பொது மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வருவதற்காகவே யுத்த நிறுத்தத்தை கோருகிறோம் என்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச ஒத்துழைப்பிற்கான கனடிய அமைச்சர் பெவர்லி ஜே ஒடா தெரிவித்தார்.
பொதுமக்களும், யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களும் பாதுகாப்பான பகுதிகளுக்கு வருவதற்கு வழிவகுக்கும் வகையிலேயே மோதல்களில் ஈடுபட்டுள்ள தரப்பினரிடம் யுத்த நிறுத்தத்திற்கு செல்லுமாறு கோரிக்கை விடுப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இலங்கைக்கு ஒருநாள் விஜயத்தை மேற்கொண்டு வருகைதந்த சர்வதேச ஒத்துழைப்பிற்கான கனடிய அமைச்சர் பெவர்லி ஜே ஒடா இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவை வெளிவிவகார அமைச்சில் நேற்று மதியம் சந்தித்து சுமார் ஒரு மணிநேரம் பேச்சுவார்த்தைகளை நடத்திய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கனடாவில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவது பற்றி கேள்வி எழுப்பப்பட்டபோது பதிலளித்த கனடிய அமைச்சர்இ 2006ஆம் ஆண்டிலேயே விடுதலைப் புலிகள் இயக்கத்தை கனடிய அரசாங்கம் தடைவிதித்திருந்தது. கனடாவில் பெரும் எண்ணிக்கையிலான தமிழ் மக்கள் வாழ்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் சிறந்த குடிமக்களாவர். எனினும் ஒருசில விரும்பத்தகாத சக்திகள் மேற்கொண்டுவருகின்ற நடவடிக்கை தொடர்பாக இனங்கண்டு கொண்டுள்ளோம். அத்தகைய தரப்பினரின் செயற்பாடுகளை கனடா சகித்துக் கொள்ளமாட்டாது என தெரிவித்தார்.