வடக்கு மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் அரசியல் தீர்வை முன்வைக்க ஐ.தே.க. கோரிக்கை

தீவிரவாத த்திலிருந்து விடுதலை பெற்றுள்ள வடக்கு மக்களின், அபிலாஷைகள் தொடர்பாக தூரநோக்குடன் சிந்தித்து செயற்பட்டாலே அவற்றை நிறைவேற்ற முடியும். இதற்கு சர்வதேச ஆதரவு வேண்டுமென்பதால், இராஜதந்திர ரீதியில் நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் முனைய வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. மீண்டும் ஒரு தீவிரவாதம் நாட்டில் உருவாகாமலிருக்க வேண்டுமானால், இந்தியாவைப் போன்றதொரு அரசியல் தீர்வினைப் பெற்றுக் கொடுப்பது பொருத்தமானது என ஐ.தே.கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில், அவர் மேலும் கூறியுள்ளதாவது;

எமது தாய் நாடு வரலாற்றில் முக்கியமான தருணத்தை அடைந்துள்ளது. மூன்று தசாப்த காலமாக இருந்து வந்த தீவிரவாதம் மற்றும் யுத்தமும் தற்போது முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளமை நாட்டிற்குக் கிடைத்த வெற்றியாகும். இங்கு வாழக்கூடிய சிங்களம், தமிழ், முஸ்லிம் மற்றும் பறங்கியர் என்ற சகல இனத்தவர்களும் அச்சம், பீதியற்ற சூழ்நிலையில் வாழும் சந்தர்ப்பத்தை அமைப்பது எமது பொறுப்பாகும்.

இவ்வேளையில் தீவிரவாதத்திடமிருந்து நாட்டை மீட்பதற்காகத் தம்மை அர்ப்பணித்துச் செயற்பட்ட முப்படையினர், பொலிஸார் மற்றும் உயிர்த்தியாகம் செய்த வீரர்களை நினைவு கூருவதுடன், அவர்கள் அனைவருக்கும் ஐ.தே.க.வின் கௌரவத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன். நாட்டுக்காகவும் மக்களின் விடுதலைக்காகவும் இராணுவத்தினால் பெறப்பட்ட இம்மாபெரும் வெற்றியை அரசியல் இலாபம் கருதி செயற்படுவதையும் அதன் நோக்கத்தையும் விலக்கிக் கொள்வது சிறந்தது.

தீவிரவாதத்தினால் எமது கட்சி பல தலைவர்களை இழந்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச, காமினி திசாநாயக்க, லலித் அத்துலத் முதலி, ரஞ்சன் விஜேரத்ன, ஜானக்க பெரேரா உட்பட பல தலைவர்கள் புலிகளால் கொல்லப்பட்டனர்.

அதுமட்டுமல்லாது, தலதா மாளிகை, முஸ்லிம் பள்ளி வாசல் மற்றும் உடைமைகளுக்கும் பாரிய சேதங்களை விளைவித்த பயங்கரவாதம் முறியடிக்கப்பட்டமை யாவருக்கும் மகிழ்ச்சி தரும் விடயமாகும். தீவிரவாதத் தை முறியடிக்க முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன முதல் தற்போதைய தலைவர் ரணில் விக்கிரமசிங்க வரையிலான அரசாங்கங்கள் யுத்தத்தை நடத்தின. பின்னர் பேச்சுக்குச் சென்றன. பேச்சுகளை நிராகரித்த புலிகளை எமது படையினர் அழித்திருக்கின்றனர்.

நாடு விடுதலை பெற்றுள்ளது. தீவிரவாதத்தினுள் இருந்த வடக்கு தமிழ் மக்களும், சுதந்திரமான விடுதலையைப் பெற்றுள்ளனர். இச்சந்தர்ப்பத்தில் யுத்தத்தால் அவல நிலைக்குள்ளான மக்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். அனைத்தையும் இழந்து நிற்கும் வடக்கு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது இன்றைய பாரிய சவாலாகும். இதனை நிவர்த்தி செய்ய தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் அரசாங்கம் பூரணமான ஆதரவினைப் பெற்றுக் கொள்ள வேண்டிய தேவை எழுந்துள்ளது.

இடம்பெயர்ந்துள்ள இலட்சக்கணக்கான வடக்கு மக்களின் நிலைமைகளை உணர்ந்து செயற்பட வேண்டியதும், இராஜதந்திர ரீதியில் அணுகுமுறைகளை மேற்கொள்ள வேண்டியதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

அம்மக்களைச் சொந்த இடங்களில் மீள் குடியமர்த்துவதிலும் அவர்களது தேவைகள் மற்றும் தொழில் வாய்ப்பினைப் பெற்றுக் கொள்வதற்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். அதுமட்டுமன்றி, மீண்டும் ஒரு உரிமைப் போராட்டமாக எழுந்து ஆயுதப் போராட்டமாக வியாபிக்காதிருக்க வேண்டுமானால் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல் தீர்வொன்று அவசியமாகும்.

சகலரும் இலங்கையரே தவிர இன பேதமற்றவர்கள் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இந்தியாவைப் போன்றதொரு அரசியல் தீர்வை மேற்கொள்ள சர்வதேச ஆதரவும் அவசியமாகின்றது எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *