May

May

மதுபானம் மற்றும் இறைச்சி விற்பனை நிலையங்கள் இரண்டு நாட்களுக்கு மூடப்படும்

vesak.jpg
நாடெங்கிலுமுள்ள சகல மதுபான விற்பனை நிலையங்களையும் இறைச்சி கடைகள் மற்றும் மிருகங்களை அறுக்கும் நிலையங்களையும்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 8ம்,  9ம் திகதிகளில் மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதேநேரம் இத்தினங்களில் உல்லாச ஹோட்டல்களில் மதுபானம் விற்பனை செய்வதையும்,  சுப்பர் மார்கெட்களில் இறைச்சி வகைகள் விற்பனை செய்வதையும் நிறுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு இத்தினங்களில் குதிரைப் பந்தய நிலையங்கள்,  கெஸினோ கிளப்கள்,  இரவு களியாட்ட விடுதிகள் ஆகியவற்றை மூடிவிடுவதற்கும் அரசாங்கம் முடிவு செய்திருப்பதாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் டி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

கனடிய அமைச்சரின் போர்நிறுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரிப்பு

can-srila.jpgகனடிய அமைச்சரினால் விடுக்கப்பட்ட போர்நிறுத்த கோரிக்கையை அரசாங்கம் முற்றாக நிராகரித்து விட்டதாக ஏ.எப்.பி. செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கைக்கு நேற்று திங்கட்கிழமை விஜயம் மேற்கொண்ட சர்வதேச ஒத்துழைப்புக்கான கனடிய அமைச்சர் பெவர்லி ஜேஒடாவே போர்நிறுத்தக் கோரிக்கையை விடுத்திருந்ததாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஏ.எப்.பி. வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சர்வதேச ஒத்துழைப்புக்கான கனடிய அமைச்சர் பெவர்லி ஒடா வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவை நேற்றுக்காலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இதன்போது கனடிய அமைச்சர் போர்நிறுத்தம் குறித்து விடுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது. கடந்த மாதம் அரச தரப்பில் மேற்கொள்ளப்பட்ட ஒருதலைப்பட்ச மோதல் தவிர்ப்பு தோல்வியில் முடிவடைந்ததாக அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம, கனடிய அமைச்சருக்கு தெரிவித்துள்ளார்.

கனேடிய அமைச்சருடன் ஜனாதிபதி சந்திப்பு

canada_min.jpg
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள கனடாவின் சர்வதேச ஒத்துழைப்புக்கான அமைச்சர் பெவர்லி ஜே ஒடா நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

அலரி மாளிகையில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது அமைச்சர்களான ரோஹித போகொல்லாகம, மஹிந்த சமரசிங்க, ஆறுமுகம் தொண்டமான்,  டக்ளஸ் தேவானந்தா,  விநாயகமூர்த்தி முரளிதரன், புத்ரசிகாமணி,  ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ எம்.பி, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க,  வெளிவிவகார அமைச்சின் செயலளார் கலாநிதி பாலித கொஹன மற்றும் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் அன்ஜெலா பொக்டன் ஆகியோரும் கலந்துகொண்டனர். 

தேசிய வெசாக் வைபவம் மாத்தறை ரஜமகா விகாரையில்

vesak.jpgதேசிய வெசாக் வைபவம் மாத்தறை வெஹெரஹேன ரஜமகா விகாரையில் இன்று நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கிணங்க சமய விவகார அமைச்சர் பண்டு பண்டாரநாயக்க இவ்வைபவத்தை ஏற்பாடு செய்துள்ளார்.

இதேவேளை,  தேசிய வெசாக் தினத்தை முன்னிட்டு தபால் முத்திரையொன்றும் வெளியிடப்படவுள்ளது. முத்திரை வெளியீட்டு வைபவம் இன்று பிற்பகல் 3.00 மணிக்கு பதில் தபால் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இவ்வைபவத்தில் களனி பல்கலைக்கழக வேந்தர் வெலமிடியாவே குசலதம்ம, ஊவா பல்கலைக்கழக வேந்தர் அலுத்வௌ கோரத தேரர், அமைச்சர்களான பண்டு பண்டாரநாயக்க, மஹிந்த யாப்பா அபேவர்தன,  டளஸ் அழகப்பெரும,  லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் சந்திரசிரி கஜதீர ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவுக்கு இதுவரை 30 லொறி மருந்துப் பொருட்கள் அனுப்பி வைப்பு

medical_lorry.jpg வவுனியாவுக்கு வந்துள்ள மக்களின் மருத்துவ தேவைகளுக்காக கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இதுவரை 30 லொறிகளில் மருந்து வகைகள் அனுப்பிவைக்கப் படடுள்ளதாக சுகாதார அமைச்சின் மருந்து விநியோகப் பிரிவுப் பணிப்பாளர் டாக்டர் சரத் வீரபண்டார தெரிவித்தார்.
 
வன்னியில் இருந்து வந்துள்ள மக்களுக்காக நேற்றைய தினமும்  3 லொறிகளில் மருந்து வகைகள், சத்திர சிகிச்சை உபகரணங்கள் என்பன அனுப்பி வைக்கப்பட்டன. இதேவேளை புதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்களுக்கு இன்று கப்பல்  மூலம் மருந்து வகைகள் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்களுக்கு தேவையான மருந்து வகைகள் தொடர்பாக மாகாண சுகாதார சேவைப் பணிப்பாளர் அமைச்சிற்கு அறிவித்திருந்தார். இதன்படி கப்பல் மூலம் புதுமாத்தளனுக்கு மருந்து வகைகள் அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளோம். கொழும்பிலிருந்து திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்படும் மருந்துகள் கப்பல் மூலம் புதுமாத்தளனுக்கு அனுப்பப்படும் எனவும் அவர் கூறினார். புதுமாத்தளனுக்கு கடந்த மாதத்தில் இரண்டு தடவைகள் மருந்து வகைகள் அனுப்பப்பட்டுள்ளன. 

பாராளுமன்றம் இன்று கூடுகிறது

sri-lanka-parliament.jpgபாராளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்குக் கூடுகிறது.இன்றைய சபை அமர்வின்போது அவசரகாலச் சட்டம் மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.

பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிப்பதற்கான பிரேரனையை முன்வைக்கவுள்ளார்.

மேல் மாகாணசபை தேர்தலுக்கு முன்னர் கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி பாராளுமன்ற அமர்வுகள்  ஒத்திவைக்கப்பட்டதன்; பின்னர் இன்று மீண்டும் கூடுகிறது.

மக்கள் வயிற்றுப் பசியை விடவும் நாட்டைப் பற்றியே சிந்தித்துள்ளனர் – ஜனாதிபதி

mahinda-rajapaksha.jpgமேல் மாகாண சபைக்கான அமைச்சரவை, அலரிமாளிகையில் வைத்து சத்தியப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டதன் பின்னர் நேற்று அங்கு நடைபெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றும் போது உறுதிமொழிகளை எதிர்பார்த்திருக்காத மக்கள்,  வயிற்றுப்பசியை விடவும் நாட்டைப் பற்றியே சிந்தித்துள்ளனர் என்று தெரிவித்தார்

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்:  ” மக்கள் வயிற்றுப் பசியை விடவும் நாட்டைப் பற்றியே சிந்தித்துள்ளனர். இதன் மூலமாகவே மேல் மாகாண சபைத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை வாக்குகளை எம்மால் பெற்றுக்கொள்ள முடிந்தது. மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். மக்கள் வழங்கிய ஆணையை பிரதிநிதிகள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனென்றால் மக்கள் உறுதிமொழிகளை எதிர்பார்க்கவில்லை. பசி, வேலை வாய்ப்பு என்பவற்றுக்கு மேலாக நாட்டை முன்நிறுத்திப் பார்த்துள்ளனர் என்பதனால் மக்கள் பிரதிநிதிகளுக்கு பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றார்.

பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வருவதற்காகவே யுத்த நிறுத்தம் – கனடிய அமைச்சர் பெவர்லி ஜே ஒடா

can-srila.jpgபொது மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வருவதற்காகவே யுத்த நிறுத்தத்தை கோருகிறோம் என்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச ஒத்துழைப்பிற்கான கனடிய அமைச்சர் பெவர்லி ஜே ஒடா தெரிவித்தார்.

பொதுமக்களும், யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களும் பாதுகாப்பான பகுதிகளுக்கு வருவதற்கு வழிவகுக்கும் வகையிலேயே மோதல்களில் ஈடுபட்டுள்ள தரப்பினரிடம் யுத்த நிறுத்தத்திற்கு செல்லுமாறு கோரிக்கை விடுப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இலங்கைக்கு ஒருநாள் விஜயத்தை மேற்கொண்டு வருகைதந்த சர்வதேச ஒத்துழைப்பிற்கான கனடிய அமைச்சர் பெவர்லி ஜே ஒடா இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவை வெளிவிவகார அமைச்சில் நேற்று  மதியம் சந்தித்து சுமார் ஒரு மணிநேரம் பேச்சுவார்த்தைகளை நடத்திய போதே மேற்கண்டவாறு   தெரிவித்தார். 

கனடாவில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவது பற்றி கேள்வி எழுப்பப்பட்டபோது பதிலளித்த கனடிய அமைச்சர்இ 2006ஆம் ஆண்டிலேயே விடுதலைப் புலிகள் இயக்கத்தை கனடிய அரசாங்கம் தடைவிதித்திருந்தது.  கனடாவில் பெரும் எண்ணிக்கையிலான தமிழ் மக்கள் வாழ்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் சிறந்த குடிமக்களாவர். எனினும் ஒருசில விரும்பத்தகாத சக்திகள் மேற்கொண்டுவருகின்ற நடவடிக்கை தொடர்பாக இனங்கண்டு கொண்டுள்ளோம். அத்தகைய தரப்பினரின் செயற்பாடுகளை கனடா சகித்துக் கொள்ளமாட்டாது என தெரிவித்தார். 

ஊரடங்கு வாழ்வு – யாழில் சில நாட்கள் : சாம் (ரெலோ அமைப்பாளர் லண்டன்)

SL_Army_in_Jaffna(மார்ச் இறுதிப் பகுதியில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த சாம் அங்கு தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை தேசம்நெற் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார். சாம் தனது தனிப்பட்ட காரணங்களுக்காகவே யாழ் சென்றிருந்தார். அப்பொது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு உள்ளார். இவர் ரிஎன்ஏ யில் உள்ள ரெலோ பாராளுமன்ற உறுப்பினர்களால் மீள இயக்க வைக்கப்பட்ட லண்டன் ரெலோ அமைப்பாளராக செயற்பட்டு வருகிறார்.)

யாழ்ப்பாணம் போவது என்பது மிகவும் கஸ்டமான விடயம். யாரும் யாழ் போக ரிக்கட் பதிவு செய்திருந்தாலும் அரச அதிகாரிகள் அல்லது வேறு முக்கியமானவர்கள் யாழ்போக வேண்டின் உங்களது ரிக்கட் ரத்து செய்து திரும்ப பதிவு செய்யப்படும்.

கொழும்பில் வெள்ளவத்தையிலிருந்து விமான சேவையினர் பொறுப்பு எடுத்து இரத்மலானை விமான நிலையத்திற்கு எடுத்துப்போய் அங்கிருந்து இராணுவம் உங்கள் பொதிகள் முழுவதையும் பொறுப்பு எடுத்து அந்த பொருட்களை திரும்ப கட்டுவன் சந்தியில் உங்களிடம் ஒப்படைக்கும். விமானம் பறக்கும் போது மொபைல்போன் கமரா போன்றவைகள் எம்மோடு வைத்திருக்க முடியாது.

பயணிகள் பலாலி விமான ஓடுபாதையிலிருந்து இராணுவத்தின் பஸ் முலம் கட்டுவன் சந்தி வரையில் அழைத்து வரப்படுவார்கள். இந்த வேளையில் பஸ்சின் யன்னல்கள் யாரும் வெளியே அவதானிக்க முடியாதபடி திரையிடப்படும். இராணுவ கட்டிடங்கள் இடங்கள் போன்றவைகள் உங்கள் பார்வையிலிருந்து விலக்கியே இருக்கும்படியான ஒழுங்குகள் செய்யப்பட்டிருக்கும். கட்டுவனில் பொலீசார் உங்களை பொறுப்பு எடுக்கும் போது விசாரிப்பர். இராணுவத்தினர் படமும் எடுப்பார்கள்.

யாழ்ப்பாணத்திலிருந்து திரும்ப கொழும்பு வரும் போது இடிந்து விழும் நிலையிலிருக்கும் யாழ் ரயில்வே நிலையம் அருகே அதிகாலையிலிருந்து காவல் நின்று மாலை 4 மணியளவில் பலாலியில் விமானம் ஏறலாம். இந்த யாழ் ரயில்வே நிலையம் அருகே ஈபிடிபியினரால் வழங்கப்படும் தண்ணீர்த் தாங்கி உள்ளது. மிகவும் அமைதியான சூழ்நிலையில் எல்லாம் இயங்குகின்றது. ஈபிடிபியினரின் அலுவலகங்களை யாழ்பாணத்தில் பரவலாக எங்குமே இராணுவ முகாம்களுக்கு அண்மையில் காணமுடியும்.

நாம் எல்லோரும் லண்டனில் கேட்கும் ரேடியோக்கள் தொலைக் காட்சிகளில் வெளிவரும் மிகப் பெரும்பாலான செய்திகளுமே பொய்யானவை என்பதை அங்கு நேரில் சென்று பார்த்தால் புரியும். இதில் முதலாவதானது இலங்கை இராணுவத்தின் நடத்தைகள். இலங்கை இராணுவம் 1983டன் ஒப்பிடுகையில் மிகவும் வித்தியாசமாகவே நடந்து கொள்கின்றனர். இதை நான் கடந்த யுத்த நிறுத்தக் காலத்தில் போனபோதும் அதவானித்தேன். பொய்யான செய்திகள் பரவலாகப் பரப்பப்படும் போது உண்மையான குற்றங்கள் நிகழுவதும் அந்தப் பொய்யினுள் புதைக்கப்படுகிறது.

ஊரடங்கு வாழ்வு…..

யாழ்ப்பாணம் புலிகளிடமிருந்து விடுவிக்கப்பட்டு பத்து வருடங்களுக்கு மேலாகியும் இன்று வரையில் அங்கு ஊரடங்குச்சட்டம் அமுலில் உள்ளது. இரவு 9 மணிக்கு பிறப்பிக்கப்படும் ஊரடங்குச் சட்டம் மக்களின் அன்றாட வாழ்க்கையை பெருமளவு பாதிப்படையவே செய்கிறது. இந்த ஊரடங்கு காரணமாக யாழ்பாணத்திலிருந்து கடைசி பஸ் சேவைகள் 6 மணிக்கு புறப்படும். இப்படியான இடைஞ்சல்களுடன் வாழும் யாழ் மக்கள் இவ் ஊரடங்குச் சட்டத்தை முற்றாக நீக்குவதையே விரும்புகிறார்கள். குறைந்தது ஊரடங்குச் சட்டம் இரவு 12 பிறப்பிக்கப்படுவதையும் கடைசி பஸ் சேவைகள் 8 மணிவரை நீடிப்பதையும் விரும்புகிறார்கள். யாழில் அதிகாரத்தை வைத்துள்ள ஈபிடிபியினர் இந்த நடைமுறைகளை ஏன் செய்ய முடியாது உள்ளது. இவை மக்களின் அடிப்படையான பிரச்சினைகளில் ஒன்றாகும்.

இரவு வேளைகளில் மின்சாரத்தடை ஏன் செய்யப்பட வேண்டும் என்பது மக்கள் பல வருடமாக கேட்டபடி உள்ளவிடயம். இரவு 8 மணியிலிருந்து இரவு 10 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இந்த மிக முக்கியமான நேரத்தில் ஏன் மின்சாரத்தை அரசு துண்டிக்க வேண்டும்? யாழ் பிள்ளைகளின் கல்வியில் இது பெரும் பாதிப்பை உள்ளாக்குகின்றது. இப்படியான பிரச்சினைகளை தீர்த்து வைக்கக்கூடிய திர்த்து வைக்க வேண்டிய கடமைப்பாடு அங்கு அதிகாரத்தைக் கொண்டுள்ள ஈபிடிபியினருக்கு உள்ளது. இவ்விடயத்தில் ரிஎன்ஏ கேட்டாலும் அரசு செவிசாய்க்காது.

மாலை 6 மணிக்கு கடைசி பஸ் போனதும் யாழ்ப்பாண நகரம் வெறிச்சோடிவிடும். ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் பிறப்பிக்கப்படுவதால் அந்த நேரத்தில் ஆபத்து அவசரத்திற்கு வெளியே வரமுடியாத நிலையுள்ளது. நோய்வாய்ப்பட்டவர்களை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல முடியாது.

புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்றால் இலங்கை இராணுவம் முன்பு வீட்டுக்கு பக்கத்து வீட்டார்களையும் தொந்தரவு செய்வது வழக்கம். ஆனால் இப்போது அப்படி எல்லாம் நடப்பதில்லை. இதேவேளை புலிகளைப் பற்றிய மிகச் சரியான தகவல்களை இhணுவம் பெறுவதினாலேயே இராணுவம் தேவையற்றோரை தொந்தரவு செய்வதில்லை என மக்கள் கருதுகின்றனர். மக்களது அன்றாட வாழ்கை பலவகையில் பாதிக்கப்பட்டாலும் தனிப்பட்டமுறையில் இராணுவம் தலையிடாமல் நடந்து கொள்வதை அவதானிகக் கூடியதாக உள்ளது.

பலாலியிலிருந்து இராணுவத்தின் தொடர் வண்டிகள் கச்சேரியூடாக நாவற்குழியை நோக்கி போகும் விடயம் மிக முக்கியமானது. காரணம் இப்படியான தொடர் இராணுவ வண்டிகள் இந்த எ9 பாதையூடாக போகும் நேரத்தில் மிகவும் வேதனைக்குரிய விடயம் தமிழர்கள் இந்த பாதையை எக்காரணம் கொண்டும் எந்த அவசரத்திற்கும் குறுக்காக போக முடியாது. அதாவது இந்த பிரதான பாதையின் முழு பக்கத்து தெருக்களுமே மூடப்படும் எல்லா வண்டிகளும் மக்களும் இந்த தொடர் வாகன வண்டிகள் போய் முடியும் வரையில் காத்திருக்க வேண்டும். இதில் அவசர கர்ப்பிணியாகிலும் அல்லது மாரடைப்பில் அவஸ்த்தைப்படுபவராயினும் சரி காத்திருக்க வேண்டியதுதான். இது குறைந்தது 2மணி நேர நாடகமாக இருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

குடாநாட்டில் எல்லா மக்களையும் இராணுவம் மதிப்பீடு செய்துள்ளது. யார் எவர் என்பதை நிச்சயமாக தெரிந்துள்ளது. இப்படி இருக்கையிலும் ஏன் இராணுவம் தனது கெடுபிடிகளை தளர்த்தி மக்களை சுதந்திரமாக எந்நேரமும் எதுவும் செய்ய விடாமல் தடுக்கிறது என்பது எல்லோரிடமும் உள்ள கேள்வியாகும்.

யாழ் மக்கள் என்ன கூறுகிறார்கள்…..

யாழ்ப்பாணத்தில் மக்களின் பேச்சுக்களை அவதானிக்கும் போது, மகிந்தாவை ஆட்சிக்கு கொண்டுவந்தது புலிகள் என்றும், வன்னியில் உள்ள பாஸ் முறையே மக்களைப் புலிகளின் எதிரியாக்கியது என்றும் 60 வயது என்றிருந்த கட்டுப்பாட்டை 65 ஆக்கியது மக்களிடம் ஏன் இப்படி சுதந்திரமாக இருக்க வேண்டிய வயோதிபர்களை கட்டுப்படுத்துகிறார்கள் என்றும் ரிஎன்ஏ யினர் மகிந்தாவிடம் பேசி தமது பிரச்சினைகளையும் தமிழர் உரிமைப் பிரச்சினைகளையும் தீர்க்க வழிமுறைகளைச் செய்ய புலிகள் தடுப்பது பற்றியும், தற்போது யாழ்பாணத்தில் தமிழில் பேசி தமிழர்களிடமிருந்து புலிகளின் ஊடுருவலை தெரிந்து கொள்வதும் அரச படைகளுடன் இணைந்து செயற்படுவதும் முன்னாள் புலிகளே என்றும், கூறுகின்றனர்.

இந்தியா உதவிக்கு வந்தபோது அவர்களை சரியாகப் பாவிக்க புலிகளிடம் இராஜதந்திரம் இல்லை என்றும் மக்கள் கருதுகின்றனர்.

கிழக்கு தேர்தல் புறக்கணிப்பு – மகிந்தாவை சந்திக்காது ரிஎன்ஏ புறக்கணிப்பது – புலிகள் ரிஎன்ஏ கட்டுப்படுத்துவது போன்றன தவறு என்றே மக்கள் கருதுகின்றனர்.

ரிஎன்ஏ அரசை அல்லது அரசின் அலுவலர்களை சந்திப்பதை புலிகள் விரும்புவதில்லை. இது தமது பாராளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு செய்ய வேண்டிய அலுவல்களை செய்யவிடாமல் புலிகளால் தடைகள் ஏற்படுவதாக மக்கள் கருதுகின்றனர்.

யாழ் மருத்துவமனையில் தேவையான மருந்துகள் இல்லை. மருத்துவ மனையின் முக்கிய கணக்காளர் பதவியில் இருப்பவர் கொழும்புடன் தொடர்பு கொள்ள தமிழில் மட்டுமே தொடர்பு கொள்ளக் கூடியவர் என்பதும் இதுவே பலவிதமான தடங்களுக்கு காரணமாக இருப்பதாகவும் இவர் ஈபிடிபி யினாலேயே நியமிக்கப்பட்டவர் என்றும் ஒருவர் குற்றஞ்சாட்டினார். வேறு பலருடன் கதைத்ததில் பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் உண்டு. குறிப்பாக கொழும்புடன் தொடர்புகொள்ளும் விடயங்களில் தொடர்பு மொழியாக ஆங்கிலம் உள்ளதால் அரச அலுவலர்களுக்கு மொழி சிக்கலாக உள்ளது.

மக்கள் நினைப்பில் டக்ளஸ் கருணா அரசாங்கத்தோட சேர்ந்து இருக்கிறார்கள். ரிஎன்ஏ புலிகளின் கதைகளை கேட்டுக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாமல் உள்ளனர். தமது பிரச்சினைகளை பேச ஆட்களில்லை என்ற உணர்வு மேலோங்கியுள்ளதை அவதானிக்கவும் முடியும்.

இன்னும் சிலரிடம் முக்கியமாக வர்த்தகர்களிடம் இந்தப் புலிகள் தம்மை வறுகு வறுகு என்று வறுகி நாம் பிச்சைக்காரர் ஆகிவிட்டோம் எமக்கு செய்த அநியாயத்திற்கே புலிகள் அரசாங்கத்திடம் வாங்கிக் கட்டுகிறார்கள் என்பதும் சந்தையில் தாராளமாய் கேட்க முடிகிறது.

யாழில் புலிகளின் செயற்பாடுகள்…..

புலிகளை விட்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியேறியவர்கள் புலனாய்வுத்துறையில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளார்கள். ஈபிடிபி மற்றும் ரிஎம்விபி உறுப்பினர்களுக்கு புலிகளின் அண்மைக்கால நடவடிக்கைகள் உறுப்பினர்கள் பற்றி எதுவும் தெரிவதற்கில்லை. அதனால் அவர்களால் இன்று புலிகளை அடையாளம் காணுவது கடினமானது. ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்குள் புலிகளைவிட்டு வெளியேறிய பலர் இன்று இலங்கை அரசின் உளவுப்படையில் வேலைசெய்யும் அலுவலர்கள் என்பது தெட்டத் தெளிவான விடயம். இன்று யாழ்ப்பாணத்தில் புலிகளின் ஊடுருவலைத் தடுப்பது முன்னாள் புலிகளாகிய இன்னாள் அரச உளவுப்படையினரே. முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமைக்கு புலிகளால் முன்வைக்கப்பட்ட காரணம் அவர்கள் தம்மை காட்டிக் கொடுப்பதாக, ஆனால் இன்று புலிகளே புலிகளைக் காட்டிக் கொடுக்கும் நிகழ்வு நடைபெறுகின்றது.

அன்று மாத்தையா நேற்று கருணா இன்று இளந்திரையன் – புலிகளின் இராணுவக் கட்டமைப்பு  உருவாக்கிய உள்முரண்பாடுகளும் பிரச்சினைகளுமே புலிகளின் தன்னழிவிற்கு இட்டுச்சென்று உள்ளது. இன்று புலிகளின் போராட்டம் தலைமை எல்லாமே தோற்றுப் போயுள்ளதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

இளந்திரையனே கிளிநொச்சி தாக்குலின் தோல்விக்கு காரணம் என்றும் கூறி அவருக்கும் இன்னும் சிலருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டதாக அங்கு மக்கள் தெரிவிக்கின்றனர். இளம்திரையனே இராணுவத்திற்கு முழுத் தகவல்களும் கொடுத்தவர் என்றும் இலங்கை இராணுவம் புலிகளுக்கு உள்ளேயும் புலிகளின் ஆதரவாளர்களையும் தமக்கு செய்தி சேகரிப்புக்கு தமது உளவாளிகளாக மாற்றி யமைத்துள்ளனர்.

இக்காரணத்தினாலேயே யாழ்ப்பாணத்தில் புலிகள் இன்று எதுவுமே செய்யமுடியாத நிலையில் இருப்பதாயும் பலராலும் பேசப்படுகின்றது. ஒரு சாதாரண ஓட்டோ டிரைவர் ஒரு வெளிநாட்டுப் பிரஜைக்கு இவற்றை சாதாரணமாகவே பேசிக்கொள்கிறார்.

சந்திரிகா அரசு காலத்தில் புலிகள் யாழ்ப்பாணத்தில் நிலத்துக்குகீழ் ஒழித்துவிட்டுப் போன ஆயுதங்களை புலிகள் திரும்ப வந்து எடுத்துப் போராடினார்கள். இப்போ இந்த நிலை யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை பூச்சியம் என்றே கருதப்படுகிறது. காரணம் இராணுவம் மிகவும் நுட்பமாக விடயங்களை கையாளுகின்றது.

தற்போது வன்னிப் பகுதியில் புலிகள் நிலத்துக்குக் கீழ் ஒளித்துவிட்டுப் போகும் அத்தனை பொருட்களும் தற்போது இராணுவத்தால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. காரணம் இராணுவம் மிக நுட்பமான கருவிகளையும் யுக்திகளையும் கையாளுவதேயாகும். இதைவிட புலிகளிடமிருந்து சரணடைந்தவர்களினதும் தகவல்கள் இலங்கை அரசுக்கு பெருமளவு உதவி புரிகின்றது.

கடந்த 20 வருடங்களாக புலிகளின் உளவுப் படையில் இருந்த நபர் படகுமூலம் இந்தியாவுக்கு தப்பியோட முயற்சித்தபோது புலிகள் கலைத்துக் கலைத்து அந்தப் படகை சுட்டுத் தள்ளினர். அதற்கிடையேயும் அந்த நபர் தப்பியோடி இராணுவத்திடம் சரணடைந்துள்ளார். இவரிடமிருந்து மிக அதிகமான வன்னிப் பிரதேச தகவல்கள் பெறப்பட்டுள்ளது என்பது யாழ்ப்பாணத்தில் உள்ள பேச்சுக்கள்.

தற்போது யாழில் புலிகள் ஊடுருவினால் உளவுப் படையின் அதிவிரைவுப் படையினரிடம் தப்பிவிட முடியாது. புலிகளின் ஊடுருவலை ஆகக் குறைந்தது 2 கிழமையில் அழித்தொழித்துவிடுவர்.

முன்பு ஒருகாலத்தில் எப்படி புலிகள் மாற்று இயக்கத்தவர்களை அழித்தொழிப்பில் மிக வேகமாக செயற்ப்பட்டனரோ அதே போல இப்போது புலிகளை அழித்தொழிக்க இந்த முன்னாள் புலிகள் செயற்ப்படுவதை பார்க்க முடிகிறது. ஒரு குடும்பம் புலிகளுடன் தொடர்படையவர்கள் என்று தெரியவரின் அக்குடும்பம் காணாமல் போய்விடுவர்.

இந்தப் பிரிவினர் மோட்டார் சைக்கிளில் (mobile brigade) தான் எப்போதம் வருவார்கள். யாழ்ப்பாணத்தில் மக்களே பெரும்பான்மையினர் மோட்டார் சைக்கிள் பாவிப்பதால் பெரும்பாலானவர்கள் இந்த அதிவிரைவுப் படையினரை அவதானிப்பது மிக கடினம். இவர்கள் வரம்பு வாய்க்கால் என்ற வேறுபாடு இல்லாமல் வருவர். திரிவர். தேடுவர். இவர்களே யாழ்பாணத்தை யுத்தப் பிரதேசமாக வைத்திருப்பவர்களாவர். யாழ்ப்பாணத்தில் புலிகளின் நடவடிக்கைகளை ஒடுக்கியவர்கள் இந்த இராணுவப் பிரிவினரேயாவர்.

அண்மையில் சரசாலையில் ஒரு வீட்டில் புலிகள் பகலில் வந்து தங்கி போனவிடயம் அடுத்தநாள் அதிகாலையில் அந்த வீடு தாக்கப்பட்டு 3 பேர் கொல்லபட்டனர். அந்த வீட்டில் தொலைத்தொடர்பு சாதனம் துப்பாக்கிகள் எடுக்கபபட்டது. இப்படியாக இந்த தகவல்களை அரச இராணுவத்தினர்க்கு கொடுத்து உதவுபவர்களும் முன்னாள் புலிகளேயாகும். இந்த உளவாளிகள் புலிகளை காட்டித்தருவதாக சொல்லியே உயிருடன் விடப்பட்டுள்ளவர்கள் அல்லது அரசின் நம்பத்தகுந்த வட்டாரங்களாக மாற்றப்பட்டோராவர்.

இந்த அதிவேக தாக்கும் பிரிவினர் பல அதிகாரங்களை தமது கைவசம் கொண்டுள்ளனர். யாராவது ஒருவரில் சந்தேகம் என்றால் அவரிடம் அவரது அடையாள அட்டைகளை வாங்கிக் கொண்டு குறிப்பிட்ட முகாமிற்கு வரும்படி கூறிவிட்டுப் போவார்களாம். அங்கே இவர் போக முன்பு இவரைப் பற்றிய முழு விபரங்களும் பெற்றுக்கொண்டு இவரிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும். அதிலிருந்து இவரைப் பற்றிய முடிவுகள் எடுக்கப்படுவதாக மக்கள் கருதுகின்றனர்.

இன்று யாழ்ப்பாணத்தில் புலிகள் எந்த ஒரு வேலையும் செய்ய முடியாமல் இருப்பது பற்றி மக்கள் மிகவும் சாதாரணமாக பேசுவதுண்டு. காரணம் ஒருகாலத்தில் ஒரு சிறு முயற்ச்சியுடன் தமக்கு வேண்டியவர்களுக்கு கதவடைப்பு கர்த்தால் என்பன செய்யக்கூடியவர்கள் பாலசிங்கம், தமிழ்ச்செல்வன் மரணித்த போது யாழ்ப்பாணத்தில் எந்த ஒரு கதவடைப்போ கர்த்தாலோ செய்யப்படவில்லை என சிலரும், தற்போது யாழ்பாணத்தில் எல்லோரும் மொபைல் தொலைபேசியுடன் இருப்பதாயும் அப்படி இருந்தும் புலிகளின் தொடர்புகள் யாழ்பாணத்தினுள்ளே வருவது குதிரைக் கொம்பாகிவிட்டது. இது எல்லாவற்றிக்கும் காரணம் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் தற்போது அரசின் உளவாளிகளாக உள்ளதாலேயே என்று பலரும் பேசிக் கொள்கிறார்கள்.

புலிகளின் உயர்மட்டத்தில் அரச உளவாளிகள் இருப்பதாலேயே புலிகள் இப்படியான படுதோல்விகளைச் சந்திக்கிறார்கள் என்று பலரிடம் கருத்துண்டு இதற்கு உதாரணமாக ஆனந்தபுரம் சம்பவத்தை எல்லோரும் உதாரணமாக பேசுகின்றார்கள். போராற்றல் கொண்ட தளபதிகளான பால்ராஜ், கருணா, தீபன் போன்ற கட்டளைத்தளபதிகளை புலிகள் இழந்தது புலிகளுக்கு இராணுவ வல்லமையை இழந்துள்ளனர் என மக்கள் கருதுகிறார்கள்.

வன்னி நிலைமைகள் தொடர்பாக…..

புலிகளே எல்லாம் என்றிருந்த வன்னி மக்களை புலிகளும் துன்புறுத்தியது மிகவும் மனவேதனையானது என்று தப்பி வந்த முள்ளியவளை வாசி சொன்னார். தப்பிப் போகும் மக்கள் புலிகளால் சுடப்பபட்டுள்ளனர் என்ற கருத்து யாழில் பரவலாக உள்ளது. வெளி நாட்டுத் தமிழர்கள் இங்கு வந்து பார்த்து எமது நிலைமைகளை அவதானித்து பேசுவதே நல்லது என்ற அபிப்பிராயப்படுகின்றனர்.

புலிகள் 2000 பேர்மட்டில் கிழக்கு காடுகளில் தப்பியோடி உள்ளதாயும் 1000 பேர்மட்டடில் வன்னிக் காடுகளில் ஒழிந்துள்ளார்கள் என்றும் இனிமேல் கொரில்லாப் பாணியிலான தாக்குதல்களையே தொடுப்பர்கள் எனவும் பேசிக் கொள்கின்றனர்.

மேலும் புலிகளின் தலைவர்களாக சொர்ணம் பானு போன்றவர்களே இருப்பதாகவும் முக்கிய பல தலைவர்களை புலிகள் இழந்து விட்டதாயும் புலிகளால் இனிமேல் பாரிய இராணுவ நடவடிக்கைகளை செய்ய முடியாதென்றும் ஒரு சந்தை வியாபாரி கூறினார்.

யாழ் மருத்துவ மனைக்கு புலிகளால் சுடப்பட்ட 3 தமிழ் மக்கள் கொண்டு வரப்பட்டனர். அவர்கள் அங்கிருந்து தமது வியாதியின் கொடுமையிலும் தமது மரணத்தின் விளிம்பிலும் புலிகளால் சுடப்பட்டதை எடுத்துக் கூறி திட்டுகின்றனர்.

கோப்பாய் கொடிகாமம் நாவற்குழி ஆகிய பகுதிகளில் ஜடிபி முகாம்கள் நிறுவப்பட்டுள்ளன. இத்துடன் மேலும் முகாம்கள் நிறுவுவதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்காக புதிய இராணுவ காவலரண்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஜடிபி முகாம்களில் இந்து பிராமண பூசாரிகள் மிகவும் முறைகேடாகவே நடாத்தப்படுவதாயும் இது பற்றி கேட்பதற்கு யாரும் இல்லை என்ற ஆதங்கம் பலரிடமும் உள்ளது. ஒரு கிறீஸ்தவப் பாதிரியாரை இப்படியான முகாமில் வைத்திருப்பதை அரசு விரும்பவில்லை. ஆனால் இந்து மதகுருமார்கள் இந்த முகாம்களில் அடைக்கப்பட்டு தமது ஆஸ்த்தானங்களை கவனிக்க முடியாமல் உள்ளனர். இதற்கு பொறுப்பாக உள்ள இந்து கலாச்சார அமைச்சும் அதனைக் கவனம் எடுக்கவில்லை.

இறுதியாக…..

புலிகளின் காலத்தில் பெண்கள் நன்றாக நகையணிந்து எந்த நேரத்திலும் போகலாம் வரலாம் என்ற நிலை இருந்தது என்பதை எல்லோருமேமே ஒத்துக் கொள்கிறார்கள். ஆனால் தற்போது யாழ்ப்பாணத்தில் பல களவுகள் கொள்ளைகள் நடைபெறுகின்றது. இது பசி பட்டினி காரணமாகவே நடைபெறுகின்றது. காரணம் வேலையின்மை. மோட்டார் சைக்கிளில் வந்து வழிப்பறி செய்வதும் இராணுவத்தினர் போன்று நடித்து கொள்ளையடிப்பதும் தாராளமாக நடைபெறுவதாக பலரும் பேசிக் கொள்கிறார்கள்.

வெளிநாடுகளில் இந்தக் கொள்ளைகளை ஒரு குறிப்பிட்ட இயக்கத்தினரே செய்வதாக பிரச்சாரப்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த கொள்ளைகளில் பல தரப்பட்டவர்களும் ஈடுபடுகின்றனர்.

தற்போது யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் மக்களுடன் நெருங்கிப் பழகுகின்றனர். புலிகளின் வரிஅறவிடுதல் புலிகளின் பரிசோதனைகள் புலிகளின் கெடுபிடிகள் இல்லையென்று திருப்திப்படுபவர்கள் பலருள்ளனர். நான் எனது சொந்த அனுபவத்தில் புலிகளின் பரிசோதனைகளையும் இராணுவத்தின் பரிசோதனைகளையும் சந்தித்து உள்ளேன். புலிகள் நடந்துகொண்ட விதமும்  பேசும் பேச்சுக்களும் ஒப்பீட்டளவில் இலங்கை இராணுவம் பரவாயில்லை என்ற மனப்பான்மையையே ஏற்படத்தியது. இப்படி இந்த இராணுவம் நடக்கிறது என்று யோசிக்கும் போது இராணுவம் புலிகளின் தவறுகளில் இருந்து பாடங்களை கற்றுக் கொள்கிறார்கள் என்றும் ஆனால் புலிகள் இராணுவத்தின் தவறுகளை படிப்பதில்லை மட்டுமல்ல தாமும் தவறுகளை தொடர்ந்து விடுகிறார்கள் என்றுமே எண்ணத் தோன்றுகின்றது. ஆனால் இனிமேல் புலிகள் திரும்பியும் வந்தால் என்ற பயம் உள்ளதை அவதானிக்க கூடியதாக இருந்தது.

யாழ்ப்பாணத்தில் ஆங்கிலம் மூலம் கல்வி கற்றல் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆங்கிலத்தின் இலக்கிய ஆங்கில பாடங்கள் பரவலாக எல்லா உயர்தர பாடசாலைகளிலும் ஆங்கில மொழி மூலம் கற்ப்பிக்கப்படுகின்றது.

சிங்களம் படிப்பதால் நல்வாழ்க்கை பெறலாம் என்ற எண்ணம் மக்களிடம் வளர்ந்துள்ளது. இது இலங்கை அரசின் சிங்கள நாடு என்ற பயணத்திற்கான அறிகுறியாக தெரிகின்றது. அதேசமயம் சிங்கள இராணுவத்தினர் தாராளமாக தமிழில் பேசுகின்றனர். அவர்களுக்கு தமிழ் பல காலமாக படிப்பிற்கப்படுகின்றது.

1983ம் ஆண்டு காலப்பகுதியில் இருந்த சாதிப்பிரிவனர்க்குரிய விகிதாசாரங்களில் தற்போது சாதியமைப்புக்கள் யாழ்ப்பாணத்தில் மாற்றம் கண்டுள்ளது. சாதிக்குரிய தொழில்கள் மெல்ல மெல்ல புலிகளின் ஆதிக்க காலத்தில் செய்ய முடியாதிருந்த தொழில் முறைகள் மீண்டும் ஆரம்பித்துள்ளது. இதற்கு வேலையில்லாத் திண்டாட்டமே காரணமாகும். இதற்குரிய பரிகாரங்களை காணவேண்டி உள்ளது.

சாதியரீதியாக ஒடுக்கப்பட்ட பெரும்பான்மை மக்களின் ஆதரவைக் கொண்ட அமைப்பாக ஈபிடிபி யே உள்ளது. இதன் போது எனக்கு ஜாபகம் வந்த ஒருவிடயம் யாழ்பாணத்தில் புலிகள் தேர்தலை புறக்கணிக்கும்படி கேட்டு தேர்தல் புறக்கணிக்கப்பட்ட போது ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்கள் துணிந்து ஈபிடிபியை தமது பிரதிநிதியாக கொண்டு வந்தனர். இது பற்றி ஐபிசி ஆய்வாளர் ஜோதிலிங்கம் அந்த மக்களை நாம் (புலிகள்) வென்றெடுக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டி இருந்தார்.

சரசாலை சரஸ்வதி கல்லுரியில் ஆரம்ப கல்வி கற்ற யாழ் மத்திய கல்லுரி அதிபர் பற்றியும் அவரது கடமையுணர்வு உதவி மனப்பானமை மாணவர்களிடையே பெருமைமிக்க அதிபர் போன்ற விடயங்கள் யாழ்ப்பாணத்தில் இன்றும் அவர் கொல்லப்பட்டு பல காலங்களாகியும் மக்களால் பேசப்படுகின்றது. இத ஒரு முக்கியமான விடயமாக எனக்கு தெரிகின்றது.

புலிகளும் புலிகளின் ஊடகங்களும் செய்யும் பிரச்சாரங்கள் யாழ்ப்பாண மக்களைச் சென்றடைவதில்லை. அவை மக்களிடம் எடுபடவில்லை என்றே நான் கருதுகிறேன். இயக்கங்களால் பட்ட கஸ்ரங்களால் மக்களுக்குப் போராட்டத்தில் வெறுப்பும் சலிப்பும் எற்பட்டுள்ளது. இதன் காரணமாக தாம் இபபடியே இலங்கை இராணுவத்துடன் வாழ்ந்துவிட்டுப் போய்விடலாம் என்று எண்ணும் அளவிற்கு அவர்கள் தள்ளப்பட்டு உள்ளனர்.

சாதாரண சமாதான வாழ்வு என்றால் என்ன என்பதையே அவர்கள் மறந்துவிட்டனர். அதனால் திறந்தவெளிச் சிறைக்குள் ஊரடங்குவாழ்வுக்கு தங்களைப் பழக்கப்படுத்திக் கொண்டுள்ளனர். மகிந்த ஆண்டாலென்ன பிரபாகரன் ஆண்டாலென்ன இவர்களுடைய சகோதரங்களும் பிள்ளைகளும் ஆண்டாலென்ன தாங்கள் உண்டு தங்கள் வாழ்வு உண்டு என்று வாழப் பழகிக்கொண்டு உள்ளனர். அந்த மக்களை மௌனமாக்கிவிட்டு அங்கும் இங்குமாகப் பலரும் அவர்களுக்கு குரல் கொடுப்பதாகக் கூறி தங்கள் அரசியலை அவர்கள் தலையில் கட்டுகின்றனர். பாவம் அந்த மக்கள். அவர்களது ஊரடங்கு வாழ்வு முடிவின்றித் தொடர்கிறது.

மேற்கு நாடுகளிலுள்ள இலங்கை தூதரகங்களின் பாதுகாப்பை அதிகரிக்க அரசு தீர்மானம்

sri-lankan-government.jpgமேற்கு நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களின் பாதுகாப்பை அதிகரிக்க இலங்கை அரசு தீர்மானித்துள்ளது. ஐரோப்பிய மற்றும் ஸ்கன்டிநேவிய நாடுகளில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையிலேயே அந்த நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்படவுள்ளது. இது தொடர்பாக அடுத்து வரும் வாரங்களில் சம்பந்தப்பட்ட நாடுகளுடன் இலங்கை அரசு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நோர்வே தலைநகர் ஒஸ்லோவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து மேற்கு நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களின் பாதுகாப்பை அதிகரிக்கும் நடவடிக்கையில் இலங்கை அரசு ஈடுபட்டிருந்தது. இந்த நிலையில் பேர்லின் மற்றும் லண்டனிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் தாக்குதல்களுக்கிலக்காகின.

இதையடுத்தே மேற்கு நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களின் பாதுகாப்பை அதிகரிக்கும் நடவடிக்கையில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது. இந்த நாடுகளிலுள்ள தூதரக அதிகாரிகளுக்கும் இலங்கை அரசுபல்வேறு அறிவுறுத்தல்களையும் விடுத்துள்ளது.