அரசியல் இலாபத்தைக் குறிக்கோளாகக் கொண்ட சிலர் பல்வேறு பிரசாரங்களை முன்னெடுக்கின்ற போதிலும் அரசாங்கத்துக்குக் கிடைக்கும் வெளிநாட்டு உதவிகளில் எவ்வித குறைவுமில்லையென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற அரச மற்றும் தனியார் வங்கிகளின் தலைவர்களுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது; அரசாங்கத்தினால் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ள சலுகைகளைக்கொண்டு நிதி நிலைமையை விரிவுபடுத்துவதுடன் வட்டி விகிதத்தைக் குறைக்க வழிசெய்ய வேண்டியது அவசியம். இச்சலுகையை சிறு மற்றும் மத்தியதர முதலீட்டாளர்களும் பொதுமக்களும் நேரடியாக அனுபவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உலகிலேயே பலமான தீவிரவாதத்தைத் தோற்கடிக்கும் போராட்டத்திற்கு நாம் முகங்கொடுக்க நேர்ந்தபோதும் நாட்டின் பொருளாதாரத்தை நிலையானதாகப் பேண அரசுக்கு முடிந்துள்ளது. இந்நிலையிலும் சில அரசியல்வாதிகள் மேற்கொள்ளும் பொய் பிரசாரங்களைப் பொருட்படுத்தாது வங்கியாளர்கள் தமது நடவடிக்கைகளை பொறுப்புணர்வுடன் முன்னெடுக்க வேண்டியுள்ளது.
அரசியல் இலாபங்களுக்காக சிலர் எத்தகைய பிரசாரங்களை மேற்கொண்டபோதும் அரசாங்கத்துக்குக் கிட்டும் வெளிநாட்டு நிதியுதவிகளில் குறைவில்லையெனத் தெரிவித்த ஜனாதிபதி விகிதாசாரத்தை நிலையாகப் பேணுவதற்கு கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதுடன் விவசாயம் ஏற்றுமதிக் கைத்தொழில் சம்பந்தமான வங்கிக் கடன்களை வழங்குவதில் வங்கிகள் கவனமெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் கடன் வழங்குவதில் தாமதமேற்படுவதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.