19
19
அடிப்படைத் தமிழ்க் கற்கை நெறிகளை முடித்துக் கொண்ட முப்படை வீரர்களுக்கு நேற்று சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பாமன்கடையிலுள்ள தேசிய கெடெட் படையணியின் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது அதன் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் காமினி ஜயசுந்தர சான்றிதழ்களை வழங்கிவைத்தார்.
தேசிய கெடெட் படையணியின் ஏற்பாட்டில் அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட கற்கை நெறிகளை முடித்துக் கொண்ட 36 முப்படை வீரர்களே சான்றிதழ்களை பெற்றுக் கொண்டனர்.
ரன்டெம்பேயிலுள்ள தேசிய கெடெட் படையின் பயிற்சி நிலையத்தில் இந்த படைவீரர்களுக்கு 45 நாட்கள் பயிற்சி வழங்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துத் கொண்ட தேசிய கெடெட் படையணியின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் காமினி ஜயசுந்தர கருத்து தெரிவிக்கையில்,
தமிழ் பேசும் மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கும் நோக்குடனே பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் வழிகாட்டலில் இந்த கற்கை நெறி வழங்கப்பட்டது. தமிழ் மொழியை கற்றதன் மூலம் வடக்கு, கிழக்கு பிரதேசங்களைச் சேர்ந்த மக்களின் உள்ளத்தை வென்று ஐக்கியத்துட னும், அவர்களது பங்களிப்புகளுடனும் சேவைகளை வழங்க முடியும்.
நீங்கள் கற்றவற்றை நல்ல விடயங்களுக்கு பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் இனப்பிரச்சினை ஏற்படுவதை தவிர்க்க முடியும். தமிழ் மொழி தெரிந்த படை வீரர்கள் மிகவும் குறைந்தளவே உள்ளனர். இதனால், முப்படையினருக்கும் உங்களது சேவை மிக முக்கியமானதாக அமைந்துள்ளது.
தமிழ் மொழியை கற்றதன் மூலம் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் சிறந்த சேவைகளை செய்யவும், புலனாய்வுத் துறையினருக்கு ஒத்துழைக்கவும் முடியும் என்றும் மேஜர் ஜெனரல் தெரிவித்தார்.
இதன் மூலம் தமிழ் பேசும் மக்களுடன் பணிவாக நடந்து கொள்வதுடன் அவர்களுக்கு உதவியாகவும் இருக்க வேண்டும் என்றும், அவர் கற்கை நெறியை முடித்த முப்படை வீரர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
கலைஞர் கலாபூஷணம் மணி மேகலை இராமநாதன் கொழும்பில் காலமானார். சுமார் மூன்று மாதங்களாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்ப ட்டிருந்த வேளையிலேயே நேற்று முன்தினம் இரவு காலமானார்.
இறக்கும் போது அவருக்கு வயது 64. அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 20 ஆம் திகதி கொழும்பு- 10. ஸ்ரீ பிரியதர்ஷன மாவத்தையிலுள்ள அன்னாரின் இல்லத்தில் இருந்து கலாபவனத்திற்கு இன்று எடுத்துச் செல்லப்படும். நாளை பி.ப.4 மணியளவில் பொரளை மயானத்தில் நடைபெறும்.
கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்ட கலைஞர் மணிமேகலை தனது 9வது வயதி லேயே பாடகியாக கலைத்துறைக்குள் பிரவேசித்தார். அதன்பின் நர்த்தகியாக, நடிகையாக கடந்த 53 ஆண்டுகள் ஈழத்துக் கலையுலகில் பிரகாசித்தார்.
மேடைநாடகம், வானொலி, வட மோடி தென்மோடிக் கூத்துகள், சினிமா சின்னத்திரை, வில்லுப்பாட்டு என எல்லாவற்றிலும் கடந்த 50 ஆண்டுகளாக ஈடுபட்டுவந்த ஒரே கலைஞர் மணிமேகலை என்பது குறிப்பிடத்தக்கது
பயணப் பொதி ஒன்றில் ஒவ்வொரு கிலோவாக பொதி செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த 28 கிலோ ஹெரோயின் போதைப் பொருளை கற்பிட்டி பொலிஸார் நேற்று கைப்பற்றியுள்ளனர். இதன் பெறுமதி 14 கோடி ரூபா என மதிக்கப்பட்டு ள்ளது. ஹெரோயின் போதைப் பொருளை அருகில் வைத்திருந்தார் எனக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர். முந்தல் அக்கரவெளி பகுதி வீடொன்றில் இருந்தே 28 கிலோ ஹெரோயின் போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சுமார் 14 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் குறிப்பிட்ட இடத்தில் ஒவ்வொரு கிலோவாக பாதுகாப்பான முறையில் பொதிசெய்யப்பட்டு பயணப் பொதி ஒன்றில் வைத்து கொண்டு செல்லவுள்ளதாக கற்பிட்டி பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பேரிலேயே விசேட பொலிஸ் குழுக்கள் இச்சுற்றி வளைப்பை மேற்கொண்டன
கல்பிட்டி கந்தகுலியமுன எனும் இடத்திலுள்ள பாடசாலை ஒன்றில் வழங்கப்பட்ட உணவு விஷமானதில் 107 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கல்பிட்டி வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்ட 5 மாணவர்கள் மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது
டுபாயைத் தளமாகக் கொண்ட அரபுலகத்தின் பாரிய விமான சேவை நிறுவனமான எமிரேட்ஸ் ஏயார் லைன்ஸ் நிறுவனமானது இலங்கை அரச கட்டுப்பாட்டிலுள்ள ஸ்ரீலங்கன் ஏயார் லைன்ஸின் பங்குகளைக் கொள்வனவு செய்வதற்கு விரும்புகின்றதா? என்பது தொடர்பாக கொழும்பு அந்த நிறுவனத்தை அணுகியுள்ளதாக எமிரேட்ஸ் தலைவர் நேற்று புதன்கிழமை தெரிவித்திருக்கிறார்.
நாங்கள் ஆர்வம் காட்டுகின்றோமா என்பது பற்றி அவர்கள் (இலங்கை அரசு) பார்க்க விரும்புவதாக தென்படுகிறது என்று எமிரேட்ஸ் தலைவர் ரிம் கிளார்க் ராய்ட்டர் செய்திச் சேவைக்கு தெரிவித்திருக்கிறார். ஏயார் லைனுக்கான முகாமைத்துவ ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பதில்லை எனத் தெரிவிக்கப்பட்ட பின் ஸ்ரீலங்கன் ஏயார் லைன்ஸில் இருந்த தனது 43.6 சதவீத பங்குகளை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ விற்கப்போவதாக 2008 இல் எமிரேட்ஸ் கூறியிருந்தது.
தற்போதைய பேச்சுகள் இன்னரும் முன்னேற்றகரமான கட்டத்தில் இல்லையெனவும் ஆனால், விலை சரியானதாக இருந்தால் எமிரேட்ஸ் இந்த விடயத்தை கையாளும் எனவும் ரிம் கிளார்க் கூறியுள்ளார்.55 பில்லியன் டொலர் எயார் பஸ், போயிங் விமானங்களை எமிரேட்ஸ் விமான நிறுவனம் கொண்டுள்ளது. 11 விமானங்களை விநியோகிக்கவுள்ளதாக இம்மாத முற்பகுதியில் அந்நிறுவனம் தெரிவித்திருந்தது. விமானங்களைக் கொள்வனவு செய்வதற்கான நிதியை செலவிடுதல் ஒரு பிரச்சினையாக இல்லையெனவும் அது தெரிவித்திருந்தது.
யாழ். நல்லூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை களில் மட்டும் கூடும் சந்தையை யாழ். மாநகர சபை ஆரம்பிக்கவுள்ளது. இச்சந்தையில் வியாபாரம் செய்ய விரும்பும் வர்த்தகர்கள் முன்கூட்டியே தமது பெயர் விபரங்களை மாநகர சபையின் நானாவித இறைவரிப் பகுதியில் பதிவு செய்து கொள்ளுமாறு யாழ். மாநகர முதல்வர் திருமதி யோ. பற்குணராசா அறிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் அதிகளவு விலை கொடுத்து கொள்வனவு செய்யப்பட்ட பல விதமான வீட்டுப் பாவனைப் பொருட்கள் ஏ-9 பாதை திறக்கப்பட்டதன் பின்னர் தென் பகுதியிலிருந்து யாழ். நகருக்குக் கொண்டு வரப்பட்டு மிகவும் மலிவான விலையில் நகரின் பல பாகங்களிலும் வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. வ்வாறான வியாபாரத்தை மையப்படுத்தி மக்கள் தமக்குத் தேவையான சகல பொருட்களையும் ஓரிடத்தில் பெற்றுக் கொள்ளுவதற்காகவும் யாழ். நகரின் மத்தியில் தற்போது அதிகரித்துவரும் போக்குவரத்து நெருக்கடிகளைக் குறைப்பதற்காகவும் நல்லூரில் ஞாயிற்றுக்கிழமைகளில் மாத்திரம் கூடும் விடுமுறைச் சந்தையை விரைவில் ஆரம்பிப்பதற்கு மாநகர சபை முன்வந்துள்ளது.
மாநகர சபையின் நல்லூர் இந்து விடுதிக் கட்டித்தின் பின்புறமுள்ள கடைகளுக்குப் புறமுள்ளதும், பிராமணக் கட்டுக் குளத்தின் அருகாமையிலுள்ளதுமான பரந்த வெற்றுக் காணியில் ஞாயிறு சந்தை விரைவில் உருவாக்கப்படவுள்ளது. நாளாவட்டத்தில் இவ்விடத்தில் இட நெருக்கடி ஏற்படுமிடத்து இவ்விடுமுறைச் சந்தையை நல்லூர் சூழலிலுள்ள வேறு இடங்களுக்கு விஸ்தரிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் மாநகர முதல்வர் தெரிவித்தார்.
அரசியல் வாதிகள் மீது சேறு பூசிவந்த அரசாங்கம் இன்று மல்வத்தை, அஸ்கிரிய பீடாதிபதிகள் மீதும் சேறுபூசும் கலாசாரத்தைத் தோற்றுவித்திருப்பதாகத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க புத்தசாசனத்துக்கு களங்கமேற்படுத்த யாராவது முனைந்தால் அதனை முறியடிக்க எந்தச் சவாலையும் எதிர் கொள்ளத்தயாராக இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
நீதிக்காக குரல் கொடுக்க முன்வந்த அதி உயர் மகாசங்க உயர் பீடங்களை அச்சுறுத்தி வாய்களுக்கு பூட்டுப் போடும் கைங்கரியத்தை ஆளும் தரப்பு மேற்கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். நாட்டு மக்களை பிளவு படுத்தி அரசியல் நடத்தியவர்கள் இன்று படையினரையும், மகா சங்கத்தினரையும் பிரிவு படுத்தி நாட்டை அராஜகத்தின்பால் கொண்டு செல்லத் தொடங்கியுள்ளதாகவும் எதிர்க்கட்சித்தலைவர் சாடினார்.
எதிரணிகளின் பொது முன்னணியின் ஏற்பாட்டில் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு செய்யப்பட்டமை அநீதியானதெனவும் அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனவும் ஜனாதிபதியை வலியுறுத்தும் மக்கள் மனு கையெழுத்திடும் வைபவத்தில் உரையாற்றுகையிலேயே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எதிரணிகளின் பொது முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களும், அரசியல்வாதிகளும், ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் அமைப்புகளின் பிரதிநிதிகளும், பொது மக்களும் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்ட இவ்வைபவம் ஜே.ஆர்.ஜயவர்தன கேந்திர நிலையத்தில் நடைபெற்றது. இவ்வைபவத்தில் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்ததாவது; ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதற்கான பல போராட்டங்களை நாம் சமகாலத்தில் முன்னெடுத்துவருகின்றோம். இந்த போராட்டங்களில் நாடு முழுவதுமுள்ள மக்கள் ஒன்று பட்டுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவு எதுவுமின்றி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படாமல் அவர் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றார். எமது நாடு இன்னொரு மியன்மாராக மாறியுள்ளது. ஒரு ஜனநாயக நாட்டில் இவ்வாறு நடப்பது உலகிலேயே இதுதான் முதற்தடவையாகும். நாட்டில் சர்வாதிகார ஆட்சி தலை தூக்கியிருப்பதற்கு இது ஒன்றே போதுமான சாட்சியாகும்.
ஜெனரல் சரத் பொன்சேகாவை கைது செய்ததோடு அது முற்றுப்பெறவில்லை. அவரது மருமகனையும் கை விலங்கு மாட்டத்தேடிக் கொண்டிருக்கின்றனர். அதுமட்டுமன்றி மருமகனின் தாயாரையும் இரகசியப் பொலிஸார் விசாரணைக்குட்படுத்தி நீதிமன்றில் ஆஜர் செய்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அடுத்து அரசு எடுக்கப்போகும் நடவடிக்கை பொன்சேகாவின் மரணித்த குடும்பத்தினரின் புதைகுழிகளை தோண்டி அந்த உடல்கள் மீது விசாரணைகள் மேற்கொள்ளப்படலாம்.இந்த மக்கள் மனு நாடுமுழுவதும் எடுத்துச் செல்லப்பட்டு மக்களின் கையொப்பங்கள் திரட்டப்படும். மனுவின் பிரதிகள் தேவைப்படுவோர், ஐ.தே.க., ஜே.வி.பி. தலைமையகங்களிலிருந்தும் பெற்றுக் கொள்ள முடியும்.
அதிகார வெறிபிடித்த கூட்டம் முதலில் பெரும்பான்மை சிறுபான்மை என்று பிளவுபடுத்தினர். இப்போது சிங்கள மக்களையே இரண்டாகப் பிளவுபடுத்தியுள்ளது. அத்துடன் படைத்தரப்பிலும் பிளவேற்படுத்தப்பட்டது. இறுதியாக இப்போது பௌத்த மகாசங்கத்தையும் பிளவுபடுத்திவிட்டது.
மல்வத்தை, அஸ்கிரிய பீடாதிபதிகள் உட்பட நான்கு பீடங்கள் மீதும் களங்கமேற்படுத்தியுள்ளனர். அரசியல்வாதிகள் மீது சேறு பூசியவர்கள் பௌத்த மகாசங்கத்தினர் மீதும் அதனைச் செய்ய முற்பட்டுள்ளனர். பிரபாகரனால் செய்ய முடியாததை செய்யமுற்படாததை அரசு செய்து காட்டிவிட்டது. பௌத்த சாசனத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை சிங்கள பௌத்த மக்கள் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது. மகாசங்கம் அவமதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. இதற்கெதிராக சிங்கள மக்கள் ஒன்றுபட முன்வர வேண்டும் எனவும் ரணில் அழைப்பு விடுத்தார்.