13

13

வட்டுக்கோட்டை பிரகடனம் மீதான வாக்கெடுப்பு புலிகளின் அரசியல் வங்குரோத்தின் அப்பட்டமான பதிவு : ரி கொன்ஸ்ரன்ரைன்

Vaddu_Resolution_in_Norwayசின்னஞ்சிறு வயதில் மண்வீடு கட்டி விளையாடிய அனுபவம் எம்மில் பலருக்கு உண்டு. மனதில் எழுகின்ற பெரிய ஆசைகளை, நிறைவேறாத ஆதங்கங்களை ஏதோ எங்களுடைய இயலுமைக்கேற்ப சிறிய அளவில் செய்து மகிழும் ஒரு கற்பனை திருப்தி தான் இது. ஏன் ஒரு சிற்றின்பம் என்று கூட சொல்லி விடலாம். தற்போது ஐரோப்பிய, ஸ்கன்டிநேவிய நாடுகளில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களினால் நடாத்தப்படும் இந்த வட்டுக்கோட்டை பிரகடனம் மீதான வாக்கெடுப்பும் இச் சிறுபிள்ளைத்தன விளையாட்டிற்கு ஒப்பானதே.

கடந்த 30 வருட காலத்திற்கு மேலாக தமிழ் தேசியத்தை வலிந்து தலைமை தாங்கிய தலைவர் பிரபாகரன் எந்தவொரு காலகட்டத்திலும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைப் பற்றியோ அல்லது அத்தீர்மானத்திற்கு அத்திவாரமாக இருந்த தமிழ் அரசியல் தலைவர்களைப் பற்றியோ பெரிதாக ஏதும் கூறிவிடவில்லை. அங்கீகரிக்கக் கூட இல்லை. அதற்கு மாறாக………. அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், ஆலாலசுந்தரம், தர்மலிங்கம் போன்றவர்களை வரிசையாக சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சுடத் தவறவில்லை. ஏன் அவ்வாறு சந்தர்ப்பம் கிடைத்தால் தொண்டமான் என்ன தந்தை செல்வா உட்பட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடித்தளங்களை கூட சுட்டுத்தள்ள ஒரு கணம் கூட யோசித்திருக்க மாட்டார்கள். அடிப்படை அரசியலுக்கும் குறைந்த பட்ச ஜனநாயகத்திற்கும் கூட எந்தவித இடமும் கொடுக்காத விடுதலைப் புலிகளும் அதன் ஆதரவுகளும் இன்று காலாவதியாகிப் போன வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைத் தூக்கிவைத்து தாண்டவம் ஆடுவது கண்கெட்ட பின் நடத்துகின்ற சூரியநமஸ்காரத்திற்கு ஒப்பானது.

தனித்தமிழ் ஈழம் ஏதோ மூன்றடி தூரத்தில் இருப்பதாக இதுவரை காலமும் கதையளந்து மாவீரர் தினத்திற்கு வரிசையாக போய் விசிலடித்து வந்த இந்த புலம்பெயர்வுகள் இன்று வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்று கூறி வரிசையாக நிற்பதைப் பார்க்கும் போது அழுவதா அல்லது சிரிப்பதா என்று தெரியவில்லை. ஆக மொத்தமாக பார்க்கும் போது 98.95% நோர்வே மக்கள் தமிழீழத்தை ஆதரிக்கின்றனர் என்று வெளியாகிய செய்தி சதாம் உசைன் மறைவதற்கு சில மாதங்களுக்கு முன் ஈராக்கில் இடம்பெற்ற தேர்தலில் சதாம் உசைன் ஈட்டிய மாபெரும் வெற்றிக்கு ஒப்பானது. 16 ஒக்ரோபர் 2002 ல் ஈராக்கில் இடம்பெற்ற வாக்களிப்பில் சதாம் உசைன் 99.96% வாக்குகளைப் பெற்று மேலும் 7 ஆண்டுகள் ஈராக்கை ஆள மக்களின் ஆதரவை பெற்றுக் கொண்டார். இன்று மே மாதம் 10ம் திகதி 2009ம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு 98.95% ஆதரவு கிடைத்துள்ளது.

சாதாரண மக்களை ஒரு புறம் விடுவோம். இந்த வாக்கெடுப்பைப் பற்றி ஐரோப்பாவில் பரவலாகச் செயற்படும் தீபம் தொலைக்காட்சி, GTV தொலைக்காட்சி, IBC வானொலி போன்ற நிலையங்கள் நிகழ்த்தும் அரசியல் பதிவேடுகள் மிகவும் கோமாளித்தனமானது. நாளுக்கு நாள் ஏதோ புதிய புதுமையான அரசியல் பரிணாமத்தை விபரிப்பதைப் போல் இவ்வாறான அரசியல் கோமாளித்தனங்களை ஒலிபரப்பி ஒரு மனிதனின் அடிப்படை அறிவுத்திறனை சோதிக்கின்றனர். ஐரோப்பிய சமூகம் இந்த தேர்தல் முடிவுகளை மிகவும் உன்னிப்பாக அவதானிக்கிறதாக கூறுகிறது லண்டனில் இருந்து ஒளிபரப்பப்படும் தீபம் தொலைக்காட்சி.

அமையவிருக்கும் தமிழ் ஈழத்தில் தன்னுடைய பெயர் மட்டும் முதன்மை வகிக்க வேண்டும் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக வட்டுக்கோட்டைத் தீர்மானத்தையும் அதனை மையப்படுத்தி இடம்பெற்ற 1977ம் ஆண்டு தேர்தலையும் அத்தேர்தலில் மாபெரும் வெற்றியீட்டிய தலைவர்களையும் சுட்டு வீழ்த்திய இயக்கம் இன்று அழிவின் விளிம்பில் நின்று கொண்டு வரலாற்றுத் தவறுகளை திருத்த எத்தணிப்பது காலம் கடந்து வந்த ஞானம். இன்று இடம்பெறுகின்ற அரசியல் முனைப்புகள் எப்போதோ நடந்திருக்க வேண்டும். தொடர்ச்சியாக இடம்பெற்றிருக்க வேண்டும். எங்கோ இருந்து வருகின்ற கைகளுக்கும், கை மாற்றுக்களையும் அடிப்படையாக வைத்து நேச நாடுகளின் தலைவர்களைக் கூட மண்டையில் போடத் துணிந்தவர்கள் இன்று 24 மணி நேரத்தில் 3 கிலோ மீற்றரில் முடங்கிக் கிடக்கும் போது நடாத்துகின்ற இந்த அரசியல் முனைப்புக்கள் எந்தவித மாற்றத்தையும் கொண்டுவரப்போவதில்லை.

Vaddu_Resolution_UTROPஊதறுப் பத்திரிகை (UTROP):

இன்று நோர்வேயை மையப்படுத்தி இடம்பெற்ற இத்தேர்தலின் பின்னணியில் ஊதறுப் பத்திரிகை இருந்துள்ளது. இப்பத்திரிகை நோர்வேயின் பல்லின மக்களால் பல்லின மக்களின் தேவை கருதி 2001ம் ஆண்டில் இருந்து நடாத்தப்படுகின்ற பத்திரிகை. இப்பத்திரிகை இணையத்தளத்தை மையப்படுத்தி நடாத்தப்படுகின்ற ஒரு சமுதாயப் பத்திரிகை. இது நோர்வே மக்களினால் வாசிக்கப்படுகின்ற பத்திரிகை அல்ல. இது தினசரி பத்திரிகையும் அல்ல. இப்பத்திரிகை Europeans Minorities On Line (Eminol.com) என்ற ஸ்தாபனம் ஒன்றுடன் கூட்டாக ஐரோப்பிய ஒன்றிய கூட்டு பண உதவியுடன் நடாத்தப்படுகின்ற ஒரு இணையப் பத்திரிகை. இத்தாபனங்களின் முக்கிய பொறுப்பில் மஜோரன் விவேகானந்தன் என்ற இலங்கைத் தமிழர் ஒருவர் பதவி வகிக்கிறார். மஜோரன் விவேகானந்தன் நோர்வேயில் இருந்து அந்நாட்டின் அமைப்புகளுடன் இணைந்து புலிகளுக்கு சார்பான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக இந்திய கொழும்புப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு உள்ளன.

இன்று வெளிநாடுகளில் முக்கிய ஸ்தாபனத்தில் அல்லது ஏதோ ஒரு வித்தத்தில் தனிப்பட்ட பலம் உள்ளவர்கள் அமைப்புகள் தமது பலத்தை அல்லது அழுத்தத்தை கொழும்பு அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் கொடுத்து ஏதாவது தீர்விற்கு உந்துதலைக் கொடுக்க வேண்டுமே தவிர காலாவதியாகிப் போன வெத்து அரசியல் கோசங்களுக்கு பலம்கொடுத்து பல நூற்றுக் கணக்கான மக்களைக் கொல்லவும் பல லட்சக் கணக்கான மக்களின் எதிர்காலத்தை இருட்டடிக்கவும் துணை போகக் கூடாது.

யுத்தத்தினால் வன்னிச் சிறுவர்கள் கடுமையான பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர் : ராதிகா குமாரசுவாமி

radhika-kumaraswamy.jpg
படையினருக்கும், புலிகளுக்கும் இடையில் நடைபெற்றுவரும் யுத்தம் காரணமாக வன்னிச் சிறுவர்கள் கடுமையான பாதிப்புக்களை எதிர்நோக்கி வருவதாக ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளரின் சிறுவர் மற்றும் ஆயுத போராட்டங்களுக்கான விசேட பிரதிநிதி ராதிகா குமாரசுவாமி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

“யுத்தம் காரணமாக அப்பாவிச் சிறுவர்கள் சொல்லொணா துயரங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இது ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை.சிறுவர்களைப் பணயமாக வைக்கவோ அல்லது ஆயுத போராட்டத்தில் அவர்களை ஈடுபடுத்தவோ எவருக்கும் அதிகாரமில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் தடுத்து வைத்துள்ள சிறுவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். அவர்கள் தமது பெற்றோர் அல்லது பாதுகாவலர்களுடன் இணைக்கப்பட வேண்டும்.

அரசாங்க அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள சிறுவர்களும் பல்வேறு இடர்பாடுகளை எதிர்நோக்கி வருகின்றனர். சர்வதேச தர நியமங்களுக்கு அமைவான வசதிகள் அகதி முகாம்களில் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும். அரசாங்கமும், தமிழீழ விடுதலைப் புலிகளும் எறிகணைத் தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும்” என்றார்.

மலேசியாவில் விடுதலையாகியுள்ள ஹிந்த்ராஃப் தலைவர் போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளார்

_protestors_ap.jpgமலேசியத் தமிழர்கள் சம உரிமை கோரி போராட்டம் செய்துவருகின்றனர் மலேசியாவில் சிறையில் இருந்து சனிக்கிழமை விடுவிக்கப்பட்ட இந்திய சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்கான போராடும் அமைப்பைச் சேர்ந்த பி.உதயகுமார், சிறுபான்மை மக்களின் உரிமைக்கான தனது போராட்டதை தொடர்ந்து முன்னெடுக்கப்போவதாக அமெரிக்க செயதி நிறுவனமான அசோசியோடட் பிரஸ்சுக்கு கூறியுள்ளார்.

இந்தப் போராட்டமானது தெருக்களில் நடைபெறாது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் மத சுதந்திரம், வேலைவாய்பின்மை மற்றும் கல்வி வாய்ப்புக்கள் போன்ற பிரச்சனைகளை அமைதியான முறையில் தீர்க்க தான் முயலப் போவதாக உதயகுமார் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு அங்கு நடைபெற்ற தேர்தலுக்கு முன்பாக 2007 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்ட உதயகுமாரும் இந்து உரிமை அமைப்பான ஹிண்டாராப்பின் மற்ற நான்கு உறுப்பினர்களும், இரண்டு ஆண்டுகள் விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டடிருந்தனர்.

கைது செய்யப்பட்ட இரானிய அமெரிக்க செய்தியாளர் விடுதலை

rokchana.jpgஇரானில் சிறையிடப்பட்டிருந்த இரானிய அமெரிக்க பத்திரிகையாளரான ரோக்ஸானா சபேரியின் தண்டனைக் காலம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால், எட்டு ஆண்டுகளிலிருந்து இரண்டு ஆண்டுகளாக குறைக்கப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டதை அடுத்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

விடுவிக்கப்பட்டதும் இரானை விட்டு வெளியேற அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் கூறுகிறார் அவரது வழக்கறிஞர். மேலும் ஐந்து வருடங்களுக்கு அவர் இரானில் பத்திரிகையாளராக பணியாற்றக் கூடாது என்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இரானிய அமெரிக்க உறவுகளை சீராக்க அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா முனைந்திருந்த நேரத்தில், இந்த வழக்கு இரு நாடுகளுக்கும் இடையில், பதற்ற நிலையை அதிகரித்தது என்று நிருபர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

அரசாங்கத்துக்குக் கிடைக்கும் வெளிநாட்டு உதவிகளில் எவ்வித குறைவுமில்லை – ஜனாதிபதி

mahinda-rajapaksha.jpgஅரசியல் இலாபத்தைக் குறிக்கோளாகக் கொண்ட சிலர் பல்வேறு பிரசாரங்களை முன்னெடுக்கின்ற போதிலும் அரசாங்கத்துக்குக் கிடைக்கும் வெளிநாட்டு உதவிகளில் எவ்வித குறைவுமில்லையென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற அரச மற்றும் தனியார் வங்கிகளின் தலைவர்களுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது; அரசாங்கத்தினால் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ள சலுகைகளைக்கொண்டு நிதி நிலைமையை விரிவுபடுத்துவதுடன் வட்டி விகிதத்தைக் குறைக்க வழிசெய்ய வேண்டியது அவசியம். இச்சலுகையை சிறு மற்றும் மத்தியதர முதலீட்டாளர்களும் பொதுமக்களும் நேரடியாக அனுபவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உலகிலேயே பலமான தீவிரவாதத்தைத் தோற்கடிக்கும் போராட்டத்திற்கு நாம் முகங்கொடுக்க நேர்ந்தபோதும் நாட்டின் பொருளாதாரத்தை நிலையானதாகப் பேண அரசுக்கு முடிந்துள்ளது. இந்நிலையிலும் சில அரசியல்வாதிகள் மேற்கொள்ளும் பொய் பிரசாரங்களைப் பொருட்படுத்தாது வங்கியாளர்கள் தமது நடவடிக்கைகளை பொறுப்புணர்வுடன் முன்னெடுக்க வேண்டியுள்ளது.

அரசியல் இலாபங்களுக்காக சிலர் எத்தகைய பிரசாரங்களை மேற்கொண்டபோதும் அரசாங்கத்துக்குக் கிட்டும் வெளிநாட்டு நிதியுதவிகளில் குறைவில்லையெனத் தெரிவித்த ஜனாதிபதி விகிதாசாரத்தை நிலையாகப் பேணுவதற்கு கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதுடன் விவசாயம் ஏற்றுமதிக் கைத்தொழில் சம்பந்தமான வங்கிக் கடன்களை வழங்குவதில் வங்கிகள் கவனமெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் கடன் வழங்குவதில் தாமதமேற்படுவதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

வன்னி நிலைவரம் தொடர்பில் ஐ.நா.வின் தகவல்கள் நிராகரிக்கப்பட்டமை அப்பட்டமான துரோகமாகும் – ஐ.தே.க.

unp.jpgவன்னி நிலைவரங்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகளின் தகவல்களை ஆராய்ந்து பார்க்காது அதனை உடனடியாகவே நிராகரித்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாததாகும். இது அரசாங்கத்தின் அப்பட்டமான துரோகத்தனத்தையே வெளிக்காட்டியுள்ளது என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை சாடியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரேரணை என்பது கவலைக்குரிய விடயமாகும். இதற்கு மூலகாரணமான அரசாங்கமே இதன் விளைவுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது. பாதுகாப்பு வலயம் மீதான தாக்குதல்கள் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் கோர்டன் வைஸ் தெரிவித்திருந்த கருத்துக்களை மறுத்துள்ள அரசாங்கம், அவரது கருத்துக்களில் எவ்வித உண்மையும் இல்லையெனவும் தெரிவித்திருந்தது.

இது குறித்து கேட்டபோதே, ஐக்கிய தேசியக் கட்சியின் மனித உரிமைகளுக்கான பிரதிச் செயலாளரும், எம்.பி.யுமான டாக்டர் ஜயலத் ஜெயவர்த்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாகிஸ்தானின் வடமேற்கே பெருமளவில் மக்கள் இடப்பெயர்வு

swat-pakkis.jpg பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் நடக்கும் மக்கள் இடப்பெயர்வு 15 ஆண்டுகளுக்கு முந்தைய ருவாண்டா நெருக்கடிக்கு பின்னர் மிகப் பெரும் இடப்பெயர்வு என்று ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

ஸ்வாட் பள்ளத்தாக்கில் நடைபெறும் சண்டைகளை தொடர்ந்து இதுவரை 3,60,000 பாகிஸ்தானியர்கள் இடம் பெயர்ந்துள்ளதாக பதிவாகியிருப்பதாக, பாகிஸ்தானில் இருக்கும் ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான பணிகளுக்குக்கான ஒருங்கிணைப்பாளர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

ஆயிரக்கணக்கான மக்கள் இன்னமும் இடம் பெயர்ந்து கொண்டிருப்பதால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இவர்களை தங்க வைப்பதற்க்காக அமைக்கப்பட்டுள்ள முகாம்கள், நீண்ட காலத்துக்கு தாக்கு பிடிக்க மாட்டாது என்றும் அவர் மேலும் கூறினார்.

வன்னியில் நிகழப்போகும் மனித பேரவலங்களை தடுத்து நிறுத்தவும் – ஆர்.சம்பந்தன்

samthan-2.jpgபாதுகாப்பு வலயத்தின் தற்போதைய நிலைமைகள் அபாயகரமானவை, குறுகிய நிலப்பரப்பிற்குள் சிக்கியுள்ள மக்கள் தொடர்பில் அரசாங்கம் எவ்விதமான கரிசனையும் காட்டவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பு வன்னியில் நிகழப் போகின்ற மனித பேரவலங்களை தடுத்து நிறுத்துமாறு இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்திடம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது. பாதுகாப்பு வலயத்திற்குள் தற்போது 1 இலட்சத்து 25 ஆயிரம் மக்கள் இருப்பதாக அங்கிருந்து தகவல்கள் கிடைத்துள்ளன என்றும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கொழும்பிலுள்ள ஜானகி ஹோட்டலில் செவ்வாய்க்கிழமை மாலை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக்களின் தலைவரும் எம்.பி.யுமான ஆர்.சம்பந்தன் தெரிவித்தார்

இஸ்ரேலியர்களும் பாலத்தீனர்களும் சமாதானமாக வாழ விரைவில் பேச்சுவார்த்தைகள்

israil-egept.jpg
இஸ்ரேலியர்களும் பாலத்தீனர்களும் சமாதானம், பாதுகாப்பு மற்றும் சுபிட்சத்துடன் வாழ வேண்டும் என்று தான் விரும்புவதாகவும், சமாதானப் பேச்சுகள் விரைவில் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதும் தனது விருப்பம் என்றும் இஸ்ரேலின் பிரதமர் பென்யாமின் நெத்தன்யாஹூ கூறியிருக்கிறார்.

ஆறு வாரங்ககு முன்னர் இஸ்ரேலியப் பிரதமராக பதவியேற்ற இவர், அரபு நாடு ஒன்றில் மேற்கொளும் முதல் விஜயமாக எகிப்து சென்று அதிபர் ஹோஸ்னி முபாரக் அவர்களுடன் ஷரம் எல் ஷேக்கில் பேசிய போது இக்கருத்துக்களை வெளியிட்டார்.

இரு தலைவர்களும் அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்திக்கவிருக்கும் சில தினங்களுக்கு முன்னர் இந்தப் பேச்சுவார்த்தைகள் இடம் பெற்றுள்ளன.

ஐ. நா. பாதுகாப்பு சபையில் இலங்கை விவகாரத்தை ஆராயும் முயற்சி தோல்வி

UN_Logoஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையில் இலங்கை விவகாரம் தொடர்பில் ஆராயும் முயற்சிகள் தோல்வி கண்டுள்ளன.

ரஷ்யா, வியட்நாம், சீனா போன்ற நாடுகளின் எதிர்ப்பையடுத்து இம்முயற்சிகள் தோல்விகண்டுள்ளன. ஐ.நா. பாதுகாப்புச் சபையின் நிகழ்ச்சி நிரலில் இலங்கை விவகாரம் குறித்த விடயம் சேர்த்துக் கொள்ளப்படுவதற்கு வாக்களிப்பு அவசியமாகும். மேற்குலக ராஜதந்திரிகள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில் இத்தகைய நடவடிக்கைகள் எதுவும் அவசியமில்லையெனத் தெரிவித்துள்ளனர்.

பிரிட்டிஷ் மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர்கள் இவ்விடயம் உத்தியோகபூர்வமாக ஆராயப்படவேண்டுமென வலியுறுத்தியிருந்த போதும் ரஷ்யா, வியட்நாம், சீனா போன்ற நாடுகள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தன.

இலங்கையில் இடம்பெறும் நடவடிக்கைகள் சர்வதேச சமாதானத்திற்கும் பாதுகாப்பிற்கும் எத்தகைய அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது என்பதால் பாதுகா ப்புச் சபையில் இந்த விடயம் ஆராயப்படத் தேவையில்லை யென்று மேற்படி மூன்று நாடு களும் தெரிவித்துள்ளன.