09

09

இந்தியாவின் இரண்டாவது மருத்துவக் குழு இலங்கை வரும் : பாதுகாப்பு அமைச்சு தெரிவிப்பு

indo-lanka.jpgஇலங்கையின் வடக்கே மோதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ள தனது இரண்டாவது மருத்துவ குழுவினரை அடுத்த வாரமளவில் இந்தியா அனுப்பி வைக்கவுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் நேற்றுத் தெரிவித்தன.

புல்மோட்டை முகாம்களில் ஏற்கனவே 60 நாட்கள் தங்கி சிகிச்சை அளித்து வந்த இந்திய வைத்திய குழுக்களுக்குப் பதிலாக இவர்கள் அப்பணியை தொடர இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பாலியல்துஷ்பிரயோகத்தின் பின் சிறுவன் கொலை – சந்தேக நபர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலி

gun00.jpgமொனராகல, கஹம்பான பகுதியில் 8 வயது சிறுவன் ஒருவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்ததாக கூறப்படும் சந்தேக நபரொருவர் வியாழக்கிழமை மாலை பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.

மொனராகல பொலிஸாரும் இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தினர். கஹம்பான காட்டுப் பகுதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றிருப்பதாகக் கூறப்பட்டது.

சிறுவனை கொலை செய்து புதைத்த இடத்தை காண்பிப்பதாக பொலிஸாரை அழைத்துச் சென்ற சந்தேக நபர் அங்கு மறைத்து வைத்திருந்த கைக் குண்டொன்றை எடுத்து பொலிஸார் மீது எறிய முற்பட்ட போதே அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதில் சந்தேகநபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

முன்னதாக இவர் சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்த சம்பவம் புதன்கிழமை இடம்பெற்றுள்ளதுடன், அன்றைய தினமே சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுமுள்ளார்.  அத்துடன் சந்தேகநபர் இராணுவத்தைச் சேர்ந்தவரென்றும் மொனராகல பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த 493 பேர் புல்மோட்டை வருகை

icrc.jpg
முல்லைத்தீவிலிருந்து “கிறீன் ஓசன்’கப்பல் மூலம் வியாழக்கிழமை இரவு, காயமடைந்த மற்றும் நோயாளர்களென 493 பேர் புல்மோட்டைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து வியாழக்கிழமை புறப்பட்ட இந்தக் கப்பல் இரவு 8.35 மணியளவில் புல்மோட்டை கடற்பரப்பை வந்தடைந்தது.

கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களுக்கு தலா 5,000 ஏக்கர் வீதம் மேச்சல் நிலம் ஒதுக்கீடு – அமைச்சர் நவரத்தினராஜா

era_thurairatnam.jpg கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் தலா 5,000 ஏக்கர் வீதம் மேச்சல் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரையப்பா நவரத்தினராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

கால்நடைப் பண்ணையாளர்கள் பல வருட காலமாக மேச்சல் நிலமற்ற நிலையில் தங்களது கால்நடைகளை வளர்ப்பதில் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கியதுடன் அவர்களது நாளாந்த வருமானமும் மிகக் குறைந்த நிலையிலே மாடுகளை விற்பனை செய்து வருகின்றனர்.

இதனால், பால் உற்பத்தி கிழக்கு மாகாணத்தில் வீழ்ச்சியடைந்துள்ளது. இப் பண்ணையாளர்கள் மேச்சல் நிலம் தொடர்பாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சரிடம் தெரிவித்ததையடுத்து அவர் அபிவிருத்தியமைச்சர் சி.பி. ரத்னாயக்கவின் கவனத்திற்குக் கொண்டு வந்ததையடுத்து இம்முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதனால், பாற்பண்ணையாளர்களின் பிரச்சினை தீர்வு காணப்பட்டுள்ளதோடு எதிர்காலங்களில் கூடிய பால் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதற்கு கால்நடை பண்ணையாளர்களுக்கு கடனுதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட செயலாளர் சுனில் கன்னங்கர மற்றும் பிரதேச செயலாளர், கால்நடை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

வியட்நாம், காஸாவில் படுகொலை புரிந்தோர் இன்று இலங்கைக்கு உபதேசம் – திஸ்ஸ கரலியத்த

parliament-of-sri-lanka.jpgவியட்நாம், காஸா பகுதிகளில் படுகொலைகளை புரிந்தவர்கள் இன்று இலங்கைக்கு உபதேசம் செய்ய முற்படுவதாக அமைச்சர் திஸ்ஸ கரலியத்த குற்றம்சாட்டினார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அவசரகாலச்சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

இலங்கையிலுள்ள கனிய வளங்களை அபகரிக்கவே இன்று பல வெளிநாடுகள் இலங்கையின் உள் விவகாரங்களில் தலையிட போட்டி போடுகின்றன. அதற்காகவே இலங்கையை இரண்டாக்க முயற்சிக்கின்றனர்.

வியட்நாம், காஸா போன்ற இடங்களில் படுகொலைகளை புரிந்தவர்கள் கூட இன்று எமது நாட்டுக்கு உபதேசம் செய்கின்றனர்.

அமெரிக்கா, கனடா, பிரிட்டன் போன்ற நாடுகளில் வாழும் தமிழர்கள் இங்கே ஒருபோதும் வரமாட்டார்கள். அவர்கள் தமது சுயநலத்துக்காகவே ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றனரே தவிர இங்குள்ள தமிழ் மக்களின் மேல் உள்ள அக்கறையினால் அல்ல.

நாம் எம்மை, எமது நாட்டை நேசிக்கும் தொண்டர் அமைப்புகளுக்கு மட்டுமே இங்கே சேவையாற்ற அனுமதி வழங்கியுள்ளோம். ஏனையவர்களுக்கு வழங்க நாம் தயாராயில்லை.

அகதி முகாம்களில் குறைபாடுகள் உள்ளன. அவற்றை விரைவில் நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் இவர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்திக்க ஜனாதிபதி விரைவில் அனுமதி வழங்குவார்.

பன்றி இறைச்சி பயன்படுத்தத் தடை

mexican.jpgபன்றிக் காய்ச்சல் நோய் பரவுவது குறித்து சுகாதார அமைச்சு எச்சரித்திருப்பதால் தென் பகுதிகளில் உள்ள உல்லாசப் பயணிகள் ஹோட்டல்களில் பன்றி இறைச்சி உணவுக்காக பயன்படுத்துவது நிறுத்தப்பட்டுள்ளது.  அத்துடன் இங்கு காட்டுப் பன்றி வேட்டையும் நிறுத்தப்பட்டு வருகிறது.

பன்றி இறைச்சி இங்குள்ள விடுதிகள், ஹோட்டல்களில் தாராளமாக பயன்படுத்தப்பட்டு வருவது வழக்கமாகும்.

வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் மட்டுமல்ல உள்நாட்டு உல்லாசப் பயணிகளும் இங்குள்ள ஹோட்டல்களுக்கு பன்றி இறைச்சியை விரும்பி அதிகம் வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேபோல வீதிகளில் விற்கப்படும் பண்ணை வளர்ப்பு பன்றி இறைச்சிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நுளம்பு பரவும் சூழலுடன் காணப்படும் உரிமையாளர் மீது கடும் சட்ட நடவடிக்கை

nimal-siriiii.jpgநுளம்புகள் பரவும் வகையில் சுற்றுச் சூழலை வைத்திருக்கும் காணி, வீட்டு உரிமையாளர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவித்த சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இத்தண்டனை தண்டப்பணமாக மட்டுமன்றி சிறைத் தண்டனையாகவும் இருக்குமெனவும் எச்சரித்துள்ளார்.

அத்துடன், உங்கள் வீட்டிலுள்ள நுளம்பு உங்களுக்கு கடித்தால் அதற்கு நீங்கள் தான் பொறுப்பு. நாம் அந்தப் பொறுப்பை ஏற்க முடியாதென்றும் அவர் கூறினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற நுளம்பு பரவலைத் தடுக்கும் கட்டளைச் சட்டப் பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

நுளம்புகள் பரவும் வகையில் சுற்றுச் சூழலை வைத்திருப்போர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் சுகாதார அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய சோதனைகளில் ஈடுபடும் சுகாதார அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.  நுளம்புகள் பரவும் வகையில் சுற்றுச் சூழலை வைத்திருக்கும் வீட்டு உரிமையாளர்கள், காணி உரிமையாளர்களுக்குத் தண்டம் விதிக்கப்படும். இது குற்றத்தின் அளவைப் பொறுத்து சிறைத்தண்டனை வரை அதிகரிக்கும்.

மலேரியா நோயைக் கட்டுப்படுத்துவதில் இலங்கை சாதனை படைத்துள்ளது. கடந்த வருடம் 640 பேரே இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 500 பேர் வன்னியிலுள்ள படையினராவர். விரைவில் மலேரியாவை முற்றாக ஒழித்து விடுவோம். டெங்கு, சிக்குன்குன்யா நோய்கள் ஒரேவகை நுளம்பினாலேயே பரவுகின்றன. இலங்கையில் தற்போது டெங்கு நோய் அபாயம் ஏற்பட்டுள்ளது. இங்கு 2004 ஆம் ஆண்டு டெங்கு நோயால் பாதிக்கப்பட்டோர் தொகை 1,540 ஆக இருந்தது. இது முறையே 2005 இல் 820 பேரும் 2006 இல் 16, 972 பேரும் 2007 இல் 7,320 பேரும் 2008 இல் 6,431 பேரும் 2009 இல் இன்றுவரை 3,864 பேரும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நகரமயமாக்கல், காலநிலை மாற்றம், நுளம்புகளின் பரம்பல் அதிகரித்தல் ஓசோன் படலத்தில் ஏற்பட்டுள்ள துவாரத்தினால் வெப்ப நிலை அதிகரிப்பு மற்றும் மாற்றங்களினாலேயே இந்நோய்கள் ஏற்படுகின்றன. இது இலங்கைக்கு மட்டும் உரிய பிரச்சினையல்ல. முழு உலகத்துக்குமுள்ள பிரச்சினை. இதனை வெற்றி கொள்ள மக்களின் ஒத்துழைப்பு அவசியம்.

வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால் “போதையற்ற வாழ்வு’ ஓவியப் போட்டி

jaffna-map.jpgவட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் “போதையற்ற வாழ்வு’ என்னும் தலைப்பிலான ஓவியப்போட்டியொன்றை நடத்தவுள்ளது. இப்போட்டி பிரதேச செயலக மட்டம், மாவட்ட மட்டம், மாகாணமட்டம் ஆகிய மட்டங்களில் நடைபெறவுள்ளது.

ஒவ்வொரு பிரதேச செயலக மட்டத்திலும் பத்து ஓவியங்கள் தெரிவு செய்யப்பட்டு மாவட்ட மட்டப் போட்டி இடம்பெறும். மாவட்ட மட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலுமிருந்து 15 ஓவியங்கள் தெரிவு செய்யப்பட்டு மாகாண மட்டப் போட்டி இடம்பெறும்.

மாகாண மட்டத்தில் தெரிவு செய்யப்படும் முதலாவது ஓவியத்துக்கு 15 ஆயிரம் ரூபாவும் இரண்டாம் இடத்துக்கு 10 ஆயிரம் ரூபாவும் மூன்றாம் இடத்துக்கு 7,500 ரூபாவும் மேலும் ஐந்து சிறந்த ஓவியங்களுக்கு தலா ஆயிரம் ரூபாவும் பரிசாக வழங்கப்படவுள்ளது.

போட்டிக்கு ஓவியங்களை சமர்ப்பிக்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படுவதுடன் தெரிவு செய்யப்படும் ஓவியங்கள் மாவட்ட மட்டத்தில் கண்காட்சிக்கு வைக்கப்படவுள்ளன. போட்டி சம்பந்தமான விபரங்களையும் விண்ணப்பப்படிவங்களையும் பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தரிடம் பெற்றுக்கொள்ளுமாறு வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

யுத்தத் தீயில் வெந்த மக்களின் வெளிக்காயத்துக்கு மருந்து போடலாம் – சந்திரசேகரன் எம்.பி

parliament.jpgகடந்த 30 வருடங்களாக யுத்தம் என்ற கொடிய தீயினால் வெந்து நொந்த மக்களின் வெளிக்காயங்களுக்கு மருந்து போடலாம் ஆனால் அவர்களின் உள்காயங்களுக்கு மருந்து போடும் வகையில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் போதுமானதல்லவென ஜே.வி.பி. எம்.பி. சந்திரசேகரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது.

மக்கள் மத்தியில் இனப்பிரிவினை கறைகளை துடைத்தெறிந்தது மக்கள் விடுதலை முன்னணிதான் நலன்புரி முகாம்களில் பெண்கள் அனுபவிக்கும் சொல்லொணாத்துயரங்களை களைய எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்துக்கு முன்பிருந்த வரலாறுகளையும் கலாசார பண்புகளையும் கொண்ட தமிழ் மக்கள் இன்று அனைத்தையும் இழந்து நிர்க்கதி நிலையடைந்துள்ளனர். இந்த துன்பங்களை களைய அரசு நடவடிக்கையெடுக்க வேண்டும்.

ஹட்டன் தோட்டத்தில் குளவி கொட்டி 13 பெண்கள் ஆஸ்பத்திரியில்

sri-lanka-upcountry.jpgதோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது குளவி கொட்டியதால் 13 பெண்கள் டிக்கோயா – கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஐவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஹட்டன் – அபோஸ்லி தோட்டத்தைச் சேரந்த பெண்களே இவ்வாறு குளவி கொட்டலுக்கு இலக்காகியுள்ளனர்