May

May

இடம்பெயர்ந்தோருக்கு உதவ அமெரிக்கா 21 மில்லியன் டொலர் அன்பளிப்பு – ஓய்வுபெறும் ரொபர்ட் பிளேக் அறிவிப்பு

robert_blake.jpgவடக் கிலிருந்து இடம்பெயர்ந்தோருக்குத் தேவையான அத்தியவசிய உதவிகளை வழங்குவதற்காக அமெரிக்க அரசாங்கம் முதற்கட்டமாக 21 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்கவுள்ளதாக சேவையிலிருந்து ஓய்வுபெறும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் பிளேக் தெரிவித்தார்.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பதவியிலிருந்து தான் ஓய்வு பெறுவதை முன்னிட்டு கொழும்பு, கோல்பேஸ் ஹேட்டலில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். வடக்கிலிருந்து இடம்பெயர்ந்தோரை இவ்வருட இறுதிக்குள் அங்கு மீள்குடியமர்த்துவற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா தன்னாலான உதவிகளை தொடர்ந்தும் வழங்கும் என்றும் ரொபர்ட் பிளேக் அங்கு மேலும் குறிப்பிட்டார். 

எந்தத் தலைவருக்குமில்லா சர்வதேச அழுத்தம் – அமைச்சர் மைத்திரி

maithripalasirisena.jpgநாட்டை ஆண்ட எந்தத் தலைவர்களுக்கும் இல்லாத சர்வதேச அழுத்தத்திற்கு மத்தியிலும் தளராத கொள்கை, உறுதியான தரிசனத்துடன் செயற்பட்டு தீவிரவாதத்தை ஒழிப்பதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றி கண்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஏற்பாட்டில் இடம் பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு விளக்கமளித்த அமைச்சர், முன்னாள் தலைவர்கள் பண்டாரநாயக்க, சந்திரிகா போன்றோர் பல்வேறு சவால்களை எதிர் கொள்ள நேர்ந்தபோதும் கடந்த மூன்று மாதத்தில் ஜனாதிபதி சந்தித்த சவால்கள், அழுத்தங்களை எவரும் சந்தித்ததில்லை எனவும் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செய்தியாளர் மாநாடு நேற்று கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்ததாவது :-

தீவிரவாதத்துக்கு எதிரான இந்த வெற்றி ஒரு வரலாற்று வெற்றி என்பதுடன் கடந்த 35 வருடகால வன் முறை மற்றும் மிலேச்சத்தனத்திற்கு எதிராகப் பெறப்பட்ட வெற்றியாகும். இதனை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவிருந்து ஜனாதிபதி ஈட்டியதில் கட்சி பெருமிதமடைகிறது-

1948ற்குப் பின் வந்த சகல யுகங்களிலும் மஹிந்த ராஜபக்ஷ யுகமே சவால்களும் சர்வதேச அழுத்தங்களும் நிறைந்த யுகமாகும். இந்த நிலையிலும் இரண்டரை வருடங்களில் தீவிரவாதத்துக்கு எதிரான வரலாற்று வெற்றியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஈட்டியுள்ளார்.

இதற்கான துணிவையும் ஒத்துழைப்பையும் வழங்கிய எமது அயல் நாடான இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனா, ரஷ்யா, ஜப்பான், வியட்னாம் ஆகிய நாடுகளுக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது.

இதுவரை காலமும் பல சர்வதேசத் தலைவர்களையே நாம் முன்னுதாரணமாகக் கொண்டோம். இன்று மஹிந்த ராஜபக்ஷ உலகிற்கு முன்னுதாரணமாகத் திகழ்கின்றார்.

தீவிரவாதத்தை ஒழித்து நாட்டை ஐக்கியப்படுத்துவதில் அர்ப்பணிப்புடனும் துணிச்சலுடனும் செயற்பட்ட பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, முப்படைத் தளபதிகள், தம் உயிரைத் துச்சமென மதித்து போராடிய படை வீரர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தமது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.

இந்திய தூதுக்குழு – ஜனாதிபதி சந்திப்பு

menon-narayan.jpgஇலங் கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய தூதுக் குழு இன்று முற்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து உரையாடியது. இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் மனிதாபிமான நடவடிக்கைகளின் கீழான மீள் குடியேற்றம் புனரமைப்பு மற்றும் புனர் நிமாணப் பணிகளுக்கு உதவ இந்தியா பாரிய அளவில் ஆர்வம் காண்பித்து வருகிறது.

அதனடிப்படையில் விசேட தூதுக் குழு ஒன்றை இலங்கைக்கு அனுப்பி  வைத்துள்ளது.

இந்திய வெளிவிவகாரச் செயலாளர் ஷிவ ஷங்கர் மேனன் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் ஆகியோர் இத்தூதுக் குழுவில் இடம்பெறுகின்றனர். ஜனாதிபதியின் விசேட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பஸில் ராஜபக்ஷவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார். 

ஜனாதிபதி; மஹிந்த ராஜபக்ஷவுக்கு வியட்னாம் பிரதமர் பாராட்டு

பயங்கரவாதத்தை ஒழிக்கும் வகையில் மேற்கொண்ட தலைமைத்துவத்திற்காக வியட்னாம் பிரதமர் தமது பாராட்டுதல்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு   தெரிவித்துள்ளார். அத்துடன், தொடர்ந்தும் இலங்கைக்கு உதவுவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
 
இரு நாடுகளினதும் நீண்டநாள் நட்புறவு குறித்தும் கருத்துத் தெரிவித்த வியட்னாம் பிரதமர், எதிர்வரும் வருடங்களில் இது மேலும் வலுவடையுமென்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் இலங்கை – வியட்னாம் ஆணைக்குழுவை விரைவில் கூட்ட வேண்டு மென்றும் அவர் பிரேரித்துள்ளார். அவரின் இந்த யோசனையை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார்.

மே 25 இல் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விவகாரம்

images.jpgஇலங்கை விவகாரம் தொடர்பாக ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் விசேட அமர்வொன்று எதிர்வரும் 25 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இதற்கு ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 47 உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினரின் ஆதரவு கிடைத்திருப்பதாக லண்டன் ரைம்ஸ் பத்திரிகை தெரிவித்திருக்கிறது.

பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் உயர் ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை ஆகியோர் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விடயத்தை ஆராயும் விடயத்தில் முன்னின்று செயற்பட்டதாக கூறப்படுகிறது.

மோதல் வலயத்திற்குச் சென்று நேரடியாக நிலைமையை பான் கீ மூன் பார்வையிடுவார்

ban_ki_moon_.jpg இலங்கையின் மோதல் வலயத்திற்கு ஊடகங்களுடன் விஜயம் மேற்கொள்ளப் போவதாக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 23 ஆம் திகதி சனிக்கிழமை இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளப்போவதாக பான் கீ மூன் செவ்வாய்க்கிழமை அறிவித்திருந்தார்.

ஜெனீவாவில் நிருபர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கையில், மோதல் வலயத்திற்கு நான் விஜயம் மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன். அந்தப் பகுதி விடுவிக்கப்பட்டிருப்பதாக இலங்கை அரச அதிகாரிகள் எனக்குத் தெரிவித்துள்ளனர். நேரடியாக அங்கு சென்று நிலைமையை நானே பார்வையிட விரும்புகிறேன். இந்த விடயம் குறித்து ஜனாதிபதி ராஜபக்ஷவுடன் கலந்தாலோசிக்கவுள்ளேன் என்று பான் கீ மூன் தெரிவித்ததாக இன்னர் சிற்றி பிரஸ் கூறியுள்ளது.

மனிக் பாமிற்கான அனுமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளது; உதவிகளை மேற்கொள்ள முடியாத நிலை:ஐசிஆர்சி கவலை

IDP_Camps
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கியுள்ள முகாம்கள் சிலவற்றுக்கு ஐ.சி.ஆர்.சி. உட்பட மனிதாபிமான அமைப்புகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால் அந்த முகாம்களில் தங்கியுள்ள மக்களின் நலன்கள் தொடர்பாக அச்சங்கள் அதிகரித்துள்ள நிலையில், அவ்வாறான தடைகள் எதுவும் விதிக்கப்படவில்லையென அரசாங்கம் நிராகரித்திருக்கிறது.

முகாம்களுக்குச் செல்ல அரசாங்கம் தடையேற்படுத்தியிருப்பதால் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளின் போது இடம் பெயர்ந்த மக்களுக்கான அவசர உதவி விநியோகங்களை நிறுத்த நிர்ப்பந்திக்கப்பட்டு விட்டதாக ஐ.சி.ஆர்.சி. தெரிவித்திருக்கிறது.

முகாம்களுக்குச் செல்வதற்கு அரசாங்கத்தினால் தடை விதிக்கப்பட்டதையடுத்து உணவு மற்றும் உடைகள் போன்ற அவசர உதவி விநியோகங்களை ஐ.சி.ஆர்.சி. இடைநிறுத்தி விட்டதாக அதன் பேச்சாளர் ஒருவரை மேற்கோள் காட்டி லண்டன் ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதேநேரம், இலங்கையில் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களுக்கான சில முகாம்களுக்குச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன என்று ஐ.நா. சிறுவர் நிதியத்தின் ( யுனிசெப்) நிறைவேற்றுப் பணிப்பாளர் என்.எம். வெனமன் தெரிவித்திருக்கிறார்.

சிறுவர்கள் மற்றும் பெண்களுக்குக் கிடைக்கக் கூடிய வகையில் அவர்களுக்கு மிக அவசியமான உதவிகள் முழுமையாகவும் தடங்கலின்றியும் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருப்பதாக சிங்குவா செய்திச் சேவை தெரிவித்தது.

அமைச்சர் மகிந்த சமரசிங்க இது தொடர்பாக இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க; நாம் ( அரசாங்கம்) அப்படியான தடைகள் எதையும் விதிக்கவில்லை. இடம்பெயர்ந்து வந்த மக்களுக்கு அரசாங்கம் செய்து வரும் உதவிகளை விட மேலதிகமான உதவிகளை வழங்க அவர்களுக்கு அனுமதி இருக்கிறது. அவர்கள் முகாம்களில் உதவிப் பணிகளில் ஈடுபட முடியும்.
இதேநேரம், அவர்களது (ஐ.சி.ஆர்.சி.யினது) பெரும் எண்ணிக்கையிலான வாகனங்கள் முகாம்களுக்குள் செல்வது அங்கிருக்கும் மக்களுக்கு கஷ்டமாக இருப்பதனாலேயே உட்பிரவேசிக்கும் வாகனங்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துமாறு நாம் அறிவுறுத்தியிருக்கிறோம். முகாம்களுக்குள் வாகனங்கள் அதிகம் வருவதால் மக்களே அசௌகரியத்துக்குள்ளாகின்றனர்.

அவசர உதவி விநியோகங்களை நிறுத்துவதென்றால் அவ்வாறான அவசர உதவி விநியோகங்களுக்கு தற்போது பாதுகாப்பு வலயம் ( மோதல் சூன்ய வலயம்) எதுவும் கிடையாது. அரசாங்கம் மக்களுக்குத் தேவையான உதவிகளை தொடர்ந்து வழங்கியே வருகிறது என்று பதிலளித்தார்.

தீவிரவாத ஒழிப்புக்கு ஒத்துழைப்பு – வியட்னாமுக்கு ஜனாதிபதி நன்றி

தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கியமைக்காக வியட்னாம் அரசுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நன்றி தெரிவித்துள்ளார்.

தீவிரவாதத்தை ஒழிப்பதில் கடந்த சில வருடங்களாக வழங்கிய உதவிகளுக்கும், ஒத்துழைப்புக்கும் வியட்னாம் பிரதமருக்கு ஜனாதிபதி தமது தனிப்பட்ட நன்றிகளையும், பாராட்டுதலையும் தெரிவித்துள்ளாரென்று வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ, வியட்னாம் பிரதமர் குயென் டான் டங்குடன் தொலைபேசியில் உரையாடியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது, நாட்டில் பயங்கரவாதத்தைத் தோல்வியுறச் செய்வதில் அரசாங்கம் வெற்றி கண்டமை தொடர்பில் வியட்னாம் பிரதமருக்கு ஜனாதிபதி விளக்கியுள்ளார்.

இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த வாழ்விடங்களுக்குத் திரும்பும் வகையில், அரசாங்கத்தின் மீள்கட்டுமான திட்டங்கள் குறித்தும் ஜனாதிபதி எடுத்துரைத்துள்ளார்.

பயங்கரவாதத்தை ஒழித்ததில் வழங்கிய தலைமைத்துவத்திற்காக வியட்னாம் பிரதமர் தமது பாராட்டுதல்களை ஜனாதிபதிக்குத் தெரிவித்துள்ளார். அத்துடன், தொடர்ந்தும் இலங்கைக்கு உதவுவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

இரு நாடுகளினதும் நீண்டநாள் நட்புறவு குறித்தும் கருத்துத் தெரிவித்த வியட்னாம் பிரதமர், எதிர்வரும் வருடங்களில் இது மேலும் வலுவடையுமென்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் இலங்கை – வியட்னாம் ஆணைக்குழுவை விரைவில் கூட்ட வேண்டுமென்றும் அவர் பிரேரித்துள்ளார். அவரின் இந்த யோசனையை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு வியட்னாம் பிரதமருக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளதுடன், காலக்கிரமத்தில் தாம் அந்நாட்டுக்கு விஜயம் செய்வதாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் வியட்னாம் வெளிவிவகார அமைச்சருடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை மேற்கொள்ளுமாறு வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவை அறிவுறுத்துவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மலையகத்திலும், மலைசார்ந்த பகுதிகளிலும் மண்சரிவு அபாயம்

earth-slip.jpgதென் மேல் பருவ பெயர்ச்சி மழைவீழ்ச்சிக் காலம் ஆரம்பமாகி இருப்பதால் மலையகத்தின் பல பிரதேசங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டிருப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நேற்று முன்னெச்சரிக்கை விடுத்தது. பருவ பெயர்ச்சி மழையுடன் சேர்ந்து கடும் காற்றும் வீசக்கூடிய காலநிலை நிலவுவதாக வானிலை அவதான நிலையமும் முன்னெச்சரிக்கை விடுத்திருக்கிறது.

ஆகவே மலையகத்தில் மண்சரிவு அச்சுறுத்தல் மிக்க பிரதேசங்களிலும் ஏனைய பகுதிகளிலும் வாழுகின்ற மக்கள் அடுத்து வரும் சில தினங்களுக்கு மிகவும் விழிப்பாகவும், முன்னெச்சரிக்கையுடனும் நடந்துகொள்ள வேண்டுமென தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனமும், வானிலை அவதான நிலையமும் வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

இது தொடர்பாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் மண்சரிவு ஆய்வு பிரிவு தலைவர் ஆர். எம். எஸ். பண்டார குறிப்பிடுகையில், தற்போது தென்மேல் பருவபெயர்ச்சி மழைவீழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. இதனால் மலையகத்திலும் மலைசார்ந்த பிரதேசங்களிலும் மண்சரிவுகள் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் உருவாகியுள்ளது. அந்தவகையில் ஹட்டன் நோட்டன் பிரிஜ் பிரதேசத்தில் நேற்று திடீரென ஏற்பட்டது.

தற்போது நுவரெலியா, கேகாலை, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, பதுளை – ஹல்துமுல்ல ஆகிய பிரதேசங்களிலும் கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை மாவட்டங்களின் மலைசார்ந்த பிரதேசங்களிலும் அதிக மழை பெய்து வருகிறது.

இதனால் மலையகத்திலும், மலை சார்ந்த பிரதேசங்களிலும் எதிர்வரும் நாட்களில் மண்சரிவு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கின்றது. அதனால் மண்சரிவு அச்சுறுத்தல் மிக்க இடங்களில் வாழும் மக்கள் இந்நாட்களில் மிகவும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

குறிப்பாக 24 மணி நேரங்களுக்கு மேல் தொடராக 150 மில்லி மீட்டருக்கு மேல் மழை பெய்யுமாயின் மண்சரிவு ஏற்படும் சாத்தியம் மிக அதிகம். அதேநேரம் மண்சரிவு ஏற்பட முன்னர் வீட்டுச் சுவர்களிலும் நிலத்திலும் திடீ ரென வெடிப்புகள் ஏற்பட்டு விரிவடையும், சில சமயம் அவற்றின் ஊடாக சேற்று நீர் வெளிப்படும், மரங்கள் சரியும்.

இவ்வாறான முன்னறிகுறிகள் தென்படும் பிரதேசங்களி லிருந்து உடனடியாக வெளியாகி மேல் நோக்கியோ கீழ் நோக்கியோ செல்லாது குறுக்காக செல்லுமாறும் அவர் ஆலோசனை வழங்கினார். இதேவேளை, வானிலை அவதான நிலைய வானிலையாளர் நந்தலால் பீரிஸ் குறிப்பிடுகையில்,

தென்மேல் பருவ பெயர்ச்சி மழைவீழ்ச்சி ஆரம்பமாகி வருகின்றது. இதனால் நாடு முழுவதும் மழை கிடைக்க முடியும். என்றாலும் கண்டி, இரத்தினபுரி, நுவரெலியா, கேகாலை, மாத்தளை போன்ற மாவட்டங்களில் அதிக மழையும், கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் குறிப்பிடத்தக்களவு மழைவீழ்ச்சியும் கிடைக்கப்பெறும். இம் மழைவீழ்ச்சியோடு சேர்ந்து திடீர் திடீரென மணித்தியாலத்திற்கு 40, 50 கிலோ மீட்டர் வேகத்தில் கடும் காற்றும் வீச முடியும்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேரப் பதிவுப்படி கெனியன் நீர்த்தேக்கப் பிரதேசத்திலேயே அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இக்காலப்பகுதியில் கெனியன் நீர்த்தேக்கப் பகுதியில் 240 மி.மீ., கொத்மலை நீர்த்தேக்கப் பகுதியில் 230 மி.மீ., இரத்தினபுரியில் 116.9 மி.மீ., கண்டியில் 90 மி.மீ. என்ற படி அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. ஆயினும் இப்பிரதேசங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது என்றும் கூறினார்.

ராஜீவ் காந்தியின் 18ஆவது நினைவு தினம் : சோனியா மலரஞ்சலி

rajeeve_.pngமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991ஆம் ஆண்டு மே மாதம் 21ஆந் திகதி ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு மூலம் கொலை செய்யப்பட்டார். இன்று அவரது 18ஆவது நினைவு தினம் நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.

டில்லியில் ராஜீவ் சமாதி அமைந்துள்ள ‘வீர்பூமி’யில் ஜனாதிபதி பிரதீபா பட்டீல், துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, பிரியங்கா, அவரது கணவர் ராபர்ட் வதரா, இராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி, டில்லி முதல்வர் ஷீலா தீட்சித், தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, கேரள காங்கிரஸ் தலைவர் கே.எம்.மணி, புதிய எம்.பி.க்கள் ஆகியோரும் ராஜீவ் சமாதியில் அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக ராஜீவ் மறைந்து 18 ஆண்டுகளைக் குறிப்பிடும் வகையில் 18 குழந்தைகள் ராஜீவ் சமாதியில் அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.