May

May

சரணடைய முடியாது -விடுதலைப் புலிகள்

காவல்துறை கேட்டுக் கொண்டது போல தாம் சரணடைய முடியாது என்று பிபிசி தமிழோசையிடம் கூறிய விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் தயா மோகன், நாட்டின் கிழக்கிலும், வடக்கிலும் சிறு சிறு குழுக்களாக விடுதலைப் புலிகள் இருப்பதாகத் தெரிவித்தார்.

தமது துப்பாக்கிகளை மவுனிப்பது என்ற நிலை நீடித்தாலும் கூட, மக்களின் தேவைகளுக்காக அரசியல் முன்னெடுப்புக்களில் பங்கு பெறுவது குறித்து ஆராய்ந்து வருகிறோம் என்றும் அவர் கூறினார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகள் அப்படியே உள்ளதாகவும் தயா மோகன் கூறினார்.

அரச சார்பற்ற நிறுவனங்களின் நிபுணர்கள் புலிகளுக்கு உதவினர்

fonseka-000.jpg
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வந்த மனிதாபிமான நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை அடையும் தறுவாயில் சிவிலியன்களை காரணம் காட்டி குறிப்பிட்ட சில மேற்கு நாடுகள் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை கடைபிடிக்குமாறு எம்மை தொடர்ந்தும் வற்புறுத்தி வந்தமை பிரபாகரனையும் அவரது முக்கிய சகாக்களையும் காப்பாற்றுவதற்காகவே என இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

இலங்கை, இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நீடித்து வரும் தீவிரவாத பிரச்சினைகள் என்றும் முடிவுக்கு வரக்கூடாதென்ற நீண்டகால நோக்கிலேயே சில நாடுகளில் இவ்வாறான அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.

சுயாதீன தொலைக்காட்சி சேவையில் கடந்த திங்கட்கிழமை (25) துலாவ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜெனரல் பொன்சேகா வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். கிளிநொச்சியில் செயற்பட்டு வந்த குறிப்பிட்ட சில அரசசார்பற்ற நிறுவனங்கள் சிவிலியன்களுக்காக ஒரு குளியலறையைக் கூட கட்டிக்கொடுக்கவில்லை. மாறாக எல்.ரி.ரி.ஈ யினருக்கு பணமும் இராணுவ ஆலோசனைகளையுமே வழங்கி வந்துள்ளனர்.

புலிகளால் பயன்படுத்தப்பட்ட சில படகுகள், யுத்தக் கப்பல்கள் அவற்றுக்கான இயந்திரங்கள் என்பன தொண்டர் நிறுவனங்களின் நிபுணத்துவம் பெற்றவர்களால் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.  இயந்திரங்களின் இறக்குமதிக்கும் இவர்கள் உதவியுள்ளனர் என அவர் குறிப்பிட்டார்.

ஊடக சுதந்திரம் கோரி லிப்டன் சுற்றவட்டத்தில் அடிக்கடி ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வந்த குறித்த சில பாதுகாப்புத் தொடர்பான ஆராய்ச்சியாளர்களும் திறமை வாய்ந்த ஊடகவியலாளர்களும் புலிகளுக்குச் சார்பானவர்களென்ற உண்மை எல்.ரி.ரி.ஈ. இயக்கம் முழுவதுமாக அழிக்கப்பட்டதன் பின்னரே தெரியவந்துள்ளது.  இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக புலிகள் இவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரக்கணக்கான ரூபாய்களை வழங்கியுள்ளனர் எனவும் ஜெனரல் பொன்சேகா சுட்டிக்காட்டினார்.

இத்தகையவர்களே படை வீரர்களின் கடமைக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலான கட்டுரைகளை எழுதி வந்தனர். எல்.ரி.ரி.ஈ இயக்கம் அழிக்கப்பட்டதும் புலிகளால் மேற்கொள்ளப்பட்டு வந்த நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள் படைவீரர்களுக்கு கிடைத்ததும் தான் தாமதம் மேற்படி செயல்களில் ஈடுபட்டு வந்த குற்றவாளிகள் நாட்டை விட்டே ஓடிவிட்டனர். நாட்டின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டுமாயின் இத்தகைய குற்றவாளிகள் தேசத்துரோகிகளாக கணிக்கப்பட்டு அவர்கள் மீது வழக்குத் தொடரப்பட வேண்டுனெவும் அவர் தெரிவித்தார்.

வெளிநாடுகளிலிருந்து புலிகள் இயக்கத்துக்கு ஆயுதங்கள் கடத்தியவரும் தற்போது அந்த இயக்கத்தின் தலைவராக முயலுபவருமான கே. பியை இன்டர்போல் தேடிவருகின்றது. இந்திய முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்தியின் கொலையுடன் இவருக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.  இலங்கை இராணுவம் 10 ஆயிரம் பேரைக் கொண்டிருக்கையிலேயே பிரபாகரன் இந்தியாவின் ஒத்துழைப்புடன் எல்.ரி.ரி.ஈ. இயக்கத்தை கட்டியெழுப்பினார்.

இப்போது எமது இராணுவத்தில் 2 இலட்சம் பேர் உள்ளனர். கூடிய விரைவில் இந்த எண்ணிக்கை 3 இலட்சம் ஆகப்போகிறது. இந்நிலையில் இலங்கையில் மீண்டும் ஒரு எல்.ரி.ரி.ஈ இயக்கத்தை கே. பி. யினால் கட்டியெழுப்புவது எவ்வகையிலும் சாத்தியமாகாது என்றும் இராணுவத் தளபதி கூறினார்.

எல்.ரி.ரி.ஈ இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் அனைவரும் அழிக்கப்பட்டு விட்டனர். எமது உள்நாட்டில் வகுக்கப்பட்ட வியூகங்களைக் கொண்டே படையினர் இந்த வெற்றியை நிலைநாட்டினார். இந்நிலையில் கே. பி. இலங்கையிலோ அல்லது வெளிநாடுகளிலோ எல். ரீ.ரீ.ஈ. இயக்கத்தை மீண்டும் கட்டியெழுப்ப திட்டம் தீட்டினால் அதனை தோற்கடிப்பதும் எமக்கு பெரிய வேலையாகாதென்பதை நினைவுபடுத்திக் கூறவிரும்புவதாக ஜெனரல் பொன்சேகா தெரிவித்தார்.

மோதல்களின்போது 195 இராணுவ அதிகாரிகளும் 5 ஆயிரத்து 224 படை வீரர்களும் உயிரிழந்துள்ளனர். 5 ஆயிரம் படை வீரர்கள் ஊனமுற்றுள்ளனர் எனத் தெரிவித்த இராணுவத் தளபதி, படைவீரர்களால் 22 ஆயிரம் புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும் 9 ஆயிரம் புலிகள் சரணடைந்திருப்பதாகவும் முதற்கட்டத்தின்போது ஒரு இலட்சத்து 15 ஆயிரம் சிவிலியன்களும் இரண்டாம் கட்டத்தில் 80 ஆயிரம் சிவிலியன்களும் மீட்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

‘எதிர்க்கட்சித் தலைவர் பயங்கரவாதத்தை மீண்டும் நாட்டுக்குள் கொண்டுவர முயற்சி’ – அமைச்சர் நிமல்

parliament.jpgநிதிச் சட்டங்கள் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், புலி இப்போது ஒழிக்கப்பட்டிருக்கிறது என்றாலும் பயங்கரவாதத்துடன் தொடர்புள்ளவர்களைத் தேடி கைது செய்து சட்டத்தின் முன்கொண்டு வரவேண்டும்.  பயங்கரவாத செயற்பாடுகளுக்குப் பயன்படுத்தக் கூடிய குண்டுகள், தற்கொலை அங்கிகள், வெடிபொருட்கள் என்பவற்றைத் தேடிக் கண்டு பிடிக்க வேண்டும்.

இவற்றைச் செய்வதற்கு பயங்கரவாதத் தடைச் சட்டமும் அவசரகாலச் சட்டமும் மிகவும் அவசியம். அதனால் தற்போதைய சூழ் நிலையில் இவ்விரு சட்டங்களும் தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும். எதிர்க்கட்சித் தலைவர் இவ்விரு சட்டங்களையும் நீக்குமாறு கோரியுள்ளார். பயங்கரவாதத்தை மீண்டும் நாட்டுக்குள் கொண்டு வருவதற்காக அவர் விரும்புகிறார். அதற்கு ஒரு போதும் இனிமேல் இடமளிக்கப்படமாட்டாது.

நாம் புலிப் பயங்கரவாதத்திற்கு எதிராகவே யுத்தத்தை முன்னெடுத்தோம். இந்த யுத்தத்தில் புலிப் பயங்கரவாதிகளே தோற்கடிக்கப்பட்டுள் ளனர். இது தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தம் அல்ல. இடம்பெயர்ந்துள்ள மக்கள் சகல வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு சொந்த இடங்களில் விரைவில் மீளக்குடியமர்த்தப்படுவார்கள்.

விடுதலைப் புலிகள் சரணடையவேண்டும்- இலங்கை காவல்துறை

இலங்கையில் எஞ்சியிருக்கும் விடுதலைப்புலிகள் தமது இருப்பிடத்துக்கு அருகே உள்ள காவல் நிலையத்துக்கு சென்று சரணடைய வேண்டும் என்று காவல்துறை பேச்சாளர் ரஞ்சித் குணசேகர கூறியுள்ளார்

விடுதலைப் புலிகள் சிலர் அகதிகள் முகாம்களில் ஊடுருவியிருப்பதாகவும், சிலர் வன்னிக் காடுகளில் தஞ்சமடைந்திருப்பதாகவும் மேலும் சிலர் கிழக்கே சிறு குழுக்களாக இருப்பதாகவும் தமக்குத் தகவல் கிடைத்திருப்பதாக
கூறியஅவர், நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும்விடுதலைப் புலி உறுப்பினர்கள் உடனடியாக சரணடைய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

அமைச்சர் நிமலுக்கு சபையில் பாராட்டு

dinesh_gunewardane.jpgஉலக சுகாதாரப் பேரவையின் தலைவராக சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டமைக்கு நேற்று பாராளுமன்றத்தில் வாழ்த்துக்களும், ஆசிகளும் தெரிவிக்கப்பட்டன.

ஆளும் கட்சியின் சார்பில் அமைச்சர் தினேஷ் குணவர்தன இந்த வாழ்த்துக்களையும், ஆசிகளையும் சபாநாயகரின் அனுமதியைப் பெற்று சபையில் தெரிவித்தார்.

காலஞ்சென்ற எம்.பிக்களுக்கு சபையில் நேற்று அனுதாபம்

parliament.jpgகாலஞ் சென்ற எம்.பிக்களான அலுக் அலுவிகார மற்றும் க.பத்மநாதன் ஆகியோருக்கு நேற்று சபையில் அனுதாபம் தெரிவிக்கப்பட்டது. சபாநாயகர் டபிள்யூ. ஜே. எம். லொக்குபண்டார பாராளுமன்றத்தின் சார்பில் இந்த அனுதாபத்தை சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றம், சபாநாயகர் தலைமையில் நேற்று காலை 9.30 மணிக்குக் கூடியது. சபை அமர்வின் வழமையான ஆரம்ப நிகழ்வின் போதே சபாநாயகர் இந்த அனுதாபத்தைத் தெரிவித்தார்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது நாட்டுப்பற்றுள்ள அனைவரின் கட்சி

mahinda-rajapaksha.jpgமுப்பது வருட காலம் தலைவிரித்தாடிய பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைக்க முடிந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது நாட்டுப் பற்றுள்ள அனைவரினது கட்சியாக மாறியுள்ளது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழு மற்றும் அகில இலங்கை செயற்குழு உறுப்பினர்களுக்கான கூட்டம் நேற்று அலரிமாளிகையில் நடைபெற்றது. அந்நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி தொடர்ந்தும் குறிப்பிடுகையில்:- படையினர் மீட்டுத் தந்த நாட்டை அபிவிருத்தி செய்யும்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு பிரதான பொறுப்புள்ளது. ஆகவே அர்ப்பணிப்புடன் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

நாட்டை பயங்கரவாதப் பிடியிலிருந்து மீட்டெடுத்த பெருமை எமது கட்சியையே சாரும் எனக் கூறினார்.

மேற்படி கூட்டத்தில் ஜனாதிபதியையும் படை வீரர்களையும் கெளரவிப்பது தொடர்பாக இரண்டு யோசனைகள் முன்வைக்கப்பட்டன. இரண்டு யோசனைகளும் ஏகமனதாக ஏற்றுக்¦¡ள்ளப்பட்டன. ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற மேற்படி கூட்டத்தில் இன்னும் பல யோசனைகள் முன்வைக்கப்பட்டு அவையும் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டன.

அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனை சுதந்திரக் கட்சியின் உபதலைவராக நியமிப்பதற்கு முன்மொழியப்பட்ட யோசனையும் எல்லோராலும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

எதிர்வரும் தேர்தல்களின்போது கட்சி முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் வேலைத் திட்டங்கள் குறித்து ஆராயுமுகமாக கட்சியின் 19வது தேசிய சம்மேளன மாநாட்டை எதிர்வரும் 12ம் திகதி நடத்துவதற்கும் முடிவெடுக்கப்பட்டது.

இலங்கை விஷயத்தை சிறப்புப் பிரச்சினையாக எடுத்துக் கொள்ள வேண்டும்’’ – கருணாநிதி

karunanithi.jpgஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கை அரசு தாக்கல் செய்துள்ள வரைவுத் தீர்மானம் தொடர்பாக, இந்தியா பொருத்தமான முடிவெடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழக முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்திருக்கிறார்.

இது தொடர்பாக, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார் கருணாநிதி. “ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் இலங்கை அரசு தாக்கல் செய்துள்ள தீர்மானம், இலங்கைத் தமிழர்களுக்கு எதிரானது என்று உலகில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். எனவே, இலங்கைத் தமிழர்களின் உணர்வுகளையும், அவர்களது எதிர்கால நலனையும் கருத்தில் கொண்டு, இந்த விஷயத்தில் இந்தியா பொருத்தமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’’ என்று அந்தக் கடிதத்தில் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.

“ஒரு பக்கம், இன்னொரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவது தொடர்பான கேள்வி எழுந்தாலும், இலங்கை விஷயத்தை சிறப்புப் பிரச்சினையாக எடுத்துக் கொள்ள வேண்டும்’’ என்றும் தமிழக முதல்வர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையின் தீர்மானத்தை இந்தியா ஆதரித்தால், இதுவரை இலங்கை செய்த கொடுமைகளை எல்லாம் இந்தியா ஆதரிப்பதாகத் தான் அர்த்தம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி. ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இலங்கை நிலவரம் தொடர்பாக ஐ நா கூட்டம்

vanni-0001.jpgஇலங்கை நிலவரம் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சிலின் சிறப்பு கூட்டம் நேற்று ஜெனீவாவில் தொடங்கியது.

இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதாக எழும் குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கை அரசு விசாரணைகள் நடத்த வேண்டும் எனக் கோரும் முகமாக 17 நாடுகள் ஐ நா வின் மனித உரிமை கவுன்சிலில் ஒரு முன்மொழிவை வைத்தன. இவ்வாறு கோரியுள்ள 17 நாடுகள் பெரும்பாலானவை ஐரோப்பிய நாடுகள், சில லத்தீன் அமெரிக்க நாடுகள்.

ஆனால் இவ்வாறு அந்த 17 நாடுகள் வைத்திருக்கும் பிரேரணைக்கு எதிராக தமது தரப்பு கருத்துக்களை எடுத்துக் கூறும் விதமாக இலங்கை அரசும் ஒரு வரைவு அறிக்கையை தயார் செய்துள்ளது. இதற்கும் சிலருடைய ஆதரவு கிடைத்துள்ளது.

இலங்கையில் 26 வருடங்களாக அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதல்களின் போது கடுமையான மனித உரிமை மீறல்களைச் செய்ததாக இருதரப்பு மீதும் குற்றங்கள் சாட்டப்படுகின்றன.

எனவே இது தொடர்பில் சுயாதீனமான ஒரு விசாரணை நட்த்தப்பட வேண்டும் என்றும், சுமார் மூன்று லட்சம் பேர் இடம் பெயர்ந்து தங்கியுள்ள முகாம்களுக்கு, எந்தவிதமான தங்குதடையின்றி சென்று வர சர்வதேச தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதியளிக்கப்பட வேண்டும் என தற்போது மனித உரிமை அமைப்புகள் கோரிவருகின்றன

புலிப் பயங்கரவாதத்தின் தோற்கடிப்பு – சர்வதேசத்திற்கும் கிடைத்த பெருவெற்றி

maithripalasirisena.jpgபுலிப் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டமை இலங்கைக்கு மட்டும் மல்ல சர்வதேச நாடுகளுக்கும் கிடைத்திருக்கும் பாரிய வெற்றியாகும் என்று விவசாய அபிவிருத்தி, கமநல சேவைகள் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது தெரிவித்தார்.

நிதிச் சட்டங்கள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், புலிகள் தரைவழிப் படையை மட்டுமல்லாமல் கடல், ஆகாய பிரிவுகளையும் கொண்டிருந்தனர்.

அவர்களிடம் விமானங்கள் இருந்தன. உலகில் எந்தவொரு பயங்கரவாத இயக்கமுமே இவ்வாறான கூட்டமைப்பை கொண்டிருக்கவில்லை.  அதனால் புலிப் பயங்கரவாதத்தைத் தோற்கடிக்க முடியாது என்ற அபிப்பிராயம் வளர்ந்திருந்தது. எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் எமது வீரதீர பாதுகாப்பு படையினர் புலிப் பயங்கரவாதத்தை முழுமையாக தோற்கடித்து நாட்டுக்கும், முழு உலகிற்கும் கெளரவத்தைத் தேடிக்கொடுத்துள்ளனர். அவர்களை நாம் கெளரவிக்கின்றோம். மீண்டும், மீண்டும் நன்றி தெரிவிக்கிறோம்.

இந்த சந்தர்ப்பத்தில் எதிரணியினர் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு விட்டது. அதனால் அவசரகாலச் சட்டத்தை தடையிலிருந்து நீக்கவேண்டும் என்று கோரியுள்ளனர். புலிப் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட உடனேயே ஐ. தே. க. இவ்வாறான கோரிக்கையை என்ன நோக்கத்திற்காக முன்வைத்திருக்கிறது என்பதை நாமறியவில்லை. நாட்டின் நிலைமையை சரியான முறையில் அறிந்து கொண்ட அவர்கள் இவ்வாறான கோரிக்கையை முன்வைத்திருக்கிறார்களா எனக் கேட்கத் தோன்றுகிறது.

அவசர காலச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பல புலிச் சந்தேக நபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். விசாரணைகளும் தொடர்கின்றன. இதேநேரம், தலைமறைவாகியுள்ள புலிப் பயங்கரவாதிகளையும் தேடிக் கைது செய்ய வேண்டிய தேவையும் இருக்கிறது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டா ஐ.தே.க இக்கோரிக்கையை முன்வைத்திருக்கிறது.

ஆகவே, நாம் அரசியல் பேதங்களை மறந்து தேசம் என்ற வகையில் சவால்களை வெற்றிகொண்டு முன்னேற முயற்சி செய்ய வேண்டிய காலமிது. தேசிய பொருளாதாரத்தை முன்னிலைப்படுத்தி நாம் முன்னேறவேண்டும்.