23

23

ஜி.எஸ்.பி.+ சலுகைக்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் விசாரணைக்கு அரசு இணக்கம் – ரணில் தெரிவிப்பு; போகொல்லாகம நிராகரிப்பு

sri-lanka-parliament.jpgஆடைத் தொழிற்துறைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை பெற்றுக்கொள்ளவென ஐரோப்பிய ஒன்றியத்தின் விசாரணைக்கு இலங்கை அரசாங்கம் இணங்கியிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க செவ்வாய்க்கிழமை சபையில் தெரிவித்ததுடன், வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம அந்த கூற்றை முற்றாக நிராகரித்துவிட்டார்.

செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போதே ஏற்பட்ட வாதப்பிரதிவாதங்களின் போதே இந்த கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

கேள்வி நேரத்தின் போது முன்னதாக ஒரு கட்டத்தில் பேசிய ஆளுந்தரப்பின் பிரதம கொரடாவான அமைச்சர் தினேஷ் குணவர்தன, “எதிர்க்கட்சியினர் என்ன கூறினாலும் ஜனாதிபதி லிபியா மற்றும் ஈரான் போன்ற நாடுகளுக்கு மேற்கொண்ட விஜயங்களின் மூலம் நாட்டுக்கு பல உதவிகள் கிட்டியிருக்கின்றன. அது மட்டுமல்லாது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை இலங்கைக்கு கிடைக்காமல் போகப் போகிறதென்றும் எதிர்க்கட்சியினர் கூறினார். எனினும், அப்படியான எதுவும் நடக்கவில்லை’ என்றார்.

இதன் தொடர்ச்சியானதொரு சந்தர்ப்பத்தில் பேசும்போதே, ஜி.எஸ்.பி. சலுகையை பெற்றுக்கொள்ளும் பொருட்டு விசாரணைகளை நடத்த இலங்கை அரசாங்கத்துக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் இணக்கம் ஏற்பட்டிருப்பதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அத்துடன், முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச கைத்தொழிற்சாலைகளை திறந்த வேகத்தில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று கைத்தொழிற்சாலைகளை மூடிச் செல்வதாகவும் குறிப்பிட்டார். இதையடுத்து, ரணில் விக்கிரமசிங்கவின் கூற்றுக்கு பதிலளிக்கும் முகமாக பேசிய வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம;

“எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டது போன்று இலங்கை அரசாங்கம் எந்த விசாரணைக்கும் இணங்கவில்லை. ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை குறித்து ஐரோப்பிய ஒன்றியத்துடனும், ஐரோப்பிய ஆணைக்குழுவுடனும் பேசி வருகிறது என்று கூறினார்.

யானைகளால் மக்கள் பலியாவதைக் கண்டித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடரும் யானைகளின் தாக்குதல்களால் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்படுவதையும் தோட்டங்கள், பயிர்கள் அழிக்கப்படுவதையும் வன்மையாகக் கண்டித்து வெல்லாவெளி பிரதேச செயலகத்திற்கு முன்னால் மீளக் குடியேறிய மக்கள் ஆர்ப்பாட்டம மற்றும் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

குறிப்பிட்ட காலப்பகுதியில் யானைகள் தாக்கி 8 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 219 குடிமனைகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பிரதேச செயலாளர் உதயஸ்ரீதர் தெரிவித்தார். அரசாங்கமும் அதிகாரிகளும் யானைகளைக் கட்டுப்படுத்துவதில் அக்கறை செலுத்தவில்லையெனத் தமிழ்மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

சர்வதேச டிஜிட்டல் நூலகம் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

images.jpgஉலகின் எந்த பகுதியில் உள்ளவர்களும் அரிய தகவல்களை தேடி பெற்றுக் கொள்ள வசதி செய்வதற்காக, பிரான்சின் பாரிஸ் நகரிலிருந்து செயல்படும் யுனெஸ்கோ அமைப்பு இந்த வசதியை ஏற்படுத்தியுள்ளது.  பழமையான புத்தகங்கள் வரைபடங்கள் சினிமா ஒலி வடிவங்கள் புகைப்படங்ள் உள்ளிட்ட தகவல்கள் இந்த டிஜிட்டல் நூலகத்தின் மூலம் பொதுமக்கள் பார்வையிடுவதுடன் அவற்றினை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விலை மதிப்பற்ற பழங்கால சீன பெர்ஷிய புத்தகங்கள் மற்றும் மேற்கத்திய நாடுகளின் அரிய புகைப்படங்களை இங்கு காண முடியும் என இணையத்தள வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கூகுள் புக் சேர்ச் மற்றும் ஈரோப்பியானியா போன்றவற்றுக்கு அடுத்தபடியாக உருவாக்கப்பட்டுள்ள மூன்றாவது பிரதான டிஜிட்டல் நூலகத்தின் முகவரி www.wdl.org   என்பதாகும். உலகின் பல்வேறு நூலகங்களில் இருந்து இதற்கு தகவல்கள் இணைக்கப்பட்டுள்ளன.

மேற்கத்திய நாடுகளின் தகவல் மட்டுமல்லாமல் பிற நாடுகளிலிருந்தும் ஆவணங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.

அராபிக் சீனா ஆங்கிலம் பிரெஞ்சு போர்ச்சுக்கீஸ் ரஷ்யன் ஸ்பெனிஷ் ஆகிய ஏழு மொழிகளில் இந்த இணையத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிற மொழிகளில் எழுதப்பட்ட புத்தகங்களையும் இந்த தளத்தில் வாசிக்க முடியும்.   பிரேசில் பிரிட்டன் சீனா எகிப்து பிரான்ஸ் ஜப்பான் ரஷ்யா சவுதி அரேபியா அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள நூலகங்கள் மற்றும் பண்பாட்டு நிறுவனங்களில் இருந்தும் தகவல்கள் திரட்டப்பட்டு இதில் தொகுக்கப்பட்டுள்ளன.

இந்த இணையத்தளமானது உலகின் மிகப்பெரிய நூலகமான அமெரிக்காவின் காங்கிரஸ் நூலகத்தில் பணியாற்றும் ஜேம்ஸ் பில்லிங்டனின் யோசனையில் உருவாக்கப்பட்டது. எதிர்வரும் 2010ம் ஆண்டுக்குள் ஒரு கோடி புத்தகங்களை இந்த இணையத்தளத்துடன் இணைக்கவுள்ளனர். இதற்கு ஒத்துழைக்கும் படி 60க்கும் மேற்பட்ட நாடுகளிடம் யுனெஸ்கோ வேண்டியுள்ளது.

கொழும்பில் அதிகாலையில் திடீர் மழை; இடி, மின்னலால் நகரம் அதிர்வு: 164.8 மி. மீ. மழை வீழ்ச்சி: தாழ் பகுதிகளில் வெள்ளம்

கொழும்பிலும் புறநகர்ப் பகுதிகளிலும் நேற்று (22) அதிகாலை திடீரெனப் பெய்த கடும் மழையின் காரணமாக தாழ்ந்த பகுதிகள் பல வெள்ளத்தால் மூழ்கின.

அதிகாலை இரண்டு மணியிலிருந்து கடும் இடி, மின்னல் ஆரம்பித்ததுடன் மூன்று மணியிலிருந்து காலை 7.30 மணி வரை கடும்மழை பெய்தது. இதனால் தாழ்ந்த பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், போக்கு வரத்துகளும் துண்டிக்கப்பட்டன.

இடி, மின்னல் காரணமாக வீடுகளில் மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டதுடன், மின் உபகரணங்களும் செயலிழந்துபோயின. அதிகாலை இரண்டு மணிக்கு இடி, மின்னல் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தால் வெகுண்டதாகத் தகவல்கள் தெரிவித்தன.

கொழும்பு கோட்டைப் பகுதியில் காலை 7.30 மணி வரை தொடர்ச்சியாக 164.8 மில்லி மீற்றர் மழை பெய்ததாக கால நிலை அவதான நிலையம் தெரிவித்தது. பெளத்தாலோக மாவத்தை பிரதேசத்தில் 137.4 மில்லி மீற்றர் மழை பெய்ததாகவும் நிலையத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

தாழ்ந்த பகுதிகளில் வீதிகள் வெள்ளத்தால் மூழ்கியதால், போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்து காணப்பட்டது.

இதேவேளை, நாடு முழு வதும் மாலை நேரங்களில் இவ்வாறு இடியுடன் கூடிய மழை பெய்யுமென்று காலநிலை அவதான நிலையம் தெரிவித்தது. இந்தச் சீரற்ற காலநிலை மேலும் சில தினங்களுக்கு நீடிக்குமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சில வேளைகளில் காலை வேளையில் மழை பெய்யு மென்றும் காலநிலை அவதான நிலையம் மேலும் தெரிவித்தது.