May

May

ராணுவ வாகனங்களில் ஆயுதங்கள் இல்லை. பொய் பிரச்சாரம் செய்தால் கடும் நடவடிக்கை -கோவை காவல்துறை

koovai.jpgராணுவ வாகனங்களில் ஆயுதங்கள் இல்லை. பொய் பிரச்சாரம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை காவல்துறை கூடுதல் இயக்குநர் தெரிவித்துள்ளார்
 
கோவையில் ராணுவ வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை அருகே மதுக்கரை என்ற இடத்தில் ராணுவ முகாம் உள்ளது. இந்த முகாமைச் சேர்ந்தவர்கள் ஹைதராபாத்துக்குப் பயிற்சிக்குச் சென்றிருந்தனர்.

பின்னர் அங்கு பயிற்சியை முடித்து விட்டு கொச்சி வழியாக கோவைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். மொத்தம் 60 வாகனங்களில் அவர்கள் வந்தனர். நீலாம்பூர் பைபாஸ் சாலையில், ராணுவ லாரிகள் வந்துகொண்டிருக்கும்போது, அந்த லாரிகளை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் பலர் தடுத்து நிறுத்தி தாக்குதலில் இறங்கினர். இதில் 5 லாரிகள் தீயில் சேதமடைந்தன.

பிரித்தானியாவில் புதுவிதமான பரப்புரை

uk-ltte-film.jpgதமிழீழ தாயகத்தில் எம் உறவுகள் படுகொலை செய்யப்படுவதை பிரித்தானிய இளையோருக்கு வெளிகாட்டும் வகையில் Dartford  பெண்கள் பாடசாலையில் கல்வி கற்கும் தமிழ் மாணவிகள் பாடசாலை அனுமதியுடன் மேல் வகுப்பு மாணவருக்கு தமிழீழ வரலாற்றையும் இலங்கை அரசாங்கத்தின் இனப்படுகொலையையும் 20 நிமிட ஒளித்தொகுப்பு மூலம் காண்பித்து தன்னுடைய பரப்புரையை முன்னெடுத்துள்ளார்கள்.

தமிழீழ வரலாற்றுடன் தமிழ் மக்கள் இன்று படும் இன்னல்களையும் பிரித்தானியாவில் தமிழ் மக்களால் முன்னெடுக்கும் உரிமை போராட்டங்களையும் துண்டுப்பிரசுரங்கள் ஊடாக மாணவர்களுக்கு தெரியப்படுத்தினார்கள். சில வேற்றின மாணவர்கள் இந்த துண்டுபிரசுரங்களை தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு கொடுப்பதற்காக எடுத்து சென்றுள்ளனர். முதன்முறையாக தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைப் பற்றி தெரிந்து கொண்ட பல மாணவர்கள் கண்ணீர் மல்கியதுடன் தங்களால் இயன்றளவு இங்கு நடக்கும் போராட்டங்களில் கலந்துகொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

மனித உயிர்களைக்காக்க உலக சமூகம் போரை நிறுத்த முயலவேண்டும்:பா.நடேசன்

nadesan.jpg“எந்த நாடுகளுக்காவது இங்கு வாழும் மக்கள் மீது அக்கறை இருக்குமானால், மனித உயிர்களைக் காப்பதற்காக, அந்த நாடுகள் தமது ‘இராஜதந்திர வரம்புகளை’ கடந்து சென்று சிறிலங்காவின் இன அழிப்புப் போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்” என தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அனைத்துலக ஊடகமான ‘அசோசியட் பிறஸ்’ நிறுவனத்தின் கொழும்பு செய்திப் பீட தலைமையாளர் ரவி நெஸ்மன் மேலும் எழுதியிருப்பதாவது :

“நாங்கள் சரணடைவது என்ற பேச்சுக்கே இடமில்லை; அதனால், அனைத்துலக சமூகம் இந்த கொடுமையான போரை நிறுத்துவதற்கு முன்வரவேண்டும்” என நடேசன் தெரிவித்துள்ளார். போரை நிறுத்துமாறு உலக நாடுகள் போடும் இராஜதந்திர அழுத்தங்களை எல்லாம் சிறிலங்கா அரசு புறம் தள்ளிவருகின்றது.

“எந்த நாடுகளுக்காவது இங்கு வாழும் மக்கள் மீது அக்கறை இருக்குமானால், மனித உயிர்களைக் காப்பதற்காக, அந்த நாடுகள் தமது ‘இராஜதந்திர வரம்புகளை’ கடந்து சென்று சிறிலங்காவின் இன அழிப்புப் போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்,” என நடேசன் தெரிவித்தார். மனிதாபிமான போர் நிறுத்தத்தை ஏற்படுத்துதல் மற்றும் தொண்டர் அமைப்புக்களின் பணியாளர்களை போர் நடைபெறும் பகுதிக்கு அனுமதித்தல் போன்றவற்றை மேற்கொள்ளும் முகமாக பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் நாட்டு வெளிவிவகார அமைச்சர்கள் கொழும்புக்கு மேற்கொண்ட பயணத்தின் பின்னர் நடேசனின் இந்த கருத்து வெளிவந்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு தலைப்பட்சமான போர் நிறுத்தம் ஒன்றை அறிவித்திருந்தனர். ஆனால் சிறிலங்கா அரசு விடுதலைப் புலிகளைச் சரணடையக் கோரியிருந்தது.

இதற்கு பதிலளித்த நடேசன், “சரணடைவது மற்றும் ஆயுதங்களைக் கீழே போடுவது என்ற கேள்விகளுக்கே இங்கு இடம் இல்லை. எமது (மக்களின்) நியாயமான அரசியல் உரிமைகளை நாம் பெறும் வரையிலும் எமது போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரசும், அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களும் விடுதலைப் புலிகள் மக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்துவதாக தெரிவித்த கருத்துக்களை மறுத்த நடேசன், “நாம் எல்லோரும் ஒரே குடும்பத்தை போன்றவர்கள் யாராவது தமது குடும்ப உறுப்பினர்களையே மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவார்களா?” என கேள்வியும் எழுப்பினார்.

விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தினர் நாட்டை விட்டுச் சென்று விட்டார்கள் என்ற கருத்துக்களை மறுத்த நடேசன், தாம் எல்லோரும் நாட்டிலேயே இருந்து போராட்டத்தை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே தற்போது சிறிலங்கா அரசின் பகுதியில் உள்ள தயா மாஸ்டர் தெரிவித்துள்ள கருத்துக்கள் தொடர்பாக கேட்டபோது, அந்த கருத்துக்களை நிராகரித்ததுடன், அவர் தமது இயக்கத்தின் “முக்கியமான ஒரு உறுப்பினர் அல்ல” எனவும் நடேசன் தெரிவித்தார்.

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த 1,82,480 பேர் நலன்புரி நிலையங்களில்-வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு

chals_.jpgவன்னியில் இருந்து இடம்பெயர்ந்த 1,82,480 நானூற்றி எண்பது பேர் வவுனியா, யாழ்ப்பாணம், திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இவர்களில் 1,67,330பேர் வவுனியா மாவட்டத்தில் உள்ள இருபத்திநான்கு நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்தார்.

அகதிகள் தொடர்பாக வவுனியா அரசாங்க அதிபர் அலுவலகத்தினால் கடந்த 30ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 11,150 பேரும் திருகோணமலை மாவட்டத்தில் 4 ஆயிரம் பேரும் நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள அகதிகளின் எண்ணிக்கை விபரம் வருமாறு :

வவுனியா மாவட்டத்தில் அரவிந்தோட்ட சைவ வித்தியாலயத்தில் 365 குடும்பங்களைச் சேர்ந்த 1183 பேர்,

ஆனந்தகுமார சுவாமி வலயம் ஒன்றில் 11600 பேர்,

கதிர்காமம் கிராமத்தில் 5904 குடும்பங்களைச் சேர்ந்த 22, 143 பேர்,

அருணாசலம் கிராமத்தில் 10831 குடும்பங்களைச் சேர்ந்த 37873 பேர்,

செட்டிகுளம் மகா வித்தியாலயத்தில் 550 குடும்பங்களைச் சேர்ந்த 1793 பேர்,

பிள்ளையார்குளம் பாடசாலையில் 491 குடும்பங்களைச் சேர்ந்த 1575 பேர்,

முதலியார் குளம் பாடசாலையில் 288 குடும்பங்களைச் சேர்ந்த 817 பேர்,

ராமநாதன் வலயம் இரண்டில் 52,000 பேர்,

பம்பைமடு விடுதியில் 1421 குடும்பங்களைச் சேர்ந்த 4569 பேர்,

நெலுக்குளம் கலைமகள் வித்தியாலயத்தில் 1519 குடும்பங்களைச் சேர்ந்த 3491 பேர்,

சைவபிரகாச மகா வித்தியாலயத்தில் 1375 குடும்பங்களைச் சேர்ந்த 3437 பேர்,

தமிழ் மகா வித்தியாலயத்தில் 1808 குடும்பங்களைச் சேர்ந்த 4929 பேர்,

வவுனியா முஸ்லிம் வித்தியாலயத்தில் 509 குடும்பங்களைச் சேர்ந்த 1526 பேர்,

காமினி மகா வித்தியாலயத்தில் 734 குடும்பங்களைச் சேர்ந்த 1645 பேர்,

கோவில் குளம் மகா வித்தியாலயத்தில் 562 குடும்பங்களைச் சேர்ந்த 1829 பேர்,

கல்வியியற் கல்லூரியில் 1944 குடும்பங்களைச் சேர்ந்த 5990 பேர்,

பூந்தோட்டம் மகா வித்தியாலயத்தில் 570 குடும்பங்களைச் சேர்ந்த 1669 பேர்,

தமிழ் மகாவித்தியாலயத்தில் 465 குடும்பங்களைச் சேர்ந்த 1237 பேர்.

கந்தபுரம் வாணிவித்தியாலயத்தில் 1073 பேர்,

பூவரசங்குளத்தில் 994 பேர்,

தாண்டிக்குளம் பாடசாலையில் 561 குடும்பங்களைச் சேர்ந்த 1492 பேர்,

புதுக்குளம் பாடசாலையில் 989 குடும்பங்களைச் சேர்ந்த 3124 பேர்,

ரம்பைக்குளம் மகளிர் வித்தியாலயத்தில் 1350 பேர்,

கோமரசன் குளம் மகாவித்தியாலயத்தில் 2150 பேரும் தங்கி உள்ளனர்.

இதைத் தவிர யாழ். மாவட்டத்தில் உள்ள நலன்புரி நிலையங்களில் 3791 குடும்பங்களைச் சேர்ந்த 11150 பேர் தங்கி இருப்பதுடன் திருகோணமலை மாவட்டத்தில் மூன்று பாடசாலைகளில் 4000 பேர் தங்கி உள்ளனர்.

அவர்கள் தங்கியிருக்கும் பாடசாலைகளின் விபரம் வருமாறு:

அரபாத் நகர் முஸ்லிம் வித்தியலயத்தில் 1560 பேரும்,

முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் 1797 பேரும்,

சிங்கள மகா வித்தியாலயத்தில் 643 பேரும் தங்கி உள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் உள்ள அகதிகள் குறித்து மாவட்ட அரச அதிபர் தகவல் தருகையில், எமது மாவட்டத்தில் உள்ள முகாம்களில் தங்கி இருப்போரில் ஐம்பத்து ஐயாயிரம் பேரைத் தவிர, ஏனையோர் சமைத்து சாப்பிடுகின்றனர். அதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நலன்புரி நிலையத்திற்கும் நிரந்தரமாக டாக்டர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். நடமாடும் வைத்திய சேவைகளும் நடத்தப்படுகின்றன. இதுவரை முன்னூற்றி ஐம்பது மில்லியன் ரூபாவரை செலவிடப்பட்டுள்ளது. நலன்புரி நிலையங்களில் உள்ளவர்களுக்கு எம்மால் முடிந்த அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கிறோம். 

ஈழத் தமிழர்களுக்கு அளித்த வாக்குறுதியைக் காப்பேன்: ஜெயலலிதா

j-j-j.jpgஇலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தனி ஈழம் மட்டுமே தீர்வு என்றும் அதனை அமைத்தே தீருவேன் என்றும் தான் அளித்த வாக்குறுதியை நிச்சயம் காப்பேன் என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அ.இ.அ.தி.மு.க. கூட்டணி மார்க்சிஸ்ட் வேட்பாளரை ஆதரித்து சனிக்கிழமை நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, ஈழத் தமிழர்களுக்கு தான் அளித்த வாக்குறுதியைக் காப்பாற்ற தனது கூட்டணிக்கு வாக்களித்து உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

தனி ஈழமே தீர்வு என்று தான் கூறியதற்கு உலகத் தமிழர்களிடமிருந்து குவியும் பாராட்டுக் கடிதங்கள் குறித்து இக்கூட்டத்தில் குறிப்பிட்ட ஜெயலலிதா, சுவிட்சர்லாந்து தமிழ் பேரவை அனுப்பியிருந்த கடிதத்தை கூட்டத்தினருக்குப் படித்துக் காட்டினார்.

“இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தனி ஈழமே ஒரே தீர்வு என்று துணிச்சலாக, பகிரங்கமாக, அச்சமின்றி நீங்கள் அளித்திருக்கும் ஈழம் குறித்த வாக்குறுதிக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றி என்று எனக்கு உலகம் முழுவதிலும் இருந்து தமிழர்கள் செய்திகளை அனுப்பியவண்ணம் இருக்கிறார்கள். எங்களுக்கு மிகுந்த ஆறுதல் தருவதாக உங்கள் ஈழப் பிரகடனம் அமைந்திருக்கிறது என்று நன்றி சொல்லி கடிதம் அனுப்பியிருக்கிறார்கள்.

உலகெங்கும் வாழும் தமிழர்கள் இப்படி உணர்ச்சிப்பூர்வமாக இருக்கும் வேளையில், நம் கைக்கெட்டிய தூரத்தில், கண்ணுக்கெட்டிய தூரத்தில் வாழுகின்ற தமிழர்களைப் பற்றி சிறிதும் அக்கறையில்லாது மத்திய, மாநில அரசுகள் கபட நாடகங்களை தொடர்ந்து அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றன.

இலங்கைத் தமிழர்களின் துயரத்திற்கு முடிவு ஏற்பட தனி ஈழம் அமைவதுதான் ஒரே வழி, ஒரே தீர்வு. அதை நான் செய்து முடிப்பேன். வங்காள தேசம் உருவாக பாகிஸ்தானிற்கு எதிராக இந்தியப் படையை இந்திரா காந்தி அனுப்பியது நியாயமென்றால், எங்கள் தமிழர் நலன் காக்க இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்புவதும் நியாயமே. அதை நான் செய்து முடிப்பேன் என்று நான் பிரகடனம் செய்தேன். அதைப் பாராட்டித்தான் உலகம் முழுவதிலும் இருந்து தமிழர்கள் எனக்கு நன்றி செய்திகளையும், வாழ்த்துகளையும் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராகிய நான் ஒன்றைச் சொன்னால் அதைச் செய்து முடிப்பேன் என்று உலகத் தமிழனம் நம்புகிறது என்று ஜெயலலிதா பேசினார்.

‘பங்கருக்குள் இருந்து ஒரு மூச்சுக்காற்று’- தம்பா

பங்கருக்குள் இருந்து ஒரு மூச்சுக்காற்று

கனரக பீரங்கிகள்போல் அதிர்ந்து எழுகின்றன
பேச்சுக்கள்.
தலைக்குமேல் ’செல்’ போல் கூவிச் செல்கின்றன
அறிக்கைகள்.
’கிளஸ்தர்’ குண்டுகள் போல் சிதறி விழுகின்றன
உறுதி மொழிகள்.

கூத்தும் கரணமும்
இது ஒரு தேர்தல் காலம்;
இழப்பும் அவலமும்
எமக்கு யுத்தகாலம்.

நேற்றைய பேச்சு
இன்று இல்லை
இன்றைய உயிர்
நாளை இல்லை.

நாங்கள் இழப்பது
நீங்கள் பெறுவதற்கு
இழப்பதோ உயிர்கள்
பெறுவதோ வாக்குகள்.

போதும்!

எதிர்பார்த்து ஏமாந்து போவதிலும்
எதிர்கொண்டு எழுவதே மேல்.

– தம்பா

மாணவி தினுசிக்காவின் படுகொலைக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் கண்டனம்

sivanesathurai.jpg மட்டக்களப்பு நகர பிரதேசத்தில் பாடசாலை மாணவியொருவர் கடத்தப்பட்டு இப்படி படுகொலை செய்யப்படடிருப்பது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது.இது உண்மையிலே வருத்தமளிக்கின்ற செயலாகும்.  இதனை யார் புரிந்திருந்தாலும் சட்டத்தின் முன் கொண்டுவரப்பட்டு உரிய தண்டனை வழங்க வேண்டும் என நான் பொலிஸாரினைக் கேட்டிருக்கின்றேன்.

இந்தச் சம்பவமானது உண்மையில் கிழக்கின் சாதாரண நிலையினைக் குழப்ப விரும்புகின்றவர்களின் செயலாகவே நான் பார்க்கின்றேன். அதாவது கிழக்கு மாகாணத்திலே தற்போது அமைதியும் ஜனநாயகமும் முன்னெடுத்துச் செல்லப்படுகின்ற இந்த வேளையிலே அதனை விரும்பாத ஒரு சில விசமிகளே இவ்வாறான வேலைகளைச் செய்திருக்க வேண்டும். இவ்வாறான செயற்பாடுகள் மீண்டும் நடைபெறாது இருப்பதற்குரிய அனைத்து நடவடிக்கையினையும் பாதுகாப்புத் தரப்பினர் மேற்கொண்டுவருகின்றார்கள். இது தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் விசாரணை அறிக்கையினயும் கோரி இருக்கின்றேன்.” என இது தொடர்பாக அவர் கருத்து வெளியிட்டுள்ளார். 

திஸ்ஸநாயகம் தடுத்து வைக்கப்பட்டிருப்பது குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா கவலை

tissa-nayakam.jpgஉலகமெங்கும் ஊடகத்துறைக்கு எதிரான அச்சுறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவது தொடர்பாக கவலை தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, இலங்கையில் ஓராண்டு காலத்திற்கு மேலாக ஊடகவியலாளர் ஜே.எஸ். திஸ்ஸநாயகம் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலைமை குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளார். உலக ஊடக சுதந்திர தினம் கொண்டாடப்படுவதையொட்டி அமெரிக்க ஜனாதிபதி விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,.

“உலகின் ஒவ்வொரு மூலையிலும், ஊடகவியலாளர்கள் சிறையில் வைக்கப்பட்டுள்ளார்கள். அல்லது தொந்தரவுகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். அஸர்பைஜான் முதல் ஸிம்பாப்வே வரை, பர்மா முதல் உஸ்பெகிஸ்தான் வரை, கியூபா முதல் எத்த்திரியா வரை இந்த நிலை உள்ளது. இவ் விடயத்தில் மனத்துயரை உண்டாக்கும் உதரணங்களாக தோன்றுவது இலங்கையில் ஜே.எஸ். திஸ்ஸநாயகம் சீனாவில் ஷிடாலோ மற்றும் ஹு ஸ்ரீயாவோ ஆகியோராவர்.

உண்மையை பொறுப்புடன் வெளிப்படுத்தும் முழு உலகத்தின் ஊடகத்துறையைச் சேர்ந்த தைரியமிக்க ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஆதரவாக இன்று என் குரலை எழுப்புகிறேன். அவ்வாறு செய்வதன் மூலம் தோமஸ் ஜெர்ப்பஸன் கூறிய வார்த்தைகளை நினைவு கூருகிறேன். எமது அரசாங்கத்தின் அடிப்படை மக்களின் அபிப்பிராயமேயாகும். அந்த நோக்கத்திற்கான உரிமை காக்கப்பட வேண்டும். மேலும் ஊடகமில்லாத ஒரு அரசாங்கம் வேண்டுமா? அல்லது அரசாங்கமில்லாத ஊடகம் வேண்டுமா? என்பதை நான் தீர்மானிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.,.

தேர்தலுக்கு பின் ஈழத்தை பற்றி ஜெயலலிதா பேச மாட்டார்: திருமாவளவன்

thirmavala.jpgராஜபக்சேவின் குரலை பிரதி பலிக்கும் ஜெயலலிதா இன்று ஓட்டுக்காக ஆதாயம் தேடி தனி ஈழம் பெற இந்திய ராணுவத்தை அனுப்பி தனி ஈழம் அமைப்பேன் என்பது முற்றிலும் மோசடித்தனமான பேச்சு.வருகின்ற 11 ந்தேதிக்கு பிறகு ஈழத்தை பற்றி ஜெயலலிதா பேசவே மாட்டார் என விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். அரியலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

இலங்கை முல்லைத்தீவில் இலங்கை ராணுவம் சுற்றி வளைத்து 11/2 லட்சம் ஈழத் தமிழர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர். உணவு, உடை, மருந்து மற்றும் இருப் பிடம் இல்லாமல் கொடூரமான முறையில் அல்லலுக்கு ஆட்பட்டு வருகிறார்கள். இந்திய ராணுவத்தை அனுப்பி தனி ஈழம் பெற்றுத் தருவேன் என்று ஜெயலலிதா கூறியது பற்றி கேட்டதற்கு தேர்தலுக்காக எதையும் எப்படியும் பேசுவார் ஜெயலலிதா என்பதற்கு இது சான்று. தனி ஈழத்திற்கு நேர் எதிரான கொள்கைகளை உடையவர் ஜெயலலிதா. புலிகளை பயங்கரவாதிகள் என்றும் புலிகளின் தலைவர் பிரபா கரனை இந்தியாவுக்கு கொண்டு வந்து தண்டிக்க வேண்டும் என்றும் பேசியவர் ஜெயலலிதா. தேர்தல் நேரத் தில் வாக்குசேகரிக்க தற்போது தனி ஈழம் பற்றி பேசுகிறார். புலிகளை பற்றி தற்போதைய அவர்களின் நிலை என்ன என்பது பற்றி முதலில் விளக்க வேண்டும்.

இன்றும் புலிகளை பயங்கர வாதிகள் என்று கூறுகிறாரா? போராளிகள் என்று கூறு கிறாரா என்பதை மக்களுக்கு விளக்க வேண்டும். ராஜ பக்சேவின் குரலை பிரதி பலிக்கும் ஜெயலலிதா இன்று ஓட்டுக்காக ஆதாயம் தேடி தனி ஈழம் பெற இந்திய ராணுவத்தை அனுப்பி தனி ஈழம் அமைப்பேன் என்பது முற்றிலும் மோசடித்தனமான பேச்சு.வருகின்ற 11 ந்தேதிக்கு பிறகு ஈழத்தை பற்றி ஜெய லலிதா பேசவே மாட்டார்.எனவே ஜெயலலிதாவின் மாய் மால ஜாலங்களில் தமிழக மக்கள் ஏமாறக்கூடாது என்று கூறினார்.

தமிழகத்தில் தி.மு.க.வின் வெற்றிவாய்ப்பு பற்றி கேட்டதற்கு தி.மு.க.வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும்,ஈழத்தமிழர் பிரச்சினையை பயன்படுத்தி எப்படியாவது வெற்றி பெற்று விடலாம் என்று இல்லாதது பொல்லாதது எல்லாம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா தனக்கே எதிரான கருத்துக்களை சொல்லி வருகி றார். ஆனால் அவருடைய கூட்டணி கட்சியினர் அடிக் கடி தங்களுடைய நிலைப் பாடுகளை மாற்றி கொள்ளக் கூடியவர்கள் என்ற உண்மை மக்களுக்கு தெரிந்துள்ளதால் யாரும் நம்ப தயாராக இல்லை.எனவே இத்தகைய அவதூறு பிரசாரங்களை தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பை பாதிப்படை வைக்க முடியாது என்றார்.

5 பிரிட்டிஷ் எம்.பி.க்கள் நாளை இலங்கை வருகை

uk-london.jpgபிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவர் அடங்கிய தூதுக்குழுவொன்று நாளை திங்கட்கிழமை வடபகுதி மனிதாபிமான நிலைமை தொடர்பாக ஆராய்வதற்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளது. பக்கிங்காம் எம்.பி. கட்சியின் ஜோன் பேர்கவ், முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் டெஸ் பிறவுண், ஸ்கொட்லாந் எம்.பி. மக்கெலம் புரூசி, வட அயர்லாந்திற்கான எம்.பி. எட்வட் மக்கிரடி மற்றும் தொழிலாளர் கட்சி எம்.பி. மொஹமட் சர்வர் ஆகியோரே இக்குழுவில் அடங்கியுள்ளனர்.

இவ் இருநாள் விஜயத்தின் போது இவர்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் பல்வேறு அரசாங்க எதிர்க்கட்சித் தலைவர்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் சந்திக்கவுள்ளனர். இவ்விஜயம் இலங்கை அரசாங்கம் விடுத்த அழைப்பின் பேரிலேயே மேற்கொள்ளப்படுகிறது.