வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கு இராணுவம் தீர்வு கண்டுள்ளதால் இனிமேல் பேசுவதற்கு தேவையில்லை – தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவிப்பு

வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கு இராணுவத்தினர் தீர்வு கண்டுள்ளதால் இனிமேல் தீர்வுத் திட்டங்கள் குறித்து பேசுவதற்கான தேவையில்லையென தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன், நாட்டைப் பிரிப்பதற்குத் திட்டமிட்ட சர்வதேச ஏகாதிபத்தியவாதிகளின் கைக்கூலியான பிரபாகரன் உயிரிழந்துள்ள நிலையில் இந்த ஏகாதிபத்தியவாதிகள் தமது இலக்கை மாற்று வழிகளில் முன்னெடுக்க முயல்வார்கள் என்றும் இந்த முயற்சியையும் முறியடிக்க வேண்டும் என்றும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் நேற்று புதன்கிழமை கொழும்பு தேசிய நூலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அதன் தலைவர் கலாநிதி குணதாஸ அமரசேகர மேலும் கூறியதாவது;

நாட்டைப் பிரிப்பதனை நோக்கமாகக் கொண்டு சர்வதேச ஏகாதிபத்திய வாதிகள் தமது நன்மைக்காகச் செயற்படுகின்றனர். இவர்களின் கைக் கூலியாகச் செயற்பட்ட பிரபாகரன் பிரிவினை கோரி போராட்டத்தை நடத்திய நிலையில் எமது படையினரால் கொல்லப்பட்டுள்ளார்.

எனினும், இவ்விலக்கை அடைவதற்கு ஏகாதிபத்தியவாதிகள் வேறு மார்க்கங்களை நாடுவர். இவர்களது இலக்கை முறியடிப்பதற்கான சவால்களை வெற்றி கொள்ள வேண்டும்.

இந்த ஏகாதிபத்தியவாதிகளுக்கிடையிலான யுத்தத்தில் தற்போது வெற்றி கொள்வதற்கு எமக்கு ரஷ்யாவும் சீனாவும் உதவியுள்ளன. இதற்கு எமது நன்றிகள்.

தற்போது தீர்வு குறித்து பேசப்படுகின்றது. வடக்கு, கிழக்குப் பிரச்சினைக்கு படையினர் தீர்வைப் பெற்றுக் கொடுத்துள்ள நிலையிலேயே இது பேசப்படுகின்றது. இது அவசியமற்றது. வடக்கை நாம் அபிவிருத்தி செய்ய வேண்டும். இதற்கு வெளிநாட்டு அமைப்புகளுக்கு அனுமதியளிக்கக் கூடாது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • thurai
    thurai

    ஈழத்தமிழர் பயங்கரவாதத்திலிருந்து விடுபட்டார்கள். ஆனால் அரசியல் பொருளாதார பிரச்சினகள் தீர்க்கப்பட வேண்டியவைகளே. பயங்கரவாதத்தை திரும்ப வளர்ப்பதும், வடக்கையும், தெற்கையும் இணைப்பதும் தெற்க்கிலுள்ள சிங்கள மக்களினதும், அரசியல் வாதிகளினதும் கைகளிலேயே தங்கியுள்ளது.

    துரை

    Reply
  • Thanga. Mukunthan
    Thanga. Mukunthan

    இது தானே சுதந்திர காலந்தொட்டு எமக்கு இருக்கும் பிரச்சனை! தேசப்பற்றுள்ள இயக்கமாகட்டும் – ஆண்ட அரசுகளானாலும் சரி தமிழர்களை சம அந்தஸ்துடையவராக இன்று வரை கணித்ததா? ஒரு சிலரை மட்டும் அமைச்சுப் பொறுப்புக்களை வழங்குவதன் மூலம் தமிழர்களுக்கு சம உரிமை கிடைத்துவிடவில்லை. அமைச்சுப் பொறுப்பிலுள்ளவர்களின் குடும்பமும் சில வேளைகளில் ஒரு சில கட்சிக் காரர்களும் நன்மையடைந்திருக்கலாம். ஆனால் முதலில் சுதந்திரம் கிடைக்கவேண்டிய லயத்திலுள்ள மக்களும் – வீதியிலுள்ள அல்லது பொட்டல் காடுகளிலுள்ள முஸ்லீம்களும் ஏன் இப்போது தமிழர்களும் ஒரு சுதந்திரமான வாழ்க்கை வாழ – ஒரு ஆயுதக் கலரச்சாரமற்ற சூழல் உடனடியாக உருவாக்கப்பட வேண்டும்.

    Reply