ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கை அரசு தாக்கல் செய்துள்ள வரைவுத் தீர்மானம் தொடர்பாக, இந்தியா பொருத்தமான முடிவெடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழக முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்திருக்கிறார்.
இது தொடர்பாக, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார் கருணாநிதி. “ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் இலங்கை அரசு தாக்கல் செய்துள்ள தீர்மானம், இலங்கைத் தமிழர்களுக்கு எதிரானது என்று உலகில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். எனவே, இலங்கைத் தமிழர்களின் உணர்வுகளையும், அவர்களது எதிர்கால நலனையும் கருத்தில் கொண்டு, இந்த விஷயத்தில் இந்தியா பொருத்தமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’’ என்று அந்தக் கடிதத்தில் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
“ஒரு பக்கம், இன்னொரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவது தொடர்பான கேள்வி எழுந்தாலும், இலங்கை விஷயத்தை சிறப்புப் பிரச்சினையாக எடுத்துக் கொள்ள வேண்டும்’’ என்றும் தமிழக முதல்வர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையின் தீர்மானத்தை இந்தியா ஆதரித்தால், இதுவரை இலங்கை செய்த கொடுமைகளை எல்லாம் இந்தியா ஆதரிப்பதாகத் தான் அர்த்தம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி. ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.