அடிப்படைத் தமிழ்க் கற்கை நெறிகளை முடித்துக் கொண்ட முப்படை வீரர்களுக்கு நேற்று சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பாமன்கடையிலுள்ள தேசிய கெடெட் படையணியின் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது அதன் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் காமினி ஜயசுந்தர சான்றிதழ்களை வழங்கிவைத்தார்.
தேசிய கெடெட் படையணியின் ஏற்பாட்டில் அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட கற்கை நெறிகளை முடித்துக் கொண்ட 36 முப்படை வீரர்களே சான்றிதழ்களை பெற்றுக் கொண்டனர்.
ரன்டெம்பேயிலுள்ள தேசிய கெடெட் படையின் பயிற்சி நிலையத்தில் இந்த படைவீரர்களுக்கு 45 நாட்கள் பயிற்சி வழங்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துத் கொண்ட தேசிய கெடெட் படையணியின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் காமினி ஜயசுந்தர கருத்து தெரிவிக்கையில்,
தமிழ் பேசும் மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கும் நோக்குடனே பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் வழிகாட்டலில் இந்த கற்கை நெறி வழங்கப்பட்டது. தமிழ் மொழியை கற்றதன் மூலம் வடக்கு, கிழக்கு பிரதேசங்களைச் சேர்ந்த மக்களின் உள்ளத்தை வென்று ஐக்கியத்துட னும், அவர்களது பங்களிப்புகளுடனும் சேவைகளை வழங்க முடியும்.
நீங்கள் கற்றவற்றை நல்ல விடயங்களுக்கு பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் இனப்பிரச்சினை ஏற்படுவதை தவிர்க்க முடியும். தமிழ் மொழி தெரிந்த படை வீரர்கள் மிகவும் குறைந்தளவே உள்ளனர். இதனால், முப்படையினருக்கும் உங்களது சேவை மிக முக்கியமானதாக அமைந்துள்ளது.
தமிழ் மொழியை கற்றதன் மூலம் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் சிறந்த சேவைகளை செய்யவும், புலனாய்வுத் துறையினருக்கு ஒத்துழைக்கவும் முடியும் என்றும் மேஜர் ஜெனரல் தெரிவித்தார்.
இதன் மூலம் தமிழ் பேசும் மக்களுடன் பணிவாக நடந்து கொள்வதுடன் அவர்களுக்கு உதவியாகவும் இருக்க வேண்டும் என்றும், அவர் கற்கை நெறியை முடித்த முப்படை வீரர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.