June

June

17வது திருத்தச் சட்டத்தை மீண்டும். திருத்தி அமுல்படுத்த வேண்டும்

2001ம் ஆண்டு பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட 17வது திருத்தச் சட்டம் மீண்டும் திருத்தப்பட்டு அவை அமுல்படுத்தப்பட வேண்டு மென்ற தீர்மானமொன்று நேற்று முன்தினம் (08) மத்திய மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டது.

குறித்த தீர்மானத்தை மத்திய மாகாண சபை மத்திய அரசுக்கு பிரேரணையாக முன்வைக்கவும் முடிவு செய்யப்பட்டது. மத்திய மாகாண சபையின் 5வது சபைக் கூட்டம் நேற்று முன்தினம் பள்ளேகலையில் அமைந்துள்ள மத்திய மாகாண சபையின் சபைக் கூட்ட மண்டபத்தில் பிரதித் தலைவர் டப்ளியூ. எம். யசமான தலைமையில் இடம்பெற்றது.

மத்திய மாகாண சபை உறுப்பினர் எஸ். இராஜரட்ணத்தினால் கடந்த 18ம் திகதி சபைக்கு முன் வைக்கப்பட்ட குறித்த பிரேரணை நேற்று முன்தினம் சபை கலந்துரையாடலுக்கு கொண்டு வரப்பட்டதையடுத்து இப்பிரேரணைக்கு ஆளும் கட்சி மற்றும் எதிர்க் கட்சியினர் ஆதரவு வழங்கினர்.

அரசின் அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தில் மலையக மக்கள் சார்ந்த சரத்து முன்வைப்பு

அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள அரசியலமைப்பு திருத்தத்தில் மலையக மக்கள் சார்ந்த சரத்தொன்றையும் முன்வைப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மலையகத்திலுள்ள அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புகள் ஆகியவற்றின் கருத்துக்கள், ஆலோசனைகள் திரட்டப்பட்டு ஒரு பொதுவான கோவையாக கருத்துக்கள் இதில் முன்வைக்கப்படவுள்ளன. தேர்தல் மாற்றம், உள்ளூராட்சித் துறை சீர்த்திருத்தம் உள்ளிட்ட மலையக மக்கள் சார்ந்த முக்கிய பல விடயங்கள் இதில் உள்ளடக்கப்படுமென இதற்கென நியமிக்கப்பட்டுள்ள விதந்துரைக் குழுவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பி.பிடி. தேவராஜ் தெரிவித்தார்.

மேற்படி சகல அமைப்புகளுடனும் தனித்தனியாகக் கலந்துரையாடிய பின் அனைத்து அமைப்புக்களையும் ஒன்றாக கூட்டி அதனூடான பொதுக் கருத்தே அரசியலமைப்புக்கான சரத்தாக முன்வைக்கப்படுமென குறிப்பிட்ட அவர், அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இதற்கென கடந்த வாரங்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, மனோகணேசன் தலைமையிலான கட்சி, திகாம்பரம் எம்.பி. தலைமையிலான கட்சி மற்றும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்களுடனும் பேச்சு நடத்தியுள்ளதாகத் தெரிவித்த அவர், ஏனைய அமைப்புக்களுடனும் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.

சமுதாய ஆலோசனைக் குழு என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள மேற்படி குழுவில் முன்னாள் அமைச்சர் பி.பி. தேவராஜ் தலைவராகவும் தொழிலதிபர் தெ.ஈஸ்வரன், குமார் நடேசன் ஆகியோரும் அங்கத்தவர்களாக உள்ளனர்.

அரசியலமைப்பு திருத்தத்தில் தேர்தல் மாற்றம், உள்ளூராட்சித் துறை மாற்றம் உள்ளிட்ட மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சார்ந்த விடயங்களும் ஆலோசனைகளாக முன்வைக்கப் படவுள்ளன.

இது தொடர்பில் பல அரசியல் கட்சிகள், தொழிற் சங்கங்களின் ஆலோசனைகள் அறிக்கைகளாகக் கிடைக்கப்பெற்றுள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கூட்டமைப்பு-அரசு பேச்சு தொடர்ந்து இடம்பெறும். செய்தியாளர் மாநாட்டில் இரா.சம்பந்தன்

Sambanthan_R_TNAதமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பில் அரசாங்கத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடவும், இணைந்து செயற்படவும் ஜனாதிபதியுடனான சந்திப்பில் இணக்கம் கண்டுள்ளதாகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

ஜனாதிபதி இந்தியாவிலிருந்து நாடு திரும்பியதும் அடுத்த கட்டப் பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ரசாங்கம், இடம்பெயர்ந்து மீள்குடியேறும் மக்களுக்கு இன்னும் பணிகளை ஆற்ற முடியுமென்றும் அதற்காக உலக நாடுகளின் உதவியைப் பெற்றுக் கொடுக்கத் தயாரென்றும் கூறிய சம்பந்தன் எம்.பி. அதற்காக சர்வதேச நாடுகளுக்கு நேரடியாகச் சென்று கோரிக்கை விடுக்கவும் தயார் எனத் தெரிவித்தார்.

கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்ற குழு அறையில் நேற்றுப் பிற்பகல் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே சம்பந்தன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார். அண்மையில் வன்னிக்கு விஜயம் செய்து, 28 கிராமங்களில் மீள்குடியேறிய மக்களின் நிலவரங்களைக் கூட்டமைப்பினர் நேரில் அவதானித்து ஆராயந்துள்ளனர். இது தொடர்பில் தயாரிக்கப்பட்ட விரிவான அறிக்கையொன்றை நேற்றுப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த சம்பந்தன் எம்.பி. செய்தியாளர் மாநாட்டிலும் அதனை வெளியிட்டார்.

இடம்பெயர்ந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் அவர்களுக்கு நிரந்தரமான வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கும் அரசாங்கத்திற்குத் தார்மீக ரீதியாகவும் சட்டரீதியாகவும் கடப்பாடு உள்ளது என்று சுட்டிக்காட்டிய அவர் வடக்கில் தமது விஜயத்தின்போது நேரில் தெரிந்து கொண்ட குறைபாடுகளை அரசாங்கத்துக்குச் சமர்ப்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். ட்டமைப்பினர் அண்மையில் ஜனாதிபதியுடன் நடத்திய சந்திப்பு தொடர்பில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் அளித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எம்.பி. சந்திப்பைத் தொடர இணக்கம் கண்டிருப்பதாகவும் கூட்டமாக அல்லாமல் சிறிய சிறிய குழுக்களை அமைத்து பேச்சுவார்த்தையைத் தொடரவுள்ளதாகவும் ஜனாதிபதி நாடு திரும்பியதும் அதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்படுமெனவும் குறிப்பிட்டார்.

நாட்டின் பிரச்சினைக்குத் தீர்வொன்று காணப்பட வேண்டுமென்பதை இருதரப்பும் ஏற்றுக் கொண்டதாகக் கூறிய சம்பந்தன் எம்.பி, “ஜனாதிபதியை நாம் சந்திக்கச் சென்ற போது, புலிப் பயங்கரவாதிகள் கேட்டதை என்னிடம் கேட்காதீர்கள் என்றார். நாம் அதனைக் கேட்க வரவில்லை என்று கூறினேன். நாம் அரசாங்கத்தைக் குறைகூறவில்லை. அரசாங்கம் மக்களுக்குப் பணியாற்றி இருக்கிறது. இன்னும் செய்ய வேண்டியிருக்கிறது.

கடந்த காலங்களில் அரசுடன் இணைந்து பணியாற்றும் சூழல் ஏற்படவில்லை. அரசுடன் கூட்டமைப்பு பேச்சு நடத்தவில்லை என்று கூறுவது தவறு. அழைத்த அத்தனைப் பேச்சுவார்த்தைக்கும் சென்றிருக்கிறோம். இனி மக்களின் நலன்சார்ந்த விடயங்களில் இணைந்து செயற்படுவோம்” என்றும் தெரிவித்தார்.

“உதவி வழங்கும் நாடுகளுக்கு நீங்கள் விடுக்கும் செய்தி என்ன?” என்று செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்த சம்பந்தன், ‘இடம்பெயர்ந்த மக்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும். சொந்தத் தொழிலுடன் சுகபோகமாக வாழ்ந்த மக்கள் இன்று வெறுங்கையுடன் நிற்கிறார்கள். அவர்களை மீளவும் இயல்பு வாழ்க்கைக்குக் கொண்டு வருவதற்குப் பெருந்தொகைப் பணம் அவசியமாகிறது. எனவே, உதவியை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். நிதியைப் பெற்றுக் கொடுக்கும் அதேநேரம் அது உரிய முறையில் செலவிடப்படுகிறதா என்பதை அவர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

வடக்கில் பல்வேறு உதவி அ. அ. பிரிவுகளை பி.செ. பிரிவுகளாக்க முடிவு

உள்ளூராட்சிச்சபை எல்லைகள் மீள்நிர்ணயத்தின் போது வடக்கில் ஊர்காவற்றுறை, காரைநகர், புதுக்குடியிருப்பு உள்ளிட்ட பல உதவி அரசாங்க அதிபர் பிரிவுகள் பிரதேச செயலகப் பிரிவுகளாக மாற்றம் பெறவுள்ளன. இதற்கான அங்கீகாரத்தை அமைச்சரவை வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் பதில் தகவல் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் இது பற்றி தெரிவித்த அமைச்சர் வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களிலுள்ள பல உதவி அரசாங்க அதிபர் பிரிவுகள் பிரதேச செயலாளர் பிரிவுகளாகத் தரமுயரும் எனவும் குறிப்பிட்டார்.

இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன அமைச்சரவைக்குச் சமர்ப்பித்துள்ளதுடன் அதற்கான அங்கீகாரத்தை அமைச்சரவை வழங்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஊடகத்துறை பதில் அமைச்சராக லக்ஷ்மன் யாப்பா

பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, தகவல் ஊடகத்துறை பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே இந்த நியமனத்தை வழங்கியுள்ளார். இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நாடு திரும்பும்வரை இவர் பதில் அமைச்சராக பதவி வகிப்பார்.

வன்னியில் மீள்குடியேறும் மக்கள் பாம்புகளின் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

images-snakes.jpgவன்னியில் மீள் குடியமர்த்தப்படும் மக்களுக்கு பாம்புகள் மிகவும் அச்சுறுத்தலாக உள்ளன. பற்றைக் காடுகளாக இருக்கும் குடியிருப்புக்களில் பாம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ளது. வீடுகள் அழிவுற்ற நிலையில்  தற்காலிக குடில்களை அமைத்து வாழும் மக்களின் குடில்களுக்குள்ளும் சில வேளைகளில் பாம்புகள் நுழைந்து விடுகின்றன. சில நாட்களுக்கு முன்னர் கிளிநொச்சி நகரில் ஏ-9 பாதைக்கு அண்மையாகவுள்ள கடையொன்றின் உரிமையாளர் தனது கட்டத்தைப் பார்க்கச் சென்ற போது அவரை பாம்பு தீண்டியது. உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதால் அவசர சிகிச்சைகளின் பின்னர் உயிர் தப்பினார்.

தற்போது மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள தார்மபுரம், விசுவமடு பகுதிகளிலும் பாம்பின் தொல்லை அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதே வேளை, பளை பகுதியில் மீள்குடியமர்த்தபட்ட மக்களும் பாம்பக்கடிக்கு இலக்காகி வருகின்றனர். இப்பகுதிகளிலும் நிரந்தர வீடுகள் இல்லாததால் தற்காலிக கொட்டில்களிலேயே மக்கள் குடியிருக்கின்றனர். இக்கொட்டில்களில் இரவு வேளைகளில் பாம்புகள் புகுந்து தீண்டுவதாக தெரிவிக்கப்படுகிறது. பளைப்பகுதியிலிருந்து பலர் பாம்பினால் கடியுண்டு சாவகச்சேரி வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வருவதாக அவ்வைத்தியசாலை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

இதே வேளை, தர்மபுரம, விசுவமடு பகுதிகளின் காணிகளிலுள்ள தென்னை மற்றும், பயன்தரும் மரங்களை காட்டு யானைகள் நாசம் செய்துள்ளதாக அப்பகுதிகளில் மீள்குடியேறும் மக்கள் தெரிவிக்கன்றனர்.

Related News:

பாவம் பார்த்த பாலகியையும் விட்டு வைக்காத பாம்பு – ஆனமடுவயில் நேர்ந்த பரிதாபம்

பாம்புக்கடியால் இலங்கையில் 33 ஆயிரம் பேர் பாதிப்பு

‘2015 ஆண்டுக்கிடையில் யாழ் அபிவிருத்தியில் முழுமை பெற வேண்டும்!’ – யாழ் அரசாங்க அதிபர்

Ganesh_GA_Jaffnaயாழ்.மாவட்டம் 2015ஆம் ஆண்டுக்கிடையில் அதன் அபிவிருத்தியில் பாரிய மாற்றத்தைப் பெற வேண்டும் எனவும்,  அதற்கான திட்டங்களை தயாரித்து திறம்பட செயற்படுமாறும் யாழ்ப்பாண அரசாங்க அதிபர் கே. கணேஸ் திணைக்கள தலைவர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். யாழ் செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி தொடர்பான மீளாய்வுக் கூட்டத்தில் திணைக்களத் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடுகையிலேயெ அவர் இவ்வாறு பணிப்புரை விடுத்தார்.

யாழ்.மாவட்டம்  சகல தறைகளிலும் வளாச்சியடைய வேண்டும், கல்வி சுகாதாரம், போக்குவரத்து விவசாயம், எனப் பல்வேறு துறைகளையும் கட்டியெழுப்ப வேண்டிய தேவை  இன்றுள்ளது இதற்காக அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

வன்னியில் மீண்டும் மலேரியா நோயின் தாக்கம் அதிகரித்து வருகின்றது.

malaria_mosquito_headவன்னியில் மீண்டும் மலேரியா காய்ச்சல் பரவி வருகின்றது. கடந்த சில தினங்களாக 15இற்கும் மேற்பட்டோர் மலேரியா நோய் இனங்காணப்பட்டு சிகிச்சைகளைப் பெற்று வருகின்றனர். பல வருடங்களுக்கு முன்னர் தீவிர மலேரியா நோய்  பிரதேசமாக கிளிநொச்சி காணப்பட்டது ஆனால், சுமார் 10 வருடங்களாக இந்நோய்ப் பரவல் முற்றாக ஒழிக்கப்பட்டிருந்தது.

போரின் பின்,  மீள்குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் மீண்டும் அந்நோய்த் தொற்றினால் பொதுமக்கள்  பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொக்காவில் பகுதியில் அமைக்கப்பட்டுவரும் தொலைத்தொடர்பு கோபுர வேலைகளுக்காக தென்பகுதியிலிருந்து அழைத்து வரப்பட்ட தொழிலாளர்களிடமே முதலில் இந்நோய் காணப்பட்டுள்ளது.

இதனையடுத்து மலேரியா நோய்த் தடுப்பு மற்றும், விழிப்பு நடவடிக்கைகளில் மலேரியா தடுப்புப் பிரிவினர் தீவிரமாக செயற்பட்டு வருவதாக கிளிநொச்சி வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் தேசிய கூட்டமைப்பும் அரசும் தமிழ் மக்களை வஞ்சித்து விட்டன. : வீ.ஆனந்தசங்கரி (தலைவர், தவிகூ)

Rehabilitation_Wanniதமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அரசுடன் (June 7 2010) பேச்சுவார்த்தை நடத்தி எடுத்துள்ள முடிவுகள் ஏமாற்றமளிக்கின்றன.  தடுப்புக்காவலில் உள்ள விடுதலைப்புலி சந்தேக நபர்களை உடன் விடுதலை செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை நியாயப்படுத்த த.தே.கூட்டமைப்பு தவறிவிட்டது. இவர்களில் பெரும்பான்மையினர் அரசு விடுத்த வேண்டுகோளை ஏற்றும் அரசு கொடுத்த உறுதி மொழிகளை நம்பியும் சரணடைந்தவர்களாவர். அரசின் வேண்டுகோளையும் உறுதி மொழியையும்  உதாசீனம் செய்து முகாமிலிருந்து தப்பிச் சென்றவர்கள் பெருந்தொகையினர் உள் நாட்டிலும், வெளி நாட்டிலும் நிம்மதியாக வாழ்கின்றனர். சில அரச அதிகாரிகள், உயர்மட்ட அரசியல்வாதிகளின் உதவியுடன் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் இன்று அயல் நாடுகளிலும், பிறநாடுகளிலும் உள்@ரிலும் நிம்மதியாக வாழ, அப்பாவி மக்களின் பிள்ளைகள் இன்று தடுப்பு முகாம்களில் இருக்கின்றனர். அவர்களின் குடும்பத்தவர்கள் ஒரு வேளை உணவைக்கூட நிம்மதியாக உண்ண முடியாமலுள்ளனர்.  அண்மையில் விடுவிக்கப்பட்ட யாரோ ஒருவர் அநுராதபுரத்தில் புலிகளின் புலனாய்வுப் பணியில் ஈடுபட்டதற்காக பிடிபட்டார் என அரசு தரப்பால் கூறப்பட்ட கருத்திற்கு தகுந்த பதிலை கூட்டமைப்பினர் கொடுக்கத் தவறிவிட்டனர். ஒரு சிலரின் தவறான செயற் பாட்டிற்காக ஒட்டுமொத்த கைதிகளை தடுப்புக்காவலில் விடுதலை செய்யாமல் வைத்திருக்க முடியாதென்பதை விளக்கமாக அரசுக்கு எடுத்துக் கூற கூட்டமைப்பினர் தவறி விட்டனர். 

அன்று விடுதலைப் புலிகளுடன் செயற்பட்டவர்களில் பலர் இன்று அரசுடன் செயற்படுகின்றார்கள் என்பதை எடுத்துக் கூறி சிறையில் உள்ளவர்களின் விடுதலை பற்றி, ஏன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்  விவாதிக்கவில்லை? தடுப்புக் காவலில் உள்ளவர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் அழைத்து சில உயர்மட்ட குழுக்களை அமைத்து அவர்களின் சிபார்சுகளைப் பெற்றுக்கொண்டு அவர்களின் பெற்றோர்களிடம் கையளிக்குமாறு ஏன் கேட்கவில்லை? படிப்பில் ஈடுபட்டிருந்தவர்களை விடுவிக்கும்படி ஏன் கேட்கவில்லை? அதே போல் மோசமான குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் பிணையில் நின்று கொண்டு வழக்கை எதிர்கொள்ளும் போது, தற்போது பல மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகளை பெற்றோரின் உறுதியுடன் வெளியில் விடும்படி ஏன் கேட்கவில்லை? இந்த யோசனைகளை நான் பல தடவைகள் முன்வைத்துள்ளேன். எத்தனை ஆயிரம் பேர் புலிகளுடன் இருந்தவர்கள் இன்று வெளிநாடுகளுக்குச் சென்று விட்டனர் என்பதை அரசு அறியாதா?

அடுத்ததாக மீளக்குடியமர்ந்த வன்னி மக்களுக்கு தொழில் வசதி கருதி உதவி செய்ய முன்வருவது மிக வேடிக்கையாகும். வன்னி மக்களில் 90 வீதத்திற்கு மேற்பட்டவர்கள் விவசாயிகளும், விவசாயத் தொழிலாளிகளுமாவர். அநேகமானேர் செலவச் செழிப்போடு வாழ்ந்தவர்கள். இன்று அனைத்தையும் இழந்து ஓட்டாண்டியாக அரசிடம் கையேந்தி நிற்கின்றனர். உண்ண, உறங்க வசதியற்ற நிலையில் சிறு கூடாரங்களில் வாழ்கின்றனர். இவர்களுக்கு முதலில் அவசியமானது உறைவிடம். போரால் அழிவுற்ற பகுதிகளில் புலிகள் தற்போது இல்லை. ஆகவே மக்களின் வீடுளைக் கட்டிக் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பும், கடமையும் ஆகும். இக்கடமையிலிருந்து அரசாங்கம் விலகிச்செல்ல முடியாது.

போரினால் அழிவுற்ற ஒரு இலட்சத்து அறுபதினாயிரம் வீடுகளைக் கட்டிக்கொடுக்க அரசாங்கத்திடம் பணமில்லை எனவும், அம்மக்கள் தங்கள் விவசாயத்தின் இரு தடவை அறுவடைகள் மூலமாக தாங்களே தங்கள் வீடுகளைக் கட்டிக்கொள்வார்கள் எனவும் கூட்டமைப்பினரிடம் ஜனாதிபதி தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்னியில் போரினால் தங்கள் வீடுகளை இழந்த மக்கள் அரசாங்கம் தங்கள் வீடுகளைக் கடடித்தரும் என்கிற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர். ஜனாதிபதியின் இச்செய்தியினால், அவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

தற்போது 1500 தொடக்கம் 2000 ஏக்கர் வரையிலான காணிகளில் விவசாயம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. ஒரு ஏக்கருக்கு சுமார் 30 மூடை விளைச்சல் என்று கணக்கிட்டாலும், உற்பத்திச் செலவு போக. அதிலிருந்து கிடைக்கும் இலாபம் அவர்களின் வாழ்க்கைச் செலவிற்கே போதாது.  இதே வேளை, இந்த 2000 ஏக்கர் நிலம் எத்தனைக் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது? ஒவ்வொரு குடும்பத்திற்கும் இதன் மூலம் கிடைக்கும் வருமானம் என்ன? இந்நிலையில், நெல் அறுவடையின் மூலமாக வீடுகளைக் கட்டிக்கொள்வது எவ்வாறு? இவையெல்லாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய அல்லது, சாத்தியமாகக் கூடிய விடயங்களா? இதனை ஒரு கேலிக்கூத்து என்று கூறாமல் வேறெவ்வாறு கூறுவது?

உண்மையில் வீடுகளை இழந்தவர்களுக்கு அதனைக் கட்டிக்கொடுக்க வெளிநாடுகளின் உதவிகளைப் பெறக்கூடிய வாய்ப்புகள் அதிகமுள்ளன. அரசாங்கத்தின் பணத்தை எதிர்ப்பார்க்க வேண்டிய அவசியமில்லை. அதனை அரசாங்கத்தினால் செய்ய முடியாது என வெளிப்படையாகத் தெரிவித்தால் அதனைச் செய்வதற்கு நான் தயாராக இருக்கின்றேன் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். அனைத்துலக நாடுகளிடமும் அமைப்புகளிடமும் எனக்குள்ள தொடர்புகளைப் பயன்படுத்தி அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்குத் தயாராகவுள்ளேன் என்பதையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

இனப்பிரச்சினை தீர்வு சம்பந்தமாக அரசும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து கூட்டுக்குழு அமைக்கவிருப்பது ஆட்சேபனைக் குரியதாகும். சகல கட்சிகளையும் உள்ளடக்கியதாக குழுவொன்றை அமைத்து இனப்பிரச்சினை தொடர்பாக பேசித் தீர்வு காணவேண்டும் என்பதே தமிழர் விடுதலைக் கூட்டணியின் கருத்தாகும்.

வைகோ, நெடுமாறன், சீமான், தொல் திருமாவளவன் கைது

chenai.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய விஜயத்தை எதிர்த்து தமிழகத்தில் ஆர்ப்பாட்டம் செய்த தமிழக முக்கியஸ்தர்கள் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தென்னிந்திய அரசியல் வாதிகளான வைகோ, பழ. நெடுமாறன், தொல். திருமாவளவன் உட்பட திரைப்பட நடிகர்கள் இயக்குநர்கள் அடங்கலாக நூற்றுக் கணக்கானோர் நேற்று தமிழ் நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டிருப்பவர்களில் திரைப்பட இயக்குநரும் நடிகருமான சீமான் டி.ராஜேந்தர், மகேந்திரன், நல்லகண்ணு போன்றோரும் அடங்கியுள்ளனர். தமிழகத்தில் சென்னையிலுள்ள இலங்கை உதவி உயர்ஸ் தானிகராலயம், இலங்கை வங்கி போன்ற பகுதிகளுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் இவ் வீதிகளும் மூடப்பட்டிருந்தன.

தமிழகத்தின் திருப்பூர், மயிலாடுதுறை, சிவகங்கை, கோவை, காந்திநகர், நாகர்கோவில், கரூர், சென்னை, ஓசூர், தேனி, நாமக்கல் போன்ற பகுதிகளிலேயே இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதில் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் கலந்து கொண்டிருந்த நிலையிலே அவர்களில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தமிழக செய்திகள் மேலும் தெரிவித்தன.