10

10

மன்னாரில் மீள்குடியேற்ற இரண்டாம் கட்ட வேலைகள் திங்கள் முதல் ஆரம்பம்

new_welfare.pngயுத்தம் காரணமாக மன்னாரில் இருந்து இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியமர்த்தும் இரண்டாம் கட்ட நடவடிக்கை எதிர்வரும் 11 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் மீள்குடியேற்ற 1 ஆம் கட்ட நடவடிக்கை மன்னார் முசலி கிராமத்தில் நடைபெற்றது. இடம்பெயர்ந்து வந்த மக்களை மீளக் குடியேற்றும் அரசின் திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் கூறினார்.

இடம்பெயர்ந்த சகல மக்களும் தமது சொந்த இடங்களில் மீளக்குடியேற்றப்பட வேண்டும் என்பதே அரசின் திட்டமாகும். இதேபோல வன்னிப்பகுதிகளில் இருந்து யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்களும் அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படுவார்கள்.

அதற்கு முன்னர் அவர்களின் இருப்பிடங்களில் கண்ணிவெடிகள், மிதிவெடிகள் அகற்றப்பட வேண்டும். அந்தப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. அது முடிவடைந்து கண்ணிவெடிகள் அகற்றப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் அந்த மக்களின் மீள்குடியேற்றப் பணிகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

புலிகளின் அனுபவத்திலிருந்து பாடம் கற்ற மக்கள் விடுதலை இராணுவம்

nilakannikal.jpgஇலங் கையில் விடுதலைப் புலிகளின் அனுபவத்தின் மூலம் தாங்கள் பாடம் கற்றுள்ளதாக இந்தியாவின் பயங்கரவாதக் குழுக்களின் பட்டியலில் உள்ள அமைப்பான மக்கள் விடுதலை இராணுவம் தெரிவித்துள்ளது. எமது இலக்கை வென்றெடுக்க இராணுவ பலம் மட்டும் போதாது. ஆதலால் எமது போராட்டத்தை நாம் முழு அளவில் சர்வதேச மயப்படுத்தவுள்ளோம். அத்துடன் இந்தியமக்களின் ஆதரவையும் திரட்டி வருகின்றோம் என்று மக்கள் விடுதலை இராணுவத்தின் உப தலைவர் மனோகர் மயூன்நுகோபா நிருபர்களிடம் தெரிவித்ததாக “ரெலிகிராப்’ பத்திரிகை நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

மக்கள் விடுதலை இராணுவத்தின் அரசியல் பிரிவான புரட்சிகர மக்கள் முன்னணியின் பயிற்சிக்கட்டளை தலைமையகத்தில் வியாழக்கிழமை இக் கருத்தை மனோகர் மயூன் கூறியுள்ளார். மணிப்பூர் மியன்மார் எல்லையில் இத்தலைமையகம் அமைந்துள்ளது.

மோதலுக்கு தீர்வு காண அரசியல் பேச்சு வார்த்தையின் முக்கியத்துவம் பற்றி குறிப்பிட்ட மனோகர் மயூன், அதேசமயம் நிகழ்ச்சி நிரலானது “இறைமை’யாக இருக்காவிடின் மக்கள் விடுதலை இராணுவம் புரட்சிகரமான மக்கள் முன்னணி பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளாது என்று உறுதியாகக் கூறியுள்ளார். மணிப்பூரில் தனிநாட்டை உருவாக்கும் நோக்கத்துடன் 1978 செப்டெம்பரில் மக்கள் விடுதலை இராணுவம் உருவாக்கப்பட்டது.

வெசாக் தின உணவு உட்கொண்டோர் திடீர் சுகயீனமுற்று ஆஸ்பத்திரியில் அனுமதி

vesak.jpgமாத்தறை வெஹறஹேன விகாரையில் இடம் பெற்ற வெசாக் தான நிகழ்வில் மதிய உணவை உட்கொண்ட ஒன்பது பொலிஸ் கான்ஸ்டபிள்களும், சில அரசு ஊழியர்களும் திடீர் வயிற்று வலி, வயிற்றோட்டம் ஏற்பட்டு மாத்தறை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அரசின் தேசிய வெசாக் தின நிகழ்வுகள் இந்த விகாரையில் கடந்த புதன்கிழமை 6 ஆம் திகதி ஆரம்பமானது தெரிந்ததே. இந் நிகழ்வின் போது வழங்கப்பட்ட மதிய உணவை உட்கொண்ட பின்பே இவ்வாறு பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்

சென்னை அப்போலோ மருத்துவமனையில் பிரதமர் & கருணாநிதி ஆலோசனை

karunanithi-apalo-hos.jpgஅப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முதல்வர் கருணாநிதியை பிரதமர் மன்மோகன் சிங் நேற்று மாலை சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது இருவரும் தேர்தல் குறித்து முக்கிய பேச்சு நடத்தினர். முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் உடனிருந்தார்.

மேலும், அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கவர்னர் பர்னாலா, முன்னாள் மத்திய அமைச்சர் சிபுசோரன் ஆகியோரிடமும் பிரதமர் நலம் விசாரித்தார். பிரதமர் மன்மோகன் சிங் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை விமான நிலையத்துக்கு நேற்று பிற்பகல் 2.30க்கு வந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முதல்வர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார். அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை பற்றி மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டியிடம் கேட்டறிந்தார்.

அவருடன் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் குலாம்நபி ஆசாத், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் எம்பி, அமைச்சர் ஆற்காடு வீராசாமி, காங்கிரஸ் பொருளாளர் சுதர்சனம், தயாளு அம்மாள் ஆகியோர் இருந்தனர். ஓரிரு நிமிடங்களுக்குப் பிறகு, பிரதமரும் முதல்வரும் தனியே ஆலோசனை நடத்தினர். தேர்தல் குறித்த அந்தப் பேச்சின் போது முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மட்டும் உடனிருந்தார். முதல்வர் அறையில் பிரதமர் 15 நிமிடங்கள் இருந்திருக்கிறார்.

பிரதமரின் வருகையை முன்னிட்டு சென்னையில் 3,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

யாழ். குடா சிறுவர் கடத்தல் விவகாரம்: த.வி.கூ. கண்டனம்

jaffna-map.jpgயாழ். குடாநாட்டில் சிறுவர்களைக் கடத்தி பெருந்தொகைப் பணத்தை கப்பமாகப் பெரும் அரக்கர்களின் ஈனச் செயலை தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ். கிளை வன்மையாகக் கண்டிக்கின்றது.

பாடசாலைச் சிறுவர்களை கடத்தி கப்பம் கோரும் சம்பவங்கள் யாழ். குடாநாட்டில் இடம்பெறுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. சம்பந்தப்பட்ட பெற்றோர்கள் ஆயுதம் தாங்கிய அரக்கர்களுக்குப் பயந்து காவல் நிலையத்திற்கு செல்லாது கப்பத் தொகையை கொடுத்து சிறுவர்களை மீட்டுள்ளார்கள் என்பது தெள்ளத் தெளிவாகின்றது. கப்பமாக கேட்கும் தொகை மறுக்கப்பட்டால் திருகோணமலையில் வர்ஷாவிற்கும், மட்டக்களப்பில் தினுஷிகாவிற்கும் ஏற்பட்ட நிலையே தொடரும் என ஆயுதம் தாங்கிய அரக்கர்களால் பெற்றோர்கள் மிரட்டப்பட்டுள்ளார்கள்.

இவை அனைத்தும் முற்றாக நிறுத்தப்படவேண்டும். ஆயுதக் கலாசாரமற்ற ஒரு ஜனநாயகச் சூழலை ஏற்படுத்த நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயற்படவேண்டும். ஆயுததாரிகளின் அட்டகாசம் நிறுத்தப்படவேண்டுமா னால், ஜனநாயகத்தை மலரச் செய்யவிரும்பும் அத்தனைபேரும் ஓரணியில் திரண்டு எதிர்ப்புக் குரல் கொடுக்கவேண்டும்.

முள்ளிவாய்க்காலில் எறிகணைத் தாக்குதல் 134 பேர் பலி; 199 பேர் காயம் – படையினர் தாக்கவில்லை என்கிறார் பிரிகேடியர்

udaya_nanayakkara_brigediars.jpgமுள்ளி வாய்க்கால் பகுதியில் நிவாரணப் பொருட்களை வாங்குவதற்கு வரிசையில் நின்ற 34 பேர் உட்பட 134 பேர் பீரங்கித் தாக்குதல்களால் கொல்லப்பட்டதாகவும் 199 பேர் காயமடைந்ததாகவும் இணையத்தளம் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இச் செய்தி தொடர்பாக பிரிகேடியர் உதய நாணயக்காரவிடம் கேட்ட போது முல்லைத்தீவு யுத்த சூனிய வலயத்தில் உள்ள முள்ளி வாய்க்கால் பகுதி மீது படையினரால் பீரங்கித் தாக்குதல் எதுவும் நடத்தப்படவில்லை. யுத்த சூனிய வலயத்தின்மீது பீரங்கி போன்ற கனரக ஆயுதங்களை இராணுவத்தினர் பயன்படுத்துவதில்லை. அங்கு மக்கள் கொல்லப்பட்டதாகவோ அல்லது காயமடைந்ததாகவோ எமக்கு எதுவும் தெரியாது. அது பற்றிய தகவல் எமக்குக் கிடைக்கவில்லை.

ஆனால் 5/9/2009 யுத்த வலயப் பகுதியில் இருந்து தப்பி வந்த மக்கள் மீது புலிகள் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் 17 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்துள்ளனர் என அவர் தெரிவித்தார்.

நிவாரணக் கிராமங்களில் உள்ள சிறார்களுக்கு கல்வி கற்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும் திட்டம்

vavuniyatents.jpgவன்னி யிலிருந்து இடம் பெயர்ந்து வரும் மக்கள் தங்கியிருக்கும் இடைத்தங்கல் முகாம்களிலுள்ள சிறுவர் சிறுமியர்களுக்கு வாசிப்புப் பழக்கத்தையும், கல்வி கற்றல் ஆர்வத்தையும் ஏற்படுத்துவதற்காக கல்வி அமைச்சரினால் நியமிக்கப்பட்ட விசேட குழு அடுத்த வாரம் வவுனியா செல்கிறது. கல்வி அமைச்சின் செயலாளர் நிமல் பண்டார தலைமையில் மேற்படி குழுவினர் செல்லவுள்ளனர்.

நிவாரணக் கிராமங்களில் தற்காலிக கொட்டில்கள், பாடசாலைகள் இயங்கியபோதும் தற்போது மக்கள் வந்து தங்கியுள்ள இடைத்தங்கல் முகாம்களில் பாடசாலை வசதிகள் இல்லாமல் உள்ளது. எனவே இங்குள்ள சிறுவர் சிறுமியர் வெறுமனே சாப்பிடுவதும், விளையாடுவது மாகவே உள்ளனர். இவர்களுக்கு தினமும் வாசிக்கக்கூடிய சிறுவர் சஞ்சிகைகள், சிறுவர் பத்திரிகைகள், சிறுவர் கதைகள் போன்றவற்றை வழங்க வேண்டும் என்றும் கல்வி அமைச்சின் செயலாளர் நிமல் பண்டார தெரிவித்தார்.

அத்துடன் வந்துள்ளவர்களில் ஆரம்ப பிரிவு, உயர் பிரிவு என எத்தனை மாணவர்கள் உள்ளனர்? அவர்களின் தேவைகள் என்ன? என்பது பற்றியும் மேற்படி குழுவினர் ஆராயவுள்ளனர்.

மாணவர்களை பெற்றோர், பாதுகாவலர்கள் மட்டுமே பாடசாலைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்

sri-lankan-schools.jpgமட்டக் களப்பு மாவட்டத்தில் பாடசாலைக்குச் செல்லும் மாணவர்களை பெற்றோர்களும், பாதுகாவலர்களுமே அழைத்து வரவேண்டும். இதைத்தவிர மூன்றாம் நபர்கள் அழைத்து வரக்கூடாதென மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் பாடசாலை மாணவி தினூக்ஷிகா கடத்திப் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பட்டிருப்பு கல்வி வலய அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகளுடனான உயர்மட்ட பாதுகாப்பு மாநாடு பட்டிருப்பு தேசிய பாடசாலை மண்டபத்தில் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் நடைபெற்றது.

உதவி பொலிஸ் அத்தியட்சகர் சமந்த டி சில்வா, களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி. டி. த. சில்வா, பட்டிருப்பு வலய கல்விப் பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் உட்பட பல அதிகாரிகள் கலந்துகொண்டனர். 122 பாடசாலைகளின் அதிபர்களும், ஆசிரியர்களும் பங்குகொண்டனர். மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் இம்மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஒவ்வொரு பாடசாலையிலும் பாதுகாப்புக் குழுக்கள் அமைத்தல் இக்குழுக்களில் கிராமசேவை அதிகாரிகள், அதிபர், ஆசிரியர், பாடசாலை அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள், பொலிஸார் ஆகியோர் அங்கம் வகிக்கவுள்ளனர். இம்மாநாட்டில் போரதீவு, வெல்லாவெளி, களுவாஞ்சிக்குடி, கல்லாறு, அம்பலாந்துறை, செட்டிப்பாளையம் ஆகிய பொலிஸ் நிலைய, உப பொலிஸ் காவலரண் பொறுப்பதிகாரிகளும் சமுகமளித்திருந்தனர்.

தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டி பிழைக்கும் மலையக அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும்

sri-lanka-upcountry.jpgமலையக தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டி பிழைக்கும் மலையக அரசியல்வாதிகளுக்கு நல்லதொரு பாடத்தை தொழிலாளர்கள் புகட்ட வேண்டுமென சுகாதார போஷாக்கு நலன்புரி பிரதியமைச்சர் வடிவேல் சுரேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். அண்மையில் பசறையில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பிரதியமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்; வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களுக்கு பெருந்தோட்டத் தொழிலாளர் காங்கிரஸில் தொழிலாளர்களிடமிருந்து அறவீடு செய்யும் ஒருமாத சந்தாப் பணத்தை அனுப்புவதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளப்படுகிறது. ஒருநாள் வேதனத்தை அனுப்ப வேண்டிய தேவை கிடையாது.

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பொருளாதாரத் துறையில் மிகவும் பாதிப்படைந்து காணப்படுகின்றனர். ஒருசில மலையக அரசியல்வாதிகள் தெரிவிப்பது போன்று ஒருநாள் வேதனத்தை வழங்கக் கூடிய நிலையில் தொழிலாளர்கள் தற்போது இல்லை. மிகவும் சிரமத்திற்கு மத்தியிலே தொழிலாளர்கள் தமது அன்றாட வாழ்க்கையை கொண்டு செல்கின்றனர். இந்நிலையில் அவர்களுடைய வேதனத்திலிருந்து ஒருநாள் சம்பளத்தை பாதிக்கப்பட்டுள்ள வன்னி மக்களுக்கு அனுப்ப வேண்டுமென ஒரு சில மலையக அரசியல்வாதிகள் கூறுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

மலையக தலைமையென தம்பட்டம் அடிப்போர் இன்னும் தொழிலாளர்களை சுரண்டிப் பிழைக்கும் வேலையிலிருந்து விடுபடவில்லை. இவ்வாறான வேலையில் ஈடுபடும் மலையக அரசியல்வாதிகளுக்கு நல்லதொரு பாடத்தை புகட்ட வேண்டும் என்பதற்காகவே எமது சங்கத்தின் தொழிலாளர்களின் வேதனத்திலிருந்து அறவீடு செய்யும் ஒருமாதச் சந்தாப் பணத்தை வழங்குவதற்கான தீர்மானத்தை மேற்கொண்டோம். தொழிலாளர்களிடமிருந்து ஒருநாள் சம்பளத்தை அறவீடு செய்வதை பெருந்தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளவில்லை.

இன்று பௌத்த அமைப்பு. முஸ்லிம் அமைப்பு அதேபோல் தமிழ்மக்களும் உதவி வருகின்றனர். அரசாங்கமும் முடிந்தளவு மக்களுக்கு நிவாரணங்களை வழங்குகிறது. அதற்குமேலாக வெளிநாட்டு சமூக அமைப்புகளும் உதவிவருகின்றன. இம்மக்களுக்கு மலையக மக்களுடைய பங்களிப்பு மிகவும் அவசியம் என்பதாலே மலையக மக்கள் சார்பாக அவர்களுடைய சந்தாப்பணத்தை அனுப்பிவைக்கிறோம்.

மே, இரண்டாவது ஞாயிறு -அன்னையர் தினம் – புன்னியாமீன்

mothers-day.jpgஅம்மா… இச்சொல்லில் புதைந்துள்ள அர்த்தங்களும்,தொணிகளும்  ஆயிரமாயிரம்… அம்மாக்களின் மேன்மையை எடுத்துரைக்காத எந்த மனிதருமே உலகத்தில் இருப்பாரென கூறமுடியாது. உலக அளவில் அம்மாக்களைப் போற்றும் வகையில் கொண்டாடப்படும் அன்னையர் தினம் Mother’s Day ஏனைய சர்வதேச தினங்களைப் போல ஒரு குறித்த நாளில் கொண்டாடப்படுவதில்லை. பொதுவாக மே மாதத்தின் இரண்டாவது ஞாயிறன்று உலகில் அநேக நாடுகள் கொண்டாடினாலும்கூட, வேறும் சில நாடுகள் அதற்கு முன்போ அல்லது பின்போ கொண்டாடுகின்றன.

‘தாயிற்சிறந்த கோவிலுமில்லை…..” என்ற வரிகள் தாய்மையின் புனிதத்துவம், தாய்மையின் பெருமை, தாய்மையின் தியாகம் போன்றவற்றை எடுத்துக்கூறத்தக்க வரிகளாகும். இந்த உலகில் தாய்க்கு ஈடாக ஒப்பிட எதுவுமே இல்லை.

ஒரு பெண்ணானவள் மகளாக,  சகோதரியாக,  தாயாக, தாரமாக,  தோழியாக வீட்டிலுள்ளோரைப் பக்குவப்படுத்தும் பாட்டியாக, அனுபவங்களின் அரவணைப்பில் வழி நடத்திச்செல்லும் ஆசானாக இப்படி தன் வாழ்நாளில் எத்தனையோ பாத்திரங்களில் வலம் வந்தாலும் ‘அன்னை என்கிற பாத்திரம்தான் மிக உன்னதமான இடத்தை வகிக்கிறது;  தாய்மை என்பது ஓர் உன்னதமான உணர்வு. அத்தகைய தாயைப்  போற்றவே மே மாதத்தின் இரண்டாவது ஞாயிறு அன்னையர் தினமாக உலகில் பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது.

“அன்னையர் தினம் ” Mother’s Day உலகெங்கும் கொண்டாடக் காரணமாக இருந்த பின்னணி பற்றி நாம் ஒரு சிறிய விளக்கத்தைப் பெற்றுக்கொள்ளல் வேண்டும்.  அன்னையர்களுக்கு மரியாதை செலுத்தும் சம்பிரதாயம் புராதன காலத்திலே தொடங்கி விட்டதாக வரலாற்று சான்றுகள் பகருகின்றன. பண்டைய கால மனிதர்களால் அன்னையர் புராணங்கள் கதையாக வழங்கப்பட்டு வந்தன. இதில் முக்கியமாக பெண் – கடவுளான சைபீல் என்ற கடவுள் வணங்கப்பட்டாள். இந்தப் பெண் தெய்வமே எல்லாக் கடவுளுக்கும், முழு முதல் தாய்க் கடவுளாக அம்மக்களினால் வ‌ண‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. வருடத்திற்கு ஒரு முறை இந்த முழுமுதல் தாய்க் கடவுளுக்கு பிரிஜியா மக்களால் விழா எடுக்கப்பட்டு வந்தது. இந்த விழாவே அன்னையர்களை மரியாதை செய்யும் முதல் விழா கொண்டாட்டமாகக் கருதப்படுகின்றது.

வசந்த காலத்தின் துவக்கத்தை கிரேக்கர்கள் பல வகைகளில் கொண்டாடினர். அதில் தாய் தெய்வத்தை வணங்குவதும் ஒன்றாகும். கிரேக்கர்கள் தெய்வமாக வழிபட்டு வந்த க்ரோனஸின் மனைவி ரேஹாவைத்தான் அவர்கள் தாய் தெய்வமாக வழிபட்டனர்.

ரோமர்களும் வசந்த கால கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சைபெலி என்ற பெண் தெய்வத்தை தாயாக கருதி வழிபட்டனர். இந்த வழிபாடு என்பது கலை நிகழ்ச்சிகள் விளையாட்டு வீர சாகசங்கள் என பல்வேறு விஷயங்கள் இடம்பெறுவதாக அமைந்தது. ரோமானியர்கள் தங்களது தாய்- கடவுளு‌க்கு பாலடைன் மலையில் கோயில் ஒன்றை எழுப்பினர். ஒவ்வொரு வருடமும் மார்ச் 15 ந் தேதி மூன்று நாள் விழா நட‌த்‌தின‌ர். விழாவின் போது இக்கடவுளுக்கு பலவிதமான படையல்களும் செய்யப்பட்டன.

கிறிஸ்தவத்தின் வருகைக்கு பின்பு இந்தக் கொண்டாட்டம் மாதா திருக்கோயிலுக்கு மரியாதை செய்வதாக மா‌றியது. இயேசுபிரான் பாலையில் கழித்த 40 நாளை நோன்பு இருந்து கொண்டாடும் விழா- நாட்களில் நான்காவது ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் தங்கள் ஞானஸ்னானம் செய்விக்கப்பட்ட திருக்கோயில்களுக்கு பரிசுகள் கொண்டு வரும் விதமாக அன்னையர் தினம் கொண்டாடப்பட்டதாக கூறப்படுகின்றது. மத்திய காலத்தில் தனது தாயை ஒரு குறிப்பிட்ட தினத்தில் அன்பளிப்புகள் வழங்கி கௌரவித்ததாகவும் சில ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறான நிலையில் 20ஆம்   நூற்றாண்டின் ஆரம்பத்தில் நவீன காலத்தில் உலகளாவிய ரீதியில் அன்னையர் தினம் கொண்டாடுவதற்கான சந்தர்ப்பம் உருவான வரலாற்றின் பின்னணி பின்வருமாறு அமைந்திருந்தது. 

அமெரிக்காவின் மேற்கு விர்ஜீனியா மாநிலத்தில் கிராப்டன் (GRAFTON) என்ற இடத்தில் வாழ்ந்த கிறிஸ்தவ பாதிரியாரான ரீவிஸ் என்பவரின் மகள்தான் “அன்னா மரியா”. அன்னா என்று அழைக்கப்பட்ட அவர் 1852 – ஆம் ஆண்டு ‘கிரான்வில்லி ஜார்விஸ்’ என்பவரை திருமணம் செய்து கொண்டு மேற்கு விர்ஜீனியாவின் பிலிப்பியிலிருந்து கிராப்டனில் என்னும் இடத்திற்கு குடியேறினார். அன்னாவுக்கு மூன்று குழந்தைகள். அதில் ஒரு பெண் குழந்தைக்கு பார்வை கிடையாது.

அன்னா வாழ்ந்த காலகட்டங்கள் போர்களும், சண்டை, சச்சரவுகளும் அமெரிக்காவில் அதிகமிருந்தது. அதனால் சுகாதார வசதி குறைவுகளும், உணவு பற்றாக்குறைகளும், பொதுமக்கள் அதிக அளவில் கொல்லப்பட்டும், தொற்றுநோய்களால் மக்கள் பாதிக்கப்பட்டும் கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருந்தனர். இரக்க சுபாவமுள்ள அன்னா ஏதாவது செய்தாக வேண்டுமே என்று தோன்றியது. அந்த காலகட்டத்தில்தான் வேலைக்குச் செல்லும் பெண்களுக்காக பெண்கள் நலச் சங்கங்களை தொடங்கினார். பணிபுரியும் பெண்கள் டி.பி.நோயால் பாதிக்கப்பட்டபோது அவர்களுடைய குடும்பங்களில் உதவி செய்ய இந்தச் சங்கங்கள் பணிப்பெண்களை அனுப்பி உதவி செய்தது. பல பொது சேவைகளையும் செய்தது. மேலும் பிலிப்பி, ப்ருண்ட்டிடவுன் பெட்டர்மேன், வெப்ஸ்டர் போன்ற நகரங்களிலும் சங்கங்கள் அன்னா உருவாக்கினார். அந்த காலக்கட்டத்தில்தான் அன்னாவின் இரண்டு குழந்தைகளும் நோய்வாய்ப்பட்டு ஒன்றன் பின் ஒன்றாக இறந்தன. பார்வையற்ற பெண் குழந்தை மட்டுமே மிஞ்சினாள்.

மனம் தளராத அன்னா மேலும் சுகாதார கேடுகளை ஒழிக்க தீவிரமாக முயற்சி செய்தார். சுகாதாரக் குறைவான சுற்றுச்சூழற் கேடுகள் மறைய அங்கெல்லாம் சங்கம் அமைத்து வழி நடத்தினார். பால்டிமோர் நகரிலிருந்து ஒஹையோ வரையிலான இருப்புப்பாதை அமைக்கும் பணி நடந்து கொண்டிருந்தபோது உள்நாட்டுக் கலகம் ஏற்பட்டது. அன்னா தீவிரமாக களம் இறங்கினார். யுத்தத்தில் படுகாயம் அடைந்த வீரர்களை சங்க கட்டிடத்தில் கொண்டு வந்து வைத்து மருந்திட்டு, உணவு, உடையளித்து காக்கும் பணியினை சங்கங்கள் மூலமாக அன்னா செய்தார். யுத்த களத்தில் அமெரிக்க வீரர்கள் இறந்த போது, அவர்களின் குடும்பங்களும் சிதைந்து சீரழிந்து சிதறிப்போயினர். பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரவும் அவர்களின் நல்வாழ்க்கைக்கும், சமாதானத்திற்கும் போராடினார் அன்னா.

தன் இறுதி மூச்சுவரை சமூக சேவகியாகவே வாழ்ந்த அன்னா 1904 ஆம் ஆண்டு இறந்தார். அப்போது அன்னாவின் வயது 72. பிலடெல்பியாவின் வெஸ்ட் லாரல் ஹில்லில் புதைக்கப்பட்டபோது அவருடைய 72 வது வயதைக் குறிக்கும் வகையில் “கிராப்டன் ஆன்ரூஸ்” சர்ச்சில் 72 முறை ஆலய மணி ஒலித்தது!

இவரின் மகள்  ஜார்விஸ் Jarvis  முதன்முதலாக தனது அன்னையின் நினைவாக மெத்தடிஸ்ட் சர்ச்சில் 1907 – ஆம் ஆண்டு மே மாதம் 10 – ஆம் தேதி சிறப்பு வழிபாடு நடத்தினார். 1908 – ஆம் ஆண்டு மே 10-ம் நாள் பிலடெல்பியா அரங்கில் 15,000 பேர்கள் திரண்ட கூட்டத்தில் ஒருமணி நேரம், பத்துநிமிடங்கள் ஜார்விஸ் அன்னையர் தின உரை நிகழ்த்தினார்! தனது அன்னையைப் பாராட்டி சீராட்டி அன்னையர் தினம் கொண்டாடிய முதல் பெண் என்ற பெருமையையும் இவர் பெறுகிறார். சமூக நலனில் அக்கறை கொண்ட ஜார்விஸ் ஏதாவது ஒரு நாளையாவது எல்லோரும் தங்களது தாயை அவர் உயிரோடு இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி அவளது தியாகத்தையும் தங்களுக்கு அவள் செய்த ஈடு இணையற்ற பணியையும் நினைத்து அவளை கெளரவிக்க வேண்டும் என்று விரும்பினார். 1909-ஆம் ஆண்டு அமெரிக்காவின் 45 – மாநிலங்கள், போர்ட்டோ ரிக்கோ, ஹாவாய், கனடா, மற்றும் மெக்சிகோவில் அன்னையர் தினத்தை விசேடப் பிரார்த்தனைகள் வெள்ளை மற்றும் சிவப்பு துணிகளை அணிந்து சிறப்பாகக் கொண்டாடினர்.

இதைத் தொடர்ந்து ஜார்விஸ் Jarvis  1913ம் ஆண்டில் தன் பணி நிமித்தம் பென்சில்வேனியா மாநிலத்தில் பிலடெல்பியாவில் குடியேறினார். தாயார் விட்டுச்சென்ற சமூக சேவையை மகள் ஜார்விஸ் தன் தனிப்பெரும் கடமையாகக் கருதித் தொடர்ந்தார். கஷ்ட்டப்படுகிற, வாழ்க்கையில் இன்னலும், சோதனைகளும் ஒருசேரத் தாக்கி மனம் வெந்து,  நொந்து சமூகத்தில் ஓரங்கட்டப் பட்டவர்களுக்கான அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார். தன் தாயாரின் நினைவாகவும், தத்தம் வீடுகளில் அவரவர் அன்னையர்களும் கெளரவிக்கப் பட வேண்டும். எல்லோர் இல்லங்களிலும் அன்றையதினம் மகிழ்ச்சி ததும்ப வேண்டும் என்று எண்ணினார். தம் எண்ணத்தை பென்சில்வேனியா மாநில அரசுக்குத் தெரிவித்தார். அரசும் அவர் கருத்தை ஏற்று 1913ம் ஆண்டு முதல் அன்னையர் தினம் என அங்கீகரித்து அறிவித்தது.

மாநில அரசு அங்கீகரித்தாலும் அனா ஜார்விஸ் Anna Jarvis  திருப்தி அடையவில்லை. ஆயிரக்கணக்கில் அரசியல்வாதிகளுக்கும், தன்னார்வ அமைப்புகளுக்கும், வர்த்தக அமைப்புகளுக்கும் கடிதங்கள் எழுதி அமெரிக்கா முழுவதும் “அன்னையர் தினம்” கொண்டாடவும் அந்நாளை அரசின் விடுமுறை நாளாகவும் அங்கீகரித்து அறிவிக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டிருந்தார். அமெரிக்க ஜனாதிபதிக்கும் இதேவேண்டுகோளை விடுத்தார்.

இவரின் வேண்டுகோளையும்,  நியாயத்தன்மையையும் ஏற்றுக்கொண்ட அமெரிக்கா ஜனாதிபதி வுட்ரோ வில்சன் Woodrow Wilson   1914ம் ஆண்டு  வருடம்தோறும் மேமாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையை  அதிகாரப்பூர்வமாக அன்னையர் தினமாகவும், அன்று விடுமுறை தினமாகவும் இருக்கும் அறிவிப்பை வெளியிட்டார். இவ்வறிவிப்பை அமெரிக்க  காங்கிரசும் ஏற்றுக்கொண்டது. பின்பு கனடா அரசாங்கமும் ஏற்று அங்கீகரித்து அறிவித்தது. அதுமட்டுமல்ல  46 நாடுகள் இதே நாளில் “அன்னையர் தினம்” என அறிவித்து நடைமுறைப்படுத்தியது. தனது வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப் பட்டதையிட்டு ஜார்விஸ் அளவற்ற மகிழ்ச்சியடைந்தாலும் முழுமன நிறைவடையவில்லை.  46 நாடுகளில் மட்டுமல்ல உலகமெங்கும் அன்னையர் தினம் கொண்டாடப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் தொடர்ந்தும் ஈடுபட்டார்.

உலகம் முழுக்க “அன்னையர் தினம்” அனுசரிக்கப்படவேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் அன்னையைப் போற்றுகிற, வாழ்த்துகிற, மகிழ்விக்கின்ற நாளாக அன்றைய தினம் மலர்ந்து மணம் பரப்ப வேண்டும் என்பதுதான் என் ஆசை என்று தனது 84வது வயதில் தனியார் மருத்துவமனையில் இறப்பதற்கு முன் தன்னைச் சந்தித்த நிருபர்களிடம் வெளிப்படுத்தினார். அவருடைய ஆசை இன்று அனேகமாக பூர்த்தியாகிவிட்டது என்றே சொல்லலாம்.

இன்று நாம் கொண்டாடும் அன்னையர் தினம் அன்னைகளுக்கெல்லாம் அன்னையாகத் திகழ்ந்த ஜார்விஸ் என்பவரின் முயற்சியினாலேயே ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதேநேரம், அனா ஜார்விஸ் திருமணமானவரோ பிள்ளைகளைப் பெற்றெடுத்தவரோ அல்ல. அன்னைகளுக்காக அரும்பாடுபட்டவர் என்பதே உண்மை.

அன்னையர் தினத்தில் எமது அன்னையை மட்டுமல்ல அன்னையர்களின் நாம் மதித்து மகிழ்விக்க வேண்டும். அவர்களுக்காகப் பிரார்த்தனைகளைப் புரிய வேண்டும். மானசீகமான எமது அன்பை வழங்க வேண்டும். அன்னையை மதிப்பது ஒருநாளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதன்று. ஆனாலும், அன்னையர் தினம் என்று குறிக்கப்பட்ட தினத்தில் விசேட மதிப்பும், மகிழ்விப்பும் அன்னைக்கு வழங்கப்பட வேண்டும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,  தற்போது அன்னையர் தினம் என்பது ஒரு வியாபார தினம்போல் மாறிவிட்டது கவலைக்குரியதே. அன்னையர் தினம் வருவதற்கு முன்பு அல்லது அன்னையர்களை கௌரவிக்கவும்,  மகிழ்விக்கவும் பல நூற்றுக்கணக்கான வியாபாரப் பொருட்கள் சந்தைப்படுத்தப்பட்டு அவற்றை விற்பனை செய்வதிலேயே முழு அளவில் கரிசனை காட்டுவதை அவதானிக்க முடிகின்றது.

இவ்விடத்தில் இத்தினத்தை வியாபாரப் பொருளாக ஒரு சம்பவத்தை குறிப்பிட்டே ஆக வேண்டும்.  எதையும் வியாபாரமாக்கி பணம் பண்ணும் அமைப்பு “அன்னையர் தினம்” அன்று “அன்னா மரியா” படத்தினை கொடிகளில் பதித்தும், செயின் டாலர்களில் படத்தை பதித்தும் வியாபாரமாக்கியது. இதனையறிந்த ஜார்விஸ் வெகுண்டெழுந்தார். 1923ம் ஆண்டு இத்தகைய கொடி விற்பனையை எதிர்த்து வழக்குத் தாக்கல் செய்தார். என்னுடைய நோக்கம் அன்னையர் தினம் “செண்டிமெண்ட்” நாளாக இருக்க வேண்டுமேயல்லாமல் பணம் திரட்டும் நாளாக இருக்கக்கூடாது. இத்தகைய வசூலுக்குத் தடைவித்திக்க வேண்டும் என்று வாதிட்டார். ஈற்றில் வெற்றி பெற்றார். எனவே,  அன்னையர் தினம் என்பதை உள்ளார்த்தமாக உணர்வுபூர்வமாக கடைபிடிக்க வேண்டும் என்பதை ஜார்விஸ் எதிர்பாரத்தாரேயன்றி அது ஆடம்பரமாகவும், பணத்தை மையப்படுத்தியதாகவும் இருக்க வேண்டும் என அவர் எதிர்பார்க்கவில்லை என்பதை இந்த வழக்கு எடுத்துக்காட்டுகின்றது.

எனவே, அன்னையர் தினம் என்பது ஒரு உயரிய தினம். அன்னையரை மகிழ்விக்க எமது சக்திக்கேற்றாற்போல் எதை செய்ய முடியுமோ அதை செய்வோம். ஏனெனில். அன்னையின் பெருமானத்தை நாம் வழங்கும் அன்பினாலன்றி பணத்தினால் தீர்மானிக்க முடியாது. அன்னையர் தினம் என்பது உண்மையான அன்பிற்காகவும் தனது அன்னைக்கு நன்றி கூறும் விதத்திலும் இருக்க வேண்டும் என்று நினைத்துப் போராடிய ஜார்விஸின் உண்மையான நோக்கத்தை நாம் புரிந்து இத்தினத்தை அனுஸ்டிப்போம்.