புலிப் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டமை இலங்கைக்கு மட்டும் மல்ல சர்வதேச நாடுகளுக்கும் கிடைத்திருக்கும் பாரிய வெற்றியாகும் என்று விவசாய அபிவிருத்தி, கமநல சேவைகள் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது தெரிவித்தார்.
நிதிச் சட்டங்கள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், புலிகள் தரைவழிப் படையை மட்டுமல்லாமல் கடல், ஆகாய பிரிவுகளையும் கொண்டிருந்தனர்.
அவர்களிடம் விமானங்கள் இருந்தன. உலகில் எந்தவொரு பயங்கரவாத இயக்கமுமே இவ்வாறான கூட்டமைப்பை கொண்டிருக்கவில்லை. அதனால் புலிப் பயங்கரவாதத்தைத் தோற்கடிக்க முடியாது என்ற அபிப்பிராயம் வளர்ந்திருந்தது. எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் எமது வீரதீர பாதுகாப்பு படையினர் புலிப் பயங்கரவாதத்தை முழுமையாக தோற்கடித்து நாட்டுக்கும், முழு உலகிற்கும் கெளரவத்தைத் தேடிக்கொடுத்துள்ளனர். அவர்களை நாம் கெளரவிக்கின்றோம். மீண்டும், மீண்டும் நன்றி தெரிவிக்கிறோம்.
இந்த சந்தர்ப்பத்தில் எதிரணியினர் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு விட்டது. அதனால் அவசரகாலச் சட்டத்தை தடையிலிருந்து நீக்கவேண்டும் என்று கோரியுள்ளனர். புலிப் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட உடனேயே ஐ. தே. க. இவ்வாறான கோரிக்கையை என்ன நோக்கத்திற்காக முன்வைத்திருக்கிறது என்பதை நாமறியவில்லை. நாட்டின் நிலைமையை சரியான முறையில் அறிந்து கொண்ட அவர்கள் இவ்வாறான கோரிக்கையை முன்வைத்திருக்கிறார்களா எனக் கேட்கத் தோன்றுகிறது.
அவசர காலச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பல புலிச் சந்தேக நபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். விசாரணைகளும் தொடர்கின்றன. இதேநேரம், தலைமறைவாகியுள்ள புலிப் பயங்கரவாதிகளையும் தேடிக் கைது செய்ய வேண்டிய தேவையும் இருக்கிறது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டா ஐ.தே.க இக்கோரிக்கையை முன்வைத்திருக்கிறது.
ஆகவே, நாம் அரசியல் பேதங்களை மறந்து தேசம் என்ற வகையில் சவால்களை வெற்றிகொண்டு முன்னேற முயற்சி செய்ய வேண்டிய காலமிது. தேசிய பொருளாதாரத்தை முன்னிலைப்படுத்தி நாம் முன்னேறவேண்டும்.