வன்னி நிலைவரங்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகளின் தகவல்களை ஆராய்ந்து பார்க்காது அதனை உடனடியாகவே நிராகரித்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாததாகும். இது அரசாங்கத்தின் அப்பட்டமான துரோகத்தனத்தையே வெளிக்காட்டியுள்ளது என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை சாடியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரேரணை என்பது கவலைக்குரிய விடயமாகும். இதற்கு மூலகாரணமான அரசாங்கமே இதன் விளைவுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது. பாதுகாப்பு வலயம் மீதான தாக்குதல்கள் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் கோர்டன் வைஸ் தெரிவித்திருந்த கருத்துக்களை மறுத்துள்ள அரசாங்கம், அவரது கருத்துக்களில் எவ்வித உண்மையும் இல்லையெனவும் தெரிவித்திருந்தது.
இது குறித்து கேட்டபோதே, ஐக்கிய தேசியக் கட்சியின் மனித உரிமைகளுக்கான பிரதிச் செயலாளரும், எம்.பி.யுமான டாக்டர் ஜயலத் ஜெயவர்த்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.