07

07

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிராந்திய மாநாடு கொழும்பில் ஆரம்பம்

‘மனநல மேம்பாடு’ தொடர்பான உலக சுகாதார ஸ்தாபனத்தின் தென் கிழக்கு ஆசியப் பிராந்திய நான்கு நாள் மாநாடு நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் ஆரம்பமானது.

தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்திலுள்ள பதினொரு நாடுகளிலிருந்து சுமார் 150 பிரதிநிதிகள் இம்மாநாட்டில் பங்குபற்றியுள்ளனர்.

ஆன்மீகவாதிகள், சமூகவியலாளர்கள், கலைஞர்கள், இசையமைப்பாளர்கள், பொது சுகாதார மருத்துவர்கள், உளவள ஆலோசகர்கள், உளவள மருத்துவ நிபுணர்கள், கல்வியாளர்கள் என சகல மட்டங்களையும் சேர்ந்த பிரதிநிதிகள் பங்குபற்றும் இம்மாநாட்டை உலக சுகாதார ஸ்தாபனம் சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சுடன் இணைந்து ஒழுங்கு செய்துள்ளது.

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இம்மாநாட்டை கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நேற்று வைபவரீதியாக அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.

இலங்கை – இந்திய கடற்படை கப்பல்கள் நேற்றுமுதல் கூட்டுப் பயிற்சி

07indo-lanka.jpgஇந்திய மற்றும் இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் நேற்று (06) இலங்கை கடற்பரப்பில் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டதாக கடற்படை பதில் பேச்சாளர் கப்டன் அதுல செனரத் தெரிவித்தார். இந்தக் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவதற்காக இந்திய கடற்படை கப்பலான ஐ. என். எஸ். சாதுல் மற்றும் இந்தியக் கரையோரப் பாதுகாப்புப் படைக் கப்பலான ‘வருண’ என்பன நேற்று முன்தினம் (5) இலங்கையை வந்தடைந் ததாகவும் இவற்றுடன் 250 கடற்படை வீரர்கள் வருகை தந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்திய கடற்படை படகுகளுடன் இல ங்கை கடற்படை கப்பல்களான ‘சயுர’ மற்றும் ‘சாகர’ என்பனவும் அதிவேக தாக்குதல் கப்பல்களும் விசேட படகுகளும் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

இவை நேற்று (6) முதல் 72 மணி நேர கூட்டுப் பயிற்சியில் ஈடுபட உள்ளன. இந்திய கப்பல்கள் நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டே இங்கு வந்துள்ளதோடு இலங்கை கடற்படையின் பயிற்சி பெறும் அதிகாரிகளுக்கு சிறந்த பயிற்சியையும் அனுபவத்தையும் வழங்கும் வகையிலேயே கூட்டுப் பயிற்சி மேற்கொள்ளப்படுவதாகவும் கடற்படை பேச்சாளர் தெரிவித்தார். சுமார் 100 பயிற்சிபெறும் கடற்படை வீரர்கள் இந்த கூட்டுப் பயிற்சியில் பங்கேற்றுள்ளனர்.

ஆசிரிய உதவியாளர் சம்பளத்தை அதிகரிப்பது பற்றி அரசு ஆலோசனை – ரூ. 3000 – ரூ. 6000 வரை பரிசீலனை

தொண்டர் ஆசிரியர்களாக இருந்து ஆசிரியர் உதவியாளர்களாக சேர்த்துக்கொள்ள ப்பட்டவர்களின் மாதாந்த கொடுப்பனவை 3000 ரூபாவிலிருந்து 6000 ரூபாவாக அதிகரிப்பதற்கு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஆலோசித்து வருவதாக கல்வி அமைச்சின் செயலர் நிமல் பண்டார தெரிவித்தார்.

ஆசிரிய உதவியாளர்களாக இருக்கும் இவர்கள் தொடர்ந்தும் 5 வருடங்களுக்குள் ஆசிரியர் பயிற்சியை பெற்றுக்கொண்டோ, அதற்குரிய பட்டப் படிப்பை பூர்த்தி செய்வது என்ற நிபந்தனையின் பேரிலேயே தொண்டர் ஆசிரியர்களாக இருந்த இவர்களை ஆசிரிய உதவியாளர்களாக கல்வி அமைச்சு இணைத்துக்கொண்டது.

அதனால் இவர்கள் கட்டாயமாக இந்த நிபந்தைனயை நிறைவேற்ற வேண் டும் என கல்வி அமைச்சின் செயலர் நிமல் பண்டார தெரிவித்தார்.

தென் மாகாண தேர்தல் பிரசார பணிகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு – தென்பகுதி பாடசாலைகள் வெள்ளி பூட்டு

srilanka-voting.jpgதென் மாகாண சபைத் தேர்தலுக்கான பிரசாரப் பணிகள் யாவும் இன்று (7) நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடைவதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.

தேர்தல் ஏற்பாடுகள் யாவும் பூர்த்தியடைந்துள்ளதோடு தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசாங்க ஊழியர்கள் நாளை பிற்பகல் முதல் வாக்களிப்பு நிலையங்களுக்கு சமுகமளிக்க உள்ளனர். பொலிஸார் நாளை மறுதினம் (9) முதல் கடமையை பொறுப்பேற்க உள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யு. பி. சுமணசிறி தெரிவித்தார்.

தேர்தலுக்கு இன்னும் ஓரிரு தினங்களே உள்ள நிலையில் பிரதான அரசியல் கட்சிகள் இறுதிக் கட்ட பிரசாரப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இறுதிப் பிரசாரக் கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இன்று ஹம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ளது.

காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் அமைச்சர்கள் மற்றும் ஐ. ம. சு. முன்னணி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டங்கள் நடைபெறவுள்ளன. இதேவேளை ஐ. தே. க., ஜே.வி. என்பனவும் பல கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளன.

தென் மாகாண சபைத் தேர்தலில் வாக்களிக்க 17 இலட்சத்து 61,859 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

670 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெற உள்ளதோடு 161 நிலையங்களில் வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

தபால் மூல வாக்குகள் எண்ணும் 13 நிலையங்களும் இதில் அடங்கும்.

இதேவேளை தென் மாகாண சபைத் தேர்தலையொட்டி தென் மாகாணத்தில் உள்ள பாடசாலைகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மூடப்பட உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்தது.  தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரசாங்க உத்தியோகத்தர்கள் வெள்ளிக்கிழமை காலைக்கு முன் தமக்குரிய வாக்களிப்பு நிலையங்களுக்கு சமுகமளிக்குமாறு தேர்தல் திணைக்களம் வேண்டியுள்ளது.

இதேவேளை இம்முறை தேர்தல் கடமைகளில் 16 ஆயிரம் பொலிஸார் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

மனித அபிவிருத்தியில் இலங்கை முன்னிலையில்!

ஐ.நா மனித அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தினால் நேற்று வெளியிடப்பட்ட மனித அபிவிருத்தி சுட்டெண்ணின் அடிப்படையில் தெற்காசியப் பிராந்திய அயல் நாடுகளில் இலங்கை முன்னிலை வகிக்கின்றது.

மனித அபிவிருத்தியில் உலக நாடுகளில் இலங்கை 102 ஆவது இடத்தில் உள்ளது. அதேசமயம் இந்தியா 134 ஆவது இடத்திலும் பாகிஸ்தான் 141 ஆவது இடத்திலும் நேபாளம் 144 ஆவது இடத்திலும் பங்களாதேஷ் 146 ஆவது இடத்திலும் உள்ளன.

நாடுகளின் செல்வம், கல்வி மட்டம், ஆயுள்காலம் என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டு 182 நாடுகளை ஐ.நா. அபிவிருத்தித்திட்டம் பட்டியலிட்டுள்ளது. இது 2007 இல் எடுக்கப்பட்ட புள்ளிவிபரங்களைக் அடிப்படையாகக் கொண்டதாகும்.

இப்பட்டியலில் முதலாவது இடத்தில் நோர்வேயும்,  இரண்டாம் இடத்தில் அவுஸ்திரேலியாவும் மூன்றாவது இடத்தில் ஐஸ்லாந்தும் நான்காவது இடத்தில் கனடாவும் பிரான்ஸ் 8 ஆவது இடத்திலும் ஜப்பான் 10 ஆவது இடத்திலும் அமெரிக்கா 13ஆவது இடத்திலும் உள்ளன.

இராணுவ கண்காட்சி 11ம் திகதி வரை நீடிப்பு

011009army_exhibition1.jpgகொழும்பு – பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும் இராணுவக் கண்காட்சி எதிர்வரும் 11 ஆந் திகதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு ள்ளது.

கண்காட்சியைப் பார்வையிடுவதற்காக நாளாந்தம் இலட்சக் கணக்கான மக்கள் வருகை தருவதால் அதனை நீடித்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இராணுவத்தின் 60வது ஆண்டு நிறைவையொட்டி கடந்த மூன்றாந் திகதி ஆரம்பமான இந்தக் கண்காட்சியை ஏழாம் திகதி வரை நடத்துவதென ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது.

பல் வைத்தியசேவைக்கு 106 சத்திர சிகிச்சை நிபுணர்களை சேர்ப்பு

அரசாங்க பல் வைத்திய சேவைக்கு 106 பற் சத்திரசிகிச்சை நிபுணர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். இதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அரசாங்க பற் சிகிச்சைத் துறையை மேலும் நோக்கில் சுகாதாரப் பராமரிப்பு, போஷா க்குத் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அமைச்சர வையின் கவனத்திற்குக் கொண்டு வந்த யோசனைக்கு ஏற்பவே 106 பற்சத்திரசிகிச்சை மருத்துவ நிபுணர்களை சேர்த்துக் கொள்ளுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கி இருக்கின்றது.

இலங்கை முகாம்களுக்கான உதவி நிறுத்தப்படும் – பிரிட்டன் அறிவிப்பு

vau-camp-srilanka.jpgஇலங்கையின் வடபகுதியில், சுமார் இரண்டரை லட்சம் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு அவசர உதவிகளை தவிர ஏனைய அனைத்து உதவிகளையும் நிறுத்தப் போவதாக பிரிட்டிஷ் அரசாங்கம் கூறியுள்ளது. அங்கிருக்கின்ற மிகப்பெரிய முகாமுக்கு பிரிட்டிஷ் அமைச்சர் மைக் ஃபொஸ்டர் அவர்கள் விஜயம் செய்து திரும்பியதை அடுத்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.

அதே நேரம் பருவ மழைக்காலத்தில் அங்கு ஏற்படக் கூடிய எந்தவிதமான வெள்ளமும் வடிந்தோடும் வகையில் தேவையான வடிகால் வசதிகளை தாம் முகாம்களில் அமைப்பதாக இலங்கை அரசாங்கம் கூறுகின்றது. ஆனால், அதனுடன் பிரிட்டனும், ஐநாவும் உடன்படவில்லை.

மனிக்ஃபார்ம் முகாமுக்கு விஜயம் செய்த பிரிட்டிஷ் அமைச்சர் மைக் ஃபொஸ்டர், அங்கு கடுமையான மழை பெய்தால், பெரும் அழிவும், தொற்றுநோய் பரவலும் ஏற்படும் என்று அச்சம் வெளியிட்டுள்ளார். முகாமில் உள்ளவர்களில் சுமார் 70 வீதமானவர்கள் அங்கிருந்து வெளியேறும் பட்சத்தில், அவர்களுக்கு ஆதரவு வழங்கக்கூடிய குடும்பங்களுடன் சென்று தங்குவதற்கான வசதியுடையவர்கள் என்றும் அவர் கூறுகிறார்.

அந்த முகாம்களில் தமது நிலலைமை குறித்து பேசுவதற்கு ஆர்வத்துடன் இருந்த மக்களுடன் பிபிசிக்கு பேசும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு நிலைமைகள் மிகவும் மோசம் என்றும், நல்ல குடிநீர் கிடையாது என்றும், போதுமான வடிகால் வசதி கிடையாது என்றும், அதிக வெப்பம் காரணமாக மக்கள் பலர் நோயில் வீழ்வதாகவும், அங்கிருந்த பெண்கள் மாறி மாறி கூறினார்கள். முடிந்தவரை விரைவாக எங்களை எங்கள் வீடுகளுக்கு அனுப்புங்கள் என்று ஒருவர் கூறினார்.

மனிக்பார்ம் முகாமில் இரண்டு லட்சத்து நாற்பதினாயிரம் பேர் இன்னமும் இருப்பதாக கூறுகின்ற அரசாங்கம், இதுவரை இருபதினாயிரம் பேர் மீள்குடியேற்றப்பட்டு விட்டதாக, அல்லது விடுவிக்கப்பட்டு விட்டதாக கூறுகிறது.

கவலைப்படவில்லை

வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் உள்ளவர்களுக்கான உதவியை ஐக்கிய ராஜ்ஜியம் நிறுத்தினாலும், வேறு பல நாடுகள் இலங்கைக்கு தொடர்ந்து உதவ தயாராக இருப்பதாகவும் இந்த முடிவால் தாம் கவலைப்படவில்லை என்றும் இலங்கை சமாதானச் செயலகத்தின் பணிப்பாளர் ராஜீவ விஜயசிங்க பி பி சியின் சிங்கள சேவையான சந்தேஷியாவிடம் தெரிவித்தார்.

கொழும்பு பங்குச் சந்தை முதலாவது இடத்தில்!

071009stock_mkt.pngகொழும்பு பங்குச் சந்தை உலகின் சிறந்த பங்குச் சந்தையாக விளங்குவதாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்றைய முன் தினம் (05)  இந்தப் பங்குச் சந்தையின் முதலீட்டுத் தொகை வரலாற்றில் என்றுமில்லாதவாறு முதற்தடவையாக  994.5 பில்லியன் ரூபாவாக அதிகரித்துக் காணப்பட்டதாக  அறிவிக்கப்படுகின்றது.

பங்கு நிலைவரங்கள்  106.1 வீதத்தால் அதிகரித்துள்ளது.

மிலங்கா விலைச் சுட்டெண் 3508.7 ஆகக் காணப்பட்டதுடன் அதன் அதிகரிப்பு வீதம் 115.1 எனவும் தெரிவிக்கப்படுகிறது.

லிபியாவின் உள்நாட்டுக் கொள்கைகளை விளக்க கடாபி இன்று விசேட உரை

லிபியாவின் உள்நாட்டுக் கொள்கைகளை விளக்கும் வகையில் ஜனாதிபதி முஹம்மர் கடாபி விசேட உரையாற்ற வுள்ளார். அரச உயரதிகாரிகள் இந்த படை தளபதிகள் பொலிஸ் உயரதிகாரிகள் வைபவத்தில் பங்கேற்கவுள்ளனர்.

சுமார் ஆயிரம் பேர் இக்கூட்டத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இன்று புதன்கிழமை இந்த விசேட உரை நிகழ்த்தப்படவுள்ளது. லிபிய ஜனாதிபதி முஹம்மர் கடாபியின் உரை மரபுரியாக இருக்குமென சிலரும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படவுள்ளதாகச் சிலரும் கூறுகின்றனர். லிபியாவின் நாற்பதாவது சுதந்திர தினம் செப்டெம்பர் 01ம் திகதி கொண்டாடப்பட்டது.

அங்கு உரையாற்றிய கடாபி லிபியாவின் உள்நாட்டுக் கொள்கைகள் குறித்து உரையாற்றவில்லை. இது மக்களிடையே பெரும் ஏமாற்றத்தையளித்தது. இதை நிவர்த்தி செய்யும் பொருட்டு கடாபி உள்நாட்டு கொள்கைகளை விளக்கவுள்ளார்.

மேற்கு நாடுகளின் நெருக்குதல், அழுத்தங்களுக்குட்படாத லிபியாவையே கடாபி விரும்புகின்றார். தென்னமெரிக்க நாடுகளுடன் ஆபிரிக்க நாடுகளையும் இணைத்து பொதுவான அணியை உருவாக்குதல், ஏகாதிபத்திய வாதத்துக்கெதிராக செயற்படல் என்பன கடாபியின் முக்கிய நோக்கம்.

எரிபொருட்களூடாகப் பெறும் வருமானங்களை உள்நாட்டுத் தேவைகளுக்காகப் பயன்படுத்தவும் அரச அதிகாரிகள் நிறுவனங்களிடையே நிலவும் ஊழல், குறைபாடுகளைக் களையவும் கடாபி கொள்கை வகுப்பார்.