இலங்கை நிலவரம் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சிலின் சிறப்பு கூட்டம் நேற்று ஜெனீவாவில் தொடங்கியது.
இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதாக எழும் குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கை அரசு விசாரணைகள் நடத்த வேண்டும் எனக் கோரும் முகமாக 17 நாடுகள் ஐ நா வின் மனித உரிமை கவுன்சிலில் ஒரு முன்மொழிவை வைத்தன. இவ்வாறு கோரியுள்ள 17 நாடுகள் பெரும்பாலானவை ஐரோப்பிய நாடுகள், சில லத்தீன் அமெரிக்க நாடுகள்.
ஆனால் இவ்வாறு அந்த 17 நாடுகள் வைத்திருக்கும் பிரேரணைக்கு எதிராக தமது தரப்பு கருத்துக்களை எடுத்துக் கூறும் விதமாக இலங்கை அரசும் ஒரு வரைவு அறிக்கையை தயார் செய்துள்ளது. இதற்கும் சிலருடைய ஆதரவு கிடைத்துள்ளது.
இலங்கையில் 26 வருடங்களாக அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதல்களின் போது கடுமையான மனித உரிமை மீறல்களைச் செய்ததாக இருதரப்பு மீதும் குற்றங்கள் சாட்டப்படுகின்றன.
எனவே இது தொடர்பில் சுயாதீனமான ஒரு விசாரணை நட்த்தப்பட வேண்டும் என்றும், சுமார் மூன்று லட்சம் பேர் இடம் பெயர்ந்து தங்கியுள்ள முகாம்களுக்கு, எந்தவிதமான தங்குதடையின்றி சென்று வர சர்வதேச தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதியளிக்கப்பட வேண்டும் என தற்போது மனித உரிமை அமைப்புகள் கோரிவருகின்றன