தென் மேல் பருவ பெயர்ச்சி மழைவீழ்ச்சிக் காலம் ஆரம்பமாகி இருப்பதால் மலையகத்தின் பல பிரதேசங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டிருப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நேற்று முன்னெச்சரிக்கை விடுத்தது. பருவ பெயர்ச்சி மழையுடன் சேர்ந்து கடும் காற்றும் வீசக்கூடிய காலநிலை நிலவுவதாக வானிலை அவதான நிலையமும் முன்னெச்சரிக்கை விடுத்திருக்கிறது.
ஆகவே மலையகத்தில் மண்சரிவு அச்சுறுத்தல் மிக்க பிரதேசங்களிலும் ஏனைய பகுதிகளிலும் வாழுகின்ற மக்கள் அடுத்து வரும் சில தினங்களுக்கு மிகவும் விழிப்பாகவும், முன்னெச்சரிக்கையுடனும் நடந்துகொள்ள வேண்டுமென தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனமும், வானிலை அவதான நிலையமும் வேண்டுகோள் விடுத்திருக்கிறது.
இது தொடர்பாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் மண்சரிவு ஆய்வு பிரிவு தலைவர் ஆர். எம். எஸ். பண்டார குறிப்பிடுகையில், தற்போது தென்மேல் பருவபெயர்ச்சி மழைவீழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. இதனால் மலையகத்திலும் மலைசார்ந்த பிரதேசங்களிலும் மண்சரிவுகள் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் உருவாகியுள்ளது. அந்தவகையில் ஹட்டன் நோட்டன் பிரிஜ் பிரதேசத்தில் நேற்று திடீரென ஏற்பட்டது.
தற்போது நுவரெலியா, கேகாலை, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, பதுளை – ஹல்துமுல்ல ஆகிய பிரதேசங்களிலும் கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை மாவட்டங்களின் மலைசார்ந்த பிரதேசங்களிலும் அதிக மழை பெய்து வருகிறது.
இதனால் மலையகத்திலும், மலை சார்ந்த பிரதேசங்களிலும் எதிர்வரும் நாட்களில் மண்சரிவு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கின்றது. அதனால் மண்சரிவு அச்சுறுத்தல் மிக்க இடங்களில் வாழும் மக்கள் இந்நாட்களில் மிகவும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
குறிப்பாக 24 மணி நேரங்களுக்கு மேல் தொடராக 150 மில்லி மீட்டருக்கு மேல் மழை பெய்யுமாயின் மண்சரிவு ஏற்படும் சாத்தியம் மிக அதிகம். அதேநேரம் மண்சரிவு ஏற்பட முன்னர் வீட்டுச் சுவர்களிலும் நிலத்திலும் திடீ ரென வெடிப்புகள் ஏற்பட்டு விரிவடையும், சில சமயம் அவற்றின் ஊடாக சேற்று நீர் வெளிப்படும், மரங்கள் சரியும்.
இவ்வாறான முன்னறிகுறிகள் தென்படும் பிரதேசங்களி லிருந்து உடனடியாக வெளியாகி மேல் நோக்கியோ கீழ் நோக்கியோ செல்லாது குறுக்காக செல்லுமாறும் அவர் ஆலோசனை வழங்கினார். இதேவேளை, வானிலை அவதான நிலைய வானிலையாளர் நந்தலால் பீரிஸ் குறிப்பிடுகையில்,
தென்மேல் பருவ பெயர்ச்சி மழைவீழ்ச்சி ஆரம்பமாகி வருகின்றது. இதனால் நாடு முழுவதும் மழை கிடைக்க முடியும். என்றாலும் கண்டி, இரத்தினபுரி, நுவரெலியா, கேகாலை, மாத்தளை போன்ற மாவட்டங்களில் அதிக மழையும், கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் குறிப்பிடத்தக்களவு மழைவீழ்ச்சியும் கிடைக்கப்பெறும். இம் மழைவீழ்ச்சியோடு சேர்ந்து திடீர் திடீரென மணித்தியாலத்திற்கு 40, 50 கிலோ மீட்டர் வேகத்தில் கடும் காற்றும் வீச முடியும்.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேரப் பதிவுப்படி கெனியன் நீர்த்தேக்கப் பிரதேசத்திலேயே அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இக்காலப்பகுதியில் கெனியன் நீர்த்தேக்கப் பகுதியில் 240 மி.மீ., கொத்மலை நீர்த்தேக்கப் பகுதியில் 230 மி.மீ., இரத்தினபுரியில் 116.9 மி.மீ., கண்டியில் 90 மி.மீ. என்ற படி அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. ஆயினும் இப்பிரதேசங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது என்றும் கூறினார்.