நுளம்புகள் பரவும் வகையில் சுற்றுச் சூழலை வைத்திருக்கும் காணி, வீட்டு உரிமையாளர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவித்த சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இத்தண்டனை தண்டப்பணமாக மட்டுமன்றி சிறைத் தண்டனையாகவும் இருக்குமெனவும் எச்சரித்துள்ளார்.
அத்துடன், உங்கள் வீட்டிலுள்ள நுளம்பு உங்களுக்கு கடித்தால் அதற்கு நீங்கள் தான் பொறுப்பு. நாம் அந்தப் பொறுப்பை ஏற்க முடியாதென்றும் அவர் கூறினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற நுளம்பு பரவலைத் தடுக்கும் கட்டளைச் சட்டப் பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;
நுளம்புகள் பரவும் வகையில் சுற்றுச் சூழலை வைத்திருப்போர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் சுகாதார அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய சோதனைகளில் ஈடுபடும் சுகாதார அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். நுளம்புகள் பரவும் வகையில் சுற்றுச் சூழலை வைத்திருக்கும் வீட்டு உரிமையாளர்கள், காணி உரிமையாளர்களுக்குத் தண்டம் விதிக்கப்படும். இது குற்றத்தின் அளவைப் பொறுத்து சிறைத்தண்டனை வரை அதிகரிக்கும்.
மலேரியா நோயைக் கட்டுப்படுத்துவதில் இலங்கை சாதனை படைத்துள்ளது. கடந்த வருடம் 640 பேரே இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 500 பேர் வன்னியிலுள்ள படையினராவர். விரைவில் மலேரியாவை முற்றாக ஒழித்து விடுவோம். டெங்கு, சிக்குன்குன்யா நோய்கள் ஒரேவகை நுளம்பினாலேயே பரவுகின்றன. இலங்கையில் தற்போது டெங்கு நோய் அபாயம் ஏற்பட்டுள்ளது. இங்கு 2004 ஆம் ஆண்டு டெங்கு நோயால் பாதிக்கப்பட்டோர் தொகை 1,540 ஆக இருந்தது. இது முறையே 2005 இல் 820 பேரும் 2006 இல் 16, 972 பேரும் 2007 இல் 7,320 பேரும் 2008 இல் 6,431 பேரும் 2009 இல் இன்றுவரை 3,864 பேரும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நகரமயமாக்கல், காலநிலை மாற்றம், நுளம்புகளின் பரம்பல் அதிகரித்தல் ஓசோன் படலத்தில் ஏற்பட்டுள்ள துவாரத்தினால் வெப்ப நிலை அதிகரிப்பு மற்றும் மாற்றங்களினாலேயே இந்நோய்கள் ஏற்படுகின்றன. இது இலங்கைக்கு மட்டும் உரிய பிரச்சினையல்ல. முழு உலகத்துக்குமுள்ள பிரச்சினை. இதனை வெற்றி கொள்ள மக்களின் ஒத்துழைப்பு அவசியம்.