ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட எம்.பி. ரவி கருணாநாயக்கவின் தனிநபர் பிரேரணை நேற்று சபையில் விவாதத்திற்கு எடுக்கப்பட்ட போதிலும் கோரமில்லாததால் பாராளுமன்றம் எதிர்வரும் 19 ஆம் திகதி வரையும் ஒத்திவைக்கப்பட்டது. பாராளுமன்றம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று பிற்பகல் கூடியது.
ஐ.ம.சு.மு.யின் காலி மாவட்ட எம்.பி. சந்திம வீரக்கொடி உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது பிற்பகல் நேரம் 2.40 மணியாகும். சாபாநாயகரின் பணிப்பின் பேரில் கோரம் மணி ஒலிக்கப்பட்டது.
சரியாக பிற்பகல் 2.45 மணியளவில் சபாநாயகர் சபையில் 18 உறுப்பினர்களே அமர்ந்திருப்பதால் சபை நடவடிக்கையைக் கொண்டு செல்லுவதற்கு போதிய கோரமில்லை எனக்குறிப்பிட்டு சபையை எதிர்வரும் 19 ஆம் திகதி வரையும் ஒத்திவைத்தார்.ரவி கருணாநாயக்க எம்.பியின் ஜனாதிபதி, பிரதமர் பதவி வகிப்போர் அமைச்சரவைப் பதவிகளை வகிப்பது தொடர்பான தனிநபர் பிரேரணையே நேற்று சபையில் விவாதத்திற்கு எடுக்கப்பட்டிருந்தது.