May

May

சீனாவில் இலங்கைக்கான உதவித் தூதரகம்

rohithaogollagama.bmpசீனாவின் செந்து பிரதேசத்தில் இலங்கைக்கான உதவித் தூதரகம் ஒன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. இதற்கான பிரேரணையை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம சமர்ப்பித்திருந்தார்.

இதற்காக இவ்வருடம் 193,000 அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் தேவைப்படும் நிதி திறைசேரியிலிருந்து பெற்றுக்கொள்ளப்படும்.

இலங்கை அரசுக்கு ரஷ்யா வாழ்த்து

russian-flag.jpgவிடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை தோற்கடித்து வெற்றிபெற்றமை தொடர்பாக ரஷ்ய அரசாங்கம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான இலங்கை அரசாங்கத்திற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது. வெளிநாட்டலுவல்கள் அமைச்சை மேற்கோள்காட்டி அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டிருக்கும் செய்தியில் இது தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இலங்கையின் இறையாண்மையையும் ஆட்புல ஒருமைப்பாட்டையும் உறுதிசெய்யும் பொருட்டு  பிரிவினை வாதத்திற்கு எதிராகப் போராடுவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு ரஷ்யா உதவிகளை வழங்குகிறது என்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன், மோதல்கள் முடிவு பெற்றிருப்பதானது இலங்கையில் சமாதானத்தையும் ஸ்திரத்தன்மையையும் பாதுகாப்பையும் கொண்டு வருமென நம்புவதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

கண்டி வீதியூடாக யாழ்.குடாநாட்டுக்கு 20 லொறிகளில் அத்தியாவசியப் பொருட்கள்

a9-road.jpg யாழ்ப்பாணம் கண்டி வீதியூடாக இருபது லொறிகளில் பொருட்கள் எடுத்துவரப்படுவதாக யாழ். செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த லொறிகளில் மருந்துப் பொருட்கள் சீமெந்து, அஸ்பெய்டஸ் சீற், இரும்புக் கம்பிகள், நீரிறைக்கும் இயந்திரங்கள், கம்பளி உற்பத்திப் பொருட்கள் ஆகியன எடுத்துவரப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவை நேற்று புதன்கிழமை யாழ்ப்பாணம் வந்து சேருமென எதிர்பார்க்கப்பட்டபோதும் வந்து சேரவில்லை. பொருட்களை ஏற்றிவரும் லொறிகளில் யாழ்.மாவட்ட விளை பொருட்களான வெங்காயம், புகையிலை, பீற்ட், பனை உற்பத்திப் பொருட்கள் கொழும்புக்கு எடுத்துச் செல்லப்பட்வுள்ளன.

வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கு இராணுவம் தீர்வு கண்டுள்ளதால் இனிமேல் பேசுவதற்கு தேவையில்லை – தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவிப்பு

வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கு இராணுவத்தினர் தீர்வு கண்டுள்ளதால் இனிமேல் தீர்வுத் திட்டங்கள் குறித்து பேசுவதற்கான தேவையில்லையென தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன், நாட்டைப் பிரிப்பதற்குத் திட்டமிட்ட சர்வதேச ஏகாதிபத்தியவாதிகளின் கைக்கூலியான பிரபாகரன் உயிரிழந்துள்ள நிலையில் இந்த ஏகாதிபத்தியவாதிகள் தமது இலக்கை மாற்று வழிகளில் முன்னெடுக்க முயல்வார்கள் என்றும் இந்த முயற்சியையும் முறியடிக்க வேண்டும் என்றும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் நேற்று புதன்கிழமை கொழும்பு தேசிய நூலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அதன் தலைவர் கலாநிதி குணதாஸ அமரசேகர மேலும் கூறியதாவது;

நாட்டைப் பிரிப்பதனை நோக்கமாகக் கொண்டு சர்வதேச ஏகாதிபத்திய வாதிகள் தமது நன்மைக்காகச் செயற்படுகின்றனர். இவர்களின் கைக் கூலியாகச் செயற்பட்ட பிரபாகரன் பிரிவினை கோரி போராட்டத்தை நடத்திய நிலையில் எமது படையினரால் கொல்லப்பட்டுள்ளார்.

எனினும், இவ்விலக்கை அடைவதற்கு ஏகாதிபத்தியவாதிகள் வேறு மார்க்கங்களை நாடுவர். இவர்களது இலக்கை முறியடிப்பதற்கான சவால்களை வெற்றி கொள்ள வேண்டும்.

இந்த ஏகாதிபத்தியவாதிகளுக்கிடையிலான யுத்தத்தில் தற்போது வெற்றி கொள்வதற்கு எமக்கு ரஷ்யாவும் சீனாவும் உதவியுள்ளன. இதற்கு எமது நன்றிகள்.

தற்போது தீர்வு குறித்து பேசப்படுகின்றது. வடக்கு, கிழக்குப் பிரச்சினைக்கு படையினர் தீர்வைப் பெற்றுக் கொடுத்துள்ள நிலையிலேயே இது பேசப்படுகின்றது. இது அவசியமற்றது. வடக்கை நாம் அபிவிருத்தி செய்ய வேண்டும். இதற்கு வெளிநாட்டு அமைப்புகளுக்கு அனுமதியளிக்கக் கூடாது.

வடக்கு மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் அரசியல் தீர்வை முன்வைக்க ஐ.தே.க. கோரிக்கை

தீவிரவாத த்திலிருந்து விடுதலை பெற்றுள்ள வடக்கு மக்களின், அபிலாஷைகள் தொடர்பாக தூரநோக்குடன் சிந்தித்து செயற்பட்டாலே அவற்றை நிறைவேற்ற முடியும். இதற்கு சர்வதேச ஆதரவு வேண்டுமென்பதால், இராஜதந்திர ரீதியில் நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் முனைய வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. மீண்டும் ஒரு தீவிரவாதம் நாட்டில் உருவாகாமலிருக்க வேண்டுமானால், இந்தியாவைப் போன்றதொரு அரசியல் தீர்வினைப் பெற்றுக் கொடுப்பது பொருத்தமானது என ஐ.தே.கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில், அவர் மேலும் கூறியுள்ளதாவது;

எமது தாய் நாடு வரலாற்றில் முக்கியமான தருணத்தை அடைந்துள்ளது. மூன்று தசாப்த காலமாக இருந்து வந்த தீவிரவாதம் மற்றும் யுத்தமும் தற்போது முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளமை நாட்டிற்குக் கிடைத்த வெற்றியாகும். இங்கு வாழக்கூடிய சிங்களம், தமிழ், முஸ்லிம் மற்றும் பறங்கியர் என்ற சகல இனத்தவர்களும் அச்சம், பீதியற்ற சூழ்நிலையில் வாழும் சந்தர்ப்பத்தை அமைப்பது எமது பொறுப்பாகும்.

இவ்வேளையில் தீவிரவாதத்திடமிருந்து நாட்டை மீட்பதற்காகத் தம்மை அர்ப்பணித்துச் செயற்பட்ட முப்படையினர், பொலிஸார் மற்றும் உயிர்த்தியாகம் செய்த வீரர்களை நினைவு கூருவதுடன், அவர்கள் அனைவருக்கும் ஐ.தே.க.வின் கௌரவத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன். நாட்டுக்காகவும் மக்களின் விடுதலைக்காகவும் இராணுவத்தினால் பெறப்பட்ட இம்மாபெரும் வெற்றியை அரசியல் இலாபம் கருதி செயற்படுவதையும் அதன் நோக்கத்தையும் விலக்கிக் கொள்வது சிறந்தது.

தீவிரவாதத்தினால் எமது கட்சி பல தலைவர்களை இழந்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச, காமினி திசாநாயக்க, லலித் அத்துலத் முதலி, ரஞ்சன் விஜேரத்ன, ஜானக்க பெரேரா உட்பட பல தலைவர்கள் புலிகளால் கொல்லப்பட்டனர்.

அதுமட்டுமல்லாது, தலதா மாளிகை, முஸ்லிம் பள்ளி வாசல் மற்றும் உடைமைகளுக்கும் பாரிய சேதங்களை விளைவித்த பயங்கரவாதம் முறியடிக்கப்பட்டமை யாவருக்கும் மகிழ்ச்சி தரும் விடயமாகும். தீவிரவாதத் தை முறியடிக்க முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன முதல் தற்போதைய தலைவர் ரணில் விக்கிரமசிங்க வரையிலான அரசாங்கங்கள் யுத்தத்தை நடத்தின. பின்னர் பேச்சுக்குச் சென்றன. பேச்சுகளை நிராகரித்த புலிகளை எமது படையினர் அழித்திருக்கின்றனர்.

நாடு விடுதலை பெற்றுள்ளது. தீவிரவாதத்தினுள் இருந்த வடக்கு தமிழ் மக்களும், சுதந்திரமான விடுதலையைப் பெற்றுள்ளனர். இச்சந்தர்ப்பத்தில் யுத்தத்தால் அவல நிலைக்குள்ளான மக்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். அனைத்தையும் இழந்து நிற்கும் வடக்கு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது இன்றைய பாரிய சவாலாகும். இதனை நிவர்த்தி செய்ய தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் அரசாங்கம் பூரணமான ஆதரவினைப் பெற்றுக் கொள்ள வேண்டிய தேவை எழுந்துள்ளது.

இடம்பெயர்ந்துள்ள இலட்சக்கணக்கான வடக்கு மக்களின் நிலைமைகளை உணர்ந்து செயற்பட வேண்டியதும், இராஜதந்திர ரீதியில் அணுகுமுறைகளை மேற்கொள்ள வேண்டியதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

அம்மக்களைச் சொந்த இடங்களில் மீள் குடியமர்த்துவதிலும் அவர்களது தேவைகள் மற்றும் தொழில் வாய்ப்பினைப் பெற்றுக் கொள்வதற்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். அதுமட்டுமன்றி, மீண்டும் ஒரு உரிமைப் போராட்டமாக எழுந்து ஆயுதப் போராட்டமாக வியாபிக்காதிருக்க வேண்டுமானால் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல் தீர்வொன்று அவசியமாகும்.

சகலரும் இலங்கையரே தவிர இன பேதமற்றவர்கள் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இந்தியாவைப் போன்றதொரு அரசியல் தீர்வை மேற்கொள்ள சர்வதேச ஆதரவும் அவசியமாகின்றது எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கைக்கும் ஜப்பானுக்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

chamalrajapaksa.jpgகப்பல் சிப்பந்திகளுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களை ஏற்றுக்கொள்வது தொடர்பாக இலங்கைக்கும் ஜப்பானுக்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கான பிரேரணையை துறைமுகங்கள் மற்றும் விமானசேவைகள் அமைச்சர் சமல் ராஜபக்ஷ சமர்ப்பித்திருந்தார்.

போர் முடிவுற்றது : வேட்டுக்கள் தீர்த்துப் படையினர் வன்னியில் நேற்று ஆரவாரம்

last-mulli.jpgகடந்த பல நாட்களாக, வாரங்களாக, மாதங்களாக, வருடங்களாக மூண்டுக் கொண்டிருந்த – உக்கிரமடைந்து கொண்டிருந்த தமிழீழ விடுதலை புலிகள் – இலங்கைப் படையினருக்கிடையிலான யுத்த சூழ்நிலை ஒருவாறு முடிவுக்கு வந்துவிட்டது.  தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் முன்னெடுத்த போர் முடிவுற்றதை நேற்று புதன்கிழமை பாதுகாப்பு படையினர் வெற்றி வேட்டுக்கள் தீர்த்து அறிவித்தனர்.

வன்னிக்கான கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ஜெயசூரிய தலைமையில் இந்நிகழ்வு நேற்றுப் பிற்பகல் 3.30 மணியளவில் வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்றது. கட்டளைத் தளபதி தேசியக்கொடியை ஏற்றிவைக்க, வன்னிக்கான இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்ட படையணிகளின் கொடிகளும் அந்தந்தப் படையணிகளின் தளபதிகளால் ஏற்றி வைக்கப்பட்டன. இதனையடுத்து பாதுகாப்புப் படையினர் முல்லைத்தீவு கிழக்கு கடற்கரையை நோக்கி ஆட்டிலறி எறிகணை மற்றும் யுத்த தாங்கிகளை இயக்கித் தமது இறுதி மரியாதை வேட்டுக்களையும் தீர்த்ததுடன் அணிவகுப்பும் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் போது வன்னிப் போர் முன்னரங்குகளில் விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள், போர் தளபாடங்கள் போன்றவையும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அத்துடன் தாக்குதலுக்கு இலக்காகி சேதமடைந்த சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் கப்பல் பாரா 3 உம் அருகே நங்கூரமிடப்பட்டிருந்தது.

முல்லைத்தீவை நோக்கிய இறுதிக்கட்ட போர்க்களமான முள்ளிவாய்க்கால் பகுதியில் விடுதலை புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்ட வீரர்கள் தளபதிகளுடன் இணைந்து குழுவாக புகைப்படம் எடுத்தனர். தமது வெற்றியை வன்னி முழுவது கேட்கும் வகையில் கோஷமெழுப்பி, வேட்டுக்கள் தீர்த்து மகிழ்ந்தனர்.

மாவிலாறு அணைக்கட்டுடன் ஆரம்பமான ‘கிழக்கின் உதயம்’ இன்று வடக்கினை மீட்பதற்கான ‘வடக்கின் வசந்தத்’துடன் நிறைவடைவது குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட மோதலினையடுத்து அப்பகுதி புகைமூட்டமாகக் காணப்பட்டது. இம்மோதல்களின் போது விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் உட்பட 25 சிரேஷ்ட உறுப்பினர்களின் சடலங்களைப் பாதுகாப்புக் படையினர் மீட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதையும் பாதுகாப்புப் படையினர் விடுதலை புலிகளிடம் இருந்து விடுவித்ததையடுத்து நேற்றைய தினத்தை ஜனாதிபதி தேசிய விடுமுறை தினமாக அறிவித்தார்.

இதனை முன்னிட்டு கொழும்பு மாநகரில் மக்கள் ஆரவாரக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். வாகனங்களிலும், வர்த்தக நிலையங்கள் மீதும் வீடுகளின் முன்னாலும், வீதிகளிலும் தேசியக்கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன.

அதேவேளை, விடுதலை புலிகளிடம் இருந்து நாட்டினை மீட்ட முப்படையினரைக் கௌரவக்கும் தேசிய விழா நாளை வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற மைதானத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலமையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

வவுனியா நிவாரணக் கிராமங்களுக்கு நம்பியார் விஜயம் – பாதுகாப்பு வலயத்தையும் விமானத்தில் பார்வையிட்டார்.

menikfarm_nambiyar.jpgஇலங்கை வந்துள்ள ஐ.நா. வின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் விசேட பிரதிநிதி விஜே நம்பியார் இன்று வவுனியாவில் உள்ள நிவாரணக் கிராமங்களுக்கு விஜயம் செய்தார். அத்துடன். இலங்கை அரசாங்கம் அறிவித்த பாதுகாப்பு வலயத்தையும் விமானத்தில் சென்று பார்வையிட்டார். பயங்கரவாதம் தேற்கடிக்கப்பட்ட பின்னர் இறுதி மோதல்கள் இடம்பெற்ற பிரதேசத்தை பார்வையிட்ட முதலாவது வெளிநாட்டுப் பிரதிநிதி இவராவார்.
 
இன்று காலை வவுனியாவில் மெனிக்பாமில் உள்ள கதிர்காமர் நிவாரணக் கிராமத்துக்குச் சென்ற விஜே நம்பியார் அங்குள்ள இடம்பெயர்ந்தோருக்கு அரசு வழங்கியுள்ள வசதிகளை நேரில் பார்வையிட்டார்.

இடம்பெயர்ந்தோருக்கான நிவாரண நடவடிக்கைகளுக்கு பொறுப்பான உயர் அதிகாரியான் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ சந்திரசிறி அவரை அங்கு வரவேற்றார். இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு அரசினால் வழங்கப்பட்டுள்ள சலுகைகள் குறித்து வீ. நம்பியார் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

பிரிட்டிஷ் குடிவரவு நடைமுறைகள் இலகுபடுத்தப்பட்டுள்ளன- தூதரகம் அறிவிப்பு

இலங்கையர்கள் விஜயம் செய்வதற்கும் கல்வி கற்பதற்கும் தொழில் பார்ப்பதற்கும் பிரிட்டன் மிகவும் பிரபல்யம் வாய்ந்த நாடாக விளங்கி வருகிறது. இலங்கையர்கள் அங்கு குடியேறி சுக வாழ்வு வாழ்வதற்கும் ஊக்குவிக்கப்படுகின்றது. இலங்கையைப் போன்றே பிரிட்டனிலும் எல்லைகளை வலுவாகவும் பாதுகாப்பாகவும் பேணுவதில் அந்நாட்டு அரசாங்கம் மிகுந்த அக்கறை காண்பித்து வருகின்றது. விசா சேவைகளை மேலும் விருத்தி செய்வதிலும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதிலும் பிரிட்டிஷ் எல்லைப் பாதுகாப்பு நிறுவனம் தொடர்ச்சியாக கவனம் செலுத்தி வருகிறது.

இதற்காக, தற்போதைய நடைமுறைகளும் நடவடிக்கைகளும் அடிக்கடி மறுமதிப்பீடு செய்யப்பட்டு வருகின்றன. . மேலும், இலங்கையர்களின் விண்ணப்பங்கள் தற்போது சென்னையிலுள்ள பிரிட்டிஷ் பிரதி உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் பரிசீலனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. 2007ஆம் ஆண்டு முடிவில் பிரிட்டிஷ் எல்லை நிறுவனம் தரவு சேகரிப்பு சேவைகளில், உலகளாவிய ரீதியில் biometric எனப்படும் நவீனமுறையில் தரவு சேகரிக்கும் முறைமையை ஆரம்பித்தது.

தற்போது நாங்கள் 137 நாடுகளில் biometric முறையில் தரவுகளை சேகரித்து 3 மில்லியன் விசா விண்ணப்பதாரர்களுக்கு சேவைகளை வழங்கி வருகிறோம். இச் சேவையை நாங்கள் மட்டும் செய்யவில்லை. ஆளடையாள முகாமைத்துவத்திற்கு கைத்தொழில் தரமாக biometric விருத்தியடைந்து வருவதுடன், சகல கடவுச்சீட்டுக்களும் அநேகமாக தனித்துவமான biometric முறையில் அடையாளம் காணும் முறைமையை கொண்டிருக்கும். பிரிட்டிஷ் விசா விண்ணப்பதாரர்கள் சில தனிப்பட்ட தகவல்களைத் தருவதுடன் ஆவணங்கள் சிலவற்றையம் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். இது தேவைக்கதிகமானது எனக் கருதப்படலாம்.

ஆனால், விண்ணப்பம் யதார்த்தமானது என மதிப்பிடுவதற்கு இது எமக்கு உதவுகிறது. biometric முறை, பிரிட்டிஷ் பிரஜைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத் துவது மட்டுமன்றி விசாவை பெறுவோர் மோசடியான ஆவணங்களைச் சமர்ப்பிப்பதையும் ஆளடையாள மோசடி புரிவதையும் தடுக்க உதவுகிறது. அடையாள மோசடி உலகளாவிய ரீதியில் முக்கியமானதும் அதிகரித்து வருவதுமான பிரச்சினையாகும். இது பயங்கரவாதத்திற்கும் திட்டமிட்ட குற்றச் செயல்களுக்கும் துணை புரிவதுடன் தேசிய பொருளாதாரத்தையும் சீரழிக்கிறது.

உங்களை அடையாளம் காண்பதற்குப் பயன்படுத்தப்படும் தனித்துவமான குணாம்சங்களைக் கொண்டதே biometric முறையாகும். குறிப்பாக, விசா விண்ணப்பங்களைப் பொறுத்த அளவில் உங்கள் பொதுவான முகச்சாயலையும் 10 விரலடையாளங்களையும் நீங்கள் கொடுக்க வேண்டும். உங்கள் பெருவிரல்களையும் ஏனைய விரல்களையும் ஒரு நுண்ணாய்வுக் கருவியின் மீது வைத்து இதற்கான பரிசோதனையை செய்துகொள்ள வேண்டும். இப்பரிசோதனை முடிவடைந்து விரலடையாளங்களும் பதிவுசெய்யப்பட்ட பின்னர் உங்கள் முகம் புகைப்படம் எடுக்கப்படும்.

இந்த நடைமுறைகள் விரைவானதும் உங்கள் விருப்பத்தின் பேரிலானதும் இலகுவானதும் அத்துமீறல் அற்றதாகவும் இருக்கும். பிரிட்டிஷ் எல்லை நிறுவனத்தினால் 2007ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த முறைமை, உலகெங்கிலுமுள்ள பிரிட்டிஷ் தூதராலயங்களில் இயங்கி வரும் 52 விசா பிரிவுகளிலிருந்து 22 அதிசிறந்த உலக நிலையங்கள் வரையில் ஏற்கெனவே தீர்மானம் எடுக்கும் பணிகளில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 2008ஆம் ஆண்டு ஜூன் மாதம், இத்திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை விசா பிரிவை மையமாகக் கொண்டு, இலங்கை கொழும்பு விசா பிரிவு இயங்க ஆரம்பித்தது. பிரிட்டிஷ் எல்லை நிறுவனத்தின் சார்பில் வாடிக்கையாளர்களின் விசா விண்ணப்பங்களை ஆராய்ந்து வரும் சென்னைப் பிரிவு, இலங்கையிலிருந்து விசாவுக்கு விண்ணப்பிப்போர் குறித்து முடிவு எடுப்பதில் தீர்க்கமுடன் செயற்பட்டு வருகிறது. அவர்களது விண்ணப்பங்கள் தொடர்பான முடிவையும் இப்பிரிவு அவர்களுக்கு அறிவித்து வருகிறது.

* கடவுச்சீட்டுக்களை தன்னகத்தே வைத்திருக்கும் பிரிட்டனின் கொழும்பு உயர் ஸ்தானிகராலயம் விசா விண்ணப்ப நிலையத்தினால் தீர்மானம் எடுக்கப்பட்ட பின்னர் அவற்றை விண்ணப்பதாரர்களிடம் திருப்பிக்கொடுத்து விடுகிறது. கடவுச்சீட்டுக்கள் சென்னைக்கு அனுப்பப்படுவதில்லை. *விசாவுக்கு விண்ணப்பிக்க அதிக செலவு ஏற்படுவதில்லை. விசா கட்டணங்கள் உலகளாவிய ரீதியில் நிர்ணயிக்கப்படுகின்றன. உலகின் எப்பகுதியிலிருந்து விண்ணப்பித்தாலும் விசா கட்டணங்கள் ஒரே அளவிலானதாகவே இருக்கும்..

*பிரிட்டிஷ் விசா விண்ணப்பங்களை பரிசீலனை செய்வோர் எங்கிருந்து பணியாற்றினாலும் கடுமையான ஒழுக்க கோவைக்கு உட்பட்டே செயலாற்ற வேண்டும். இதனால் இவர்கள் ஒருமைப்பாட்டுடனும் தனிப்பட்ட மற்றும் உணர்வுபூர்வமான விடயங்களை மிகக் கவனமாகவும் பிரிட்டிஷ் தரவு பாதுகாப்பு சட்டத்திற்கமையவும் விண்ணப்பங்களை கையாள வேண்டும்.

பிரிட்டனிலும் வெளிநாடுகளிலும் வாடிக்கையாளர்கள் செய்யவேண்டிய சகல விடயங்களையும் எடுத்துக் காட்டும் வாடிக்கையாளர் ஒப்பந்தம் ஒன்றை பிரிட்டிஷ் எல்லை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. விசா விண்ணப்ப முடிவுகளுக்கான விநியோக இலக்குகளை இச்சாசனம் தருகிறது. முடிவு எடுக்கும் பணியை சென்னைக்கு மாற்றிய பின் சில தகவல் தொழில்நுட்ப பிரச்சினைகள் காரணமாக சில விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்வதில் ஓரளவு தாமதம் ஏற்பட்டது.

இக்குறைபாடுகளுக்கு இப்பொழுது தீர்வு காணப்பட்டு வருகிறது. விண்ணப்பதாரர்கள் உத்தேச பிரயாணத் திகதிக்கு நியாயமான அளவு நாட்கள் முன்னதாகவே விண்ணப்பங்களைக் கையளித்துவிட வேண்டுமென ஆலோசனை கூறப்படுகிறது. விசா விண்ணப்பங்களில் ஏற்படும் தாமதங்கள் குறித்து விசா விநியோக அலுவலகத்தில் VFS விசாரிக்கலாம்

தமிழ் தேசிய கூட்டமைப்பு எம.பி. க.பத்மநாதன் மதுரையில் காலமானார்

kpatmanathan.jpgஇலங் கையிலிருந்து இந்தியா சென்றிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் திரு கனகசபை பத்மநாதன் அவர்கள் மதுரையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார் என தெரியவந்துள்ளது. மாரடைப்பு காரணமாக மதுரை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் க. பத்மநாதன் தனது 62 வது வயதில் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது பூதவுடலை, இன்று பிற்பகல் இலங்கைக்கு எடுத்து வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் எதிர்வரும் சனிக்கிழமை, அவரது பூதவுடல், அம்பாறை தம்பிலுவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர், காரைதீவுக்கு மக்கள் அஞ்சலிக்காக எடுத்துச் செல்லப்படவுள்ளது.

இதன் பின்னர், ஞாயிற்றுக்கிழமை, மாலையில் தம்பிலுவிலுவில் இறுதிக்கிரியைகள் இடம்பெறவுள்ளன. 2004 நாடாளுமன்றத் தேர்தலின் போது, அம்பறை மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட அவர் அதிகப்படியான வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றுக்கு தெரிவானார்.