May

May

இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவுமாறு வேண்டுகோள்

fily-ap.jpg
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு உதவ முன்வருமாறு மட்டக்களப்பு சமாதான நீதிவான்களின் மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் ஏ.சண்முகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

துறை நீலாவணை தொடக்கம் வெருகல் வரை வாகன பவனி மூலம் வன்னி மக்களுக்காக பொருட்களை சேகரிக்கும் பணியினை எதிர்வரும் 16 ஆம், 17 ஆம், 18 ஆம் திகதிகளில் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பாதுகாப்பு வலயம் மீதான தாக்குதல் தொடர்பில் ஐ.நா பேச்சாளரின் கருத்து அடிப்படையற்றது -அரசாங்கம் நிராகரிப்பு

mahinda-samarasinghe.jpgபாதுகாப்பு வலயத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் ஐ.நா.வின் இலங்கை பேச்சாளர் கோர்டன் வைஸ் எவ்வித ஆதாரங்களுமின்றி கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். அவற்றை இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரிக்கின்றது. இந்த இறுதிச் சந்தர்ப்பத்தில் புலிகளுக்கு சர்வதேசம் உயிர்மூச்சு வழங்கக் கூடாது என இடர்முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.

ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக எதிர்வரும் 14ஆம் திகதி விசேட பிரேரணை கொண்டுவந்தால் அது தொடர்பில் நாங்கள் எந்த கருத்தையும் தெரிவிக்காமல் வாக்கெடுப்புக்கு விடுமாறு கோருவோம். அத்துடன், வாக்கெடுப்பில் வெற்றியும் பெறுவோம். அவ்வாறு பிரேரணை கொண்டுவருவது புலிகளின் செயற்பாடு நியாயமானது என்ற செய்தியை பறைசாற்றும் என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகிறோம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில் கூறியதாவது:

பாதுகாப்பு வலயத்தில் 372 சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் ஆயிரத்து நூறுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் ஞாயிற்றுக்கிழமை சர்வதேச ஊடகங்கள் செய்திகளை துரித கதியில் பரப்பின. படங்கள் வெளியிடப்பட்டன; அரசாங்கத்தின் வான் மற்றும் எறிகணைத் தாக்குதல்களில் சிவிலியன்கள் இறந்ததாக வெளிகாட்டும் வகையில் உருவாக்கப்பட்ட பயங்கரமான படங்கள் வெளியிடப்பட்டன. ஆனால், அந்த சம்பவம் எப்போது நடைபெற்றது என்ற திகதிகள் அங்கு குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. இது புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்களால் உருவாக்கப்பட்ட விடயமாகும்.

அரசாங்க டாக்டர் சண்முகராஜா என்பவரை மேற்கோள்காட்டியே சர்வதேச ஊடகங்கள் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளன. பாதுகாப்பு வலயத்தில் புலிகளின் கட்டுப்பாட்டில் அனைத்து மக்களும் சுதந்திரமாக கருத்து தெரிவிக்க முடியாமல் இருக்கின்றனர். இந்நிலையில், டாக்டர் சண்முகராஜா என்பவர் புலிகளின் நிர்ப்பந்தத்தின் காரணமாக இவ்வாறு பேசியிருக்கமாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது. இதனை ஏன் சர்வதேச ஊடகங்களும் ஐ.நா. பேச்சாளரும் புரிந்துகொள்ளவில்லை. அடுத்ததாக டாக்டர் சண்முகராஜா என்ற பெயரில் யார் தொலைபேசியில் பேசினார் என்பதை எவ்வாறு உறுதிப்படுத்த முடியும்? புலிகள் சண்முகராஜா என்ற பெயரில் பேசியிருக்கலாமே? எவ்வாறு தகவல்களை உறுதிப்படுத்துவது? ஐ.நா.வின் கொழும்பு பேச்சாளர் கோர்டன் வைஸ் எவ்வாறு தகவல்களை உறுதிப்படுத்தினார்? பாதுகாப்பு வலயத்தில் சுதந்திரமான குரல் வெளிப்படாது என்று பொது அறிவுள்ள ஒருவருக்கு சாதாரணமாக தெரிந்த விடயமாகும். ஆனால், ஐ.நா. பேச்சாளர் கோர்டன் வைஸ் எந்த அடிப்படையுமின்றி தகவல்களை வெளியிட்டுள்ளார். டாக்டர் சண்முகராஜா என்பவர் அரசாங்க ஊழியர் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அப்படி பாதுகாப்பு வலயம் மீது ஏதாவது அசம்பாவிதங்கள் இடம்பெறுமிடத்து அது குறித்து உடனடியாக அவர் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளுக்கு அல்லவா அறிவித்திருக்க வேண்டும். பாதுகாப்பு வலயம் முழுமையாக புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு யாருக்கும் சுதந்திரமாக கருத்து வெளியிட முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில், அங்கிருந்து வரும் தகவல்கள் உண்மையா என்பது எவ்வாறு உறுதிப்படுத்துவது?

அரசாங்கம் கனரக ஆயுதங்களை பயன்படுத்துவது இல்லை என்றும் உறுதியாக கூறியுள்ளது. அதில் எந்த மாற்றமும் இல்லை. கனரக ஆயுத பாவனை நடத்தப்பட மாட்டாது என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இதனை விட உத்தரவாதம் தேவையா? எனவே, ஐ.நா. பேச்சாளர் கோர்டன் வைஸின் கூற்றுக்களை அரசாங்கம் அடிப்படையற்றது என்று கூறுவதுடன் முற்றாக நிராகரிக்கிறது. ஐக்கிய நாடுகள் சபை இதற்கு முன்னரும் பல விடயங்களை அடிப்படை ஆதாரங்களின்றி வெளியிட்டிருந்தது. பின்னர் அவை அடிப்படையற்ற தகவல்கள் என்பதை ஐ.நா. ஏற்றுக்கொண்டது.

ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் இலங்கைக்கு எதிரான விஷேட பிரேரணை கொண்டுவருவதற்கு கடந்த இரண்டு வாரங்களாக முயற்சிக்கப்படுகிறது. மனித உரிமை பேரவையில் 48 உறுப்பு நாடுகள் உள்ளன. அவற்றில் 16 நாடுகள் கையொப்பமிட்டால் மட்டுமே பேரவையில் இலங்கை தொடர்பான விஷேட பிரேரணை கொண்டுவர முடியும். நாளை (இன்று) இறுதி தினமாகும். இந்த காலப்பகுதிக்குள் 16 நாடுகளிடம் கையொப்பத்தை பெறவேண்டியுள்ளது. ஆனால், இதுவரை 16 நாடுகளிடம் பெறப்படவில்லை என்றே அறிகிறோம்.

எனினும், ஒருவேளை 16 நாடுகள் கையொப்பமிட்டு ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான விசேட பிரேரணை கொண்டுவரப்பட்டால் அதில் இலங்கை சார்பாக நானும் கலந்து கொள்வேன். அதேவேளை, பிரேரணை தொடர்பாக ஒரு வார்த்தைக் கூட பேசாமல் வாக்கெடுப்புக்கு விடுமாறு கோருவோம். வாக்கெடுப்பில் நிச்சயம் எமது நட்பு நாடுகளுடன் இணைந்து நாங்கள் வெற்றி பெறுவோம்.

ஆனால், சர்வதேசம் ஒரு விடயத்தை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அதாவது, ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான விசேட பிரேரணை கொண்டுவரப்பட்டால், அது புலிகள் பொதுமக்களை பணயக் கைதிகளாக வைத்திருப்பதும் மக்களை கொலை செய்வதும் நியாயமானதென்ற செய்தியொன்று மறைமுகமாக விடுக்கப்படுகின்றமைக்கு சமனாகும். அத்துடன், அரசாங்கம் மேற்கொண்டு வரும் மனிதாபிமான நடவடிக்கையை நிறுத்துவதற்கும் அழுத்தம் கொடுக்கப்படலாம்.

எனவே, இந்த தீர்க்கமான இறுதி சந்தர்ப்பத்தில் புலிகளுக்கு உயிர்மூச்சு வழங்க வேண்டாம் என சர்வதேச நாடுகளிடம் கோரிக்கை விடுக்கின்றோம். எவ்வாறெனினும், புலிகள் மீண்டும் மூச்சு விடுவதற்கு நாங்கள் இடமளிக்க மாட்டோம். இலங்கையும் ஐ.நா.வின் செயற்பாட்டு உறுப்புரிமையை கொண்ட நாடு என்பதை நினைவூட்டுகின்றோம். ஐ.நா.வில் எங்களுக்கு ஆதரவான நாடுகளும் உள்ளன.

இவ்வாறு பிரேரணைகள் கொண்டுவருவதன் மூலம் என்ன விளைவுகளை இந்த நாடுகள் எதிர்பார்க்கின்றன என்பதை நாம் சிந்திக்கவேண்டும். பிரிட்டன் உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. எனவே, புலம்பெயர் மக்களின் வாக்குகளை சேகரிப்பதற்காக அந்நாடுகள் இவ்வாறான முயற்சிகளில் ஈடுபடலாம்.

சர்வதேச பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்கின்றனர். இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள வவுனியா நலன்புரி முகாம்களுக்கு செல்கின்றனர். அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஆணையாளர் நாயகம் சேர் ஜோன் ஹோம்ஸ் வவுனியா நிலைமைகள் தொடர்பில் திருப்தி வெளியிட்டிருந்தார். சில சவால்களை எதிர்கொண்டாலும் நாங்கள் தேவையான வசதிகளை வழங்கி வருகின்றோம். மீள் குடியேற்றங்களை ஆரம்பித்துள்ளோம். பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்கப்பட்ட பிரதேசங்களில் ஜனநாயகத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

பாதுகாப்பு வலயத்தில் சிவிலியன்கள் கொல்லப்பட்டால் சர்வதேசத்தை விட இலங்கை அரசாங்கமே அதிகளவில் கவலை கொள்ளும். காரணம் அம்மக்கள் எமது நாட்டின் பிரஜைகள். ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட ஏனைய நாடுகளுக்கு இல்லாத அக்கறை எமக்கு உள்ளது. 

பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீனா நிதி உதவி

menikfarm.gifஅரச கட்டுப்பாடடுப் பிரதேசங்களுக்கு வந்து நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள மக்களுக்கு உதவும் வகையில் சீன அரசாங்கம் ஒரு மில்லியன் டொலரை இலங்கைக்கு வழங்கியுள்ளது. இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள சர்வதேச சமூகத்திடம் இலங்கை அரசாங்கம்  உதவி கோரியிருந்தமைக்கு ஏற்பவே அவசர நிவாரண உதவித் தொகையாக சீனா இதனை வழங்கியுள்ளது.

இலங்கைக்கான சீனத் தூதுவர் இதற்கான காசோலையை இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவிடம் நேற்று அவரது அமைச்சில் வைத்து கையளித்தார். 

இந்தியாவிலிருந்து புதிய ரயில் என்ஜின்கள் விரைவில் இறக்குமதி – போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை

dalas.jpgரயில் சேவையின் மேம்பாட்டுக்காக மேலும் புதிய ரயில் என்ஜின்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி இந்த வருட இறுதிக்குள் 20 பவர்செட் ரயில்களை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய உள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது.

இவற்றின் முதலாவது ரயில் தொகுதி 4 மாதங்களுக்குள் இலங்கை வந்தடையும் என் எதிர்பார்க்கப்படுகிறது. மலசலகூடவசதி, சொகுசு ஆசன வசதி என்பன இவற்றில் உள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது. இவை இரண்டு கட்டங்களாக கப்பல் மூலம் கொழும்பை வந்தடைய உள்ளன. இது தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்டுள்ளதாகவும் தூர இடங்களில் சேவையில் ஈடுபடுத்தக்கூடிய பவர்வெட் ரயில்களையே இம்முறை தருவிக்க உள்ளதாகவும் அமைச்சு மேலும் தெரிவிக்கின்றது.

மேற்படி ரயில்கள் கரையோரப் பாதை மற்றும் களனிவெளிப் பாதை என்பவற்றில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. இந்திய உதவியுடன் தென்பகுதிக்கான ரயில் சேவையை மேம்படுத்தும் திட்டத்துடன் இணைந்ததாகவே மேற்படி ரயில் என்ஜின்கள் தருவிக்கப்படுகின்றன. புதிய ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதன் மூலம் ரயில் சேவையிலுள்ள தாமதம் பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இலங்கையை பலமுள்ள நாடாக நாம் கட்டியெழுப்பியுள்ளோம் – ஜனாதிபதி

mahinda-rajapaksha.jpgசர்வதேச நாடுகள் சில பலவீனமுற்ற நாடு என்ற முத்திரையை எம்மீது குத்த முயன்ற போதும் நாம் பலமுள்ள நாடாக இலங்கையைக் கட்டியெழுப்பியுள்ளோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பொருளாதாரம், சுகாதாரம் என பல்துறைகளையும் அபிவிருத்தியில் கட்டியெழுப்பியதுடன் துண்டாட முனைந்த நாட்டையும் மீட்டுள்ளோமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சர்வதேச நாடுகள் மட்டுமன்றி எம்மவர் சிலரும் இலங்கையை பலவீனமான நாடாக உலகுக்குக் காட்ட முனைந்தனர். அதற்கு ஒருபோதும் நாம் இடமளியோம். அத்துடன் சர்வதேச நிதியம் உட்பட நிதி வழங்கும் நாடுகளிடம் எமது நாட்டை அடிமைப்படுத்தவும் இடமளிக்க முடியாதெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சர்வதேச தாதியர் தின நிகழ்வு நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்றது.  இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்

சென்னையில் நாளை வாக்குப் பதிவு – வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி ஆரம்பம்

india-elc.jpgசென்னையில் வாக்கு இயந்திரங்களை அனுப்பும் பணி ஆரம்பமானது.

மொத்தம் 52,175 வாக்குச் சாவடிகளுக்குப் பலத்த பாதுகாப்புடன் இயந்திரங்கள் கொண்டு செல்லப்படுவதாகவும், சென்னையில் பிற்பகல் 2.00 மணிக்குள் பணிகள் முடிவடைந்து விடும் என்றும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

இலங்கை ஒரு இனக் குழுவுக்கு மாத்திரம் சொந்தமான நாடல்ல – அமைச்சர் டளஸ்

dalas.jpgஇந்த நாடு ஒரு இனக்குழுவுக்கு மட்டும் சொந்தமான நாடல்ல. தமிழ், முஸ்லிம்கள் மற்றும் மலே இனத்தவர்கள் இரண்டாம் தரப்பிரஜைகளல்ல. அவர்களும் இந்நாட்டுப் பிரஜைகளே என அமைச்சர் டளஸ் அழகப்பெரும கூறினார். தேசிய ரயில்வே நூதனசாலை நேற்று (11) மருதானை ஒல்கொட் மாவத்தையில் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது;

அனைவரையும் சமமாக மதிக்கும் இலங்கை நாடொன்றை கட்டியெழுப்புவதற்கு எமது அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஏனைய மதத்தவரை ஏற்று மதிக்கக் கூடிய நிலையை உருவாக்க முயன்று வருகிறோம். இலங்கையிலுள்ள அப்பாவி பொதுமகன் ஒருவனுக்கு அநீதி இழைக்கப்பட்டால் அது குறித்து பேசுவதற்கு உலகில் உள்ள ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உரிமை உள்ளது.

ஆனால் தீவிரவாதத்துக்கு எதிராக செயற்படுவது தொடர்பாக எமக்கு கற்பிக்கவோ ஆலோசனை வழங்கவோ எந்த நாட்டுக்கும் உரிமை கிடையாது. உலகில் எங்காவது ஒரு நாட்டில் தினமும் மோதல்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும். ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் நடைபெறும் யுத்தம் காரணமாக இலட்சக்கணக்கான பொதுமக்கள் இறந்து வருகின்றனர்.

ஆனால், இலங்கை இராணுவம் முன்னெடுக்கும் மனிதாபிமான நடவடிக்கை பொதுமக்களுக்கு சேதமின்றி முன்னெடுக்கப்படுகிறது. இது உலக யுத்த வரலாற்றில் புதிய நடைமுறையாகும். இந்த செயற்பாட்டை கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல்களில் திருட்டுத்தனமாக தங்கியிருந்து வெளிநாட்டவர்கள் அவதானித்து வருகின்றனர்.

மத்திய மாகாணத்தில் தகவல் தொழிநுட்ப கல்வியறிவை மேம்படுத்த முதலமைச்சர் நடவடிக்கை

sarath-cp-cm.jpgமத்திய மாகாணத்தில் தகவல் தொழிநுட்ப கல்வியறிவை மேம்படுத்தும் நோக்கில் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
 
இதன் முதல் கட்டமாக இந்த மாகாண மக்களின் தகவல் தொழிநுட்ப கல்வியை விருத்தி செய்யும் நோக்கில் கண்டி கெட்டம்பேயில் மத்திய நிலையமொன்றை நிர்மாணிப்பதற்கான பணிகளை ஆரம்பித்துள்ளார். இந்த நிர்மாணப்பணிகளுக்காக மத்திய மாகாண சபை 4 கோடி 50 லட்சம் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. இது தவிர தகவல் தொழிநுட்ப துறையை முன்னேற்றும் நோக்கில் பல வேலைத்திட்டங்களை அமைச்சு திணைக்கள மட்டத்தில் செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
மற்றொருபுறம் இந்த நவீன தொழினுட்பத்தில் ஈடுபாடுள்ளவர்களுக்கு கணினி தொழினுட்ப பயிற்சி அளிக்கும் நோக்கில் பயிற்சித்திட்டமொன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

இடம்பெயர்ந்தவர்களுக்கு நிந்தவூரிலிருந்து உணவுப் பொருட்கள்

islam.jpgவன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களுக்கென நிந்தவூர் பிரதேச செயலகமும், ஜும்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையும் இணைந்து இளைஞர்களின் உதவியோடு நிந்தவூர் பிரதேசத்தில் வீடு வீடாகச் சென்று மனிதாபிமான முறையில் சேகரிக்கப்பட்ட சுமார் பத்து இலட்சம் ரூபா பெறுமதியான பலதரப்பட்ட உலருணவுப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக நிந்தவூர் பிரதேச செயலாளர் ஐ. எம். ஹனிபா தெரிவித்தார்.

தீர்வு யோசனையை நிறைவு செய்வதில் நிலவிய பிரச்சினைகள் தொடர்பில் இணக்கம் ஏற்பட்டுள்ளது – அமைச்சர் திஸ்ஸவிதாரண தெரிவிப்பு

Minister Tissa Vitharanaசர்வ கட்சி பிரநிநிதிகள் குழுவின் தீர்வு யோசனையை நிறைவு செய்வதில் நிலவிவந்த பிரச்சினைகள் தொடர்பாக பொது இணக்கப்பாடு எட்டப்பட்டிருப்பதாக குழுவின் தலைவரான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.  எனவே, கூடிய விரைவில் தீர்வு யோசனையை தயாரித்து முடித்து விட முடியுமென நம்பிக்கை வெளியிட்ட பேராசிரியர் விதாரண, எனினும் அதற்கு காலவரையறையொன்றை கூற முடியாதென்றும் குறிப்பிட்டார்.

இனப்பிரச்சினை தொடர்பில் அரசியல் தீர்வு யோசனையொன்றை தயாரித்து பரிந்துரை செய்வதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அமைச்சர் திஸ்ஸ விதாரண தலைமையில் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவை நியமித்திருந்தார். இந்த சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவிலிருந்து ஏற்கனவே பிரதான இரு கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும் ஜே.வி.பி.யும் வெளியேறிவிட்ட நிலையில் தற்போது அக் குழு நூறாவது சந்திப்பையும் தாண்டி கூட்டங்களை நடத்தி வருகிறது.

தீர்வுயோசனையை தயாரிப்பதில் ஏற்கனவே 90 சதவீதமான விடயங்களில் பொது இணக்கப்பாடு எட்டப்பட்டுவிட்டபோதிலும் 10 சதவீதமான விடயங்களில் இணக்கப்பாடு காணப்படவில்லையென கடந்த காலங்களில் கூறப்பட்டு வந்த நிலையில் தீர்வு யோசனை தயாரிப்பு பணிகளின் தற்போதைய நிலைமை குறித்து அமைச்சர் திஸ்ஸ விதாரணவிடம் நேற்று ஞாயிற்றுக்கிழமை கேட்டபோது;

பிரச்சினைக்குரியதாக இருந்த அனைத்து விடயங்களிலும் தற்போது பொது இணக்கப்பாடு எட்டப்பட்டிருக்கிறது. இதற்கமைய ஒவ்வொரு விடயங்களாக கலந்துபேசி தீர்வு யோசனையை தயாரிக்கும் பணிகள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. எனவே, நீண்ட காலம் செல்வதற்குள் தீர்வு யோசனையை தயாரித்து முடித்துவிட முடியுமென நம்புகிறேன்.

எமது இந்த யோசனை தயாரிக்கப்பட்டதும் முதலில் (பிரதான எதிர்க்கட்சியான) ஐ.தே.க.விடம் அதை முன்வைத்து கலந்துபேசிய பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட ஏனைய கட்சிகளுடனும் இந்த தீர்வு யோசனை குறித்து கலந்துபேச எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மேற்குறித்த கலந்தாலோசனைகளின்போது ஏதேனும் திருத்தங்கள், புதிய யோசனைகள் முன்வைக்கப்படுமாயின் அவை குறித்தும் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் கலந்தாராயப்பட்டு அனைவரது பொது இணக்கப்பாட்டையும் எட்டக்கூடிய வகையில் ஏற்புடைய திருத்தங்கள் உள்வாங்கப்படும்.

இறுதியான தீர்வுயோசனை அறிக்கை குறித்து சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவில் பொது இணக்கப்பாடு எட்டப்பட்டதன் பின்னர் அவ்வறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என்று அமைச்சர் பதிலளித்தார்.