“அரச பெருந்தோட்டங்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை; குற்றச்சாட்டு’

sri-lanka-upcountry.jpg அரசாங்கத்திற்குச் சொந்தமான பெருந்தோட்டங்கள் முறையாகப் பராமறிக்கப்படுவதில்லை. இத் தோட்டங்களை முறையாக அபிவிருத்தி செய்வதற்கும் தொழிலாளர்களின் உரிமைகளை உரிய முறையில் பெற்றுக்கொடுப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென லங்கா தோட்டத் தொழிலாளர் யூனியனின் பொதுச் செயலாளர் எஸ்.இராமநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பன்விலை லங்கா தோட்டத் தொழிலாளர் யூனியன் காரியாலயத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்த பேசுகையில்;

தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வைப் பெற்றுக்கொள்வதற்கு நாம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம். கடந்த மார்ச் மாத இறுதியோடு கூட்டு ஒப்பந்தம் காலாவதியானதால் சம்பள உயர்வு சம்பந்தமாக எட்டப்படும் முடிவு கடந்த ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்தே அமுலுக்கு வருவதாகவிருக்க வேண்டும் என்பதையும் முதலாளிமார் சம்மேளனத்திடம் வலியுறுத்தியுள்ளோம்.

அரசாங்கத்துக்குச் சொந்தமான தோட்டங்கள் முறையாகப் பராமறிக்கப்படாமல் சீரழிந்து வருகிறது. ஆரம்ப காலங்களில் மிகவும் நல்ல முறையில் இயங்கிவந்த அநேகமான தோட்டங்கள் தற்போது காடுகளாகியுள்ளன. முறையான பராமறிப்பின்றிக் காணப்படுகிறது. இத்தோட்டங்களில் தொழில்புரியும் தொழிலாளர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். அவர்களிடமிருந்து மாதாமாதம் அறவிடப்படும் சேமலாப நிதியைக் கூட நிர்வாகங்கள் மத்திய வங்கிக்கு அனுப்புவதில்லை. சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி, சேவைக்காலப் பணம் போன்றவற்றை தொழிலாளர்களுக்குப் பெற்றுக்கொடுப்பதற்கு தொழிற் சங்கங்கள் தொடர்ந்தும் தொழிற்காரியாலயங்களின் மூலம் நீதிமன்றங்களையே நடவேண்டியுள்ளது.

இதன் காரணமாகத் தொழிலாளர்கள் தங்களின் கொடுப்பனவுகளை காலக்கிரமத்தில் பெற்றுக் கொள்வதில் வீண் தாமததிற்கும் அசௌகரியங்களுக்கும் ஆளாகி வருகின்றனர். இந்நிலை தொடர்ந்தும் நீடிக்கப்படக்கூடாது. இத் தோட்டங்களை முறையாக அபிவிருத்தி செய்து பாதுகாப்பதற்கும் தொழிலாளர்களின் உரிமைகளைப் உரிய முறையில் பெற்றுக்கொடுப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இத்தோட்டங்களை அரச நிறுவனங்களால் முறையாக நடத்தமுடியாதென்றால், இவற்றை முறையாக நடத்தக்கூடிய சிறந்த தனியார் கம்பனிகளை இனங்கண்டு இத்தோட்ட நிர்வாகங்களை அவர்களிடம் ஒப்படைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்வது உசிதமானதாகும்.

உயர்வு சம்பந்தமான பேச்சுவார்த்தையை நடத்த இது உகந்த தருணமல்ல என்று முதலாளிமார் சம்மேனமும் தொழில் அமைச்சும் அபிப்பிராயம் தெரிவித்துள்ள இந்த சந்தர்ப்பத்திலேயே நாம் சம்பள உயர்வு சம்பந்தமான பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளோம். பேச்சுவார்த்தையின் மூலம் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கே முயற்சித்து வருகிறோம். சம்பள உயர்வு சம்பந்தமாக எட்டப்படும் முடிவு 2009 ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்தே அமுல் நடத்தப்படவேண்டும் என்பதையும் நாம் வலியுறுத்தியிருக்கிறோம் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *