பாதுகாப்பு வலயம் மீதான தாக்குதல் தொடர்பில் ஐ.நா பேச்சாளரின் கருத்து அடிப்படையற்றது -அரசாங்கம் நிராகரிப்பு

mahinda-samarasinghe.jpgபாதுகாப்பு வலயத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் ஐ.நா.வின் இலங்கை பேச்சாளர் கோர்டன் வைஸ் எவ்வித ஆதாரங்களுமின்றி கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். அவற்றை இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரிக்கின்றது. இந்த இறுதிச் சந்தர்ப்பத்தில் புலிகளுக்கு சர்வதேசம் உயிர்மூச்சு வழங்கக் கூடாது என இடர்முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.

ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக எதிர்வரும் 14ஆம் திகதி விசேட பிரேரணை கொண்டுவந்தால் அது தொடர்பில் நாங்கள் எந்த கருத்தையும் தெரிவிக்காமல் வாக்கெடுப்புக்கு விடுமாறு கோருவோம். அத்துடன், வாக்கெடுப்பில் வெற்றியும் பெறுவோம். அவ்வாறு பிரேரணை கொண்டுவருவது புலிகளின் செயற்பாடு நியாயமானது என்ற செய்தியை பறைசாற்றும் என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகிறோம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில் கூறியதாவது:

பாதுகாப்பு வலயத்தில் 372 சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் ஆயிரத்து நூறுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் ஞாயிற்றுக்கிழமை சர்வதேச ஊடகங்கள் செய்திகளை துரித கதியில் பரப்பின. படங்கள் வெளியிடப்பட்டன; அரசாங்கத்தின் வான் மற்றும் எறிகணைத் தாக்குதல்களில் சிவிலியன்கள் இறந்ததாக வெளிகாட்டும் வகையில் உருவாக்கப்பட்ட பயங்கரமான படங்கள் வெளியிடப்பட்டன. ஆனால், அந்த சம்பவம் எப்போது நடைபெற்றது என்ற திகதிகள் அங்கு குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. இது புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்களால் உருவாக்கப்பட்ட விடயமாகும்.

அரசாங்க டாக்டர் சண்முகராஜா என்பவரை மேற்கோள்காட்டியே சர்வதேச ஊடகங்கள் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளன. பாதுகாப்பு வலயத்தில் புலிகளின் கட்டுப்பாட்டில் அனைத்து மக்களும் சுதந்திரமாக கருத்து தெரிவிக்க முடியாமல் இருக்கின்றனர். இந்நிலையில், டாக்டர் சண்முகராஜா என்பவர் புலிகளின் நிர்ப்பந்தத்தின் காரணமாக இவ்வாறு பேசியிருக்கமாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது. இதனை ஏன் சர்வதேச ஊடகங்களும் ஐ.நா. பேச்சாளரும் புரிந்துகொள்ளவில்லை. அடுத்ததாக டாக்டர் சண்முகராஜா என்ற பெயரில் யார் தொலைபேசியில் பேசினார் என்பதை எவ்வாறு உறுதிப்படுத்த முடியும்? புலிகள் சண்முகராஜா என்ற பெயரில் பேசியிருக்கலாமே? எவ்வாறு தகவல்களை உறுதிப்படுத்துவது? ஐ.நா.வின் கொழும்பு பேச்சாளர் கோர்டன் வைஸ் எவ்வாறு தகவல்களை உறுதிப்படுத்தினார்? பாதுகாப்பு வலயத்தில் சுதந்திரமான குரல் வெளிப்படாது என்று பொது அறிவுள்ள ஒருவருக்கு சாதாரணமாக தெரிந்த விடயமாகும். ஆனால், ஐ.நா. பேச்சாளர் கோர்டன் வைஸ் எந்த அடிப்படையுமின்றி தகவல்களை வெளியிட்டுள்ளார். டாக்டர் சண்முகராஜா என்பவர் அரசாங்க ஊழியர் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அப்படி பாதுகாப்பு வலயம் மீது ஏதாவது அசம்பாவிதங்கள் இடம்பெறுமிடத்து அது குறித்து உடனடியாக அவர் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளுக்கு அல்லவா அறிவித்திருக்க வேண்டும். பாதுகாப்பு வலயம் முழுமையாக புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு யாருக்கும் சுதந்திரமாக கருத்து வெளியிட முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில், அங்கிருந்து வரும் தகவல்கள் உண்மையா என்பது எவ்வாறு உறுதிப்படுத்துவது?

அரசாங்கம் கனரக ஆயுதங்களை பயன்படுத்துவது இல்லை என்றும் உறுதியாக கூறியுள்ளது. அதில் எந்த மாற்றமும் இல்லை. கனரக ஆயுத பாவனை நடத்தப்பட மாட்டாது என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இதனை விட உத்தரவாதம் தேவையா? எனவே, ஐ.நா. பேச்சாளர் கோர்டன் வைஸின் கூற்றுக்களை அரசாங்கம் அடிப்படையற்றது என்று கூறுவதுடன் முற்றாக நிராகரிக்கிறது. ஐக்கிய நாடுகள் சபை இதற்கு முன்னரும் பல விடயங்களை அடிப்படை ஆதாரங்களின்றி வெளியிட்டிருந்தது. பின்னர் அவை அடிப்படையற்ற தகவல்கள் என்பதை ஐ.நா. ஏற்றுக்கொண்டது.

ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் இலங்கைக்கு எதிரான விஷேட பிரேரணை கொண்டுவருவதற்கு கடந்த இரண்டு வாரங்களாக முயற்சிக்கப்படுகிறது. மனித உரிமை பேரவையில் 48 உறுப்பு நாடுகள் உள்ளன. அவற்றில் 16 நாடுகள் கையொப்பமிட்டால் மட்டுமே பேரவையில் இலங்கை தொடர்பான விஷேட பிரேரணை கொண்டுவர முடியும். நாளை (இன்று) இறுதி தினமாகும். இந்த காலப்பகுதிக்குள் 16 நாடுகளிடம் கையொப்பத்தை பெறவேண்டியுள்ளது. ஆனால், இதுவரை 16 நாடுகளிடம் பெறப்படவில்லை என்றே அறிகிறோம்.

எனினும், ஒருவேளை 16 நாடுகள் கையொப்பமிட்டு ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான விசேட பிரேரணை கொண்டுவரப்பட்டால் அதில் இலங்கை சார்பாக நானும் கலந்து கொள்வேன். அதேவேளை, பிரேரணை தொடர்பாக ஒரு வார்த்தைக் கூட பேசாமல் வாக்கெடுப்புக்கு விடுமாறு கோருவோம். வாக்கெடுப்பில் நிச்சயம் எமது நட்பு நாடுகளுடன் இணைந்து நாங்கள் வெற்றி பெறுவோம்.

ஆனால், சர்வதேசம் ஒரு விடயத்தை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அதாவது, ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான விசேட பிரேரணை கொண்டுவரப்பட்டால், அது புலிகள் பொதுமக்களை பணயக் கைதிகளாக வைத்திருப்பதும் மக்களை கொலை செய்வதும் நியாயமானதென்ற செய்தியொன்று மறைமுகமாக விடுக்கப்படுகின்றமைக்கு சமனாகும். அத்துடன், அரசாங்கம் மேற்கொண்டு வரும் மனிதாபிமான நடவடிக்கையை நிறுத்துவதற்கும் அழுத்தம் கொடுக்கப்படலாம்.

எனவே, இந்த தீர்க்கமான இறுதி சந்தர்ப்பத்தில் புலிகளுக்கு உயிர்மூச்சு வழங்க வேண்டாம் என சர்வதேச நாடுகளிடம் கோரிக்கை விடுக்கின்றோம். எவ்வாறெனினும், புலிகள் மீண்டும் மூச்சு விடுவதற்கு நாங்கள் இடமளிக்க மாட்டோம். இலங்கையும் ஐ.நா.வின் செயற்பாட்டு உறுப்புரிமையை கொண்ட நாடு என்பதை நினைவூட்டுகின்றோம். ஐ.நா.வில் எங்களுக்கு ஆதரவான நாடுகளும் உள்ளன.

இவ்வாறு பிரேரணைகள் கொண்டுவருவதன் மூலம் என்ன விளைவுகளை இந்த நாடுகள் எதிர்பார்க்கின்றன என்பதை நாம் சிந்திக்கவேண்டும். பிரிட்டன் உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. எனவே, புலம்பெயர் மக்களின் வாக்குகளை சேகரிப்பதற்காக அந்நாடுகள் இவ்வாறான முயற்சிகளில் ஈடுபடலாம்.

சர்வதேச பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்கின்றனர். இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள வவுனியா நலன்புரி முகாம்களுக்கு செல்கின்றனர். அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஆணையாளர் நாயகம் சேர் ஜோன் ஹோம்ஸ் வவுனியா நிலைமைகள் தொடர்பில் திருப்தி வெளியிட்டிருந்தார். சில சவால்களை எதிர்கொண்டாலும் நாங்கள் தேவையான வசதிகளை வழங்கி வருகின்றோம். மீள் குடியேற்றங்களை ஆரம்பித்துள்ளோம். பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்கப்பட்ட பிரதேசங்களில் ஜனநாயகத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

பாதுகாப்பு வலயத்தில் சிவிலியன்கள் கொல்லப்பட்டால் சர்வதேசத்தை விட இலங்கை அரசாங்கமே அதிகளவில் கவலை கொள்ளும். காரணம் அம்மக்கள் எமது நாட்டின் பிரஜைகள். ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட ஏனைய நாடுகளுக்கு இல்லாத அக்கறை எமக்கு உள்ளது. 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • murugan
    murugan

    மேன்மை தங்கிய மகிந்த ராஜபக்ஷ,
    ஜனாதிபதி,
    அலரி மாளிகை,
    கொழும்பு – 03

    மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்கட்கு,

    இன்று காலை 7.45 மணியளவில் முள்ளிவாய்கால் அரச வைத்தியசாலையில் எறிகனை விழுந்து வெடித்ததின் காரணமாக 26 நோயாளிகள் உடன் ஸ்தலத்திலும் சில நிமிடங்களின் பின் மேலும் 10 பேர் இறந்ததோடு 100 பேருக்கும் மேல் படுகாயமுற்றுள்ளார்கள் என்பதை மிக்க வருத்தத்துடன் தங்களின் கவனத்திற்கு கொண்டுவருகின்றேன். பீதியுடன் வாழும் மக்களை நோக்கி ஏவப்படும் எறிகனை தாக்குதலை தாங்கள் தலையிட்டு உடன் நிறுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன். வேறு சம்பவங்களிலும் படுகாயமுற்ற ஏனையோருடன் 1000 ற்கும் மேற்பட்ட மக்கள் 2 நாட்களுக்கு மேலாக இதுவரை எதுவித சிகிச்சையும் பெறாமல் இருப்பதனால் உடனடியாக வைத்திய குழுவினை தயவு செய்து அனுப்பிவைக்கவும். இச் சம்பவம் விடுதலைப் புலிகளினால் தான் ஏற்பட்டிருந்தாலும் மக்களை பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு உண்டு என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

    நன்றி

    வீ. ஆனந்தசங்கரி,
    தலைவர்,
    தமிழர் விடுதலைக் கூட்டணி

    Reply
  • மாயா
    மாயா

    //இச் சம்பவம் விடுதலைப் புலிகளினால் தான் ஏற்பட்டிருந்தாலும் மக்களை பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு உண்டு என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். – வீ. ஆனந்தசங்கரி, தலைவர், தமிழர் விடுதலைக் கூட்டணி//

    ஆனந்த சங்கரி தலைவர்தானே? போய் நடுவில நிண்டு தடுக்க வேண்டியதுதானே? புலிகள் போடுற குண்டை மகிந்தவால நிற்பாட்டேலாது. அது பிரபாகரனாலதான் ஏலும். அறிக்கை தலைவர்கள் இவர்கள். வன்னியை காயவச்சதுக்கு நீங்களும்தான் பொறுப்பு.இருக்கு உங்களுக்கும் முறுக்கு.

    Reply